காதல் காயங்களே 9 – 2

சோபை இழந்து கிடந்த அந்த முகத்தில் புதுச் சோபையை அந்தச் சிரிப்புக் கொடுக்க உள்ளம் துள்ளிற்று அவளுக்கு. எதையோ பெரிதாகச் சாதித்துவிட்ட உணர்வு.

 

அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்து, புது உடை மாற்றித் தலை இழுத்து குங்குமத்தை எடுத்துக்கொண்டுவந்து வைத்துவிட்டாள்.

 

அதற்குள் காய்ச்சிய கஞ்சியோடு அறைக்குள் வந்த செல்வேந்திரன், மனைவியைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டார். என்னவோ அந்தக்காலத்துக்கே சென்றுவிட்ட மாயை. காலையிலேயே குளித்து, சுவாமி கும்பிட்டு குங்குமம் வைத்து மங்கலமாய் சிரித்துக்கொண்டு வரும் மனைவி கண்ணுக்குள் வந்து போனார். தொண்டைக்குள் அடைத்துக்கொண்டு வந்த துக்கத்தை விழுங்கிக்கொண்டாலும் கண்கள் மீண்டும் பனித்துப் போயிற்று.

 

“என்ர அம்மாவும் வடிவுதான்!” அவரை முறைத்தபடி தாயைக் கட்டிக்கொண்டு சொன்னாள் மயூரி. செல்வேந்திரனுக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

 

“ரோசாப்பூ வடிவு எண்டால் சூரியகாந்தி வடிவில்ல எண்டு அர்த்தமா?”

 

அவரின் கேள்வியில் சீற்றத்துடன் பார்த்தாள் மயூரி.

 

“பாத்தீங்களா அம்மா? என்ன சொல்லுறார் எண்டு. அவாவும் வடிவாம். எவ்வளவு தைரியம் பாருங்கோ, உங்களுக்கு முன்னாலேயே இப்படிக் கதைக்கிறார் எண்டால், நானும் இல்லாத நேரம் என்னவெல்லாம் நடக்குதோ யாருக்குத் தெரியும். நான் இந்த வீட்டுல ஒரு கமரா பூட்டப்போறன்!” என்ற மகளின் பேச்சில் சிரித்துக் கண்ணீரே வந்துவிட்டிருந்தது இந்திராவதிக்கு.

 

கஞ்சியையும் வாங்கித் தானே பருக்கிவிட்டாள் மயூரி. ஒவ்வொரு வாயையும் விழுங்கும்போதும் பரிவுடனும் பாசத்துடனும் வருடிக்கொடுத்தார் இந்திராவதி. நெஞ்சில் சுரந்த பாசத்தில் கண்கள் கலங்க மகளை அணைத்துக்கொண்டார்.

 

மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு அவர் உறங்கியதும் வெளியே வந்தவளுக்கு மனதில் மிகப்பெரிய திருப்தி. முடியாமல் இருக்கும் அம்மாவுக்கு எதுவும் செய்யாமல், அப்பாவுக்கு உதவியாக இல்லாமல் எங்கோ போய் இருக்கிறோமே என்று அவளை வருத்திய துன்பத்துக்கு ஒரு வடிகால் கிடைத்ததுபோல் உணர்ந்தாள்.

 

“ஏன் அப்பா அம்மா இவ்வளவு மெலிஞ்சு போய் இருக்கிறா?” கவலையோடு விசாரித்தாள்.

 

“அவள் எடுக்கிற மருந்து எல்லாமே வீரியமானது கண்ணம்மா. என்ன செய்யச் சொல்லுறாய்? நானும் உன்னை மாதிரித்தான் விசாரிச்சிட்டன். குறைவா குடுத்தா மூச்சு எடுக்க ஏலாம சரியா கஷ்டப்படுறா. இரவில படுக்கவே மாட்டா.” என்றவரின் பேச்சிலும் விரக்தி. மனைவி படுகிற பாட்டையெல்லாம் பார்த்துக்கொண்டு கையாலாகாதவானாக இருக்கத்தானே வேண்டியிருக்கிறது. எதைச் செய்தும் அவரைக் குணப்படுத்த முடியவே இல்லையே!

