நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது அவருக்கு. அதைத் தாங்க முடியாமல் அவளைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டவரின் விழிகள் மௌனமாகக் கண்ணீரை வடித்தபடியே இருந்தது.
அந்தச் சங்கடமான நிலையை மாற்றும் விதமாக, “திருமணத்தைப் பதிவு செய்யக் கிளம்பலாமா..?” என்று கேட்டார் கனகேந்திரம்.
“சரி மாமா…” என்று ரவியும் எழுந்துகொள்ள, எல்லோரும் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றனர்.
திருமணம் பதிவு செய்வதற்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முதலே அதை அறிவிக்க வேண்டுமே.. இந்த ஒரு வாரத்தில் இவன் எப்படி செய்தான் என்று அவள் சிந்தனை ஓட, “கனகேந்திரம் மாமாவுக்கு இந்தப் பதிவாளர் நண்பராம். அவர் மூலம் காரியத்தைச் சாதித்துக்கொண்டேன்…” என்றான் ரவி அவளின் காதருகில் குனிந்து.
‘நான் மனதில் நினைத்தது இவனுக்கு எப்படி தெரியும்…’ திகைப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் கவி.
“அங்கே நான் குடிவந்துவிட்டேனே..”என்றான் ரவி கண்களைச் சிமிட்டி. எங்கே என்று கேட்கவோ பார்க்கவோ முடியாமல் வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்ன தலையைக் குனிந்துகொண்டாள் கவி. அவன் விழிகள் கனிந்து காதலோடு அவளைப் பருகியது.
அங்கே நல்லபடியாகவே பதிவுத்திருமணமும் நடந்துமுடிந்தது.
ரவியின் கண்ணசைவில் எதையோ கொண்டுவந்து நீட்டினான் நந்தன். எல்லோரும் என்னவென்று பாத்திருக்க, “இந்தா, இதைப் பிடி.” என்று கவியிடம் அதை நீட்டினான் ரவி.
அதை வாங்கிக்கொண்டவளின் முகத்தில் குழப்பம். அவள் முகத்தில் இருந்த கேள்வியை பார்த்துவிட்டு, “பிரித்துப்பார்…” என்றான் ரவி.
பிரித்துப் படித்தவளின் முகத்தில் திகைப்பு.
“இது…. எதற்கு..?” என்று கேட்டவள்,
“உங்கள் பணத்துக்காக உங்களைத் திருமணம் முடித்ததாக நினைத்தீர்களா…?” என்று சீறியவளுக்கு, அதுவரை இருந்த மகிழ்ச்சியான மனநிலை மாறுவது போல் இருந்தது.
தன்னுடைய சொத்துக்கள் அத்தனையையும் கவியின் பெயருக்கு மாற்றி இருந்தான் ரவி. அப்படி மாற்றிய பாத்திரங்களையே அவளிடம் கொடுத்திருந்தான்.
“விசரி மாதிரி பேசாதே கவி!” ரவி அதட்டினான்.
“பிறகு இது எதற்கு..?” பத்திரங்களைக் காட்டிக் கேட்டாள் கவி.
“ஏன், அவை உன் பெயரில் இருந்தால் என்ன?” என்றான் ரவி அப்போதும் அதட்டலாகவே.
“பணத்துக்காக உங்களை நான் பிடித்ததாக யாரும் சொல்வதற்கா…?” என்று கேட்டவளின் பார்வை சகுந்தலாவிடம் பாய்ந்து திரும்பியது.
அவன் பார்வையும் தாயிடம் சென்று மீள, “அப்படி இல்லை என்பது உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அதை எல்லோரிடமும் நிருபிக்கவேண்டிய அவசியம் கிடையாது. அப்படி நிருபித்துக்கொண்டு இருக்கவும் முடியாது! என் மனைவியை நான் நம்புகிறேன்! உனக்கு நம் திருமணப் பரிசாக இதைத் தந்திருக்கிறேன். அவ்வளவுதான்!” என்றான் அவன் அழுத்தமாக.
எந்த நம்பிக்கை அவன் மீது அவளுக்கு இல்லை என்று சொன்னாளோ, அந்த நம்பிக்கையை அவள் மீது அவன் முழுமையாக வைத்துத் தன்னை நிருபித்துவிட்டானே!
அவளால் எப்படி அவனை நம்ப முடியவில்லையோ அப்படித்தானே அவனுக்கும் இருந்திருக்கவேண்டும்.. அவனுக்கும் அவளைப் பற்றி முழுமையாகத் தெரியாதே… அப்படி இருந்தும் இப்போது இருக்கும் சொத்துக்களும், இனி உழைக்கப்போகும் சொத்துக்களும் அவளுக்கே சொந்தம் என்று அவன் எழுதி இருக்கிறான் என்றால்.. இந்த நம்பிக்கைக்கு அவள் தகுதியானவள் தானா..?
சிந்தனையில் இருந்தவளின் மௌனம் தொடரவும், “கவி, இங்கே பார். எதற்காக நீ இவ்வளவு யோசிக்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை. எப்படி இருந்தாலும் என் சொத்துக்கள் அத்தனையும் உனக்கும் நம் பிள்ளைகளுக்கும் தானே சேரப்போகிறது. அதை நான் பத்திரத்தின் மூலம் இப்போதே உறுதிப்படுத்தி இருக்கிறேன். அவ்வளவுதானே! இதில் நீ யோசிப்பதற்கு என்ன இருக்கிறது..?” என்று கேட்டான் ரவி.
