இப்படிச் சிலநிமிடங்கள் சென்று, எதிர்ப்பட்ட சிவப்புச் சிக்னலில் காரை நிறுத்திவிட்டு, பாதையின் இருமருங்கையும் பார்த்தவன் முகத்தில் சின்னக் கவலை. இதுவரை, பலதடவை அழைத்து விட்டார், அவன் பாட்டி.
‘வாறன் எண்டவனை என்ன இன்னும் காணேல்ல?’ புலம்பியவாறே, இப்போது ஹாலில் நடைபோட்டுக் கொண்டிருப்பார் என்பதை நினைத்தபடி, ‘இன்னும் அரைமணி சரி பிடிக்கும்.’ என்ற நினைவோடு வெளியில் பார்வையைப் பதித்தான்.
மதியப் பொழுதை எட்டாத போதும், அந்தி சாய்ந்துவிட்ட கருமை மெல்ல மெல்ல ஆக்கிரமிப்புச் செய்த வண்ணமிருக்க, புயலும் அடைமழையும் வலுத்துக்கொண்டே போனது.
அது போதாதென்று கண்களைப் பறிக்கும் மின்னல், செவிகளைக் கிழிக்கும் இடியென, சற்று முன் இருந்ததை விடவும் கடுமையாகவே புயல் வீசிக் கொண்டிருந்தது.
‘போய்ச் சேர முதல், பாட்டிட்ட இருந்து எத்தின கோல் வரப் போகுதோ! தானும் பயந்து தாத்தாவையும் உண்டு இல்ல எண்டு ஆக்குவார்.’ என, இங்கு, தனக்கென்ற சொந்தமென இருப்பவர்கள் பற்றி எண்ணிக்கொண்டான், அவன்.
என்பது வயதை அண்மிக்கும் வயோதிபர்கள் இவன் தாத்தா பாட்டி. இவன் அப்படி அழைத்தாலும், இவர்களிடையேயான உறவு முறை அதுவல்ல.
இவன் தாய்க்கு அவர்கள் தந்தை வழித் தாத்தா பாட்டி. இவன் தாய் சிறுவயதில் அதிகம் இவர்களோடுதான் வளர்ந்தாளாம். அதேபோன்று, இவனும் இவனது எட்டாவது வயதிலிருந்து இவர்களோடுதான்.
கனிவே உருவான பெரியவர்களின் அன்பில், அவர்களின் நினைவிலிருந்தவன், கண்ணிமைப்பொழுதில், தனக்கு முன்னால் நடந்து விட்ட சம்பவம் பார்த்து அதிர்ந்து போனதென்னவோ ஒரே ஒரு கணம் தான்.
இப்படியெதுவும் நடக்கும் வாய்ப்பிருக்கே என்று சற்றுமுன் எண்ணியும் பார்த்தான் தான். அதற்காக அது நிகிழ்ந்த போது?
சட்டென்று அவன் நினைவில் தோன்றியதே, சற்றுமுன் தன்னை முந்திச் சென்ற அந்த இளம் பெண்ணின் நினைவு தான்.
“ஹையோ! சரியாக அவள் நின்ற இடத்தில் எல்லா அந்த மரம் விழுந்திருக்கு!”
உதடுகள் பதற்றத்தோடு வார்த்தைகளை விட, தன்னைப் போலவே மற்றைய கார்களிலிருந்து இறங்கி ஓடியவர்களை விலத்திக்கொண்டு முன்னேறினான், அவன்.
அது ஒரு பெரிய அடர்ந்த மரம். தன் இராட்சசக் கிளைகளைப் பரத்திவிட்டபடி அலங்கோலமாகச் சரிந்து கிடந்தது.
‘அதனுள் நிச்சயம் நான்கு ஐந்து கார்கள் அகப்பட்டிருக்கலாம்!’ என அனுமானம் சொல்ல, முயன்றளவு மரக்கிளைகளை விலக்கியபடி உள்ளே நுழைந்து கார்களை அணுகிவிட முயன்றவனுக்கு, அவளின் சிவப்பு வண்ணக் கார்தான் மனக் கண்ணில்!
அதற்கிடையில் யாரோ தீயணைப்புப் படைக்கும் அம்புலன்ஸுக்கும் அறிவித்திருப்பார்கள் போல. அவை வரும் சைரன் ஒலி தூரத்தில் கேட்டது.
அவளின் கார் நிச்சயம் அதனுள் என்றுணர்ந்தவனுக்கு ‘காயப்பட்டிருப்பாளோ?’ என்ற எண்ணம் வேறு இதயத்தை எகிற வைத்தது.
