அத்தியாயம்-31
அறைக்குள் இருந்து ரவியின் உடைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் கவி. எல்லாமே புதிதாக இருந்தது.
அங்கே தாய்வீட்டில் இருந்து உடைகளை எடுத்துக்கொண்டு வந்தால் சகுந்தலா கவலைப் படுவார் என்பதால் புதிதாக வாங்கி இருக்கிறான் போல… எல்லாவற்றையும் யோசித்துச் செய்கிறான் என்று எண்ணிக்கொண்டாள் கவி.
அவனின் உடைகளைத் தொடுகையில் அவனையே தொடுவதாக உணர்ந்தவளின் முகத்தில் வெட்கத்தின் சாயல்.
தானும் மகளும் மட்டுமே என்பதால் நான்கு கதவுகள் கொண்ட ஒரேயொரு கப்போர்ட் மட்டுமே வைத்திருந்தாள் கவி. இப்போது அவனுடைய உடைகளும் வைக்கவேண்டும் என்பதால், தன்னுடைய உடைகளுக்கு அருகில் அவன் உடைகளையும் அடுக்கிக்கொண்டு இருந்தவளுக்கு, சேர்ந்திருந்த உடைகளைப் பார்க்க, இனி வரப்போகும் அவனுக்கும் அவளுக்குமான வாழ்வின் முன்னறிவிப்பாகத் தோன்றியது அது.
அதுகூட அவளை முகம் சிவக்க வைத்தது!
ஒன்றிரண்டு சோடி உடைகள் தானே வாங்கியிருக்கிறான். இது எத்தனை நாட்களுக்குப் போதும்? நாளைக்குக் கடைக்குப்போய் எனக்குப் பிடித்தமாதிரி அவனுக்கு துணிகள் வாங்கவேண்டும் என்று நினைத்தபடியே உடைகளை அடுக்கி முடித்தவள் நேரத்தைப் பார்த்தாள்.
அது மாலை ஆறைத் தொட்டுக்கொண்டு நின்றது.
இனி இரவுச் சமையலைப் பார்க்கவேண்டும். ஆனால் பசியைக் காணோம். தேநீராவது குடிப்போம் என்று நினைத்தபடி விறாந்தைக்கு வந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.
மூவர் அமரும் சோபாவில், நடுவில் அமர்ந்திருந்த ரவி சோபாவின் கைப்பிடியில் தலையைச் சரித்து உறங்கியிருக்க, அவன் மடியில் தலை வைத்துக் கால்களை மடக்கியபடி பாவையும் உறங்கி இருந்தாள்.
அன்று காலையில் நடந்த அவர்களின் திருமணத்தினால் உண்டான களைப்பா அல்லது வீட்டுக்கு வந்ததும் குளித்ததால் உண்டான சுகமா ஏதோ ஒன்று தகப்பனையும் மகளையும் நல்ல உறக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.
கவிக்கும் உடல் களைப்பாக இருந்தபோதும் மனதில் இருந்த மகிழ்ச்சியால் உற்சாகமாக நடமாடிக் கொண்டிருந்தாள் அவள்.
கணவனின் கைகள் தூக்கத்திலும் மகளைப் பாதுகாப்பாக அணைத்திருந்ததைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு.
அவர்களுக்குள் ஒருத்தியாகப் புகுந்துகொள்ளத் துடித்த மனத்தைக் கஷ்டப்பட்டு அடக்கினாள். அவளின் அனுமதி இல்லாமலேயே அவள் மனதுக்குள் அவன் வந்துவிட்ட போதும், இயல்பாக அவனை நெருங்க முடியவில்லை அவளால்.
அதன் காரணம் வெட்கமா? தயக்கமா? அல்லது இரண்டுமா? அவளே அறியாள்!
இப்படி ஒருபக்கமாகத் தலையைச் சரித்துப் படுத்திருக்கிறானே கழுத்து வலிக்காதா என்று நினைத்தவள், உள்ளே சென்று ஒரு தலையணையை எடுத்து வந்தாள்.
யோசிக்காமல் எடுத்து வந்தவளுக்கு இப்போது அவன் தலையைத் தொட்டுத் தூக்கச் சங்கடமாக இருந்தது. ஆனாலும் அவனுக்கு வலிக்குமே என்று நினைத்து, சங்கடத்தை ஒதுக்கிவிட்டு அவர்களின் அருகே நெருங்கி, ரவியின் தூக்கம் கெட்டுவிடாது அவன் தலையை மிக மெதுவாகத் தூக்கி தலையணையை வைத்தாள்.
‘அப்பாடி, ஒருவழியாக அவன் தூக்கத்தைக் கெடுக்காமல் வைத்துவிட்டோம்…’ என்று நினைத்துக்கொண்டே நிமிர்ந்தவள், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ரவியைக் கண்டதும் திகைத்து அப்படியே நின்றுவிட்டாள்.
அவளின் விழிகளையே ஊடுருவிய அவன் பார்வையில் எதைக்கண்டாளோ, அவனைப் பார்க்கமுடியாமல் வேகமாக சமையலைறைக்குள் புகுந்துகொண்டாள்.
