அதே கட்டிலில் தானும் படுக்கவேண்டுமே என்று தோன்றியபோதும் இன்னொரு பக்க மனது அதை ரசிக்கத்தான் செய்தது.
குளித்து, தலைமுடியினை வாரிப் பின்னலிட்டு, காலையில் நடந்த திருமணத்தின் சாட்சியாக கழுத்தில் பொன்தாலி தொங்க, நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு, பெரிய பெரிய ரோஜாக்கள் நிறைந்த வெள்ளை நிற இரவு உடையில் முகத்தில் மலர்ச்சி மின்ன, “தூங்கிவிட்டாளா…?” என்று கணவனின் முகம் பார்த்துக் கேட்டாள் கவி.
அவளின் அழகில் சொக்கியவனின் மனதில், முதன் முதலாக என் முகம் பார்த்துக் கதைக்கிறாள் என்கிற எண்ணம் ஓடியது.
“ம்… களைப்புப் போல. அதுதான் இப்போதும் உடனேயே தூங்கிவிட்டாள்.” என்றான் ரவி மகளின் முகத்தைப் பார்த்தபடி.
“அங்கே கோவிலில் ஓரிடத்தில் நிற்கவே இல்லையே. ரதீசாவோடு சேர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாளே…” என்றபடி மகளின் நெற்றியில் எப்போதும் போல் இதழ் பதித்துவிட்டு நிமிர்ந்தவளின் விழிகளில், ரவியின் கண்களில் தெரிந்த ஏக்கம் பட்டது.
இவன் ஏன் இப்படிப் பார்க்கிறான் என்று எண்ணியவளுக்கு அந்தப் பார்வையின் பொருள் புரியாமல் இல்லை!
புரிந்துகொண்டவளால் புரியாதவள் போல் நடிக்கவும் முடியவில்லை. மீண்டும் அவனை அவள் பார்க்க, எதிர்பார்ப்போடு அவளையே பாத்திருந்தான் ரவி.
தடைபோட்ட வெட்கத்தை ஓரம் கட்டிவிட்டு, அவன் அருகே சென்று ஆவலுடன் அவளையே பாத்திருந்தவனின் நெற்றியில், இதழ் பதித்தாள்.
அடுத்தநொடி அவன் மேல் கிடந்தாள் கவி. எலும்புகள் நொருங்கிவிடுமோ என்கிற அளவுக்கு இறுக்கி அணைத்து, அவளின் உதடுகளில் அழுந்த முத்தமிட்டு அவளை விடுவித்தவன், “போ… போய்ப்பாடு..” என்றான் கரகரப்பான குரலில்.
கண்களில் கேள்வியோடு அவள் பார்க்க, கரகரத்த குரலைச் செருமிச் சீர்படுத்திக்கொண்டு, “ஓவி இருக்கையில் வேண்டாம்டா…” என்றான், அவளின் கன்னகதுப்புக்களை தடவிக்கொண்டே.
உணர்வுகளின் தாக்கத்தில் இருந்தபோதும் மகளுக்காய்த் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட கணவனை, விழிகளில் நேசம் பொங்கப் பார்த்தவள், இப்போது அவன் கேளாமலேயே மீண்டும் அவன் நெற்றியில் இதழ்களைப் பதித்தாள்.
அவளை அணைத்துப் பிடித்திருந்தவனின் பிடி இறுக, கண்களை மூடித் திறந்தவன், “ஓவி இருக்கையில் நீ என்னருகில் வராமல் இருப்பதே நல்லது..” என்றான் அவள் முகம் பாராது.
அதைக் கேட்டவளின் கன்னங்கள் சிவந்தபோதும், இதழ்களில் பூத்த புன்னகையோடு எழுந்து சென்று அடுத்த பக்கத்தில் படுத்துக்கொண்டவளின் மனம் என்றுமில்லாது இன்று நிறைந்திருந்தது.
இதே கட்டிலில்தான் இவ்வளவு நாளும் தூங்கி இருக்கிறேன். இன்றுபோல் என்றுமே இவ்வளவு நிறைவாக, சுகமாக உணர்ந்ததில்லையே என்று எண்ணியபடியே உறங்கிப்போனாள் அவள்.
அடுத்தநாள் காலையில் எழுந்துகொண்ட கவி, நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கணவனையும் மகளையும் சிலநொடிகள் ரசித்துவிட்டு காலைக்கடன்களை முடித்தாள்.
