ரோசி கஜனின் மீரா 3 – 1

3

 

“சரி…சரி, இனி நீ ஒண்டும் கதைக்க வேணாம்மா; வை…நானே சொல்றன்.” என்றுவிட்டு, தங்கையின் அழைப்பைத் துண்டித்தார், கார்த்திகேயன்.

“ஆரப்பா? என்ன பிரச்சனை?” கணவனின் முகச்சுழிப்பைப் பார்த்தபடி வந்த மதுரா, கையிலிருந்த தேநீர் நிறைந்த கோப்பையை நீட்ட, மறு கையால் வாங்கிக் கொண்டே, “நித்தி தான்!” என்றார், அவர்.

“என்னவாம்?”

“புயல் அடிக்குது; இண்டைக்கு முழுநாளும் இப்பிடித்தான் இருக்கப் போகுது; அதோட, ‘கோட் ரெட்’ எண்டு வேற போட்டிருக்க, ‘வீட்ட வாறன்’ எண்டு வெளிக்கிடுறாளாம் மீரா; நித்தி பயத்துல கத்திறாள்; அது போதாதா அவளுக்கு?

‘நீங்க இருந்து பாருங்க, நான் வந்து காட்டுறன்’ எண்டு தாயோட மல்லுக்கு நிக்கிறாளாம்.” என்று சொல்லிக் கொண்டிருக்கையில், “நித்திட அறையில இருக்கிற பிள்ளைகள் ரெண்டு பேரும் நேற்றிரவே வீட்ட போய்ட்டீனம்.” என்றபடி வந்தாள், ஆரணி.

“இவள், எங்கட சாரி பிளவுஸ் எடுத்துக்கொண்டு வரச் சொன்னதால தான் அங்க நிண்டவள். அந்த அக்கா இண்டைக்குத்தான் தர ஏலும் என்றவா,இல்லாட்டி நேற்றே வந்திருப்பாள்.” என்றாள், அங்கே வந்த ஆரபி.

“சரி, அதுக்காக? இப்ப வாறது பாதுகாப்பில்ல எண்டு சொல்லாமலேயே விளங்க வேணும். இது சொல்லியும் கேட்கமாட்டன் எண்டால் எப்பிடி?”

அவள் புறப்பட்டு வந்து ஏதாவது பிரச்சனைகளில் மாட்டுப்பட்டால் என்ற கவலையில் சொன்ன கார்த்திகேயன், மருமகள் மீராவின் கைப்பேசிக்கு அழைப்பை விடுத்தார்.

“இப்ப நீங்க ஒண்டும் சொல்ல வேணாம்பா; வேணாம் வேணாம் எண்டால் செய்தே தீருவன் எண்டு நிப்பாள் அவள்; அந்த வீட்டுக்காரரே வெளிக்கிட விடமாட்டீனம்.” ஆரணி தான் சொன்னாள்.

“வேண்டவே வேணாம் எண்டால் அதைத்தான் செய்வாள் எண்டது என்னவோ சரிதான். அதுக்காக அமைதியா இருக்க ஏலுமா?” என்ற மதுரா, “நீங்க ஃபோனைப் போட்டுத் தாங்கோ! நான் கதைக்கிறன்.” குறுக்கிட்டார்.

அதற்குள், “ஹலோ மாமா சொல்லுங்கோ!” என்றிருந்தாள் மீரா.

“என்ன? அம்மா உங்களுக்கு எடுத்துச் சொல்லிப்போட்டா போல!” கார்த்திகேயன் கதைக்க முதல் முந்திக்கொண்டாள்.

“இங்க பாருங்க மாமா, இத மாமிட்ட மட்டும் சொல்லிப் போடாதீங்க! செல்ல மாமா தானே! உண்மையாவே, நியூசில சொல்லுறது போல இங்க பெரிசாப் புயலடிக்கேல்ல. இன்னும் ரெண்டு மணித்தியாலத்தில நான் அங்க இருப்பன்.”

கார்த்திகேயனைக் கதைக்க விடாது கடகடவென்று தொடர்ந்தவள், “இப்ப நீ எங்கம்மா நிக்கிற?” என்ற மதுராவின் குரலில் சட்டென்று நிதானித்தாள்.

