காதல் காயங்களே 10 – 1

அத்தியாயம் 10

 

 

பிரதீபனோடு சமாதானம் ஆனதும் அவளின் பொழுதுகள் சிறகடித்துப் பறந்தன. ஆசைப்பட்டதுபோலவே அம்மாவைக் கவனித்துக்கொள்வதும், முன்வீட்டு ஆன்ட்டியோடு அப்பாவைக் கேலி செய்து விளையாடுவதும், பிரதீபனோடு வம்பு வளர்ப்பதும் நந்தினியோடு சண்டை பிடிப்பதும் என்று விடுமுறை நாட்கள் மின்னலாய் மறைந்து போயிற்று!

 

மீண்டும் புறப்பட விருப்பமே இல்லை. விடிந்தால் வேலை, மாலையானால் ஒற்றை அறை வீடு, தனிமை நினைக்கவே கசந்தது. அவள் போனபிறகு அம்மா அப்பாக்கும் அதே தனிமை. முன்வீட்டு ஆன்ட்டி தேவகியின் அறிமுகத்தில் சற்றே ஆறுதலாகவும் உணர்ந்தாள்.

 

மாலையில் வேலை முடிந்து வந்தால் தினமுமே இங்கு வந்திருந்து குறைந்தது இரண்டு மணிநேரமாவது கதைத்துக்கொண்டு இருந்துவிட்டுப் போவார். அது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிகப்பெரிய ஆறுதல் என்று இந்த நான்கு நாட்களிலும் கண்டு கொண்டிருக்கிறாள். எனவே அவரைத் தனியாகப் பிடித்து, “நாளைக்கு நான் போய்டுவன் ஆன்ட்டி. அம்மாவையும் அப்பாவையும் ஒருக்கா பாத்துக்கொள்ளுங்கோ. ஏதும் அவசரம் எண்டால் சொல்லுங்கோ ஆன்ட்டி. நான் வேலையை விட்டுப்போட்டு ஓடி வந்திடுவன் எண்டு அப்பா எதையும் சொல்லமாட்டார்.” என்று, தன் நம்பரையும் அவருக்குக் கொடுத்திருந்தாள்.

 

அவரின் மகன் மகேஷ் கூட நல்லமாதிரித்தான். அவனும் ஐடியில் தான் வேலை செய்கிறானாம் என்று அறிந்ததில், “அண்ணா, எனக்கு இங்க வேலை ஏதும் கிடைக்க ஹெல்ப் செய்ங்கோவன்.” என்று கேட்டும் இருந்தாள்.

 

எனவே, பார்த்துக்கொள்ள தேவகி ஆன்ட்டியும் மகேஷ் அண்ணாவும் இருக்கிறார்கள் என்கிற தெம்பு இந்தமுறை அவளுக்கு வந்துவிட்டிருந்தது.

 

வேலைக்கு அணிவதற்கு ஏற்ற உடைகள் சில எடுப்பதற்கும், தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் என்று கடைத்தெருவுக்குச் சென்ற மயூரி, அடுத்ததாகப் பொங்கல் வர இருந்ததில், அதற்கு அணிவதற்கு தனக்கு ஒரு சாரியும் நந்தினிக்கு ஒரு சாரியும் எடுத்துக்கொண்டாள். அப்படியே பிரதீபனுக்கும் எடுக்கச் சொல்லி உள்ளம் சொன்னது. பலமுறை அவளுக்குச் செலவு செய்தவனுக்கு ஒன்றுமே திருப்பிச் செய்யவில்லையே.

 

என்ன வாங்கலாம்? மிகப்பெரிய குழப்பம். ஆண்களுக்கான பிரிவு முழுவதையும் அலசியவளுக்கு, வேட்டியும் சட்டையும் தான் கண்களைக் குத்தியது. அணிவானா? தெரியாதபோதும் ஆசையாக அதையே எடுத்துக்கொண்டாள். கூடவே இரண்டு ஷர்ட்டுகளும்.

