“எவ்வளவு சொன்னாலும் கேட்காம இந்தப் பிள்ளைகள் செய்யிற கலாட்டா இருக்கே! சின்னப்பிள்ளைகள் தோத்துப் போவீனம்! பாருங்க, ஐஞ்சு பேரும் இவ்வளவு வளர்ந்த பிறகும் அப்பப்ப ஐஞ்சு வயசுக்குத் தாவி விடுகீனமே!”
கணவனின் சலிப்புக்குரலுக்குச் சத்தமாகவே வடிவம் கொடுத்தபடி, தம் காரிலிருந்து இறங்கி மதுராவை நாடிச் சென்றார், கார்த்திகேயன் தங்கை நித்தி.
“இதச் சொல்லுற ஆளைப் பாரும் ராது!”
எப்போதும் போல பிள்ளைகளுக்காகப் பரிந்துகொண்டு வந்தார், கார்த்திகேயன்.
“அந்த நாளில் நீ செய்யாத குழப்படிகளையா அவே செய்திட்டீனம்?” என, தங்கையைச் சீண்டியபடி இறங்கிய கார்த்திகேயனின் பார்வை, மீரா சாய்ந்து நின்ற காரில் படிந்ததும் நெற்றி சுருங்கியது.
அவர்களை நோக்கி வந்த நித்தியின் கணவர் சதீஷ், கார்த்திகேயனின் பார்வையைத் தொடர்ந்து திரும்பிப் பார்த்தவர், “மீரா!” மகளை அதட்டினார்.
“கொஞ்ச நேரம் சும்மா இருங்கோப்பா!” வெகுவாகச் சலித்துக் கொண்டாள், அவள்.
அதோடு நிறுத்தாது, “உங்கள, உங்கட வைஃபோட நிண்டு விதம் விதமா செல்ஃபி எடுக்க வேணாமெண்டு நாங்க யாரும் சொல்லேல்லயே! பிறகென்ன?” கேலிசெய்து கண்ணடிக்க, அவரோ, மகளைப் பார்த்துக் கண்டிப்போடு முழியை உருட்டினார்.
“நீங்க பம்பல் அடிக்கிறது மற்றவையக் கரைச்சல் படுத்தாம இருக்க வேணும் மீரா!
இதோட எத்தனையோ தடவைகள் சொல்லியாச்சு, உங்களுக்குத்தான் அதைப்பற்றியெல்லாம் கவலையில்ல. காரை விட்டுத் தள்ளி நில்லு பார்ப்பம். பார், அவர் உள்ளுக்க இருந்து இறங்க முடியாமல்…”
அடிக்குரலில் கடிந்து கொண்டே ஓரெட்டில் நெருங்கி, மகளை அப்பால் விலக்கியும் விட்டார், சதீஷ்.
மறுநொடி, அதற்காகவே காத்திருந்தது போல் படீரென்று கதவைத் திறந்து இறங்கினான், அவன்.
முதல் பார்வைக்கே வாட்ட சாட்டமாய் நல்ல கம்பீரமாக இருந்தான். வயது இருபதுகளின் இறுதியில் இருக்கலாமென்றது அவன் தோற்றம்.
ஆண்களுக்கேயுரிய வகையில் கவர்ச்சியாக இருந்த முகமோ, இதுவரை, கார்க் கதவைத் திறக்க விடாது அவர்கள் பண்ணிய கூத்தில் உள்ளம் கொதித்துப் போயுள்ளான் என்பதைப் பளிச்சென்று எடுத்துக் காட்டியது.
“சொறி! சொறி!” அவதியாகச் சொன்ன சதீஷையும் சேர்த்து முறைத்தவன், மீராவையும் மற்றவர்களையும் நெருப்புப்பார்வை பார்த்தான்.
“அடுத்தவன் தன்ர காரில இருந்து இறங்க வேணுமெண்ட மிகச்சாதாரண அறிவு கூட இல்லாமல் அப்பிடியே…ச்சே! ஆட்கள் வளர்ந்தா மட்டும் போதாது, கொஞ்சம் சரி இது இருக்க வேணும்.”
தலையில் தட்டிக் காட்டியபடி நெதர்லாந்தில் திட்டிவிட்டு, மீண்டும், மீராவை ஒரு கனல் பார்வை பார்த்துவிட்டு நகர, அவன் திட்டியதும் திடுக்கிட்டு நின்ற மீராவோ, விசுக்கென்று தகப்பனிடம் திரும்பினாள்.
“பா! நீங்க ஏன் சொறி கேட்கிறீங்க? சரி, அப்பிடியே அவரிட கார்க் கதவில நாங்க சாஞ்சு நின்றிருந்தம் எண்டா, உள்ள இருந்து ஒருக்காத் தட்டியிருக்க விலகி இருக்கப் போறம்.
அதுக்குப் போய் இத்தின பெரிய கதை ஏன்? இப்பிடியான ஆட்கள் எல்லாம் பொதுவில வராமல் தனியா ஹெலி வச்சுப் பறக்க வேணும்!”