‘மாமோய்! நீங்க எல்லாம் ஒரு ஆளெண்டு மாமிட்டச் சொல்ல வேணாம் எண்டன் பாருங்க.’ மனதுள் திட்டியபடி, “அது வந்து மாமி, சாரி பிளவுஸ் எடுக்கப் போய்க் கொண்டிருக்கிறன். இந்தா, அவேண்ட வீட்ட வந்திட்டன்.” என்று, இதுவரை இருந்த படபடப்புச் சட்டென்று குறைந்திருக்க, பவ்வியமாகவே பதில் தந்தாள்.

அது என்னமோ, சிறுவயதிலிருந்து பிள்ளைகள் ஐவருமே மதுராவின் வார்த்தைக்கு எதிர்வார்த்தை கதைப்பதில்லை. கடுமையாகவோ, கட்டளையாகவோ, அதட்டி உருட்டியோ வராவிட்டாலும் அவர் சொல்லும் விதம் மறுக்கும் எண்ணத்தைத் தருவதில்லை.

இதுவே, மற்றவர்களாயின், எது சொன்னாலும் கட்டிப்பிடித்து, செல்லம் கொஞ்சிச் சமாளித்து, தங்கள் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள்.

மீராவின் குரல் மாறிய விதமே மதுராவின் வதனத்தில் முறுவலைக் கொண்டு வந்தது.

‘கள்ளி…பெரிசா எனக்குப் பயப்படுறாளாம்!’

மனதுள் மைத்துனி மகளை அன்போடு கடிந்து கொண்டார்.

ஆரணி, ஆரபி போலில்லை மீரா. சிறுவயதிலிருந்தே சற்றே பிடிவாதம் கொண்டவள். எந்தளவுக்கு விளையாட்டுப் பிள்ளை போல் நடந்து கொள்கிறாளோ, சில நேரங்களில், அதற்கு நேர்மாறாக, பிடிவாதம் பிடித்தும் விடுவாள்.

ஒன்றை விரும்பி விட்டால், ஒரு விடயத்தை செய்ய முடிவெடுத்தால், அதை, அத்தனை சுலபத்தில் மாற்ற முனையாமல் நடத்திவிடவே முயல்வாள்.

அப்படியே என்றாலும் அது எல்லா நேரங்களிலும் சரி வராதே!

“உன்ர நல்லதுக்காகத் தானே சொல்லுறம் மீரா. முதல், இந்தக் காத்திலும் மழையிலும் சாரி பிளவுஸ் எடுக்கப் போகவா வேணும்?

சரி, அது பக்கத்தில தானே? வாங்கிக்கொண்டு கெதியா அறைக்கே திரும்பிப் போ!

இண்டைக்கு அங்கயே இரம்மா, நாளைக்கு விடிய இங்க வரலாம்.”

இப்படி, மதுரா அன்பாகச் சொன்னாலும் அதில் கண்டிப்பின் சாயலை உணர்ந்தாள், மீரா.

அவளுக்கு மாமி என்றால் உயிர்; மாமியின் சொல்லைத் தட்ட அவ்வளவாக விரும்பமாட்டாள்.

‘அதற்காக? நான் தான் வெளிக்கிட்டுட்டனே!’

“ஹையோ மாமி! உண்மையாவே அவ்வளவுக்கு காத்து, மழை எண்டு இல்ல. சிலவேளை மத்தியானத்துக்கு மேல நல்ல புயல் வருதோ என்னமோ! அதுக்குள்ள நான் அங்க வந்திருவன்.

அறையில ஒருத்தருமில்ல மாமி. நேற்றிரவே தனியத்தான் இருந்தன். அங்க, அவே நாலு பேரும் கலாட்டா செய்ய, நான் இங்க தனிய…போங்கோ மாமி!” செல்லமாகச் சிணுங்கினாள்.

“சொன்னால் கேட்க வேணும் மீரா. பார், எல்லாரும் கவலைப்படுகீனம். கொஞ்சத் தூரமா? வந்து சேர எப்படியும் ரெண்டு மணித்தியாலம் செல்லும். இண்டைக்கு ஒருநாள் தானே? அங்கயே நின்றிட்டு வா!” தீர்மானமாகச் சொன்னார், மதுரா.

எதையோ சொல்ல வந்தாள் மீரா. அதற்கு இடம் கொடாது மதுராவின் குரலே தொடர்ந்து ஒலித்தது.

“இல்ல, வந்தே தீரவேணும் எண்டால்…அங்கயே நில்லு, மாமாவோ அப்பாவோ வந்து கூட்டிக்கொண்டு வருவீனம்.” முடிவாகச் சொன்னார்.