 

தேவகி ஆன்ட்டி செய்துதந்த பலகாரங்களையும் மூன்றாகப் பிரித்து எடுத்துவைத்தாள். அடுத்தநாள், படுக்கையில் இருந்தே விடைகொடுத்தார் இந்திராவதி. பிரியவே மனமற்று அவரின் விழிகள் ஏக்கத்தோடு அவளையே மொய்த்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே புறப்படப்போகிறோம் என்று மனதில் பாரத்தோடு நின்றவளை அன்னையின் ஏக்கம் உசுப்பிவிட, “என்னம்மா? நான் போகாம நிக்கவா?” என்றாள் கண்ணீருடன்.

 

மறுத்துத் தலையசைத்தார். நடுங்கும் கரங்களால் அவளின் தலையை வருடிக்கொடுத்தபடி மகளைக் கண் நிறையப் பார்த்தார். “இல்ல செல்லம்மா. போயிட்டு வா! கவனமா இரு. பொறுப்பா நடக்கவேணும் என்ன.” மெல்லச் சொன்னார். அதற்கே களைத்தது அவருக்கு.

 

கண்ணீருடன் தலையாட்டியவளின் கால்கள் அம்மாவின் அறையை விட்டு நகரவே மறுத்தன. “கவனம் மா.. ஒன்றுக்கும் யோசிக்காதீங்கோ. கெதியில(விரைவில) இங்கயே வேலை எடுத்துக்கொண்டு வரப்பாக்கிறன்.” என்று விடைபெற்றுக்கொண்டாள்.

 

புகையிரதநிலையம் வரை வந்து வழியனுப்பிய அப்பாவிடமும் விழிகள் கலங்க விடைபெற்றுக்கொண்டாள்.

 

“கவனம் என்னப்பா..” நிறையச் சொல்லவேண்டும் போல் மனது பரபரத்தது. ஆனால், கதைக்க முடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டு நின்றதில் அதை மட்டுமே சொன்னாள்.

 

அவரோ சிரிப்புடன் மகளைப் பார்த்தார். “என்னவோ வெளிநாட்டுக்கு போறமாதிரியே கவலைப்படுறியே செல்லம்மா. பக்கத்தில தானே. கவனமா போய்ட்டுவா. அம்மா அப்பாவைப் பற்றி ஒண்டும் யோசிக்காத என்ன!” கனிவுடன் சொன்னார்.

 

ட்ரெயின் புறப்பட்டது.

 

மயூரிக்குக் கையசைத்து விடைகொடுத்த செல்வேந்திரனுக்கு நெஞ்சே விண்டுவிடும் போல் துக்கம் பெருகிற்று! தன் பார்வைக்கு மறையும் வரையிலும் ஜன்னலால் எட்டிப்பார்த்தபடியே சென்று மறைந்தவளின் பாசத்தில் இரு சொட்டுக் கண்ணீர் கண்ணோரங்களை நனைத்துப்போயிற்று! ஒற்றை மகள் அவளைப் பிரிந்து வாழ்வது ஒன்றும் அத்தனை இலகுவாய் இல்லை. நினைக்கும்போதெல்லாம் மிகுந்த கவலையுறுவார். ஆனால், இங்கிருந்தால் தனக்கான வாழ்வில் அவளால் ஜொலிக்க இயலாதே. மனதைக் கல்லாக்கிக்கொண்டு அனுப்பிவைப்பார்.

 

அதனாலேயே அவளுக்கு அவர் மீது மிகுந்த கோபம். அந்த நினைவு வந்ததுமே அவர் முகம் மலர்ந்து போயிற்று! வார்த்தைக்கு வார்த்தை செல்வேந்திரன் என்று ஏலம் விடுவாளே. மகளின் நினைவுகளோடே வீட்டுக்கு நடையைக்கட்டினார்.

 

அங்கே, சென்றுகொண்டிருந்த மயூரிக்கும் பெற்றவர்களின் நினைவுதான். அதுவும் அம்மா? அவருக்கு இனி என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

 

“பிக்கப் செய்ய வரவாடி?” என்று அழைத்துக்கேட்டாள் நந்தினி.

 

“இல்ல நந்து! நீ வீணா அலையாத. ரெயில்வே ஸ்டான்ட்லையே ஆட்டோ பிடிச்சுப் போறது எனக்கு ஈஸி.”

 

“என்னடி, அம்மா அப்பாவை விட்டுட்டு வாறது கவலையா இருக்கா?” சோர்ந்துபோய் ஒலித்த குரலைக் கண்டுவிட்டு விசாரித்தாள் நந்தினி.