கவிக்கு வாயடைத்துப்போனது. அவளின் கணவன் நல்லவன். தவறு செய்தபோதும் திருத்திக்கொண்டவன். இந்த மனது எத்தனை பேருக்கு வரும்?
உதடு துடிக்க, கண்கள் கலங்க அவனைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றாள் கவி. புன்னகையோடு அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான் ரவி.
ரவியைப் பாய்ந்து அணைத்துக்கொண்ட ராஜ், “என் நண்பன் பொய்த்துப்போகவில்லை என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்குடா…” என்றான் நெகிழ்ந்த குரலில்.
ரவியின் முகமும் மலர்ந்தது. ராஜ் தன் வாயாலேயே ‘என் நண்பன்’ என்று அவனைச் சொல்லிவிட்டானே. மலர்ந்த முகத்தோடு அவன் நந்தனைப் பார்க்க முகத்தைத் திருப்பிக் கொண்டான் நந்தன்.
தாரிகாவுடனான திருமணம் நடக்காது என்று ரவி சொன்ன தினத்தில் இருந்து இன்றுவரை ரவிக்கு உதவியாகவும், அவன் சொன்ன வேலைகளைச் செய்துகொண்டும் இருந்தாலும், நந்தனிடம் ஒருவித ஒதுக்கம் இருந்துகொண்டே இருந்தது.
அதை ரவியும் உணர்ந்துதான் இருந்தான். தன்னை விளக்க அவன் நெருங்கிய ஒவ்வொரு தருணமும் முகம் கொடுக்காமல் விலகிச் சென்றுவிட்டான் நந்தன்.
இப்போது எல்லோர் முன்னிலையிலும் அவனால் அப்படிச் செய்ய முடியாதே என்று எண்ணியவன் அவனை நெருங்கினான்.
அப்போதும் முகம் திருப்பி நின்றவனிடம், “உன்னிடம் எதையும் மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லைடா. எனக்கே என்னை நினைத்துக் கேவலமாக இருந்தது. அதுதான் உன்னிடம் சொல்லவில்லை. மற்றும்படி ராஜைப் போலவே நீயும் என் உயிர் நண்பன்டா..” என்றான் ரவி.
எந்த மாற்றமும் இன்றி நந்தன் அப்படியே நிற்க, “எனக்குத் திருமணம் நடந்ததில் உனக்கு இவ்வளவு கோபமாடா..?” என்று வேண்டுமென்றே கேட்டான் ரவி.
அவனைத் திரும்பி ஒரு முறை முறைத்தவன் மீண்டும் முகத்ததைத் திருப்பிக் கொள்ள, “டேய்! நான் இப்போது உன் தங்கையின் கணவன்டா. அதற்காகவாவது என்னோடு கதைக்க மாட்டாயா..?” என்று கேட்டான் ரவி.
ரவியை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “நீ எனக்கு மாப்பிள்ளை மரியாதை தரவில்லை என்றால் மீண்டும் நான் இந்த ஊரை விட்டே ஓடிவிடுவேன்..” என்று ரவி சொல்லிமுடிக்க முதலே, அவனைத் தாக்கத் தொடங்கி இருந்தான் நந்தன்.
“சொல்லுவாயா? இனிமேல் அவளை விட்டுவிட்டு ஓடுவேன் என்று சொல்லுவாயா? அவளுக்கு ஒரு அண்ணன் இல்லைடா, ஒன்றுக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறோம். மகனே இனிமேல் இப்படி ஏதாவது கதைத்தாய் என்றால், என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..” என்றபடி அவன் கொடுத்த அடிகளைச் சிரித்தபடி வாங்கிக் கொண்டான் ரவி.
ஒரு கட்டத்தில் அடிப்பதை நிறுத்திவிட்டு, அவனைத் தாவிக் கட்டிக்கொண்டான் நந்தன்.
“சாரிடா..” என்ற ரவியிடம், “விடு மச்சான்..!” என்றான் நந்தன் புன்னகையோடு.
எல்லோர் முகங்களிலும் புன்னகை, சந்தோசம் மட்டுமே!
அந்த மகிழ்ச்சியான மனநிலையுடனேயே எல்லோரும் கிளம்புவதற்கு ஆயத்தமாக, “பாவை இன்று எங்களோடு வரட்டுமே ரவியண்ணா. நாளை சனிக்கிழமை தானே. பள்ளிக்கூடமும் இல்லை…” என்று சொன்னாள் நிரு.
தங்களுக்குத் தனிமை தர அவள் விரும்புகிறாள் என்று புரிந்தது ரவிக்கு. கவியின் முகத்தை ஒருதடவை திரும்பிப் பார்த்துவிட்டு, “இன்று திருமணம் நடந்தது என்பதற்காக நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் புதியவர் அல்ல நிரு. மகளை எதற்காகவும் பிரிய எங்களால் முடியாது….” என்றான் மனைவியையும் தன்னோடு சேர்த்து.
விழிகள் மலரக் கணவனைப் பார்த்தாள் கவி. ரவியின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அன்றே அவன் ஹோட்டலில் வைத்துச் சொல்லி விட்டானே. அப்படி இருக்க நிருவும் இப்படிக் கேட்க, ‘சம்மதித்து மகளை அவர்களுடன் அனுப்பிவிடுவானோ’ என்று ஒரு நொடி மனதுக்குள் பயந்து போனாள் கவி.
அவளின் பயம் தேவையற்றது என்று நிருபித்தான் அவன்.
அவனைப் பற்றிய அவளின் தவறான கணிப்புக்கள் அனைத்தையும் மெல்ல மெல்ல அவன் பொய்யாகுவதை நினைக்கையில் அவளுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

