காதல் காயங்களே 9 – 1

அத்தியாயம் 9

 

 

பிரதீபன் உண்மையிலேயே மிகுந்த கோபமுற்றிருந்தான். மயூரி, இப்படித் தொட்டாற் சிணுங்கி போன்று நடப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.

 

அதுவரை அவனது பெயரை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாலும், உண்மையிலேயே அவளுக்கு அவன் பொருட்டில்லையா? பெயரை அறிந்துகொள்ள ஆர்வமில்லையா என்று, அவளிடம் ஈர்க்கப்பட்டுக்கொண்டிருந்த அவன் உள்ளம் சின்னதாய் சிணுங்கிக்கொண்டுதான் இருந்தது. அதையே அவள் எதிர்பாராத வேளையில் கேட்டபோது, பிரிவின் தாக்கத்தில் நின்றவனின் உச்சபட்ச சந்தோசத்தின் வெளிப்பாடுதான் அந்தப் பறக்கும் முத்தம்.

 

அவனை அறியாமலேயே நடந்த ஒன்று. செய்துவிட்ட பிறகுதான் அதுவும் அவள் ஆட்காட்டி விரலை நீட்டி மிரட்டியபிறகுதான் நாக்கைக் கடித்துக்கொண்டான். ஒரு பெண்ணிடம்.. அப்படி நடப்பது முறையல்லவே! அவளுக்கு நிச்சயமாக அது சங்கடத்தைக் கொடுத்திருக்கும். என்ன செய்யலாம் என்று திணறிவிட்டு, விளக்கம் கொடுக்க எண்ணித்தான் அழைத்தான். அத்தனை தடவைகள் அழைத்தும் ஏற்காமல் இருக்க முடிந்திருக்கிறதுதானே அவளால்.

 

நீங்க செய்தது பிடிக்கேல்ல என்றாவது சொல்லிவிட்டு வைத்திருக்கலாம். எதையாவது சொல்லிப் பேசியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு அவள் நடந்துகொண்ட விதம்? இத்தனை நாள் பழக்கத்தில் அவள் அவனைப்பற்றிக் கணித்தது இதைத்தானா? தவறான கண்ணோட்டத்தில் அவளை அவன் நோக்கியது கூட இல்லையே. அவளோடு பழக, சிரிக்க, சீண்ட ஆர்வம் கொண்டிருக்கிறான் தான். அதுவும், நல்லமுறையில் மட்டுமே! அப்படியிருக்க அவள் நடந்துகொண்ட விதம்? நான் நல்லவன் இல்லையோ என்று அவனைப்பற்றி அவனையே அலச வைத்துவிட்டதே!

 

இவ்வளவும் மனதுக்குள் ஓடியபோதும், ஒருமுறை கோபத்தில்தான் எடுக்காமல் இருக்கிறாள் என்று நினைத்தாலும் அடுத்தமுறை அவளுக்கு ஏதும் பிரச்சனையோ அதனால் தான் எடுக்க முடியவில்லையோ என்று எவ்வளவு பயந்தான். அதனால் தான், அழைப்பை ஏற்காதது ஒருவகை அவமதிப்பாக அவமானத்தைக் கொடுத்தபோதிலுமே திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டு இருந்தான்.

 

அந்தப்பயம்தான் உண்மையிலேயே அவள்மீது கோபமாகப் பாய்ந்திருந்தது. கோபத்தைக் கொட்டியபிறகுதான், அதுவரை நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டிருந்த எதுவோ நீங்கிய உணர்வு. மெல்ல மெல்ல நிதானத்துக்கு வந்திருந்தான். அவள் மெசேஜ் அனுப்பியிருக்கிறாள் என்று தெரிந்தும் பார்க்கவில்லை.

 

காலையில் எழுந்ததும் அவள் அனுப்பியிருந்த மெஸேஜைப் பார்த்தபோது சிரிப்புத்தான் உதட்டில் மலர்ந்தது. என்றாலும் ஒரு வீம்பு. சின்னதாய் ஒரு மனத்தாங்கல். என்னைத் தவறானவனாக நினைக்க முடிந்திருக்கிறதே என்று. அவனுடைய முழுமையான ஒரு நாளினையே அலைக்கழித்துவிட்டாளே! கையும் ஓடாமல் காலும் ஓடாமல், ‘என்ன வேலை பார்த்தோம்’ என்று தன்னையே நொந்து நிலைகுலைந்துபோய் நிற்க வைத்தாள் தானே. அதில், அவளுக்குப் பதில் போடாமல் வேலைக்குப் புறப்பட்டிருந்தான்.

