ஆட்டநாயகன் 56.2

அன்று மத்திய இடைவேளையின்போது அவன் கால்கள் ஏதோ ஒரு உந்துதலில் ஆதினியைச் சந்திக்கும் அதே மரத்தடிக்கு நடந்தன. அவனை ஏமாற்றாமல் அங்கே அமர்ந்திருந்தாள் ஆதினி. அப்போதெல்லாம் ஒரு மாணவியாக சுடிதாரிலோ, பாவாடை சட்டையிலோ காத்திருப்பவள் இன்று சேலை அணிந்து, அவனுக்கு ஒப்பான ஒரு பேராசிரியையாக அமர்ந்திருந்தாள்.

அவர்கள் நிலைகள் மாறியிருக்கலாம். ஆனால், நெஞ்சில் பூத்துக்கிடக்கும் அந்த அன்பில் என்றுமே மாற்றமில்லை. அவளும் தனக்காகக் காத்திருக்கும் மகிழ்வில், “டோய்!” என்று அவள் தோளில் தட்டிவிட்டு வந்து அவளருகில் அமர்ந்துகொண்டான். அன்றும் அவர்களுக்கு நடுவில் அவளின் உணவுப் பெட்டி அவனுக்காக வீற்றிருந்தது. அதை எடுத்து அவன் பாட்டுக்குச் சாப்பிட்டான்.

“நீங்க மாறவே இல்லை அண்ணா.” அவன் சாப்பிடும் அழகை ரசித்தபடி சொன்னாள்.

“நீ மாறிட்டியா என்ன?”

ஒன்றும் சொல்லாமல் அவன் தோளில் இலேசாகச் சாய்த்துவிட்டு விலகினாள் அவள்.

“சாப்பிட்டியா?”

“ம்!”

“என்ன?”

“ப்ச்!”

“என்னம்மா?”

“உங்கட நண்பர் இருக்கிறார் எல்லா…”என்று அவள் ஆரம்பிக்கையிலேயே அவன் சிரிக்க ஆரம்பித்திருந்தான்.

“அண்ணா!”

“உங்க ரெண்டு பேரின்ர சண்டையும் ஓயவே ஓயாதா?”

“அவரை நிப்பாட்டச் சொல்லுங்க. நான் நிப்பாட்டுறன்.” என்று தலையைச் சிலுப்பினாள் அவள்.

இதற்குள் அவன் சாப்பிட்டு முடித்திருந்தான். அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்துகே கையைக் கழுவி, சாப்பாட்டுப் பெட்டியையும் கழுவி வைத்துவிட்டு, மிகுதித் தண்ணீரை வாயில் சரிதான்.

அவனையே பார்த்திருந்தவளின் உள்ளம் நெகிழ்ந்துபோயிற்று. இடைப்பட்ட வருடங்களில் எத்தனையோ முறை இதே வாங்கிலில் வந்து தனியாக அமர்ந்திருந்து அழுத்திருக்கிறாள். ஆனால் இன்று மீண்டும் அதே காட்சி.

“இப்ப மாதிரி இருக்கு அண்ணா, கொழும்பு கம்பசுக்கு நீங்க அப்ளிகேஷன் வாங்கிக்கொண்டு வந்து தந்தது.”

திரும்பி அவளைப் பார்த்து முறுவலித்தவன் ஒன்றும் சொல்லாமல் அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான்.

“இன்னும் வகுப்பு இருக்கா?”

மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டு, “டீன சந்திச்சீட்டு போயிடுவன். உங்கட நண்பர் வருவார் கூட்டிக்கொண்டு போக.” என்று சொன்னாள் அவள்.

அவனுக்கு அடுத்தடுத்த வகுப்புகள் இருக்கவும் புறப்பட்டான்.

அவளின் பீடாதிபதியைச் சந்தித்துவிட்டு வந்த ஆதினி, அழைத்துப்போக வருகிறேன் என்று சொன்னவனைக் காணவில்லையே என்று எண்ணிக்கொண்டு வருகையில் அங்கே கேண்டீனில் நண்பர்கள் இருவரும் அமர்ந்திருப்பது தெரிந்தது. வந்துவிட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்லாமல், அவள் அனுப்பிய குறுந்தகவல்களுக்கும் பதில் போடாமல் இருப்பவன் முதுகை முறைத்தபடி அவர்களை நோக்கி நடந்தாள்.

நண்பர்கள் இருவரும் காண்டீனில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.
காண்டீபனின் விழிகள் சிரிப்புடன் அவன் பின்னால் போய் வருவதைக் கவனித்துவிட்டு, “வாழ்க்கையே வெறுக்குது மச்சான். சந்நியாசம் வாங்கிக்கொண்டு போவமா எண்டு யோசிக்கிறன்.” என்று, கையில் இருந்த ரோலை ஒரு கடி கடித்து மென்றபடி சொன்னான் எல்லாளன்.

அவர்கள் வீட்டின் படுக்கையறையில் ஒரு சிசிடிவியை பொறுத்தினால் தெரியும், இவன் எல்லாம் சந்நியாசம் வாங்குகிற ஆளா என்று. மூக்கு நுனி கோபத்தில் சிவக்க அவன் இடுப்பில் இறுக்கிக் கிள்ளிவிட்டு வந்து, அவனுக்கு எதிரில் காண்டீபனின் அருகில் அமர்ந்துகொண்டு, “முயல் பிடிக்கிற என்னத்தையோ முகத்தில தெரியுமாம் அண்ணா. கேள்விப்பட்டு இருக்கிறீங்களா?” என்று காண்டீபனிடம் கேட்டாள் ஆதினி.