அப்போது, உள்ளே அகப்பட்டிருந்த காரொன்றிலிருந்து நடுத்தர வயது ஆண் ஒருவர் மரக்கிளைகளை விலக்கியபடி மெல்ல மெல்ல வெளியில் வந்துகொண்டிருந்தார்.
காயங்களோடு வந்தவரைப் பார்த்ததும் பதற்றம் அதிகரிக்க, அவரைப் பிடித்துப் பின்னால் வந்தவர்களிடம் விட்டுவிட்டு விரைந்து உள்ளே நுழைந்தவன், மரக்கிளைகள் கீறிக் கிழித்தையும் பொருட்படுத்தவில்லை.
எல்லாம் அவள் காரைக் காணும் வரைதான். அதுவும், தன் பக்கக்கதவை இலேசாகத் திறந்து பிடித்தபடி அரக்கப் பறக்க விழித்தபடி இருந்தவளைப் பார்க்கும் வரைதான்.
அவள் காரின் பின்புறத்தில் பெரிய மரக்கிளை விழுந்திருந்தாலும் முன்பக்கத்தில் சேதம் உள்ள மாதிரித் தெரியவில்லை.
கண்ணிமைப்பொழுதில் அளவிட்டபடி, “என்ன யோசிக்கிற? இறங்கி வா!” என்றபடி தன்னை நோக்கி வந்தவனை, அந்த மங்கிய வெளிச்சத்தில் சட்டென்று அடையாளம் தெரியவில்லை, மீராவுக்கு!
உதவிக்கு யாரோ வருகிறார்கள் என்றே எண்ணினாள்.
அதுவே, உதவிக்கு வந்தவர்கள் முன்புறமாக விழுந்து கிடந்த கிளைகளை இழுத்து விலக்கிக்கொண்டிருந்ததில் கிடைத்த வெளிச்சத்தில் வந்தவனை அடையாளம் கண்டு கொண்டதும், அவனை அங்குச் சற்றும் எதிர்பாராது கண்டதில், அதுவரை இருந்த பயத்தையும் பதற்றத்தையும் மீறி ஆச்சரியம் காட்டின அவள் விழிகள்!
‘இவனா?!’ மனமும் விழிகளோடு கை கோர்த்தது!
சற்றும் எதிர்பாராச் சந்திப்பு!
“ஆ…! பாத்து…பாத்து..” அங்கிருந்த முறிந்த கிளையொன்று நெற்றியில் கீறியதையும் பொருட்படுத்தாது இவளை நெருங்கியவனிடம் தன்னையும் மீறிக் கூறியவள், அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாது, “இறங்கு! எங்கயாவது அடிபட்டிருக்கா?” என, அவளை ஆராய முயன்றபடி நெருங்கியவனையே பார்த்திருந்தாள்.
“என்னாச்சு? கெதியா இறங்கு!” கதவில் கை வைத்து நன்றாகத் திறக்க முயன்றபடி சொன்னவனுக்கு, அப்போதுதான் புரிந்தது, கதவைத் திறக்க முடியாது ஒரு மரக்கிளை தடுத்திருப்பது.
“இல்ல, அடிபட எல்லாம் இல்ல. கதவைத் திறக்க முடியாமல் கிடக்கு.” அவளுமே அதைத்தான் சொன்னாள்.
சட்டென்று அவள் முகத்தை ஊன்றிப் பார்த்தான், அவன்.
அன்று எப்படியெல்லாம் படபடத்தாள். இன்றோ, நடந்து விட்ட நிகழ்வில் நன்றாகவே ஆடிப் போய்விட்டாள் என்பது முகம் வெளிறிக் கிடந்ததில் புரிந்தது.
குரலுமே நடுக்கத்தோடுதானே வந்தது.
‘ச்சே! இப்ப இந்த ஆராய்ச்சி தேவையா?’ தன்னையே கடிந்து கொண்டவன், “ஓ! கொஞ்சம் அப்பிடியே இரு!” என்றபடி, முயன்று, அந்தக்கிளையைச் சற்றே இழுத்து ஒதுக்கியபடி கதவைத் திறந்து பிடித்தான்.
“இவ்வளவும் தான் திறக்க ஏலும். மெல்ல வெளியில வா பார்ப்பம்.” அவன் சொன்னதும், கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கியவள், தன் பயணப்பையையும் இழுத்தெடுக்க முயன்றாள்.
“பச்! முதல் நீ வெளியில வா!” அவள் தோளைப் பற்றி, தான் வந்த வழியில் நகர்த்தி விட்டான்.
அந்நேரம், காதைக் கிழிக்கும் ஓசையோடு வெடித்தது இடியொன்று! அங்குதான் விழுந்துவிட்டதோ என்று இவன் ஆடிப் போய்விட்டான் என்றால், அவளோ, கூவலோடு திரும்பி அவனிலேயே மோதினாள்.