 

“ம்ம்.. விசரா இருக்கு நந்து! வரவே விருப்பம் இல்லை.”

 

“அங்கேயே ஒரு வேலை கிடைக்கும். கவலைப்படாத. இந்தப் பிரிவு எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்.” என்று, ஆறுதலாகக் கதைத்துவிட்டு வைத்தாள் நந்தினி.

 

வந்து இறங்கியபோது மனதளவிலும் உடலளவிலும் முற்றிலுமாகக் களைத்துப் போயிருந்தாள் மயூரி. ‘நந்தினியை வரச்சொல்லி இருக்கலாம். அவள் அலட்டிக்கொண்டு இருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்..’ வரவேண்டாம் என்று சொல்லிவிட்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துவிட்டு, முதலாவது வேலையாகத் தான் வந்து சேர்ந்துவிட்டதை அப்பாவுக்கு அழைத்துச் சொல்லிவிட்டு நிமிர்ந்தபோது, எதிரில் பிரதீபன் வருவது தெரிந்தது.

 

கண்டதுமே கண்களை விரித்தாள் மயூரி. அவள் மீதே விழிகளைப் பதித்து உதட்டோரம் முளைத்திருந்த சிரிப்புடன் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

 

அலைபேசி வாயிலாக மனதளவில் மிகவுமே நெருங்கியிருந்தனர் இருவரும். அது பிடித்தும் இருந்தது. ஆனால், நேரில் சந்திக்கையில் அந்த நெருக்கத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாத தடுமாற்றம் அவளுக்குள் உருவானது.

 

அதற்குள் அவன் அவளை நெருங்கிவிட்டிருந்தான். பார்வையை அவளிடமிருந்து அகற்றவும் இல்லை.

 

அந்தக் கண்கள் அவளைச் சற்றுத் திணறவைத்தது. ஒரு வாரம் கழித்துப் பார்ப்பதாலோ என்னவோ அவனை இயல்போடு திர்கொள்ளச் சிரமப்பட்டாள் மயூரி.

 

அதை உணர்ந்துகொண்டவன் அவளிடம் குறும்புடன் சிரித்தான்.

 

“ஒரு பிரச்சனையும் இல்லையே?”

 

என்ன பிரச்சனை? குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள் மயூரி.

 

“பயணத்தில ஒரு பிரச்சனையும் இல்லையா எண்டு கேட்டனான் மய்யு!” நகைக்கும் குரலில் கேட்டான் அவன்.

 

ராஸ்கல்! வேணும் எண்டே கேக்கிறான்! அவளுக்குத்தான் அவன் முகம் பார்த்து ஒரு முறைப்பைக்கூட குடுக்க முடியவில்லையே.

 

“ஏதாவது வேணுமா? போகேக்க(போகும்போது) தந்த மாதிரி?” அவன் இழுக்க முகம் சிவந்தே போயிற்று!

 

“தீபன்!” அதட்டலாகச் சொன்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

“ஊர்ல இருக்கிற குப்பை கூலத்தை எல்லாம் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறாய் போல!” அவளின் பிதுங்கிவழிந்த ட்ராவலிங் பேக்கினைத் தான் வாங்கியபடி கேட்டான் அவன்.

 

“நான் என்ன செய்ய? அப்பாவும் ஆன்ட்டியும் நிறைய பலகாரங்கள் செய்து தந்துவிட்டவே. உங்களுக்கும் கொஞ்சம் தருவம் எண்டு பாத்தனான். உங்கட வாய்க்கு தரமாட்டன் போங்கோ!”அவனைக் கண்டதுமே எங்கிருந்து என்றில்லாமல் உற்சாகம் துள்ளிக்கொண்டு வந்தது அவளுக்கு.

 

புறப்படும்போது போலவே இப்போதும் ஒரு ஹோட்டலுக்கு விட்டான் அவன். ஒன்றும் சொல்லவில்லை அவள். சொன்னால் மட்டும் ஏதாவது மாறிவிடுமா என்ன? அதைவிட வீட்டுக்குப்போயும் என்ன வெட்டிக் கிழிக்கப் போகிறாள். பாழாய் போன தனிமை தானே!