இன்று அவனுக்கு உடைகள் வாங்கவேண்டும் என்று நேற்று நினைத்தது ஞாபகம் வர, வேகமாக காலை உணவைத் தயாரித்துவிட்டு அறைக்குள் சென்றாள். அங்கே அவர்கள் இருவரும் இன்னும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
ரவியின் அருகில் சென்றவள் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவனைத் தட்டி எழுப்பினாள். எழுந்துகொண்டவனின் கண்களுக்கு விருந்தாக, மலர்ந்த முகத்தோடு காட்சி தந்தாள் அவன் மனைவி!
அவன் விழிகள் அவளை விழுங்கவும், அருகில் தூங்கும் மகளை விழியசைவால் காட்டிவிட்டு, “எழுந்திருங்கள். வெளியே போகவேண்டும்..” என்றாள் புன்னகையுடன்.
அவளின் விழிகள் பேசிய பாஷையில் தன்னைத் தொலைத்துக்கொண்டே, “போகலாம். ஆனால் எங்கே..?” என்று கேட்டான் ரவி.
“ஏன், சொன்னால் தான் வருவீர்களா…?”
“உன் பின்னால் காலம் பூரா வரக்காத்திருக்கிறேன் கண்மணி. வெளியே வரமாட்டேனா…” வசனம் பேசினான் அவன்.
சிரிப்பு வந்தபோதும் அதை அடக்கிக்கொண்டு, “பிறகு என்ன கேள்வி? எழுந்து தயாராகுங்கள்..!” என்றாள் மிதப்பாக.
அவள் காட்டிய அந்த உரிமையில் அவன் மனம் கரைந்தது. எழுந்து முகம் கழுவி வந்தவனிடம் தேநீர் கப்பை நீட்டினாள் கவி.
தேநீரை அருந்திக்கொண்டே, “எங்கே போகிறோம் கவி..?” என்று மீண்டும் கேட்டான் ரவி.
“அது… உங்களுக்குக் கொஞ்சம் உடைகள் எடுக்கப் போகிறோம்…” என்றாள் அவன் முகம் பாராமல்.
அன்று, கடையில் வைத்து அவளின் தெரிவுக்காக அவன் ஆவலுடன் காத்திருந்தும் தெரிவு செய்யாதவள், இன்று தானாகவே அவனுக்கு உடைகள் எடுக்க நினைக்கிறாள் என்றால்…. அவளின் மனமாற்றம் தெரிந்தது அதில்.
அவன் எதுவும் சொல்லாமல் இருக்கவே, “அது… அது இங்கே உங்களிடம் இருப்பவைகள் உங்களுக்கு போதாதே… அதனால்தான்…” என்றாள் மீண்டும்.
முகம் மலர, “போகலாம் கவி. முதலில் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குப் போய்விட்டு பிறகு போவோம்…” என்றவன், மகள் இன்னும் குளித்து முடிக்கவில்லை என்பதைக் குளியலறையில் விழும் தண்ணீர் சத்தத்தை வைத்து உறுதி செய்துகொண்டு மனைவியை அறைக்குள் தள்ளிக்கொண்டு போனான்.
“அச்சோ.. என்ன இது?” என்றவளைச் சுவரில் சாய்த்து, அவள் மீது தான் சாய்ந்து, “என் மகாராணிக்கு என்ன திடீரென்று என்மீது கரிசனம்..?” என்று காதலுடன் கேட்டான்.
“அது… அது…” பேச்சு வருவேனா என்றது கவிக்கு.
அவளின் திணறலை ரசித்தபடி, “என் மீதிருந்த கோபம் போய்விட்டதா..?” என்று கேட்டான் ரவி.
விடை தெரிந்த கேள்விதான். ஆனாலும் அவள் வாயால் அதைக் கேட்க ஆசைப்பட்டான்.
அவளால் பேசமுடிந்தால் அல்லவோ பதில் சொல்ல….
“ம்..ம்…” என்றவளின் தலை அவனைப் பார்க்கமுடியாமல் குனிந்துகொண்டது.
“என்னைப் பிடித்திருக்கிறதா..?” அன்று ஹோட்டலில் வைத்துக் கேட்ட கேள்வியை இன்றும் கேட்டான். அப்படிக் கேட்டவனின் கைகளோ அவளைச் சுற்றி வளைத்தது.
அவன் அவளோடு நிற்கும் நிலையே அந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லவில்லையா என்று நினைத்தவளுக்கு, பேச்சு வரமறுத்தது.
ஒற்றை விரலால் அவள் நாடியைப் பிடித்து உயர்த்தி, “என் கேள்விக்கு என்ன பதில்?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டான் அவன்.
“ஏன், உங்களுக்குத் தெரியாதா..?” மிடுக்காகக் கேட்க முயன்றபோதும் அவள் குரல் குழைந்தது.