“இதென்ன மாமி நீங்க? அவே அங்க இருந்து வந்து…அப்ப அது பரவாயில்லையா? நான் என்ன சின்னப்பிள்ளயா?” சட்டென்று கேட்டுவிட்டாள்.

அதேவேகத்தில், “சரி விடுங்க. நான் நாளைக்கே வாறன். இப்ப வைக்கிறன்.” தொடர்ந்து சொல்லிவிட்டு, அழைப்பைத் துண்டித்தவள் குரலில் நிச்சயம் மனக்குறைதான். அதை, மதுராவால் நன்றாகவே உணர முடிந்தது.

“அவள்ட நல்லதுக்குத்தானே சொல்லுறம்! கேட்காட்டி என்ன செய்யிறது?” முணுமுணுத்தபடி தொலைபேசியை வைத்துவிட்டு, “என்னவாம்?” என்ற கணவரை, யோசனையாகப் பார்த்தார், மதுரா.

“சரி, நாளைக்கே வாறன் எண்டு அரைமனமாத்தான் சொன்னவள் பா; எனக்கு என்னவோ நம்பிக்கை இல்ல, வந்தாலும் வருவாள் போலக் கிடக்கு. பார்ப்பமே.” சொல்லிக்கொண்டே, மகளிடம் திரும்பினார்.

“ஆரபி, மாமிக்கு எடுத்து மீரா நாளைக்குத்தான் வருவாள் எண்டு சொல்லி விடு! இல்லையோ, யோசிச்சுக் கொண்டிருப்பார்.” என்றுவிட்டு அப்பால் நகர்ந்தார்.

மதுராவோடு கதைத்துவிட்டு, தையல் வீட்டினுள் சென்று இரவிக்கைகளை வாங்கிக்கொண்டு, ஒரே ஓட்டமாக வந்து காரினுள் நுழைந்து தொப்பென்று அமர்ந்த மீரா, சிறிது நேரம் அப்படியே இருந்தாள்.

“இந்தப் புயலில வந்தனீங்களோ! பேய்க் காத்தல்லோ அடிக்குது! மரமெதுவும் விழுந்தாலும் கவனமாகப் போங்கோ!” என்று, வியப்போடு கேட்டு எச்சரிக்கை செய்த தையல் அக்கா வேறு, தன் பங்கிற்கு எரிச்சல் ஏற்படுத்தியிருந்தார்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக விரையும் வாகனங்களைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவளின் பார்வை, தன்னருகிலுள்ள இருக்கையில் இருந்து பல்லிளித்த பயணப்பையில் படிந்தது.

ஒரு கிழமை லீவு! வீடு செல்லும் நோக்கில் தானே புறப்பட்டிருந்தாள்?

ஆரபி, ஆரணி இருவருமே மருத்துவம் படித்திருந்தார்கள். அம்ஸ்டர்டாம் பல்கலை என்பதால், வீட்டில் இருந்தே தான் போய் வந்தார்கள்.

இவள்தான், நெருங்கிய தோழிகள் இருவரோடு சேர்ந்து ‘மொலிகுலர் சயின்ஸ்’ செய்ய விரும்பினாள். ‘டெல்ஃப்ட் பல்கலை’யில் தான் இடம் கிடைத்து. அப்படிச் சொல்வதை விட, அவள் நண்பிகள் அங்கே படிக்க விரும்ப, தானும் சேர்ந்து விண்ணப்பித்திருந்தாள்.

“சரிம்மா, நீ ஆசைப்பட்டத படி. அதுக்காக அவ்வளவு தூரமாவா? ஒவ்வொரு நாளும் போய்வாறது சிரமமே!”

பெரியவர்களின் முணுமுணுப்பின் மத்தியில்தான் பல்கலை சென்றதும், இந்த இரு வருடங்களை ஓட்டியதும். இதோ, மூன்றாவது ஆண்டு ஆரம்பித்திருந்தது.

நண்பிகளோடு சேர்ந்து பல்கலைக்கருகில் அறையெடுத்துத் தங்கியிருந்தாள். அதேநேரம், முதல் வருடத்தில் மருத்துவம் படிக்கும் ஆதவ், நிரூஜ் மற்றும் மைத்துனிமாரோடான கலகலப்பையும் இழக்க விரும்பாது, தவறாது வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிடுவாள்.