“தேவையாடா உனக்கு இது?” என்று கேட்டுச் சிரித்தான் காண்டீபன்.

“அவள் என்னை நாய் எண்டு சொல்லுறாள். நீ சிரிக்கிறாய்!” என்றுவிட்டு எழுந்துபோய் அவளுக்கு பால் தேநீரும் ரோல்ஸும் வாங்கி வந்து கொடுத்தான்.

அவற்றை அவள் உண்டு, அருந்தி முடித்ததும் அவளை அழைத்துக்கொண்டு எல்லாளன் புறப்பட்டான். அப்போதும் என்னவோ பிடுங்குப்பட்டுக்கொண்டு போகும் இருவரையும் சின்ன முறுவலோடு ரசித்துப் பார்த்திருந்துவிட்டுத் தானும் வீட்டுக்குப் புறப்பட்டான் காண்டீபன்.

அங்கே அவன் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே போவதற்கிடையில் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு அவன் செல்வங்கள் இருவரும் குடுகுடு என்று ஓடி வந்தனர்.

அவர்கள் இருவரையும் அள்ளித் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தான்.

“நீங்க இந்த நேரம் வருவீங்க எண்டு ரெண்டு பேருக்கும் தெரியுது தீபன். அப்பா அப்பா எண்டுகொண்டு வாசலையே பாத்துக்கொண்டு இருந்தவே.” அவன் வந்ததும் வராததுமாகப் பிள்ளைகள் பற்றிக் கதை சொன்னாள் மிதிலா.

“அப்பிடியா? என்ர செல்லக் குஞ்சுகளுக்கு அப்பா வாற நேரம் தெரியுமா?” என்று அவர்களோடு விளையாடிவிட்டுப் போய் உடம்பு கழுவி, உடை மாற்றிக்கொண்டு வந்தான் அவன்.

இதற்குள் டியூஷன் முடிந்து வந்திருந்தான் அதிரன். அன்று நடந்த வகுப்புகளைப் பற்றித் தகப்பனின் மடியில் அமர்ந்திருந்து சொன்னான் அவன்.

மாலையானதும் தடிமனான விரிப்பு ஒன்றை விரித்துக்கொண்டு பிள்ளைகளோடு அமர்ந்தாள் மிதிலா. காண்டீபன் அதிரனுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்தான். அது முடிந்ததும் அப்பாவும் மகனும் வந்து அந்த விரிப்பில் அமர்ந்துகொள்ள, கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்தார்கள்.

நேரமானதும் அதிரன் அதே விரிப்பில் தகப்பனோடு படுத்துவிட, மிதிலா உள்ளே சென்று சின்னவர்களை உறங்க வைத்துவிட்டு வந்தாள். காண்டீபனும் எழுந்து உறங்கிவிட்ட பெரியவனைத் தூக்கிக்கொண்டு போய், உள்ளே கிடத்திவிட்டு வந்தான்.

இது அவர்களுக்கான நேரம். அதே விரிப்பில் கணவனின் கைகளில் அடங்கினாள் மிதிலா. இரவின் இருளில், சத்தமே இல்லாத சந்தோசக் கவிதை ஒன்று, அந்த இரண்டு உயிர்களின் பிணைப்பில் மிக அழகாய் எழுதப்பட்டது. அதன் பிறகும் கணவனை ஒண்டிக்கொண்டு அவனின் ஒரு பக்கத் திண்ணிய புறத்தை வருடிவிட்டுக்கொண்டிருந்த மிதிலா, “தீபன்.” என்று அழைத்தாள்.

“ம்!”

“தீ…ப…ன்ன்…”

“என்னடா?”

அவளிடம் சின்ன மௌனம். என்ன இது? அரும்பிய முறுவலோடு அவள் புறம் திரும்பிப் படுத்து, “என்னம்மா?” என்றான் அவன் மீண்டும்.

“எனக்கு ஒரு பொம்பிளைப் பிள்ளையும் வேணும்.” வேகமாகச் சொல்லிவிட்டு அவன் மார்பினில் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள் அவள்.

பக்கென்று சிரிக்கப் போனவன் பிள்ளைகளை எண்ணி அடக்கிக்கொண்டாலும் அவன் உடம்பு மௌனச் சிரிப்பில் குலுங்கிற்று.

“தீ…பன்!”

“பிறகு கஸ்டம்மா. சமாளிக்க மாட்டாய்.”

“வேணுமெண்டா ஆராவது ஒரு அம்மாவைத் துணைக்கு வச்சுக்கொள்ளலாம்தானே. இல்லாட்டியும் ஒரு மூண்டு வருசக் கஷ்டம். நான் சமாளிப்பன்.”

அதுவே அவள் மிகுந்த விருப்பத்தில் இருக்கிறாள் என்று சொல்ல, “அவ்வளவு ஆசையா?” என்றான் அவன் கனிந்த குரலில்.

“உங்களுக்கு இல்லையா?”

அவன் முகத்தில் முறுவல். தீபனா மாதிரி ஒரு அழகுக் குழந்தையை அவன் வேண்டாம் என்பானா? மனைவியின் இதழ்களில் ஆழுந்துவிட்டு விலகியவன், “சரி பெறுவம்!” என்றான் சந்தோசமாய்.

முற்றும்.

error: Alert: Content selection is disabled!!