அத்தியாயம் 11
வீடு வந்த பிரதீபனின் உதட்டினில் உல்லாசச் சிரிப்பொன்று மலர்ந்தே கிடந்தது. அவள் இல்லாத இந்த ஒரு வாரமும் அவன் பட்டுவிட்ட பாட்டினை அவனே எதிர்பார்க்கவில்லை. வேலை பிடிக்கவில்லை, நண்பர்கள் ரசிக்கவில்லை, சினிமாவோடு ஒன்ற முடியவில்லை. மிகவுமே திண்டாடிப்போனான். இதெல்லாம் எதன் அறிகுறி என்று தெரியாத சிறுவன் அல்லவே அவன்.
அதேபோல அவன் இந்தக்காலத்து இளைஞன். தன்னைக் கவர்ந்த அவளின் மீதான ஈர்ப்பின் பெயரையும் தேடிக்கொண்டிருந்தான். அவளைக் காணாவிட்டால் தவித்துப் போகிறான், கண்டுவிட்டால் இதயம் துள்ளுகிறது. இப்போதெல்லாம் அவளின் விரல்களை வருடிக்கொடுக்காமல் அவனால் இயல்பாய் இருக்க முடிவதேயில்லை. அவளின் விரல்கள் அவனிடம் இருக்கும் பொழுதுகளில் எல்லாம், கைக்குள் அவளையே பவித்திரமாகப் பொத்திவைத்துக்கொள்வதைப் போன்றதொரு உணர்வு. இதற்குப் பெயர்தான் உயிர்க்காதலா?
முதலில், இதன் ஆயுள் எத்தகையது என்பதையும் அறிய நினைத்தான். அதே நேரத்தில் இதன்மீதான அவளின் எதிரொலி என்ன என்றும் தெரியவேண்டி இருந்தது. அதனாலேயே தன் உணர்வுகளை அவளிடம் சொன்னான். அதைச் சொன்னதும் அவள் பட்ட பாடு.. அவன் உதடுகளில் மீண்டும் புன்னகை முளைத்தது. அவளிடம் பேசவேண்டும் போலொரு உந்துதல் மின்னலாய்
முளைக்க, நேரத்தைப் பார்த்தான். இரவு ஒன்பதாகியிருந்தது. அழைப்போமா வேண்டாமா என்று எண்ணியபடி கட்டிலில் ஃபோனுடன் விழுந்தான் பிரதீபன்.
கொண்டுவந்த பொருட்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அப்பா அம்மாவோடு ஆசுவாசமாகக் கதைத்துவிட்டு சோர்வுடன் கட்டிலில் சரிந்தாள் மயூரி. அடுத்தநாள் காலையில் மீண்டும் வேலை தொடங்குவதில் இத்தனை நாட்களாக நிறுத்தி வைத்திருந்த அலாரமை மீண்டும் இயங்குநிலைக்கு மாற்றியபோது, ஃபேஸ்புக்கில் இருந்துவந்த நோட்டிபிக்கேஷனில் உள்ளே சென்று பார்த்தாள்.
அவன் தான்! தேடிப்பிடித்து அவளுக்கு நட்பழைப்பு விடுத்துக்கொண்டிருந்தான்.
உதட்டில் அரும்பிய முறுவலைப் பற்களால் கடித்து அடக்கியபடி உள்ளே சென்று பார்க்க, எல்லாவற்றிலும் சிரிப்பு! அவனுக்கே சொந்தமான, இந்த உலகத்தின் துன்பங்களின் எந்தச் சாயலும் படவே படாதவன் போன்று, உற்சாகத்தில் துள்ளும் போட்டோக்களாக அள்ளித் தெளித்துவிட்டிருந்தான்.