“சரி, ஒரு நாள் தானே எண்டு இங்க நின்றுட்டு நாளைக்குப் போகலாம் தான். இங்க நிண்டு என்ன செய்யிறது? வீட்டுக்கார மிசர்ஸ் யோவான் சொல்லுற பழங்கதைகளைக் கேட்க வேண்டியது தான்.

அதேநேரம், அங்க போனால் எவ்வளவு வேலைகள் இருக்கு? இன்னும் மூண்டு கிழமைகளில ஆரணி, ஆரபி கலியாணம். அடுத்த கிழமை அவுஸ்திரேலியாவில இருந்து ரெண்டு பேரிண்டையும் மாப்பிள்ளை வீட்டாக்களும் வருகீனம்.” வாய்விட்டே முணுமுணுத்தாள், மீரா.

இவளின் பெரியம்மாவின் மூத்த மகனை ஆரணிக்கும், மதுராவின் தோழி உஷாவின் மகனை, ஆரபிக்குமாகத் திருமண நிச்சயம் செய்திருந்தார்கள்.

அவுஸ்திரேலியாவில் இருந்து அடிக்கடி வந்து போகும் இளையவர்களின் மனதின் விருப்பறிந்து முற்றாக்கிய திருமணங்கள் அவை.

ஒருகணம், எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்தவள், தனது பக்கக் கண்ணாடியை இறக்கி, உள்ளே தெறித்த மழைத்துளிகளை முகம் சுருக்கி வாங்கிக் கொண்டாள்.

இலேசாகக் கண்களைச் சுருக்கி சுற்றுப்புறத்தைத் துளாவியவள், ‘அவ்வளவு காத்து இல்ல…’ சுழன்றடிக்கும் வெளிச்சுழலைப் பார்த்து இப்படித்தான் எண்ணிக்கொண்டாள்.

‘சோ!’ என்ற இரைச்சலோடு கொட்டிய மழை மட்டும் இலேசாகத் தணிந்திருந்தாலும், காலநிலை ஆய்வாளரின் கருத்தொன்றும் பொய்த்திருக்கவில்லை என்பது புத்திக்குப் புரிந்தாலும், மனத்தின் விருப்புக்குத் தூபம் போட்டன, விழிகள்!

சட்டென்று முடிவுக்கு வந்தவளின் கார், ‘அல்மேரே’ நோக்கி விரைந்தது.

“போனதும் மாமியில தொடங்கி மாறிமாறிப் பேசுவார்கள் தான் (திட்டுவார்கள்). பச்! வாங்கிக்கொள்ளுவம்.” இலகுவாக எண்ணியபடி, ஆங்காங்கே விரைந்த வாகனங்களுக்குப் போட்டியாகத் தன்னதையும் விரட்டினாள்.

அரைமணிதான் ஓடியிருப்பாள். இலேசாகக் குறைந்திருந்த மழை வலுத்திருக்க, பாதையின் இருமருங்கிலும் இருந்த மரங்களோ பேயாட்டம் போட்டன.

அதையெல்லாம் கவனித்தவளுள், பாதையில் சேர்ந்து விரைந்த வாகனங்கள் ஒருவகைத் துணிவைத் தந்தாலும், ‘வரவே வேணாம்’ என, மீண்டும் மீண்டும் தடுத்த வீட்டாரின் நினைவு குறுக்கிடாதும் இல்லை.

அப்படியிருந்தாலும், அவ்வளவு மழையிலும் தன் பக்க யன்னலை அரைவாசித் திறந்தபடி, சடசடத்துத் தெறிக்கும் மழைத்துளிகளை இரசித்தபடி விரைந்து கொண்டிருக்கையில் தான், சில கிழமைகளுக்கு முன்பு ‘டோவர்’ துறைமுகத்தில் சந்தித்த, கார்க்காரனின் கண்ணில் பட்டாள், மீரா.

அடுத்தநொடி, அவன் விழிகளில் சிறு பளிச்சிடல்.

தன் காரோடு சமமாகச் சென்ற சில கணங்களில் பக்கவாட்டில் அவளையே பார்த்தவன், அவள் முந்திச் சென்ற பின்னரும் அவள் காரில் பதிந்த விழிகளை அகற்ற மறந்திருந்துவிட்டு, முந்திச் சென்ற இரு கார்களிடையே அவள் கார் மறையவும் தான், தோள்களைக் குலுக்கியபடி பார்வையை விலக்கிக்கொண்டான்.

error: Alert: Content selection is disabled!!