அவரின் சிந்தனையின் நாயகியே அங்கே வந்து, “அப்பம்மா… நான் உங்கள் வீட்டுக்கு வந்ததே இல்லையே. இன்றைக்கு நான் உங்களோடு வரப்போகிறேன்…”என்றாள் உரிமையாக.
நெஞ்சம் நெகிழ, கண்களில் கண்ணீர் வழிய, “அப்பம்மா அங்கே தனியாகத்தான் இருக்கிறேன். எனக்குத் துணையாக நீயும் என்னோடு வருகிறாயா? என் செல்லத்தை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன்…” என்றவரின் குரல் அவரையும் மீறி உடைந்தது.
இதுவரை மனதில் இருந்த தடையைக் காஞ்சனாவின் பேச்சு நீக்கி இருந்ததில் உள்ளத்தில் அன்பு பெருகப் பேத்தியோடு கதைத்தார் அவர்.
“உங்களுக்குத் தனியாக இருக்கப் பயமா அப்பம்மா? அதுதான் அழுகிறீர்களா? அழாதீர்கள். எனக்குப் பயமில்லை. நான் உங்களோடு வருகிறேன். ஆனால் அப்பம்மா, நான் அப்பாவிடமும் அம்மாவிடமும் உங்களோடு போகவா என்று கேட்டுவிட்டு வரவா?” என்று கேட்டாள் அந்த குழந்தை உள்ளத்துக்குச் சொந்தக்காரி!
“வாடா செல்லம். உன் அப்பாவிடம் அப்பம்மாவே கேட்கிறேன்…” என்று பேத்தியைத் தன் கைவளைவுக்குள்ளேயே வைத்து நடத்தியபடி விறாந்தைக்குச் சென்றார் சகுந்தலா.
மகளோடு ஒட்டிக்கொண்டு வரும் சகுந்தலாவைக் கண்டதும், வியப்போடு ரவியும் கவியும் அவரைப் பார்த்தனர்.
“என் பேத்தி என்னுடனேயே இருக்கட்டும் ரவி…” என்றார் சகுந்தலா எடுத்த எடுப்பிலேயே.
மனைவியின் முகத்தில் மறுப்பைப் பார்த்துவிட்டு, “அவளுக்குப் பள்ளிக்கூடம் இருக்கிறதே அம்மா…” என்றான் ரவி.
“நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் வந்து என்னை நம் வீட்டுக்குக் கூட்டிவாருங்கள் அப்பா….” என்றாள் அவன் மகள்.
வேகமாக வந்த அந்தப் பதிலே மகளின் விருப்பம் என்ன என்பதைத் தாய் தந்தையருக்கு உணர்த்தியது.
“அது சரியாக வராது செல்லம். தினமும் அதற்காக நீ காலையிலேயே எழமுடியாது.” கரிசனத்தோடு பேத்தியின் தூக்கத்தைக் கவனத்தில் கொண்ட சகுந்தலா,
“உன் அப்பா, அப்பம்மாவுக்கும் ஒரு கார் வாங்கித் தந்திருக்கிறான். அது அங்கே வீட்டில் சும்மாதான் நிற்கிறது. அதற்கு ஒரு டிரைவரை அவன் பிடித்துத் தரட்டும். அப்பம்மாவே உன்னைத் தினமும் பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப்போய் கூட்டி வருகிறேன். மாலையில் வேண்டுமானால் கொஞ்சநேரம் அம்மா அப்பாவுடன் இருந்துவிட்டு வா…” என்றார் முடிவாக. என் பேத்தி என்னுடன்தான் இருப்பாள் என்கிற பிடிவாதம் அவர் குரலில் இருந்தது.
‘என் பிள்ளையின் விடயத்தில் முடிவெடுக்க அவர் யார்…’ என்கிற மறுப்போடு கணவனைக் கவி முறைக்க, அவளைக் கெஞ்சலாகப் பார்த்து, அவளுக்கு மட்டுமே புரியும் விதமாக ‘ப்ளீஸ்..’ என்று உதடுகளை அசைத்தான் ரவி.
