அத்தியாயம் -32
அடுத்தநாள் மகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு ரவியும் கவியும் நந்தனின் வீட்டுக்குச் சென்றனர். சாந்தி தாய்மை அடைந்ததற்கு அவளைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல ஆசைப்பட்டாள் கவி.
இவர்களின் திருமணத்தன்று அங்கே வந்த சகுந்தலா இன்னும் அங்கேதான் இருந்தார்.
சாந்தியைக் கட்டிக்கொண்டு தன் வாழ்த்தைத் தெரிவித்த கவி எல்லோரிடமும் இன்முகமாகக் கதைத்தபோதும் சகுந்தலாவின் புறம் திரும்பியும் பார்க்கவில்லை. ரவி மட்டுமே தாயுடன் கதைத்தான். மகனை இரண்டு நாட்கள் பிரிந்து இருந்ததோ என்னவோ, தன் கோபத்தை மறந்துவிட்டு சகுந்தலாவும் அவனோடு கதைத்தார்.
சாந்தியின் கட்டாயத்தை மீறமுடியாமல் மதிய உணவை அங்கேயே முடித்துவிட்டு எல்லோருடனும் கதைத்துக்கொண்டு இருந்தார்கள் ரவியும் கவியும்.
அவனின் தேவை அறிந்து கவி நடந்துகொள்வதும், எப்போதும் தன் அருகிலேயே மனைவியை ரவி அமர்த்திக்கொள்வதும், ரவியின் முகம் பார்த்து கவி பேசுவதும் அவர்களுக்குள் இருந்த இடைவெளி விலகி விட்டதை மற்றவர்களுக்கு உணர்த்தியது.
பாவைக்கு பள்ளி விடும் நேரம் வந்துவிட, மகளை அழைத்துக்கொண்டு வந்தான் ரவி.
“சாந்தி ஆன்ட்டி , உங்கள் வயிற்றுக்குள் குட்டிப் பாப்பா இருக்கிறதா..?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் பாவை.
“ஆமாம்டா செல்லம். ஆன்ட்டிக்கும் பாவை மாதிரி அழகான குட்டி ஒன்று வரப்போகிறது…” என்று சாந்தி சொல்லவும் பாவையின் முகம் யோசனையைக் காட்டியது.
உடனேயே தாயிடம் திரும்பி, “அம்மா, கல்யாணம் நடந்தபிறகு தானாம் குட்டிப்பாப்பா பிறக்கும் என்று மணி சொன்னாள். ஆனால் அம்மா… உங்களுக்கும் அப்பாக்கும் இப்போதுதானே திருமணம் நடந்தது. பிறகு எப்படி நான் உங்கள் வயிற்றுக்குள் வந்தேன்…?” என்று அவள் கேட்க, பதில் சொல்லமுடியாமல் திகைப்போடு கணவனைப் பார்த்தாள் கவி.
கண்களை மூடித்திறந்து மனைவியை அமைதிப் படுத்திவிட்டு, “ஓவிம்மா இங்கே வா. அப்பா சொல்கிறேன்…” என்று மகளை அழைத்துத் தன் மடியில் இருத்திக்கொண்டான் ரவி.
“நீ பிறக்க முதலே அங்கே மலையகத்தில் வைத்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. அதன்பிறகுதான் ஓவிக்குட்டி அம்மாவின் வயிற்றுக்குள் வந்தாள். ஆனால் அந்தத் திருமணம் நடந்தபோது உன் அப்பம்மா, காஞ்சனா அம்மம்மா, கனகேந்திரம் தாத்தா, நந்தன் மாமா, சாந்தி ஆன்ட்டி , ராஜ் மாமா, நிரு ஆன்ட்டி இவர்கள் எல்லோரும் இருக்கவில்லை. அவர்கள் பார்க்கவில்லை என்பதால் எங்கள் திருமணம் மீண்டும் நடந்தது……” என்றான் ரவி, உண்மையையும் தன் பேச்சில் கலந்து.
“ஓ…” என்று தகப்பன் சொன்ன விளக்கத்தை உள்வாங்கிக்கொண்டாள் பாவை.