“தெரியும்தான். ஆனால், நீ உன் வாயால் சொன்னால் இன்னும் சந்தோசமாக இருக்கும்.” என்றான் அவள் உள்ளத்தைக் களவாடிய கள்வன்.
கண்கள் மலர அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில், மெல்ல மெல்லத் தீவிரமான தன்மை குடியேறியது.
அவன் விழிகளைப் பார்த்து, “அன்று ஹோட்டலில் வைத்து நீங்கள் இதே கேள்வியைக் கேட்டபோது, உங்களை எனக்கு பிடிக்கவில்லைதான். ஏன் வெறுப்பாகக் கூட இருந்தது. ஆனால் இன்று….” என்று அவள் இழுக்க,
“இன்று…?” ஆர்வம் பொங்க கேட்டான் அவன்.
அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கி, அவன் முகத்தைத் தன் முகத்தின் அருகே இழுத்து, “இன்று உங்களை எனக்கு மிக மிக மிகப் பிடித்திருக்கிறது. என்ன மாயமந்திரம் செய்தீர்கள் என்று தெரியவில்லை கோபம் போன இடம் தெரியவில்லை. வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவுக்கு இந்தக் கறுப்பனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது…” என்றவள், தன்னால் முடிந்தவரை அவன் கழுத்தைத் தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டாள்.
அவள் காட்டிய அந்த நெருக்கத்தில் முற்றிலுமாகத் தொலைந்து போனான் ரவி. தானும் அவளைத் தனக்குள் புதைத்துக்கொண்டு, “ஹேய் கண்ணம்மா…..” என்றவனின் குரல் ஏனோ தழுதழுத்தது. மேலே பேச வார்த்தைகளும் வரவில்லை.
பின்னே, பொருள் தேடி வந்தவனுக்கு புதையலே கிடைத்தால் எப்படி இருக்கும்?
அதன்பிறகு அவர்களுக்குள் எந்தப் பேச்சு வார்த்தைகளும் நடக்கவில்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை. ஒருவரின் அணைப்புக்குள் மற்றவர் அடங்கியபடி, தங்களை மறந்து நின்றனர்.
குளியலறையில் இருந்து வெளியே வந்த பாவை, தாயை அழைக்கும் குரல் கேட்டு, மனைவியை விடுவித்தான் ரவி.
அதன்பிறகு அவர்களின் அந்த வார இறுதி நாட்கள் மிக வேகமாகக் கடந்தது.
ஞாயிரு இரவு பாவைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தான் ரவி. தொலைபேசி அழைக்கவும், உள்ளே வேலையாக இருந்த கவி வந்து எடுத்தாள்.
“சொல்லுங்கள் நந்தன் அண்ணா….”
அந்தப் பக்கம் அவன் சொன்னதைக் கேட்டதும் முகம் மலர, “வாழ்த்துக்கள் அண்ணா. சந்தோசமாக இருக்கிறது… வைத்தியர் உறுதிப்படுத்தி விட்டாரா…? சாந்தியிடம் தொலைபேசியைக் கொடுங்கண்ணா…” என்று கேட்டு சாந்தியிடமும் கதைத்துவிட்டு, ரவியிடம் தொலைபேசியை நீட்டினாள் கவி.
மனைவியின் பேச்சில் இருந்தே விஷயத்தை ஊகித்தவன், “என்னடா, அதற்குள் அப்பா ஆகிவிட்டாயா. வாழ்த்துக்கள்டா….” என்று ரவி கேலி செய்ய,
“உன்னோடு ஒப்பிடுகையில் என் வேகம் குறைவுதான். நீ அடுத்த வாரிசை எப்போது இறக்குமதி செய்யப் போகிறாய்..?” என்று ரவியை வாரினான் நந்தன்.
கவியைப் பார்த்த ரவியின் கண்கள் சிரித்தது. அவள் அவனைக் கேள்வியாகப் பார்க்க, அவளைப் பார்த்துக்கொண்டே, “அடுத்த வாரிசை இறக்குமதி செய்யக் குறைந்தது இன்னும் பத்து மாதங்களாவது பொறுக்கவேண்டுமேடா….” என்று சோகம்போலச் சொன்னான் ரவி.
அவன் பார்வையிலும் பேச்சிலும் செங்கொழுந்தாகிப் போனவள், அவனை முறைக்க முயன்று தோற்றாள்.
வாய் நந்தனோடு கதைத்தாலும், சிவந்து நின்ற மனைவியை அவன் விழிகள் விழுங்க, அவன் முன்னால் நிற்க முடியாமல் அறைக்குள் புகுந்துகொண்டாள் கவி.