 

சற்று நேரம் அவர்களுக்குள் மௌனமே ஆட்சி செய்தது. “அந்த ஆன்ட்டிமாதிரி அம்மாவும் இருந்தா நல்லாருக்கும் என்னப்பா?” தகப்பனின் தோளில் சாய்ந்து வினவினாள் மயூரி.

 

செல்வேந்திரன் திரும்பி மகளைப் பார்த்தார். மகளின் ஏக்கம் விளங்காமல் இல்லையே!

 

அவளின் தலையைத் தடவிக்கொடுத்துக்கொண்டு இருந்துவிட்டு, “அவவின்ர மனுசன் அவாவை விட்டுட்டுப்போய் வேற கல்யாணம் கட்டிட்டாராம். அவா பதினைஞ்சு வருசமா பிள்ளையோட தனியாத்தான் இருக்கிறாவாம்.” என்றார் மெல்லிய குரலில்.

 

நம்பமாட்டாமல் திகைத்துப்போய்த் தகப்பனைப் பார்த்தாள் மயூரி. அந்த லட்சணமான முகத்தை எதற்காக விட்டுவிட்டுப் போனாராம் அந்த மனிதர்? ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவளால்.

 

அவர் மெல்லப் புன்னகைத்தார்.

 

“இதுதானம்மா மனித வாழ்க்கை. எல்லாருக்கும் எல்லாம் இருக்கும். என்ன, தூரத்தில இருந்து பாக்கிற நமக்கு அவேன்ர(அவர்களுடைய) வெளித்தோற்றமும் பகட்டும் மட்டும் தான் தெரியும். உள்ளபோய் பாத்தாத்தான் வலிகள் தெரியும். அவா அம்மாட்ட என்ன சொன்னவா தெரியுமா? நீங்க குடுத்துவச்ச மனுசி இந்திராவதி. சுகமில்லாம படுத்துக்கிடந்தும் குழந்தையைப் பாக்கிற மாதிரிப் பாக்கிறார் உங்கட ஹஸ்பண்ட். நான் நல்லா இருந்த காலத்திலேயே என்னை விட்டுட்டுப் போய்ட்டார் என்னைக் கட்டினவர் எண்டு சொல்லுறா. அக்கரைக்கு இக்கரைப் பச்சை.” என்றார் செல்வேந்திரன்.

 

யாரோடும் யாரையும் ஒப்பிடாதே என்கிறார். எல்லோருக்கும் எல்லாம் உண்டு என்கிறார். மனம் கசிய மீண்டும் தகப்பனின் தோள் சாய்ந்துகொண்டாள் மயூரி. இப்போது அந்த ஆன்ட்டிமீதும் பரிதாபம் உண்டாயிற்று.

 

“நான் இங்கேயே வந்து இருக்கட்டா அப்பா? எனக்கு உங்களையும் அம்மாவையும் விட்டுட்டு இருக்க விருப்பமே இல்ல.”

 

“வேலை இங்க கிடைச்சா வாம்மா. வேலையை விட்டுப்போட்டு வாறது எண்டால்.. செல்லம்மா, நீ இவ்வளவு காலமும் படிச்ச படிப்புக்கு என்ன அர்த்தம் சொல்லு?”

 

அப்போதும் தடுத்த தந்தையை முறைத்தாள் மயூரி.

 

“நான் வாறது ஏன் உங்களுக்கு பிடிக்கேல்ல. அந்த ஆன்ட்டியோட ரொமான்ஸ் செய்யேலாது எண்டோ?”

 

அதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தார் செல்வேந்திரன்.

 

“இப்ப நீ வந்ததால என்ன குறைஞ்சுபோச்சு? விடிய பாத்து கதைச்சாச்சு. இனி பின்னேரம் ஆள் வரும். இல்ல கோயில்ல சந்திப்பம்.” என்றவரை முறைக்குமட்டும் முறைத்தாள் மயூரி.

 

“ப்ச்! அப்பா விளையாட்டை விட்டுப்போட்டு நான் சொல்லுறதை கேளுங்கோ. இண்டைக்கு அம்மாக்கு எல்லா உதவியும் செய்த பிறகுதான் மனதுக்கு நிறைவா இருந்தது. இல்லாட்டி அங்க இருக்கேக்க, உங்கள் ரெண்டுபேருக்கும் உதவியா இருக்காம இங்க வந்து நிம்மதியா இருக்கிறேனே எண்டு மனம் குத்தும் அப்பா. நான் என்ன செய்ய?” கண்கள் கலங்கிற்று அவளுக்கு. சம்மதிக்கிறார் இல்லையே என்று மனதில் குறையாக உணர்ந்தாள்.