எதற்கோ எழுந்துசென்ற சகுந்தலாவைப் பார்த்துவிட்டு, “அப்பம்மா, எனக்கு தாகமாக இருக்கிறது. குடிக்க ஜூஸ் தருகிறீர்களா..?” என்று கேட்டபடி பாவை போகவும்,
இவள் என்ன, என்னிடம் கேட்காமல் அங்கே கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டே, இயல்பாக மகளின் தேவையைக் கவனிக்க கவி எழுந்துகொள்ள, அவளின் கையைப் பிடித்து இழுத்துத் தன்னருகில் மீண்டும் அமர வைத்துக்கொண்டான் ரவி. “அம்மாவே கொடுக்கட்டும்..நீ இரு.” என்றவன் தொடர்ந்து, “பாவை கேள்வி கேட்டால் பதில் சொல்ல எதற்குத் தயங்குகிறாய் கவி. அவள் பார்க்க நம் திருமணம் நடந்திருக்கிறது. அதனால் அவளுக்குத் தோன்றும் சந்தேகங்களை நம்மிடம் தானே கேட்பாள். அப்படிக் கேட்கையில் அவளுக்குப் புரியும் விதத்தில் சொன்னால் புரிந்துகொள்வாள்.” என்றான் ஆதரவாக.
அங்கே சகுந்தலாவுடன் உள்ளே வந்த பாவை ஜூஸ் அருந்துவதைக் கண்ட காஞ்சனா, “பாவை. ஜூசைக் குடிப்பதை விட்டுவிட்டு வந்து சாப்பிடு…” என்று அழைத்தார்.
அவளோ, “அப்பம்மா, எனக்கு நிறையப் பசிக்கிறது. நீங்கள் எனக்குத் தீத்தி(ஊட்டி) விடுகிறீர்களா…?” என்று சலுகையோடு சகுந்தலாவிடம் கேட்டாள்.
சகுந்தலாவுக்குத்தான் திண்டாட்டமாக இருந்தது. தான் தள்ளி நின்றாலும் ‘அப்பம்மா.. அப்பம்மா..’ என்று வந்து ஒட்டிக்கொள்ளும் அவளை அவரால் விலக்கிவைக்கவும் முடியவில்லை. அவளோடு ஒட்டிக்கொள்ளவும் முடியவில்லை.
மறுக்கமுடியாமல் உணவைத் தட்டில் போட்டு அவளுக்குத் தீத்திவிட்டார். வயிறார உண்டவள், “நன்றி அப்பம்மா…” என்று அவரின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
சில்லென்று இருந்த அந்தச் சின்ன இதழ்களின் ஸ்பரிசம், அவரின் ஆழ்நெஞ்சு வரை பாசவிதையை விதைக்க, கண்கள் கலங்கியது சகுந்தலாவுக்கு.
“அச்சச்சோ… உங்கள் கன்னத்தில் சோறு ஒட்டிவிட்டதே…” என்றவள் அவரின் கன்னத்தைத் தன் கையால் துடைத்துவிட்டாள்.
நான் அவளுக்குச் செய்த பாவங்களை அறிந்தால், அப்போதும் என்னோடு இவள் இப்படி அன்பாக இருப்பாளா என்று தோன்றவும், நெஞ்சு அடைக்கக் கதிரையில் இருந்து சட்டென்று சகுந்தலா எழுந்துகொண்டதில், அவர் மடியில் இருந்த கைக்குட்டை கீழே விழுந்தது.
உணவு ஊட்டிய கையில் தட்டைப் பிடித்துக்கொண்டு கைக்குட்டையை எடுக்க அவர் முனைய, “பொறுங்கள் அப்பம்மா. நான் எடுத்துத் தருகிறேன்.” என்றபடி தானே எடுத்துக்கொடுத்தாள் பாவை.
அந்தக் குழந்தை உள்ளத்தின் வெள்ளை அன்பில் கொஞ்சம் கொஞ்சமாக உருகிக்கொண்டு இருந்தது அந்த முதிய உள்ளம்!
நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த காஞ்சனாவுக்கு சகுந்தலாவின் மனப்போராட்டம் புரிந்தது.
கழுவிக்கொண்டு பாவை தாய் தந்தையரிடம் சென்றுவிட, “உனக்கு என்னதான் பிரச்சினை சக்கு?” என்று கோபமாக ஆரம்பித்தார் காஞ்சனா.
“என் மீது பாசத்தைப் பொழியும் இந்தக் குழந்தையைப் பற்றி என்னவெல்லாம் கதைத்து இருக்கிறேன். இன்று அவள் என் மீது காட்டும் பாசமே என்னைக் குத்திகிறது காஞ்சி. அவளின் முகத்தைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை…” என்றார் சகுந்தலா வேதனை நிறைந்த குரலில்.