“ஏய்!” அவளையும் பிடித்தபடி தடுமாறிக் காரில் சாய்ந்தவன், தன்மீதே மொத்தமாகச் சாய்ந்து நின்றவளை, முறைத்தபடிதான் பார்த்தான்.
மரம் விழுந்ததும் என்னவோ ஏதோ என்று எப்படியெல்லாம் பயந்து போனான். அவளை முழுதாகப் பார்த்த பின்னரே சுயத்துக்கு வந்திருந்தவனுக்கு, இப்போது ஏனோ அவள் செய்கைளில் ஏற்படும் எரிச்சல் தான் நினைவில் வந்தது. அதுவும், அன்று டோவரில் என்ன நல்ல முறையிலா அறிமுகமானார்கள்.
கண்ணீரோடு நடுங்கியபடி காதைப் பொத்திக்கொண்டு நின்றவளைக் கோபமாகவே பார்த்தான்.
“நேற்றே, இண்டைக்கு என்ன காலநிலை எப்படி எப்படியென்று சொல்லியிருக்க, தனியாக் காரை எடுத்துக்கொண்டு மழையில நனைஞ்சபடி, ரசிச்சு ரசிச்சு ஓடத் தெரிஞ்சவள் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேணும்!”
கடமுடக்கும் காலநிலை போலவே கடிந்துகொண்டு வந்தன, வார்த்தைகள்.
சற்றும் எதிர்பாராது நடந்துவிட்ட அதிர்வான சம்பவம், துணிச்சலான அவளையே கலகலக்க வைத்திருந்தது.
அந்நேரத்தில் கேட்ட ‘படீர்’ என்ற இடிச்சத்தம், அவள் நெஞ்சைக் கலங்க வைத்திருந்ததில் அவன் மீதே சாய்ந்து விழுந்துவிட்டாள். அதைச் சற்றும் உணரவும் இல்லை.
அப்படியிருக்கையில், அவள் செவிக்கு மிக மிக அருகில் சூட்டோடு வந்து மோதின, அவன் வார்த்தைகள்.
சட்டென்று சுதாகரித்து விட்டாள், மீரா.
அவன் நெஞ்சில் கரமொன்றை ஊன்றி நேராக நின்ற வேகத்தில் கீழே விழுந்த கைப்பையை குனிந்தெடுத்தபடி, “சொ…றி சொறி! என்றவாறே, கலங்கிப்போய் பார்த்த பார்வையில், இவன் முகத்திலிருந்த கடுமை வடிந்துதான் போயிற்று!
‘நல்லாவே அரண்டு போயிருக்கிறவளிட்ட நான் வேற…’ மனதுள் தன்னையே கடிந்து கொண்டான். அதோடு, அன்று அத்தனை கலகலப்பாக நிமிர்வாகச் சந்தித்தவளை இப்படிக் காணச் சகிக்கவும் இல்லை.
“இல்ல…ஓடுற காரில தலையை வெளிய விட்டு செல்ஃபி எடுக்கிற ஆள் நீ! இந்த இடி மழையில ஹாயா காரோடிக்கொண்டு போகவும் முழு வீராங்கனை எண்டு நினைச்சன். இப்பப் பார்த்தால்…அப்படியில்லை போலக் கிடக்கே!” கேலியாக இழுத்ததோடு நிறுத்தாது,
“அட…உன் ஃபோன் இங்க கிடக்கு!”
காருக்குள் நுழைந்து அவள் பயணப்பையோடு கைபேசியையும் எடுத்தான்.
அவற்றை வாங்க கை நீட்டினாள், மீரா.
அவனோ, “ஹ்ம்ம் இந்தா; இதில ஒரு செல்ஃபி எடன் !”
அவளின் முகத்தின் முன்னால் கைபேசியை நீட்டிப் பிடித்தான். மறுநொடி, அன்று டோவரில் போலவே, கொலை வெறியாகிப் போனாள், மீரா.
அப்பட்டமான கேலியில் துடித்த அவன் முகத்தைக் கோபத்தோடு பார்த்தபடி, கைபேசியை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டவளின் மறுகை, தன் பயணப் பைக்காக நீண்டிருந்தது.
“நான் கொண்டு வாறன்; நீ நட!” என்றவனும் நகர, விசுக்கென்று நகர்ந்தவள், “ஆ!” காதோரமாக உரசிய கிளையொன்று ஏற்படுத்திய வலியையும் பொருட்படுத்தாது முன்னேறினாள், “ஹேய்..பாத்து…பாத்து..” என, பின்னால் வந்தவன் குரல் காதில் கேட்ட மாதிரியே காட்டிக் கொள்ளாது!

