ஆட்டநாயகன் 55.2

‘என்னடா இவன்…’ என்று அவன் யோசித்தது நொடி நேரம்தான். புரிந்ததும் உள்ளூரப் பொங்கிய சந்தோசத்துடன், “டேய் மச்சான்!” என்று கண்ணில் நீர் வரச் சிரித்தான்.

காண்டீபனுக்கு மிகுந்த வெட்கமாகப் போயிற்று. “ராஸ்கல்! சிரிக்காத!” என்று அதட்டினாலும் அவனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஆக கிளாஸுக்கு போயிற்று நேரத்துக்கு வந்திட்டன் எண்டது பொய். கட் பண்ணிப்போட்டு உழைச்சிருக்கிறாய். அது சரி! இந்த விசயத்தில நீ வேற கடின உழைப்பாளி.” அன்று சிறையில் வைத்து அவன் சொன்னதை நினைவில் வைத்து அவன் சொல்ல, வேகமாய் அவன் வாயைப் பொத்தி, “நாங்க நிக்கிறது பள்ளிக்கூட வாசல்ல மச்சான்!” என்று அதட்டினான்.

ஆனாலும் கூட மலர்ந்து விகசித்திருந்த அந்த முகத்தையே சில கணங்களுக்கு நிறைவாகப் பார்த்துவிட்டு, “எல்லாம் ஓகேயா?” என்றான் நண்பனாக.

“நான்தான் மச்சான் தேவை இல்லாமப் பயந்திருக்கிறன்…” இன்னுமே அந்தச் சிரிப்பு முகத்தில் தெறித்து மின்னச் சொன்னான்.

எல்லாளனினால் அவனிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை. தான் முதன் முதலில் பார்த்த முகத்தில் தெறித்த மூர்க்கத்தனத்துக்கும் இன்று இளகி, மலர்ந்து விகாசிக்கும் இந்த முகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து நெகிழ்ந்தான்.

“இப்பிடிப் பாக்காத மச்சான்! வெக்க வெக்கமா வருது.” என்று முகம் திருப்பியவனைக் கண்டு சத்தமாகச் சிரித்தான் எல்லாளன்.

தன் மகிழ்வைச் சொல்கிறவனாக ஒற்றைக் கையால் அவன் தோளணைத்து விடுவித்துவிட்டு, “ரெண்டு மூண்டு நாளைக்கு அதிய எங்களோட விடன்.” என்றான் எல்லாளன்.

“மிது எப்பிடி எனக்கு வேணுமோ அப்பிடித்தான் தம்பியும் மச்சான். ரெண்டு பேரையும் விட்டு ஒரு நாள் கூட என்னால இருக்கேலாது.” என்றான் காண்டீபன் அழகான முறுவலோடு.

அன்றைக்கு ஒன்றும் சொல்லாதபோதும் அடுத்து வந்த நாள்களில் அகரனும் எல்லாளனும் குடும்பமாகச் சேர்ந்து நான்கு நாள் பயணமாகச் சிகிரியா பார்க்கப் புறப்பட்டார்கள். அங்கு என்னவெல்லாம் பரக்கப் போகிறார்கள் என்று கதை கதையாக அவர்கள் சொன்ன அழகில், “அப்பா, ப்ளீஸ்ப்பா, நானும் மாமாவோட போயிட்டு வரட்டா?” என்று அதிரனே கேட்டிருந்தான்.

என்னடா இதெல்லாம் என்பதுபோல் பார்த்தவனிடம் ஒன்றும் சொல்லாமல், அவன் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டிருந்தான் எல்லாளன். அவர்கள் புறப்பட்டதும் திரும்பி மிதிலாவைப் பார்த்தான் காண்டீபன்.

அவன் கண்ணில் தெறித்த குறும்பில் அவள் வீட்டுக்குள் ஓடியிருந்தாள். சிரித்தபடி அவளைப் பின்தொடர்ந்த காண்டீபன், அந்த நான்கு நாள்களையும் வீணாக்கவில்லை.

தீபனாவோடு தானும் டூர் செல்ல முடியாமல் போனதில் டைகருக்கு மெல்லிய மனக்குறைதான். என்றாலும் காண்டீபனோடு நிற்கக் கிடைத்ததில் அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி. இப்போது அவனும் தன் உடல் நலத்தில் கவனம் செலுத்துகிறவனாக காண்டீபனோடு காலையும் மாலையும் ஓடுகிறான். அவனோடு பந்து விளையாடுகிறான். தோட்டத்தில் வேலை செய்கையில் பேச்சுத் துணைக்கு அவனோடே நிற்பான்.

நாள்கள் மிக அழகாய் நகர்ந்தன. மாதவன் குடும்பம் பழையபடி அவன் சொந்த வீட்டுக்கே போயிருந்தார்கள். கதிரவனுக்கு மாற்றல் கிடைத்து முல்லைத்தீவுக்கு மாறியிருந்தான்.

