4
அடுத்து வந்த நிமிடங்களில், மழையோடும் புயலோடும் போட்டி போட்டவாறே துரிதகதியில் மீட்பு வேலைகள் நடந்தன!
நான்கு கார்கள் நன்றாகவே சேதமுற்றிருந்தாலும் அதனுள் இருந்தவர்கள் உயிராபத்தின்றித் தப்பியிருந்தார்கள். நல்லவேளையாக, காரினுள் சிறுவர் குழந்தைகள் என யாரும் இருக்கவில்லை!
சற்றே அதிக காயங்கள் காரணமாக இருவர் மட்டும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் இருந்தனர்.
கைகளில் ஆங்காங்கே சிராய்ப்புக் காயங்கள், வலப்புறக்காதின் பின்னால் ஒரு சிறுகாயம், இவ்வளவோடு தப்பியிருந்த மீராவுக்கு, பின்புறம் நைந்து போயிருந்த தன் காரைப் பார்க்கையில் அடிவயிறு கலங்காதில்லை.
பல்கலை ஆரம்பித்ததும், புத்தம் புதிதாக அவள் மாமா வாங்கித் தந்த அழகான சிவப்பு நிறக்கார்.
ஆசைக்குக்கூட ஆதவ் நிரூஜிடம் கொடுக்க மாட்டாளே!
ஆரணி ஆரபியைவிட, இவர்கள் மூவருள்ளும் இரு வயதுகள் தான் வேறுபாடு என்பதால், எல்லாவற்றிலும் போட்டி போட்டுக் கொள்வார்கள். சண்டைகளிற்கும் குறைவிருக்காது. பெரியவர்களான ஆரணி, ஆரபி தான் இடையிட்டுச் சமாதானம் செய்து வைப்பது.
அப்படியிருந்தும், கார் விடயத்தில் யார் பேச்சும் எடுபடாது.
“தரமாட்டன் எண்டா மாட்டன் தான்!” மறுத்து விடுவாளே!
இவர்களின் சண்டையைப் பார்த்துவிட்டு, ஆதவ், நிரூஜ் இருவருக்குமாகச் சிறு காரொன்றை வாங்கிக் கொடுத்திருந்தார் ,சதீஷ்.
‘இப்ப மட்டும் அவன்கள் பார்க்க வேணும்!’ மழைத்துளியோடு சேர்ந்து கரைந்தது, அவள் கண்ணீர்.
‘எண்டாலும் நான் சேதமில்லாமல் தப்பினது பெரிய விசயம் தான்!’ அவளுக்குப் புரியாதும் இல்லை.
‘ஒருவேளை காயம் அப்பிடி இப்பிடி எண்டு ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டி வந்திருந்தா?’ நினைத்தும் பார்க்க முடியவில்லை.
‘வெளியில வெளிக்கிடாத!” என்ற வீட்டாக்கள் மட்டும் இப்ப இதைக் கேள்விப்பட்டால்? துலஞ்சன்.’
பயத்தில் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டு சதிராட, கலங்கும் விழிகளோடு நின்றவள் கரத்தை ஆறுதலாகப் பற்றினான், அவன்.
“ஸ்ஸ்…இந்தளவோட தப்பினதுக்குச் சந்தோசப்படு!” என்றவன், அவள் பார்வை காரில் படிந்திருந்ததைப் படித்துவிட்டு, “புதுக்கார் போல! ஹ்ம்…இன்சூர் செய்திருக்குத் தானே? யோசியாத!” ஆறுதலாகச் சொன்னான்.
பதிலேதும் சொல்லாது நின்றாள், மீரா. அவனும் எதிர்பார்க்கவில்லை.
சில நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவளிடம் திரும்பியவன், “உன்ர வீட்டுக்குச் சொல்லப் போறியா?” என்றதும், விசுக்கென்று அவனை ஏறிட்டாள்.
“ஐயோ! வேண்டவே வேணாம்; நான்…நான் இண்டைக்கு அறையில நிண்டிட்டு நாளைக்குத் தான் வருவன் எண்டு சொல்லியிருந்தன். இது மட்டும் தெரிஞ்சா அவ்வளவும் தான்.” மறுப்பாகத் தலையை ஆட்டியவாறே சொன்னவளை விசித்திரமாகப் பார்த்தான், அவன்.
“இப்பிடி, வீட்டுப் பெரியவேக்குப் பயப்படுற நீ, செய்யிற வேலைகளைப் பார்த்தா அப்பிடித் தெரியேல்லையே!” ஒரு மாதிரி இழுத்தவனுக்கு என்ன பதில் சொல்வதாம்?
“சந்தர்ப்பம் கிடைச்சோன்ன சொல்லிக் காட்டுறான்.” முணுமுணுத்தபடி மறுபுறம் திரும்பினாலும், அவன் அங்கு நிற்பதில், ஒரு துணையின் அருகாமையைத் தன்னையுமறியாது உணர்ந்து கொண்டாள், அவள்.