 

அதே விடியல் மயூரிக்குக் கடுகடு என்றிருந்தது. கண் விழித்ததும் ஃபோனைத்தான் எடுத்துப் பார்த்தாள். பார்த்திருக்கிறான் என்று காட்டியது. ஆனால் பதில் இல்லை. எவ்வளவு திமிர் இவனுக்கு? வந்தது சரியாக ஐந்து நாள் விடுமுறையில். நிம்மதியாகச் சந்தோசமாக இருக்க விடாமல், கோபித்துக்கொண்டு அவளை இந்தப்பாடு படுத்துகிறானே.

 

‘ஹல்ல்லோ! மெசேஜ் பாத்தா பதில் அனுப்பவேணும்! காட்டான் மாதிரி காட்டுத்தனமா நடக்கிறேல்ல!’ கடுப்போடு அனுப்பிவைத்தாள்.

 

உடனேயே ப்ளூ டிக் விழுந்தது. ஆனாலும் பதில் இல்லை. முகம் சுருங்கிப் போயிற்று! அவர்களுக்கிடையே மலர்ந்து நிற்கும் அழகான அந்த உறவு இதோடு முடிந்துவிடுமோ? தன் முட்டாள் தனத்தினை எண்ணி மிகவுமே நொந்துபோனாள்.

 

‘அதுதான், மன்னிப்புக் கேட்டுட்டேன் தானே தீபன். பிறகும் ஏன் கதைக்காமல் இருக்கிறீங்கள். பிளீஸ், கதைங்கோவன்!’ என்று கெஞ்சலாய் அனுப்பிவைத்தாள்.

 

அதையும் பார்த்துவிட்டான் என்று மட்டுமே தெரிந்தது.

 

‘தீபன்… நான் செய்தது பிழை எண்டால் இப்ப நீங்க செய்றதும் பிழைதான்.’ அப்போதும் பதில் இல்லை. அவளைத் தூக்கி எறிந்தே விட்டானா? அதுதான் சொன்னானே, நீ பெரிய இவள் கிடையாது எனக்கு என்று. வெளியே யாரோ வரும் அரவம் கேட்கவும் ஃபோனைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்தாள்.

 

“குட் மோர்னிங் செல்வா!” என்று ஒரு குரல் கேட்டது.

 

‘செல்வாவா? யார்ரா அது அப்பான்ர பெயரை சுருக்கிச் செல்லமா கூப்பிடுறது?’ என்று பார்க்க, ஒரு பெண்மணி கேட்டைத் திறந்துகொண்டு வந்துகொண்டிருந்தார். கேள்வியாகத் தகப்பனை நோக்கினாள். அவர் கண்ணைச் சிமிட்டிவிட்டு உதட்டுக்குள் சிரித்தார்.

 

அவரின் குறும்பில் அவளின் விழிகள் விரிந்துபோயிற்று! செல்லமாய் முறைத்துவிட்டு அந்தப் பெண்மணியை நோக்கினாள்.

 

அவளின் அம்மாவின் வயது வரும். ஆனால், ஜீன்ஸ் அணிந்து நீண்ட டாப்பும் அணிந்திருந்தார். நடு உச்சி பிரித்துக் கொண்டையிட்டு, நெற்றியில் குங்குமம் இட்டு என்று நாகரீகத்தின் சாயலோடு மரியாதையையும் தோற்றுவிக்கும் தோற்றத்தில் இருந்தவரைப் பார்த்ததுமே பிடித்துப் போயிற்று!

 

“வாங்கோ ஆன்ட்டி!” என்று வரவேற்றுப் புன்னகைத்தாள்.

 

அவர் முகமும் மலர்ந்து போயிற்று! “சுகமா வந்து சேர்ந்தியாம்மா. நேற்றுச் செல்வா சொன்னவர், நீ வாறாய் எண்டு. அதுதான் பேங்குக்கு போகமுதல் உன்னை ஒருக்கா பாத்திட்டுப் போவம் எண்டு வந்தன்.” என்றவர், அருகில் அமர்ந்து அவளைப் பற்றி, அவளின் வேலையைப் பற்றி விசாரித்துக்கொண்டார்.

