அத்தியாயம் 55
காலையில் விழிக்கையில் மிதிலா மகனருகில் இருந்தாள். எப்போது நடந்தது என்று தெரியாவிட்டாலும் என்ன நடந்திருக்கும் என்று தெரியுமே. அது தந்த இதமான முறுவலோடு எழுந்தவள், இரவு அவன் அணிந்திருந்த டி சர்ட்டை இப்போது தான் போட்டிருக்கக் கண்டு முகம் சிவந்தாள்.
ஓடிப்போய் முதல் வேலையாக மற்ற அறையை ஒதுக்கி, ஜன்னலைத் திறந்துவிட்டாள். அவன் சட்டையைக் கழற்ற மனமேயில்லை. அவனே தன்னுடன் ஒட்டிக்கொண்டிருப்பது போலொரு உணர்வு. அதை இழுத்து வாசம் பிடித்துவிட்டுக் கழற்றி அழுக்கு உடைக் கூடைக்குள் போட்டாள். மகன் பார்த்துவிட்டால் அவன் கேள்விகளைச் சமாளிக்க முடியாதே.
காலைக் கடன்களை முடித்து, சுவாமி கும்பிட வந்தவளின் உள்ளம் நிறைந்து தளும்பிற்று. பல துன்ப துயரங்களைத் தந்தாலும் மீண்டும் அவள் வாழ்க்கை மலர்ந்து போயிற்றே. நெஞ்சார நன்றி சொல்லிவிட்டு வந்து காலை உணவைப் பார்க்க ஆரம்பித்தாள். கைகள் வேலைகளைக் கவனித்தாலும் நினைப்பு முழுவதும் முதல் நாள் இரவிலேயே நின்றது.
இவன்தானா இத்தனை நாள்களும் அவளை நெருங்கப் பயந்துகொண்டு விலகி இருந்தவன் என்று யோசிக்கும் அளவில் இருந்தது அவன் வேகமும் அவள் மீதான ஆசையும்.
சற்று நேரத்தில் அவள் நினைவுகளின் நாயகனே அதிகாலையிலேயே எழுந்து அந்த ஊரையே சுற்றி ஓடிவிட்டு வந்து வியர்க்க விறுவிறுக்க நின்றான்.
திரும்பிப் பார்த்த மிதிலாவினால் அவனிடமிருந்து விழிகளை அகற்ற முடியாது போயிற்று.
மேலாடை முற்றிலுமாக வியர்வையில் குளித்திருக்க, வீடு வரை ஓடியே வந்ததில் மார்புக்கூடு மேலும் கீழுமாக ஏறி இறங்க, இடுப்பில் கைகளை வைத்தபடி நின்றவனின் அகன்ற தோள்களும், விடைத்த மார்பும், வைரம் பாய்ந்த தேகமும் மிகுந்த கவர்ச்சியாய்த் தெரிந்து, அவள் முகத்தைச் சிவக்க வைத்தன.
“குளிச்சிட்டு வாங்கோ. சாப்பாடு ரெடி!” என்றாள் அவனைப் பாராமல்.
இதற்குள் அதிரன் எழுந்திருந்தான். அவனையும் அழைத்துப்போய், பல்லுத் தீட்ட வைத்து, இருவருமாகக் குளித்து, அப்படியே தயாராகி வந்தனர்.
காலை உணவையும் முடித்துக்கொண்டு அப்பாவும் மகனுமாகப் புறப்பட்டார்கள். மகனும் இருந்ததில் கிடைத்த சிறு இடைவெளியில் வேகமாய் அவளை இழுத்து நெற்றியில் இதழ் பதித்ததோடு சரி. அதற்குமேல் சந்தர்ப்பம் அமையவில்லை.
எப்போதும்போல் கேட் வாசல் வரை அவர்களை வழியனுப்பச் சென்றாள் மிதிலா. இப்போது புறப்பட்டு, மகனைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு அவனும் தன் வகுப்பிற்குச் சென்றான் என்றால் மாலை நான்கு மணிக்குப் பிறகுதான் வீடு திரும்புவான். அதற்குள் சின்னவன் ஆட்டோவில் பள்ளிக்கூடம் முடிந்து வந்துவிடுவான்.
அப்படிப் புறப்படுகையில் தினமும் மகன் முகம் நெற்றியில் முத்தமிட்டுத்தான் அனுப்பி வைப்பாள். இன்றும் அதுபோல் அவள் செய்ய, எனக்கு என்பதுபோல் சிறு சிணுங்கலுடன் அவளையே பார்த்தான் அவள் கணவன். எழுந்த சிரிப்பை அடக்கியபடி அவர்களை வழியனுப்பி வைத்தாள்.
மாதவன் குடும்பம் அவன் சித்தி வீட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இங்கே அவன் அன்னையால் மணமாகி வந்த பெண்ணுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதில் அவன் சித்தி அங்கே வந்து ஒரு வாரம் இருந்துவிட்டுப் போகச் சொல்லியிருந்தார். அவனுக்கும் அது நல்ல முடிவாகவே பட, சம்மதித்துப் புறப்பட்டுக்கொண்டிருந்தான்.
அவர்கள் புறப்படுகிறவரை தியாக்குட்டியோடு இருந்துவிட்டு வீட்டுக்குள் வந்தவளுக்குக் கணவனின் நினைவு.
வீடு ஒதுக்கி, பகல் சமையலுக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்து, துவைக்க வேண்டிய உடைகளை சலவைத் தூளினுள் அமிழ்த்தி என்று வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் கணவன் பார்த்துவிட்டுப் போன அந்தப் பார்வை நெஞ்சுக்குள் நின்று தித்தித்துக்கொண்டேயிருந்தது.