விருப்பம் இல்லாதபோதும் கணவனின் வேண்டுதலை அலட்சியப்படுத்த முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் கவி.
“ஓவிம்மாக்கு அப்பம்மாவுடன் போயிருக்க விருப்பமா..?” என்று ரவி கேட்க,
“ஆமாம் அப்பா. அப்பம்மாவுக்கு அங்கே தனியாக இருக்கப் பயமாம். நான் அவருக்குத் துணையாக இருப்பேன் தானே…” என்றாள் பெரியமனுசியாக.
“ஓ… அந்தளவுக்கு பெரிய பெண்ணா என் ஓவிக்குட்டி..?” என்று ரவி கேலியாகக் கேட்க, “அப்பா…” என்று சிணுங்கினாள் பாவை.
அவளின் சிணுங்கலின் அழகில் கவியின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
இன்னும் சிறிதுநேரம் அங்கேயே இருந்துவிட்டு, “வாங்கம்மா, உங்களையும் ஓவியையும் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்..” என்று ரவி எழுந்து கொள்ளவும்,
“நீ கிளம்பு ரவி. சாந்தி பால்பிட்டு விருப்பம் என்றாள். காஞ்சனாவுக்கு அது ஏதோ பிழைக்கிறதாம். அதைச் செய்து கொடுத்துவிட்டு நாங்கள் நந்தனோடு போகிறோம்..” என்றார் சகுந்தலா.
ரவியிடம், “நான் ஆன்ட்டியையும் பாவையையும் கூட்டிக் கொண்டுபோய் விடுகிறேன். நீ போடா..” என்றான் நந்தன்.
மகளிடம் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு, விடைபெற்றனர் ரவியும் கவியும்.
மகளை விட்டுவிட்டு வந்த மனைவியின் மனச்சிணுக்கத்தை உணர்ந்த ரவி, நந்தனின் வீடு தாண்டியதும் அவளை இழுத்துத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
மனம் புழுங்கியபோதும் அமைதியாகவே இருந்தாள் கவி.
“அம்மாவும் பாவம்தானே கவி. அதோடு நம் மகளும் அவரோடு ஒட்டிக்கொண்டாளே…” என்றான் இதமாக.
அப்போதும் அவள் அமைதியாகவே இருக்க, “அவர் செய்தவைகள் பிழையாக இருந்தாலும் முற்றிலுமாக அவரை ஒதுக்க முடியாதுடா. அவர் என் அம்மா. அதேநேரம் நம் குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பெரியவரும் அவர்தான். எல்லாவற்றையும்விட நம் மகளின் விருப்பம் முக்கியம் கவி..” என்றான் அவளுக்குப் புரியும் விதமாக.
தாயின் மனதையோ அல்லது மனைவியின் மனதையோ கட்டாயப்படுத்தி மாற்ற முயலவில்லை ரவி. மாற்றம் தானாக நிகழ்ந்தால் மட்டுமே அந்த மாற்றம் நிலைத்திருக்கும் என்று உணர்ந்தவன், அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டான்.
அதோடு எந்தக் காரணத்தைக் கொண்டும் தன் மனைவி இனியும் வேதனைக்கு உட்படுவதை அவன் விரும்பவில்லை. அதனாலேயே இதமாகக் கதைத்து அவளைச் சமாதானப்படுத்தினான்.
“ஆனால் எனக்கு… நான் இதுவரை அவள் இல்லாமல் இருந்ததே இல்லை…” என்றவளின் விழிகள் மெலிதாகக் கலங்கியது.
“அதுதான் அவளுக்குப் பதிலாக அவள் அப்பா நான் இருக்கிறேனே…” என்றான் ரவி அவள் கன்னத்தைத் தட்டி.