ஓரளவு நினைவு தெரிந்ததில் இருந்தே, எதற்கும் யார் உதவியும் எதிர்பாராது வளர்ந்தவள் தான். அவள் மட்டுமன்றி, பிள்ளைகள் ஐவரையுமே அப்படித்தான் வளர்த்திருந்தார்கள், கார்த்திகேயன் மற்றும் சதீஷ் தம்பதிகள்.
‘எங்கட பார்வை உங்களில இருக்கும்!’ என்று உணர்த்துவார்களேயொழிய, இவர்களின் நடவடிக்கைகளில் குறுக்கிட்டு, விருப்பங்களுக்கு அணை போட்டு என்றெல்லாம் நடந்து கொண்டதில்லை.
அதேநேரம், நியாயமான ஆசை எது, நாம் யார் என்பதையும் அழுத்தமாகவே புரிய வைத்திருந்தார்கள்.
அதனால், பெரியவர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையேயான உறவுமுறை அன்பால் பிணைக்கப்பட்டு சுமூகமாகவே இருந்தது.
அப்படியிருந்தும், இன்று நடந்த நிகழ்வில் மனத்தால் மிகவும் அரண்டுவிட்டிருந்தாள், இவள்.
கணநேரம், யாருமற்றுத் தனித்து நின்ற உணர்வில் ஆடிப் போயிருந்தாளே! அப்போதுதானே இவன் வந்தான்.
இப்படியாகீற்று என்று சொல்லிச் சட்டென்று அப்பா, அம்மா, மாமா, மாமி என, உரியவர்களை அழைக்கும் துணிவும் வரவில்லை.
‘கூப்பிட்டோன்ன வரக் கூடிய காலநிலையா? எனக்கு ஏற்பட்ட இதே நிலை அவேக்கும் ஏற்படாதெண்டு என்ன நிச்சயம்?’ கலங்கிப் போனவள், தந்தை வழிப்பாட்டி யோகத்தையோ, தாத்தாவையோ அழைக்கவும் துணியவில்லை.
இருவருமே வயதானவர்கள் என்பதோடு, அவர்களும் இங்கிருந்து பார்த்தால் தூரமாகவே இருந்தார்கள்.
“எனக்கு எதுவுமே இல்லை பாட்டி!” என்று சொன்னாலும் நம்ப மாட்டார் யோகம்.
‘என்னவோ ஏதோ எண்டு கத்திக் குளறிக்கொண்டு வந்து ஒரு வழிபண்ணிவிடமாட்டாரா?’ இந்த எண்ணத்தில், ‘எப்படியோ, முதல் காரைவிட்டிறங்கி வெளிய போவம்.’ என்றெண்ணிக் கொண்டிருந்தவள், அரக்கப் பறக்க வந்தவனைக் கண்டதும் அதுவரையிருந்த நடுக்கம் சமன் படுவதாகத்தான் உணர்ந்தாள்.
அதுவும், அவன் பேச்சு நடவடிக்கையைப் பார்க்கையில், இவளை அங்கு கண்டுவிட்டே வந்திருக்கிறான் என்று புலப்பட்டதில் உள்ளத்தில் ஒருவகை மென்னுணர்வு பரவியது!
என்ன ஏதென்று பகுத்தறியவும் முடியவில்லை.
அப்போது, “அதில் நிற்பது உங்கள் காராமே; வந்து எடுங்க!” போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர் சொல்ல, “இதோ..” சட்டென்று பதில் சொன்னவன், அதற்கு மாறாக அசையாது நின்றான்.
‘இவளை அப்பிடியே விட்டுட்டுப் போக ஏலாதே!’ மனதில் எண்ணியபடி அவளையும் காவலரையும் யோசனையோடு பார்த்தான்.
“நீ இனி இங்க நிண்டு என்ன செய்யிறது? காரை அவே பார்த்துக் கொள்ளுவீனம். மிச்சம் எல்லாம் நாளைக்குக் கதைச்சுக் கொள்ளலாம்.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, “நீங்க எப்பிடிப் போவீங்க? வாகனம் ஒழுங்கு செய்து தரலாம். எங்க போக வேணும்?” என்றபடி வந்தார், இன்னொரு காவல் அதிகாரி.
“அதற்கு அவசியம் இல்ல; நானே கூட்டிக்கொண்டு போய் விடுறன்.” அவள் பதிலளிக்க முதல் முந்திக்கொண்டான், இவன்.
‘எப்பிடியும் இங்க இருந்து ஒரு வாகனத்தில தானே போகோணும்? அது ஆரிட(யார்) வாகனமாக இருந்தால் தான் என்ன?’ மனதுள் எண்ணமோட அமைதியாக நின்றாள், மீரா.
அவனும், அவள் மறுத்தாலும் என்றெல்லாம் நினையாது காவல்துறை அதிகாரியோடு கதைத்து விடைபெற்றவன், அவளையும் அழைத்துக்கொண்டு தன் கார் நோக்கி விரைந்தான்.