 

இருவருக்கும் உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு, “நான் இல்லாம என்னை பாக்காம இந்த ஒரு கிழமையும் எப்படிப் போச்சுது?” கண்களில் சிரிப்புடன் கேட்டான் அவன்.

 

“சதோசமா போச்சுது. உங்கட தொல்லை இல்லாம, உங்கட நினைவு இல்லாம.” குறுஞ்சிரிப்பில் விரியத்துடித்த உதடுகளை அடக்கியபடி சொன்னாள்.

 

“பொய் சொல்லாத மய்யு! என்னை நீ தேடவே இல்லையா நீ?” அவளின் கண்களுக்குள் பார்த்தபடியே கேட்டான் அவன்.

 

தேடினாளே! ஏதோ ஒரு கணத்தில் அவன் வேண்டும் போலெல்லாம் உணர்ந்திருக்கிறாளே! ஒருமுறை அல்ல பலமுறை.

 

“இல்லையே..!” மனதை மறைத்துப் பொய் சொன்னாள்.

 

“நம்பலாமா?” விளையாட்டுப்போலக் கேட்டாலும் அவன் விழிகளில் வேறு என்னவோவும் இருப்பதை உணர்ந்தாள் மயூரி.

 

அந்தப் பார்வைக்குப் பொய்யுரைக்க முடியாமல் அவள் விழிகளை அகற்ற, “ஆனா எனக்கு..” என்றவனின் விரல்கள் மேசையில் இருந்த அவளின் விரல்களைப் பற்ற நெருங்கியது.

 

ஒருவித அதிர்வோடு அவள் பார்க்க, “பிடிக்கலாமா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

வாயால் பதிலுரைக்க முடியாதவளின் தளிர் விரல்கள் அவன் புறமாக மெல்ல நீண்டன. பளிச்சென்று மலர்ந்துவிட்ட முகத்தோடு மெல்லப் பற்றிக்கொண்டான் அவன்.

 

சிலிர்த்தது அவளுக்கு. அவனிடமே சிறைப்பட்டன அவள் விழிகள்.

 

“நீயில்லாம.. உன்ன பாக்காம.. கழிந்த நாள் எல்லாம் வெறுமையா இருந்தது மய்யு!” விழிகள் விரிய அவனையே பார்த்தாள். அவன் மய்யு என்று சொல்லுகிற ஒவ்வொரு முறையும் அவள் இதயம் உருகிக்கொண்டேதான் இருக்கிறது. இதில் மனதையும் சேர்த்து வெளிப்படுத்தியபோது என்னவோ அவளிடமிருந்து நழுவும் உணர்வு. சட்டென்று விரல்களை இழுத்துக்கொண்டாள். முத்துமுத்தாய் வியர்க்கத் துவங்கியது.

 

அவளில் தெரிந்த மாற்றங்களைக் கணித்தவனின் உதட்டினில் மெல்லிய முறுவல் மலர்ந்துபோயிற்று! உதட்டின் மீது பூத்திருந்த பனித்துளிகளை விரல்கொண்டு நிரடும் ஆவலில் தடுமாறிப்போனான் பிரதீபன்.

 

“ஆனா இப்ப.. மய்யு டார்லிங்க்க திரும்பப் பாத்ததில தீபன் ஹாப்பி அண்ணாச்சி!” தனக்கே உரித்தான சீண்டல் குரலில் அவன் சொன்னபோது சரக்கென்று நிமிர்ந்து முறைத்தாள் மயூரி.

 

“ஒழுங்கா என்ர பெயரைச் சொல்லவே மாட்டீங்களா?” பழைய மயூரியாக மாறிச் சீறியவளைக் கண்டு, கையைக் கட்டிக்கொண்டு கண்ணால் சிரித்தான் அவன்.

 

கள்ளன்! வேண்டுமென்றே அவளைச் சீண்டுகிறான்! அதற்குள் உணவும் வந்துவிட, “இங்க பாத்தது காணும்! சாப்பிடுங்க!” என்று, அவன் தட்டை அவனிடம் நகர்த்திவிட்டு அவளும் உண்ணத் தொடங்க பேச்சு அப்படியே மாறிப் போயிற்று!

 

 

error: Alert: Content selection is disabled!!