இதயம் பலமடங்காகத் துடித்தது. எதையோ எதிர்பார்த்துப் படபடத்தது.
தேநீருக்குத் தண்ணீரைக் கொதிக்க வைக்கக்கூட முடியாமல் கைகள் நடுங்கியது.
அவளின் எதிர்ப்பார்ப்பும் பதட்டமும் சரியே என்பதுபோல், பின்னிருந்து அவளைக் கட்டிக்கொண்டன வலிமையான இரு கரங்கள். நெஞ்சம் படபடக்க அவளின் தலை குனிந்துகொண்டது.
குனிந்திருந்தவளின் பின்பக்கக் கழுத்தில் சூடான அவன் உதடுகள் வேகமாகப் புதைந்தன. அவன் மூச்சுக்காற்றின் மாயமா அல்லது முத்தமிட்ட உதடுகள் செய்த காயமா… அவள் உடல் சிலிர்த்தது. அதை உணர்ந்துகொண்டவனின் அணைப்பு இன்னும் இறுகியது.
அவனிடமிருந்து அவளுக்குள் பாய்ந்து கொண்டிருந்த வெப்பக் கதகதப்பு அவளை என்னென்னவோ செய்தது.
பின் கழுத்தில் புதையுண்ட உதடுகள் அவளின் கழுத்து வளைவை அளந்து, அங்கிருந்து காது வளைவை நோக்கி இடம்பெயர்ந்து, அப்படியே கன்னத்துமேட்டினையும் கவனிக்கதொடங்கவும் தாளமுடியாமல், “பா….பாவை…” என்று திக்கித் திணறினாள் கவி.
“அவள் நன்றாக தூங்குகிறாள்…”
காதோடு ரகசியம் பேசியவனின் இதழ்களின் உரசலால் அவள் மேனி மீண்டும் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
கன்னத்தில் இருந்து அவளின் அதரங்களை நோக்கி அவன் இதழ்கள் முன்னேற, அவனுக்கு வாகாக இசைந்து நின்றாள் அவன் கைகளுக்குள் கரைந்துகொண்டிருந்த அவன் மனைவி!
அவள் இதழ்களின் ஓரத்தில் தன் இதழ்களை இளைப்பார விட்டவனின் விழிகள், அடுத்து நடக்கப்போகும் இதழ்களின் சங்கமத்துக்கு சம்மதம் கேட்டு அவள் விழிகளை நிமிர்ந்து பார்த்தது.
கருவிழிகளைக் காணவிடாமல் அவளின் இமைக்கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கவும், அதன்மேல் அன்பாய், ஆசையாய், அழுத்தமாய் தன் இதழ்களை அழுத்தினான் ரவி.
சட்டென்று திறந்துகொண்ட விழிகளில், அவன் விழிகளைச் சந்தித்ததும் நாணம் வந்து ஒட்டிக்கொண்டது. அந்த நாணமே அவளின் சம்மதத்தை உணர்த்த, அவளிடமிருந்து பார்வையை விலக்காமல் துடிக்கும் இதழ்களைச் சுற்றித் தன் இதழ்களால் பாதுகாப்பு வளையம் இட்டான் அவள் காதலன்.
கணநொடியில் விரிந்த அவள் விழிகள் கிறக்கத்தில் மீண்டும் மூடிக்கொண்டது. அவனோ அவள் இதழ்களுக்குள் தொலைந்தே போனான்.
காற்றுக்குக் கூட வழிவிடாமல் கலந்துநின்ற அந்த நொடிகளில், முத்தத்தின் வாயிலாக மொத்தமாக அவள் மனப்பெட்டகத்துக்குள் குடிபெயர்ந்திருந்தான் அவள் கணவன்!
உதடுகளின் உறவாடல் முற்றுப்பெறாததில், அவன் கைகளுக்குள் தொய்ந்தவள் பற்றிக்கொள்ள சமையல் கட்டை எட்டிப் பிடிக்கவும், அங்கே தேநீர் ஊற்றுவதற்காய் எடுத்துவைத்திருந்த கப் தட்டுப்பட்டுக் கீழே விழுந்தது.
அந்தச் சத்தத்தில் சட்டென்று இதழ்கள் பிரிந்துகொள்ளவும், கவியால் அவன் முகம் பார்க்கமுடியவில்லை. விழுந்த கப்பை ஒரு வேகத்தில் குனிந்து எடுத்தவளுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.
அவளின் தவிப்பைப் பார்த்தவனின் விழிகளில் குறும்பு மின்னியது. மீண்டும் அவளை அணைத்து, “தேநீர் ஊற்றவில்லையா…?” என்று கேட்டவனின் உடல் மௌனச்சிரிப்பில் குலுங்கியது.
ரத்தமெனச் சிவந்துவிட்ட முகத்தை மறைக்கும் வழி தெரியாமல் நடுங்கும் கீழ் உதட்டினைப் பற்களால் கடித்தாள் கவி.