அதைக் கேட்டுவிட்டு, “செய்த தவறுகளை நினைத்து இனியும் தவறு செய்யாதே சக்கு…” என்று கண்டித்தார் காஞ்சனா.
சகுந்தலா அமைதியாகவே இருக்க, “நீ செய்த தவறுகளால் தான் இப்போது தனித்து நிற்கிறாய். இந்தக் குழந்தையையும் ஒதுக்கிவிட்டு என்ன செய்யப் போகிறாய்? தனிமையில் இனிமை காணப்போகிறாயா…?” என்று கொஞ்சம் சூடான குரலில் கேட்டார் காஞ்சனா.
“நீ கூட இப்படிச் சொல்கிறாயே காஞ்சு. என்னால் அங்கே தனியாக இருக்கமுடியாமல் தானே இந்த இரண்டு நாட்களும் உன் வீட்டில் வந்து தங்கி இருக்கிறேன். சமைக்கப் பிடிக்கவில்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை, எதுவுமே பிடிக்கவில்லை. இதையெல்லாம் யாருக்காகச் செய்ய என்று மனம் முழுவதும் வெறுமைதான் நிறைந்திருக்கிறது காஞ்சி…” என்றார் சகுந்தலா, தாளமுடியாத வேதனையோடு குரல் தழுதழுக்க.
அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், “நீ விலகிப்போனாலும் பாசம் காட்டும் பேத்தி ஒருத்தி தங்கவிக்கிரகம் மாதிரி இருக்கிறாள். அவளை ஒதுக்கிவிட்டு தனிமையாக இருக்கிறது வெறுமையாக இருக்கிறது என்றால் அதற்கு யார் பாடு..?” என்று காட்டமாக கேட்டார் காஞ்சனா.
அதைக் கேட்டு கண்களில் கண்ணீர் வடிய நின்ற தோழியின் கையைப் பிடித்துக்கொண்டு, “திருமணம் ஆகும்வரைதான் பிள்ளைகள் நமக்குச் சொந்தம் சாக்கு. அவர்களுக்கு என்று குடும்பம் வந்தபிறகு நாம் விலகி இருப்பதுதான் நமக்கு மரியாதை. உன் மகன், மனைவி பிள்ளைகள் என்றுதான் வாழவேண்டும். அதுதான் முறை! இவ்வளவு காலமும் அவர்களைப் பிரிந்து இருந்தவன் இனியாவது சேர்ந்து சந்தோசமாக வாழட்டும்.” என்றார் அவருக்குப் புரியவைக்கும் விதமாக.
தொடர்ந்து, “ஒரு பேரனையோ பேத்தியையோ காண்பதற்கு இன்னும் ஏழு மாதம் காத்திருக்க வேண்டுமே என்று நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். நீயானால் அருமையான பேத்தியை வைத்துக்கொண்டு தனிமையில் கிடக்கிறாய். நான் சொல்வதைக் கேள் சக்கு. உன் மிகுதி வாழ்க்கைக்கு மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தரப்போவது உன் பேத்தி மட்டும்தான். பழையதை எல்லாம் மறந்துவிட்டு அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள். அதேபோல இதுவரை அப்பம்மா பாசத்தை உணராதவளுக்கு அந்தப் பாசத்தை நீயும் கொடு. உன் மகனும் மனைவியோடு சந்தோசமாக வாழட்டும்.” என்றார் காஞ்சனா இதமாக.
தனிமையில் தவிக்கும் தோழியைப் பார்க்கப் பாவமாக இருந்தது அவருக்கு. என்னதான் அவர் செய்தது பிழை என்றாலும், முதிய உள்ளம் அல்லவா ஓரளவுக்கு மேல் அவராலும் வளைந்தோ விட்டுக்கொடுத்தோ போகமுடியாது என்பது அவரின் வயதிலேயே இருக்கும் காஞ்சனாவுக்குப் புரிந்தது. எனவே தோழியை முடிந்தவரை தேற்ற முயன்றார்.
இனி உயிர் வாழும் மிகுதிக் காலம் முழுவதும் அவரைத் தொடரப் போகும் தனிமையை நினைத்துப் பயந்து கொண்டிருந்த சகுந்தலாவுக்கு இனிமை சேர்க்க வந்த விடியலாகத் தெரிந்தாள் அவரின் பேத்தி ஓவியப்பாவை.