அன்று அதிரன், தீபன் படிக்கும் பாடசாலையில் சித்திரைத் திருவிழா. நண்பர்கள் இருவரும் குடும்பங்களாக வந்திருந்தார்கள். மாணவ மாணவியருக்கு மாத்திரமல்லாமல் பெற்றோர்களுக்கும் நிகழ்ச்சிகள் இருந்தன. அதில் ஒன்று ஆண்கள் சேலை அணியும் போட்டி. கொடுப்புக்குள் சிரித்தபடி போய், நண்பர்கள் இருவர் பெயர்களையும் கொடுத்துவிட்டு வந்து பேசாமல் இருந்துவிடடாள் ஆதினி.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இருவரும் அவர்கள் பெயர்கள் மைக்கில் அறிவித்ததும் அதிர்ந்துவிட்டார்கள். யார் பார்த்த வேலை என்று எல்லாளன் மனைவியைத் தேட, “வா மச்சான்! இதெல்லாம் ஒரு போட்டியா?” என்று அவனை இழுத்துக்கொண்டு போனான் காண்டீபன்.

ஆண்கள் எல்லோரும் குறிப்பிட்ட இடைவெளியில் நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் சேலைகள் வைக்கப்பட்டிருந்தன. ஓடிப்போய் அதை எடுத்து, யார் முதலில் சரியாக அணிந்துகொள்கிறார்களோ அவரே வெற்றியாளர்.

போட்டியும் ஆரம்பித்தது. எல்லோரும் ஓடினார்கள். மின்னல் விரைவில் காண்டீபன் தன் ஜீன்ஸிலேயே செருகி சேலையை முதலாவதாலாகக் கட்டி முடித்திருந்தான். மற்றவர்கள் குறைந்த பட்சமாக இடுப்பில் செருகி, அவர்களுக்குத் தெரிந்த வகையில் உடலில் சுற்றியிருந்தார்கள். எல்லாளன் மட்டும் முந்தானைப் பக்கத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொண்டு அதை இடுப்பில் எந்தப் பக்கம் செருகுவது என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

பார்த்திருந்த அத்தனை பேருக்கும் சிரிப்பு. அவன் எப்படியான ஒரு காவல்துறை அதிகாரி என்று ஊருக்கே தெரியும். ஆனால் சேலை கட்டத் தெரியவில்லை. அது தெரிந்ததுதானே ஆதினி மாட்டிவிட்டதே. முகம் முழுக்கப் பரவிய சிரிப்புடன் கணவனையே ரசித்துப் பார்த்திருந்தாள்.

“பாவம் ஆதினி அவர்.” சிரிப்புடன் சொன்னாள் மிதிலா.

“பாவமா? பொல்லாத கேடி! அடி உதய் மட்டும் நல்லா வரும். இது தெரியாது.”

ஆனால் அவன் பெண்ணுக்குத் தகப்பன் அப்படிச் சேலை கட்டத் தெரியாமல் நிற்பது பொறுக்கவில்லை. தமையனின் கைப்பிடியில் நின்றிருந்தவள் ஓடிப்போய் அவனுக்குச் சேலை கட்டிவிட முயன்றாள்.

முகம் கொள்ளா முறுவலுடன் அவளை அள்ளித் தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டுச் சேலையையும் தூக்கி மறுபக்கத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான் அவன்.

அதைக் கண்டு எல்லோரும் சிரித்ததைக் குறித்தெல்லாம் அவன் கவலை கொள்ளவில்லை. போட்டி முடிந்து வந்தபிறகு, “மாட்டி விடுறாய் என்ன?” சிரித்தபடி கோபமே இல்லாத குரலில் ஆதினியை அதட்டினான்.

அவனைப் பார்வையால் வெட்டிவிட்டு, “பாத்தீங்களா அண்ணா. ஒரு சாறி கட்டத் தெரியாது. ஆனா வாய்.” என்று வேண்டுமென்றே கணவனைச் சீண்டினாள் அவள்.

“கழட்டச் சொல்லியிருந்தா ஒரு செக்கணுக்க கழட்டி இருப்பன். கட்டு எண்டு சொன்னா எனக்கென்ன தெரியும்?”

இப்படி ஒரு பதிலைச் சொல்வான் என்று ஆதினி எதிர்பார்க்கவில்லை. ‘வெட்கம் கெட்டவன்!’ கணவனை மனத்தில் திட்டியவளுக்குக் காண்டீபனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் போயிற்று. அவன் இடுப்பைப் பிடித்து இறுக்கிக் கிள்ளிவிட்டாள்.

அவள் முகச் சிவப்பைப் பார்த்துப் பக்கென்று சிரித்திருந்தான் காண்டீபன். “அண்ணா!” என்று வெட்கத்தோடு அதட்டியவளைக் கண்டு அவனுக்கு இன்னும் சிறிப்புப் பொங்கிற்று.

“உனக்கு மட்டும் எப்பிடியடா தெரியும்?” என்று தன் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டான் எல்லாளன்.

“ஆரம்ப காலம் மிதுக்கு நான்தானே கட்டி விடுறனான்.” என்றவனின் பதிலில் ஒரு கணம் அதிர்ந்த மிதிலா, எல்லாளன் முன்னே நிற்கக் கூச்சப்பட்டுக் கணவன் பின்னே ஒளிந்தாள்.

“ஹாஹா என்ன வெக்கம்? முன்னால வா. அப்ப உனக்கு சாறி கட்டத் தெரியாதுதானே?” என்று வேறு அவளைத் தன்னருகில் இழுத்து நிறுத்திக் கேட்டான் அவன்.

“கடவுளே! என்ன கதைக்கிறீங்க தீபன்?” முகம் சிவக்க அதட்டியவளுக்கு அதன் பிறகு யார் முகமும் நிமிர்ந்து பார்க்க முடியாது போயிற்று.

error: Alert: Content selection is disabled!!