பார்வை மாற, “ஏற்கனவே நொந்திருக்கும் அதை இன்னும் எதற்காக நோகடிக்கிறாய்….” என்று செல்லமாகக் கடிந்தவன், தன்னுடைய பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து, அவள் பற்களுக்குள் மாட்டிக்கொண்ட கீழ் உதட்டுக்கு விடுதலை கொடுத்தான்.
“அப்பா…” என்ற மகளின் அழைப்பில் மனைவியை விலக்கியவன், “மிச்சம் மீதியைப் பிறகு வைத்துக்கொள்ளலாம்..” என்றான் அவள் காதில் ரகசியமாக.
கவிக்கோ அவனை நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை. வெட்கம் பிடுங்கித்தின்றது.
“பாவை… எழுந்துவிட்டாயா..?” என்று கேட்டுக்கொண்டே தன் தடுமாற்றத்தைச் சமாளிக்க முயன்றபடி, சமையலைறயை விட்டு வெளியே ஓடிவிட்டாள்.
அவள் ஓடியதைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்த ரவியின் முகத்தில், மனைவியின் மனதை வென்றுவிட்ட பெருமை கலந்திருந்தது.
சிரித்துக்கொண்டே வந்த தந்தையைப் பார்த்ததும் பாவையின் முகத்திலும் சிரிப்புத் தன்னாலே மலர்ந்தது.
“ஏன்பா சிரிக்கிறீர்கள்….?” என்று அவள் கேட்க, மனைவியைப் பார்த்தவனுக்கு மீண்டும் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.
அவனை முறைக்கமுயன்றும் முடியாமல் விழிகளில் வெட்கம் சூழ, முகத்தை திருப்பிக்கொண்ட கவியின் இதழ்களிலும் புன்னகை மலர்ந்திருந்தது.
“அதுவாடா… அப்பாவுக்கு உன் அம்மா ஊற்றிய தேநீரில் சீனிக்குப் பதிலாக உப்பைப் போட்டுவிட்டாள். அதுதான் அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது…” என்றபடி மகளின் அருகில் அமர்ந்துகொண்டான் ரவி.
மகளோடு அவன் கொஞ்சத் தொடங்கவும், பாவையும் தகப்பனோடு ஐக்கியமாகிப் போனாள்.
தகப்பனுக்கும் மகளுக்கும் இடையில் இருக்கும் அந்த ஒட்டுதலைப் பார்க்கையில் கவிக்குச் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருந்தது.
அவன் மேல் இருந்த கோபத்தில் இந்தத் திருமணத்தை தவிர்த்திருந்தால், இன்று மகள் அனுபவிக்கும் இந்த மகிழ்ச்சியை என்னால் கொடுக்க முடியாமலேயே போயிருக்கும் என்று நினைத்தவளிடம், ‘அவளுக்கு மட்டுமா மகிழ்ச்சி… உனக்கு ?’ என்று கேட்டது மனச்சாட்சி.
மகிழ்ச்சியா? சொர்க்கத்தையே காட்டுகிறானே என்று எண்ணி வெட்கியது அவள் மனது.
அதுமட்டுமா, இத்தனை வருடங்களாக அவள் பட்ட கஷ்டங்கள் அத்தனையும் அவன் அருகாமையில் பனிபோல் விலகுகிறதே என்று நினைக்கையில் ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு. முன்பெல்லாம் நடந்தவைகளை நினைக்கையில் வலிக்கும் நெஞ்சம் இப்போதெல்லாம் வலிப்பதில்லையே. அவனின் அருகாமையைத்தானே அவள் மனமும் விரும்புகிறது. அவன் அன்புக்கு அவ்வளவு சக்தியா என்று வியப்பாக இருந்தது கவிக்கு.
இரவு உணவும் முடிய, மிகுதி வீட்டு வேலைகளையும் முடித்துக்கொண்டு கவி படுக்கை அறைக்குள் நுழைய, அங்கே தகப்பனை அணைத்தபடி பாவை உறங்கியிருந்தாள்.
மகள் உருண்டுபிரண்டு படுப்பதற்கு வசதியாக பெரிய கட்டிலாகவே வாங்கிப் போட்டிருந்தாள் கவி. அதைச் சுவர்ப் பக்கமாகத் தள்ளிவிட்டு, மகளைச் சுவர் பக்கமும் அவள் கரைப்பக்கமும் தூங்குவதுதான் அவர்கள் வழமை.
அந்தக் கட்டிலை அறையின் நடுவுக்கு இழுத்துப்போட்டு, மகளை நடுவில் தூங்கவைத்து அவளின் ஒரு பக்கம் படுத்திருந்தான் ரவி. அவன் அந்த வீட்டுக்குள் வந்த பிறகுதான் கணவன் மனைவி பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ்வதன் அருமை என்ன என்பது புரிவதுபோல் இருந்ததுகவிக்கு.
அந்த வீடே நிறைந்திருப்பது போன்ற திருப்தி. அவள் மனதில் இருந்த வெற்றிடம் கூட அகன்றிருந்தது.