இரவு முழுக்க சிறிதும் அவளை விலக விடாது, காணாமல் கண்ட மிட்டாயை ருசிப்பவன் போன்று கொஞ்சித் தீர்த்தது காணாது போலும். கள்ளன்! இனி மாலைதான் காண முடியும். என்னவோ நேற்று மணமானவள் போன்ற அவள் தவிப்பில் அவளுக்கே வெட்கமாயிற்று. திடீர் என்று பைக் சத்தம்.
குடுகுடு என்று ஓடி வந்து பார்த்தாள். அவனேதான். பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்துகொண்டிருந்தான். நடப்பதை நம்பவே முடியாமல் பார்த்து நின்றவளிடம், “இண்டைக்கு லீவு போட்டுட்டன்.” என்றான் அவன் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி.
அவள் உள்ளம் துள்ளிற்று. அதைக் காட்டிக்கொள்ளாது, “எங்கேயும் போகப் போறீங்களா?” என்று வினவினாள்.
சிரிக்கும் விழிகளால் அவர்களின் படுக்கையறையைக் காட்டி அவன் போகப்போகும் இடத்தைச் சொன்னான் அவன். “மாதவன் குடும்பம் வேற இல்ல.”
கையில் இருந்தவற்றை எல்லாம் அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, முதல் வேலையாக வீட்டின் கதவடைத்த கணவனை நம்ப முடியாமல் பார்த்தாள் மிதிலா.
“என்ன பார்வை? என்ர டீ சர்ட்ல நீ எவ்வளவு வடிவா இருந்தனி தெரியுமா?” என்று இப்போது அணிந்திருந்ததையும் அவன் கழற்ற, அவள் முகம் குங்கும நிறமே கொண்டிருந்தது.
முதல் நாள், பரீட்சையில் வென்றுவிட வேண்டும் என்கிற தவிப்பென்றால் இன்று அந்தப் பரீட்சை தந்த சுவையை எந்தப் பதற்றமும் இல்லாது அனுபவித்துவிடும் வேகம் அவனிடம்.
இலேசாய் மிரண்டவளிடம், “மிதும்மா! எட்டு வருசமடி!”என்று பிதற்றினான் அவன். “விட்டத பிடிக்க வேணாமா? என்ர மனுசிக்கு வேற நடக்கிறதெல்லாம் கனவா எண்டு அப்பப்ப டவுட்டா இருக்காம். இல்ல எல்லாமே உண்மைதான் எண்டு நான் நிரூபிக்கோணும்தானே.” என்றவனின் பேச்சில் பழைய அவளின் குரும்புக் கண்ணனைப் பார்ப்பது போலவே இருந்தது.
அவள் ஆடை களைந்து, அவளுக்குத் தான் ஆடையாகி, பின் தன் உடையை அவளுக்கு ஆடையாக்கியிருந்தான். இரவு ஒழுங்காக உறங்காததும் சேர நன்றாக உறங்கி எழுந்தார்கள்.
பகல் உணவைக் கடையில் வாங்கி உண்டார்கள். ஒருவர் மற்றவர் அணைப்பில் இருந்தபடி, அவர்களுக்குள் தவழ்ந்துகொண்டிருந்த அந்த அழகான அமைதியை அனுபவித்தபடி, தோன்றுகிற பொழுதுகளில் எல்லாம் முத்தங்களையும் அணைப்பையும் பரிமாறிக்கொண்டு கழிந்த அன்றைய பொழுது, இத்தனை நாள் ஏக்கத்தையும் மொத்தமாகத் தீர்த்து வைத்திருந்தது.
இன்று மகனை அழைத்துவர அவனே புறப்பட்டுப் போனான். அங்கே அந்த வழியால் வந்த எல்லாளனும் காண்டீபன் தன் வகுப்புக்குப் போயிருப்பான் என்கிற நினைப்பில் தீபனையும் அதிரனையும் அழைத்துப்போக வந்திருந்தான்.
இவனைக் கண்டுவிட்டு, “என்ன மச்சான், இண்டைக்கு கிளாசுக்கு போகேல்லையா நீ?” என்றதும் வாத்திக்கு முகம் சிவந்துபோயிற்று.
அவன் நடத்திய வகுப்பு வேறாயிற்றே.
“போயிற்று நேரத்துக்கே வந்திட்டன்.” என்றான் அவனைப் பாராமல்.
“ஓ ஓகே!” என்றபடி மகன் வருகிறானா என்று பார்வையைத் திருப்பப் போன எல்லாளன், அதைவிட வேகமாகத் திரும்பிக் காண்டீபனை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.
நொடி நேரம்தான் காண்டீபனால் அவன் பார்வையைச் சந்திக்க முடிந்தது. சிரிப்பும் தடுமாற்றமுமாக வேறு எங்கோ பார்த்தான். காவல்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனைக் கத்தியால் குத்திவிட்டுக் கூட வைத்தியசாலைக்கே வந்து நின்றவனுக்கு இப்போது என்ன தடுமாற்றம்? எதற்குத் தடுமாற்றம்?
“டேய், என்ன பார்!” என்றான் அதட்டலாக.
“என்னடா?” அதட்டுவது போல் கேட்டாலும் இப்போதும் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தான் காண்டீபன்.
‘இவனுக்கு என்ன நடந்தது?’ ஒன்றும் புரியாமல் எல்லாளன் திகைத்தான். ஆராய்வதுபோல் அவனையே கூர்ந்தவனுக்கு அப்போதுதான் அவன் முகச் சிவப்புக் கண்ணில் பட்டது.
“வெக்கப்பர்றியா மச்சான்?”
அவன் வெளிப்படையாகவே கேட்டதும் இவனுக்கு இன்னும் முகம் சிவந்து போயிற்று. “பேசாம இர்ரா!” என்று அதட்டினான்.