 

அவளும், மெல்ல விசாரித்ததில் பேங்கில் மானேஜராக இருக்கிறார் என்று தெரிந்துபோயிற்று! அதுதான் அந்தக் கம்பீரமும் நிமிர்ந்த தோற்றமும். ‘இப்படித்தானே அம்மாவும். அவள் சின்னவயதில் இருக்கையிலேயே ஜீன்ஸ் அணிவார். சுறுசுறுப்பாக இயங்கித்தான் பார்த்திருக்கிறாள். இழுப்பு நோய் இருப்பது அப்போதெல்லாம் அவளுக்குத் தெரியவே தெரியாது. அந்தளவில் ஓடி ஓடி எல்லாவற்றையும் செய்வார். திடீர் என்றுதான் எல்லாமே முடங்கிப் போயிற்று! படுக்கையில் கிடக்கும் அம்மாவின் அருமை இன்னும் பெரிதாகத் தாக்கிற்று அவளுக்கு. அவர் விடை பெற்றதும் தாயாருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.

 

குட்டியாய் சுருங்கிவிட்ட உருவம். மெலிந்து சின்னதாகிப்போன முகம். வறண்டுகிடந்த உதடுகள். களைப்பில் மூடிக்கிடந்த கண்கள். ஏறி இறங்கிய நெஞ்சுக்கூடு மட்டுமே அவர் இவ்வுலகில் தான் இருக்கிறார் என்று சொல்லிற்று. கண்கள் கலங்க அம்மாவின் கையை எடுத்து வருடிக்கொடுத்தாள். அம்மாவை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அவரோடு கேலிபேசி சிரித்துவிளையாடி அடிவாங்கி என்று எல்லாம் செய்ய ஆசை பொங்கிற்று! அவரின் கைப் பக்குவத்துக்கு நாக்கு ஏங்கிற்று! அதுவும், புளிப்பு மாங்காயில் அவர் வைக்கும் மாங்காய் கறிக்கு அவள் மிகப்பெரிய அடிமை. ஆனால், இப்போது?

 

அவளின் தொடுகையிலாக்கும், மெல்லக் கண்களைத் திறந்தார் இந்திராவதி. மகளின் விழிகளில் எதைக் கண்டாரோ அவரின் மூக்கு விடைக்கக் கண்கள் கலங்கிற்று. மெல்ல அருகில் அழைத்தார்.

 

“என்னம்மா?” குரல் தழுதழுக்க அவரடியில் அமர்ந்த மகளின் முகவடிவை மெல்லப் பற்றி நெற்றியில் முத்தமிட்டார்.

 

எலும்பும் தோலுமாய்க் கிடந்த மெல்லியகரத்தால் மகளை அவர் அணைத்துக்கொள்ள முயல, முற்றிலுமாக உடைந்துபோனாள் மயூரி. ஏன் இந்த அழுகை, எதற்கு இந்தக் கண்ணீர்.. அவளுக்குத் தெரியவில்லை.

 

“அழக்கூடாது மய்யு. என்ன வந்தாலும் தைரியமா நிக்கவேணும்..” அம்மாவின் நலிந்துபோன குரல் பெரிய பெரிய மூச்சுக்களோடு அவளின் செவியைத் தீண்டியது. இன்னுமே உடைந்துபோனாள் மயூரி.

 

அவளின் தலையை வலிய கரம் ஒன்று மென்மையாக வருடிக்கொடுக்க நிமிர்ந்து பார்த்தாள். செல்வேந்திரன்தான் நின்றிருந்தார். அவரின் விழிகளும் பனித்துப் போயிருந்தது. “அழக்கூடாது மய்யும்மா!” என்றார் கரகரத்த குரலில்.

 

தான் அழுதது மாத்திரமல்லாமல் அவர்களையும் அழவைத்துவிட்டோம் என்று அப்போதுதான் விளங்கிற்று! “அது சும்மா! நடிப்புக்கு..” என்றவள் விறுவிறு என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

 

“முகம் கழுவ இல்லையாம்மா?” தாயிடம் கேட்க, கழுவவேண்டும் என்பதுபோல தலையை அசைத்துவிட்டுக் கணவரைப் பார்த்தார்.

 

அவர் தயாராக, “ஹல்லோ ஹல்லோ! என்ர அம்மாவை பாக்க எனக்குத் தெரியும். நீங்க போய் உங்கட ‘செல்வா’வோட கதைங்கோ, போங்கோ!” என்று துரத்தினாள் மயூரி.

 

“அம்மா, நீங்க இங்க ஏலாம படுத்துக் கிடக்கிறீங்க. அவர் அங்க முன்வீட்டு ஆன்ட்டியோட ரொமான்ஸ் நடக்குது. கொஞ்சம் கவனிங்கம்மா. அப்பா வரவரச் சரியில்ல.” படபடத்த மகளின் பேச்சை ரசித்துச் சிரித்தார் அன்னை.

 

error: Alert: Content selection is disabled!!