சற்றே பலமாக, நெதர்லாந்தில் சொல்லி, விடுவிடுவென்று ரெஸ்ட் ரூம் நோக்கி நகர்ந்தவனைத் திரும்பி வர வைத்துவிட்டாள்.
இவர்கள், சற்று நேரத்துக்கே வந்திருந்தததால் அதிக பிரயாணிகள் இல்லாவிட்டாலும், ஆங்காங்கே நின்றவர்களின் பார்வை இவர்களைத் தொட்டுச் செல்லாதும் இல்லை.
அப்படியிருக்க, அவன் தம்மை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு சட்டென்று முன்னேறி வந்த கார்திகேயன், “ரியலி சொறி!” என்றபடி, அவன் கரத்தைப் பற்றப் போக, அவனோ, சற்றே விலகி நின்று அசட்டையான பார்வையால் அவர்களை அளந்தான்.
“அவ்வளவு வேகமாக வாற காரில தலையை வெளிய விட்டு செல்ஃபி எடுக்கிற மனிசர், இப்பிடிக் குழந்தைப்பிள்ளைகள் போல நடந்து கொள்ளுறதில வியப்பு இல்லத்தான்! செய்யிறதையும் செய்திட்டு திமிர்க்கதை வேற!” வெடுசுடு முகத்தோடு சொன்னான்.
மீண்டும் மீராவைப் பார்த்தவன் பார்வையில் ஒருவித எள்ளலும் ஏளனமும்!
“இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியா வாற பெரியாட்கள் …ம்ம்…நல்ல குடும்பம்! இதில நிண்டு கதைச்சா எனக்குத்தான் பைத்தியம் எண்டு நினைப்பீனம்.”
அங்கங்கே நின்று பார்த்தவர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பியவன் விறுவிறுவென்று சென்றுவிட்டான்.
“பாருங்க! இதுக்குத்தான் அப்பவே நித்திட்ட சொல்ல நினைச்சன், நீங்க தான் விடேல்ல கார்த்தி. இந்தாள் தான் காரில வரேக்க முறைச்சுக் கொண்டு போனது.
உங்களுக்கும் பிள்ளைகள் இது போதாது. யாரோ எவனோ நம்மட குடும்பம் பற்றி எவ்வளவு நல்ல மாதிரிச் சொல்லிப்போட்டுப் போறான் பாத்தீங்களா?” என்ற மதுராவின் குரலில், எப்போதும் போலவே கண்டிப்பு!
“மாமி! யாரோ எவனோ எண்டு நீங்களே சொல்லியாச்சு…பிறகென்ன?” சிறிதும் தயங்காது சொன்னது மீராவே தான்!
“மீரா, சும்மா இரடி எரும!” ஆரணி, அவள் கரத்தைப் பற்றி நெரித்தாள்.
தாய்க்குக் கோபம் வந்து விட்டதை உணர்ந்த ஆரபி, ‘காப்பாத்துங்கோப்பா!’ தகப்பனைக் கெஞ்சலாகப் பார்த்தாள்.
“பச்! விடும் ராது, சின்ன விசயம். அதைப் போய்ப் பெரிசுபடுத்துவானேன்?” இலகுவாக ஆரம்பித்தார்.
“அவன் ஒரு கொதியன் போல! ஆளைப் பார்த்தாலே தெரியுதே! விட்டுத் தள்ளும்.” என்றபடி, மனைவியின் கரத்தைப் பற்றியவர், “நீர் வாரும், இலேசாப் பசிக்குது, ஏதாவது சாப்பிட எடுத்துத் தாரும் பார்ப்பம். பிள்ளைகள், நீங்க ரெஸ்ட் ரூம் போறது எண்டா அந்த வேலைகளைப் பாருங்க.” என்றபடி நகர்ந்தார்.
மதுரா அமைதியாகச் செல்லவில்லை. “ரெஸ்ட் ரூமுக்குப் போறது எண்டு போய், அங்க நிண்டு பல்லைக் காட்டுறது இல்ல.
ஆரணி, ஆரபி நீங்களும் சேர்ந்து கொண்டு…உங்களப் பார்த்தா இன்னும் ஆறு மாசத்தில கலியாணம் செய்யப் போற பிள்ளைகள் போலவா இருக்கு?” மகள்களைக் கடிந்து கொண்டார்.
“விடுங்கோ அண்ணி! அவன் ஒரு கொதி பிடித்த விசரன் போலக் கிடக்கு! யாரில என்ன கோபமோ! ஏதோ சொன்னால் நீங்க வேற!” இடையிட்டுக் கதையை மாற்றினார், நித்தி.
“பிள்ளைகள் வாங்க, நானும் ரெஸ்ட் ரூம் போக வேணும். அண்ணா உங்களுக்கு கஃபே வாங்கிக்கொண்டு வரவா? அண்ணி உங்களுக்கு கப்பச்சினோ?” என, அவர்களுக்குத் தேவையானதை அறிந்துகொண்டு, மருமக்கள், மகள், மகனோடு சற்றே தள்ளியிருந்த ரெஸ்டோரன்ட் நோக்கி நகர, “நானும் வாறன்.” சேர்ந்துநடந்தார், சதீஷ்.