முதலுதவிக்கு வந்தவர்கள் ஒரு பொலித்தீன் மழைச்சட்டையால் போர்த்தி விட்டிருந்தாலும், நன்றாகவே நனைந்திருந்தாள்.
அவனோ தெப்பலாகியிருந்தான்.
விரைந்து வந்து அவள் பாக்கை பின்புறத்தில் வைத்துவிட்டுத் திரும்பியவன், காரினுள் ஏறாமல் அப்படியே நின்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்று கதவைத் திறந்துவிட்டான்.
“ரெயின் கோட்ட கழட்டி இப்படித் தந்திட்டு ஏறு!” என்ற பின்னும் காரையும் அவனையும் யோசனையாகப் பார்த்தாள், அவள்.
‘இப்பிடித் தெப்பலா நனைஞ்சபடி, அழுக்கான ஆடையோடு…என்ர காரில எண்டால் கடைசிவரை ஆரையும் ஏற விட மாட்டன். அப்படியிருக்க…’ எண்ணமிட்டவாறே, மீண்டும் அவனைப் பார்க்க, அவனோ பொறுமையின்றிப் பார்த்தான்.
“இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை? நனைஞ்சது போதாதா? நீ எண்டாலும் ரெயின்கோட் போட்டிருக்கிற. என்னைப் பாரன்.” என்றவனைப் பார்க்க, மிகவும் பரிதாபமாகத்தான் இருந்தது.
தன் பாட்டில் போகாமல் உதவி செய்ய வந்தவன், அதிக சேதாரத்தோடு நிற்கிறானே!
அவள் உதடுகளில் சிறு முறுவலின் பூச்சு!
அவன் போட்டிருந்த வெள்ளை டீ சேர்ட் நிறம் மாறிப்போயிருக்க, அவனின் வெளிறிய டெனிம் அவ்வளவு நனைந்தும் அழுக்கோடு சிரித்தது.
“ஹலோ…நல்லா இருக்கே உன்ர வேல! இன்னொருதரம் வந்து காரை எடு எண்டு சொல்லுறதுக்குள்ள போவம் ஏறு எண்டு சொல்லுறன், என்னை மேல இருந்து கீழாக அளக்கிற!”
ஒரு மாதிரிக் குரலில் அவன் சொன்னதில் திடுக்கிட்டுப் போனாள் அவள்.
“உன்ன அளக்கிறனா? அது எதுக்காம்!” வெட்டும் பார்வை, பழைய மீரா மீண்டு கொண்டிருப்பதைக் காட்டியது.
“நல்ல நினைப்புத்தான்! ஐயோ பாவமே! இப்பிடியே ஏறினா கார்ட நிலை என்ன எண்டு யோசிச்சா?” ஒரு கரத்தால், தன்னை மேலிருந்து கீழாகச் சுட்டிக் காட்டியவள், “நீ என்னவிடக் கேவலமா நிற்கிறயே! அதைத்தான் பாத்தன்.” என்றவள், முடிக்க முன்னர் குறுக்கிட்டான், அவன்.
“அப்பிடிப் பார்த்துக்கொண்டு நிண்டா எப்பிடி வீட்டுக்குப் போவ? நடந்தா?
அழுக்காகாமல், நனையாது பாதுகாக்க வேணுமெண்டா, காரை ரோட்டில இறக்கவே கூடாது; கண்ணாடிப்பெட்டிக்குள்ள வச்சு அழகு பார்க்க வேணும்.” என்றபடி, அவள் கழட்டிய மழைச்சட்டையை, “இப்படித் தா?” என்று வாங்கி, அப்பகுதியால் கடந்து சென்ற ஒரு உதவியாளரை நிறுத்தி, “எங்களுக்கு இனித் தேவைப்படாது, இங்க ஆருக்காவது உதவும்.” என்று கொடுத்த வேகத்தில், காரைச் சுற்றிக்கொண்டு வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
அதற்குப் பிறகும் தாமதிக்காது தானும் ஏறியமர்ந்தாள், மீரா.
அவன் சிகை நெளி நெளியாக நெற்றியை மறைத்தும் கழுத்தோரமாகவும் கலைந்து கிடந்தது. அதிலிருந்து துளித் துளியாக வழிந்த நீர் அவன் முகத்தை வருடி இறங்க, “ஸ்ஸ்…” என்றபடி பின்புற இருக்கையிலிருந்த டிஸ்ஸு பெட்டியை எடுத்து, தான் சிலதுகளை உருவி முகத்தை ஒற்றியவாறே அவளிடம் நீட்டினான்.
மழைக்குளிரால் சுருங்கியிருந்த விரல்களால் அதை வாங்கிக் கொண்டவள் நடுங்குவதைப் பார்த்துவிட்டு., “கொஞ்சநேரம் பொறுத்துக்கொள்ளு!” என்றபடி ஹீட்டரைப் போட்டவன், “வேணுமெண்டா…” மீண்டும் பின்புறம் எக்கி, அங்கிருந்த ஒரு கம்பளிக்கோட்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.