ஒவ்வொரு போட்டோவையும் தனித்தனியாக எடுத்து ஜூம் செய்து பார்த்தாள். தாயின் கன்னத்தோடு கன்னம் இழைந்தபடி, சகோதரிகளின் தலைகளின் பின்பக்கம் விரல்களை நீட்டியபடி, அதுவும் அம்மா அப்பா சகோதரிகள் அனைவரும் ஒரு வாங்கிளில் அமர்ந்திருக்க அவர்களின் காலடியில் முகம் நிறைந்த சிரிப்புடன் அமர்ந்திருந்தவனைக் கண்டபோது அவனை இன்னுமே அவளுக்குப் பிடித்துப் போயிற்று!
குடும்பத்தின் மீதான அவனின் பாசத்தையும் நெருக்கத்தையும் கண்டு, அவளின் மனது அவனை நோக்கி இன்னோர் படி நகர்ந்தது.
“பிரென்ட் ரிக்குவெஸ்ட் அனுப்பினா அக்செப்ட் செய்றதுதான் தமிழர் பண்பாடு.” அவளின் பெயர் பச்சையாக எரிந்ததைக் கண்டுவிட்டு அனுப்பியிருந்தான் அவன்.
‘அடேய்! இதெல்லாம் எப்படா தமிழர் பண்பாட்டில சேர்ந்தது?’ சிரிப்புடன் அக்செப்ட் செய்துவிட்டு, அப்படியே அவனுடைய ஃபோட்டோக்களை லைக்கியும் விட்டுவிட்டாள். அவனுக்கும் பச்சை எரிந்துகொண்டிருந்தது. நிச்சயமாக அவனும் அவளுடையதைத்தான் பார்த்துக்கொண்டிருப்பான்.
தன்னுடைய சுவருக்கு ஓடிப்போய் என்னமாதிரி ஃபோட்டோக்களை போட்டு வைத்திருக்கிறோம் என்று எடுத்துப்பார்த்தாள். ‘பரவாயில்ல.. எல்லாம் நல்லாத்தான் இருக்கு.’ இன்னும் அவன் எந்த லைக்கும் போடவே இல்லை. கடுப்புடன் முறைக்கும் ஸ்மைலைகளை உள் பெட்டியில் அள்ளி அனுப்பிவிட்டாள்.
“என்ன?” அவனுக்கு அவளது கோபத்துக்கான காரணம் விளங்கவில்லை.
“நீர் முதல் ஒரு போஸ்ட்டை பாத்தா லைக் போட்டுப்பழகும். பாத்திட்டும் பாக்காத மாதிரியே போறது. தமிழருக்கே இருக்கிற எளிய குணம். தாங்க பெரிய பருப்பு எண்டு நினைப்பு!” வேண்டுமென்றே அவள் வம்பு வளர்க்க, நான்கைந்து லைக்குகள் வந்து விழுந்தது.
சற்று நேரத்தில் உள் பெட்டியை மீண்டும் தட்டினான். என்ன என்று எட்டிப்பார்க்க, பூ ஒன்றின் மீது உதடுகளைப் பதிப்பது போன்று அவள் எடுத்திருந்த போட்டோவை அவளுக்கே அனுப்பியிருந்தான்.
கீழே,
“மதிமுகம் மயக்குதடி!
மயங்கவா இல்லை கிறங்கவா?” என்று கேட்டிருந்தான் அவன்.
முகமெல்லாம் குப் என்று சிவந்து போயிற்று! சட்டென்று ஃபோனைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கண்களை மூடிக்கொண்டு குப்புறப் படுத்துக்கொண்டாள். ஒரு இனிமையான படபடப்பும் குழப்பமும் அவளைப் போட்டுப் பந்தாடின.
அடுத்தநாள் காலையில் வழமைபோன்று வேலைக்குத் தயாராகி பஸ்ஸுக்காகக் காத்து நின்றவள் இயல்பாய் இல்லை. அவன் வருவானே! அந்த எண்ணமே மனதெங்கும் என்னென்னவோ செய்தது. முதல் நாளிரவு அவன் அனுப்பிய கவிதையை வாசித்தபிறகு எப்படி அவனை எதிர்கொள்வது என்றே தெரியவில்லை.