அதுவரை இருந்த மனநிலை மாற, கண்களில் மெல்லிய நீர்ப்படலத்தோடு கணவனை முறைத்தவளின் உதடுகள் சிரித்தது. அவனிடமிருந்து விலகப் பார்த்தவளை விடாமல் ஒற்றைக் கையால் அணைத்துக்கொண்டான் அவன்.
அதன்பிறகு வீடு வரும்வரை அவர்களுக்கிடையில் சுகமான மௌனம் குடிகொண்டிருந்தது.
வீட்டுக்குள் வந்ததும் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான் ரவி. வெட்கத்துடன் விலகி ஓட முயன்றவளின் கையை எட்டிப்பிடித்து, அதில் ஒரு பையை வைத்தான்.
கண்களில் வியப்போடு அதை பிரித்துப் பார்க்க, அழகான சேலை ஒன்று உள்ளே இருந்தது.
நொடியில் பூவாய் முகம் மலர, ‘இது எதற்கு..?’ என்கிற கேள்வியைத் தாங்கி அவள் பார்க்க, “கட்டிக்கொண்டு வா…” என்றான் அவன் கள்ளச் சிரிப்போடு.
மனம் ஏதேதோ இனிய கற்பனைகளைக் காண, குளித்து கணவன் கொடுத்த சேலையையே உடுத்தி சோலையென தயங்கித்தயங்கி வந்தவளைப் பார்க்கையில் உல்லாசம் நிறைந்திருந்த ரவியின் முகம் மேலும் மலர்ந்தது.
அதற்கு மேலும் தாங்கமுடியாதவனாய்,வேகமாக அவளருகே சென்று அவளை அப்படியே அள்ளிக்கொண்டவன், அவளைக் கட்டிலில் கிடத்தி, அவளின் இதழ்களோடு இதமாய்ப் பதமாய்த் தன் இதழ்களைக் கலந்து சுகமாய்ச் சுகித்தான்.
உடைகள் தாண்டி அவளின் உடல் தீண்டியவனின் கரங்கள், சேலை எதற்கு என்பதைச் செய்முறையிலேயே அவளுக்குப் புரியவைத்தது.
அடுத்த கட்டத்துக்கு முன்னேறத் துடித்த அந்த நிலையிலும் மனைவியின் முழுச் சம்மதம் வேண்டும் என்று கேட்டது அவன் மனது.
“கவி…?” அவன் குரல் கிசுகிசுத்தபோது,
“ம்ம்…..” என்று முணுமுணுத்தது அவள் குரல்.
“உனக்கு… உனக்கு என் மீது வெறுப்பு ஏதும் இல்லையே….” வேக மூச்சோடு வந்த அவன் கேள்வியில், மயக்கத்திலும் கிறக்கத்திலும் மூடிக்கிடந்த விழிகளைப் பட்டென்று திறந்து அவனை முறைத்தாள் அவள்.
“அப்படி ஏதும் இல்லையே…” மீண்டும் தவிப்போடு கேட்டான் ரவி.
“அடேய் விருமாண்டி! விசரனாடா நீ? எந்த நிலையில் இருந்துகொண்டு என்ன கேள்வியைக் கேட்கிறாய்? சரியான மரமண்டைடா நீ!” என்றவளின் அதிரடியான பேச்சில் திகைத்துப்போனான் ரவி.
ஒரு நொடிதான் அந்த திகைப்பும்!
“அடி என் கறுப்பி…!” என்று அவளைச் சீராட்டியவன், செயலற்று நின்ற அந்த நொடிக்கும் சேர்த்து வேகமாய் அவளை ஆட்கொண்டான்.
அவனின் அந்த ஆக்கிரமிப்புக்குள் ஆசையோடு அடங்கிப்போனாள் அவனின் அழகான கறுப்பி!
புரிதலோடு கொள்ளும் காதல் வாழ்வின்இறுதிவரை தொடரும்! ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட அவர்களின் வாழ்விலும் இனி எல்லாம் சுகமே!