 

“கண்ணம்மா, அப்பா சொல்லுறதைக் கேள். நீ இங்க வந்து எல்லாம் செய்தா அப்பாக்கு என்ன வேலை? பொழுது போகவேணும் எல்லா. இப்ப பார், அம்மாவைக் கவனிக்க வேணும், மறக்காம மருந்து குடுக்க வேணும், பத்தியமா சமைக்க வேணும் எண்டு எப்பவும் நான் பிசி. அப்பதான் இரவிலயும் என்னால நித்திரை கொள்ள ஏலும். வயசான காலத்தில சும்மா இருக்கிறதைப்போல கொடுமை ஒண்டுமில்லையம்மா. எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. சில நேரங்கள்ல களைச்சுப் போவேன் தான். ஆனா, அதையும் நான் பிடிச்சுத்தான் செய்றன். அதனாலதான் சொல்லுறன், எங்கட சுமை எதுவும் இல்லாம நீ சந்தோசமா இரு. உன்ர எதிர்காலம் நல்லா இருக்கிறதுக்கான வேலைகளை பார். நீ எங்களுக்கு உதவியா இருக்கிறதைவிட, நல்லா இருக்கிறாய் எண்டுறதுதான் எங்களுக்குச் சந்தோசம். லீவு கிடைக்கிற நேரமெல்லாம் வா. அது போதும்!” என்று முடித்துவிட்டார் அவர்.

 

திடீரென்று ஒன்று தோன்றவும், “ஏன் அப்பா, இப்படி அம்மாக்கு எல்லாமே செய்றீங்க, உங்களுக்கு அலுக்கவே இல்லையா? ஒரு கோபம்? எல்லாத்தையும் நானே செய்யவேண்டி இருக்கே எண்டு எதுவுமே நினைக்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

 

அவரோ சிரித்தார். “முப்பது வருசம் வாழ்ந்திருக்கிறோம் கண்ணம்மா. நல்லா இருக்கிற வரைக்கும் குழந்தை மாதிரி என்னை பாத்தவள் உன்ர அம்மா. ஒரு வேலை செய்ய விட்டதே இல்ல. சின்னப்பிள்ளை மாதிரி ஓடி ஓடிக் கவனிப்பாள். நான் நல்லா இருக்கேக்கையே என்னைத் தாங்கினவள நான் தாங்க வேணாமா? அவளுக்கு திரும்பிச் செய்றதுக்கு கடவுள் தந்திருக்கிற ஒரு சந்தர்ப்பம் தான் இது. அவளுக்கு நான் செய்யாம வேற யார் செய்வீனம்.” என்றார் அவர்.

 

கண்கள் கலங்கிவிடும் போலாயிற்று அவளுக்கு. வாழ்ந்தால் அம்மாவையும் அப்பாவையும் போலொரு வாழ்க்கை வாழவேண்டும். அவர்கள் அன்பே ஆருயிரே என்றெல்லாம் கொண்டாடிக்கொண்டதில்லை. ஆனாலும், கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் ஆழமாய் ஓடியிருக்கும் வேரைப்போல அவர்களின் அன்பு அழுத்தமாய் பிணைக்கப்பட்டிருக்கிறது. ‘அப்பா கிடைக்கிறதுக்கு அம்மா குடுத்து வச்சிருக்கிறா..’ நினைக்கும்போதே தானும் அப்படியொரு கருத்தொருமித்த வாழ்க்கை வாழ்ந்துவிடவேண்டும் என்கிற ஆசை எழுந்தது அவளுக்குள்.

 

இந்த அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக்கொள்ள அவளுக்கும் தானே ஆசை உண்டு. அப்பா விடுகிறார் இல்லையே! அவள் சமாதானம் ஆகவே இல்லை. அதற்குமேல் என்ன சொல்வது என்றும் தெரியவில்லை. “போங்கப்பா நீங்க, நீங்க என்ன சொன்னாலும் எனக்கு அங்க இருக்க விருப்பமே இல்லை..” என்று இவள் சொல்லிக்கொண்டு இருக்கையில் நந்தினி அழைத்தாள்.

error: Alert: Content selection is disabled!!