‘அவன் வரமுதல் பஸ் வந்தா கூட பரவாயில்லை போல…’ அந்தளவில் ஒரு நடுக்கம். ஆனால் அவளின் எதிர்பார்ப்பு நடக்கவில்லை. பஸ்ஸுக்கு முதலே அவன் வந்தான்.
அதைவிட, அவன் அணிந்திருந்தது அவள் வாங்கிக்கொடுத்த ஷர்ட். வேறு எந்த நிறமும் கலக்காத அடர் நீலநிற ஷர்ட் அவனுக்கு என்றே அளவெடுத்துத் தைத்ததுபோன்று கனகச்சிதமாகப் பொருந்தியிருக்க, அந்த நிறம் வேறு இன்னும் கம்பீரமாக அவனைக் காட்டியது.
வண்டியைக் கொண்டுவந்து அவளின் அருகில் நிறுத்திவிட்டு, “ஏறு!” என்றான் அவன். மறுக்கவும் முடியவில்லை. ஏறவும் முடியவில்லை. அவள் அப்படியே நிக்க, “ஏறு மய்யு!” என்றான் உரிமையோடு.
அவனாகவே அவள் மீது காட்டிய ஆதிக்கம் அவள் இதயத்தை ஆராதிக்க பின் பக்கம் வந்து ஏறிக்கொண்டாள் மயூரி.
பைக் நகரத் தொடங்கியதும், “ஒன்றுமே சொல்லேல்ல மய்யு.” என்றான் அவன்.
அவள் கேள்வியாகப் பார்த்தாள்.
“ஷர்ட் நல்லாருக்கா?”
கண்ணாடி வழியே தெரிந்த அவனுடைய சிரிக்கும் கண்கள் அவளைத் தடுமாறச் செய்தபோதிலும் தலையை ஆம் என்பதாக அசைத்தாள்.
“நான் உனக்குச் செய்ததுக்குப் பதிலாத்தானே இதெல்லாம் வாங்கித் தந்திருக்கிறாய்.” என்றதும் அவளுக்குக் கோவம் வந்துவிட்டது.
“அப்படி எண்டு உங்களுக்கு யார் சொன்னது? பொங்கலுக்கு எனக்கு உடுப்பு எடுக்கப் போனனான்(போனேன்). அப்ப உங்களுக்கும் எடுக்க விருப்பமா இருந்தது. அதுதான் எடுத்தனான்.” என்று அவள் சொன்னபோது, பைக்கை வீதியின் கரையாக நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன்.
கேள்வியாக ஏறிட்டபடி இறங்கியவளின் கரம் பற்றித் தன்னருகில் கொண்டுவந்து, “எனக்கு உடுப்பு எடுத்துத்தர உனக்கு விருப்பமா இருந்ததா மய்யு?” என்றான், ஆழ்ந்த குரலில் அவளையே நோக்கியபடி.
ஆமாம்! அவளுக்கு விருப்பமாக இருந்ததுதான். அவள் எடுத்துக் கொடுப்பதை அவன் அணிந்துவரவேண்டும் என்கிற ஆவலும் இருந்ததே.
அதைச் சொல்ல முடியாமல் உதடு கடித்தாள் அவள்.
“அதை விடு எண்டு எத்தனை தரம் சொல்லுறது உனக்கு?” என்றான் அவன்.
கன்னங்கள் சூடேற அவனை முறைத்தாள் அவள். பார்த்தவனின் விழிகளில் ரசனை. கோபம் ஒரு கண்ணில் நாணம் ஒரு கண்ணில் என்று பேரழகியென ஜொலித்தவளிடமிருந்து விழிகளை அகற்ற முடியவில்லை. பற்றியிருந்த விரல்களின் மீதான அழுத்தம் அதிகரிக்க, அவள் கூச்சத்துடன் தடுமாறினாள்.

