“ஈர உடுப்பு, என்ன எண்டாலும் குளிரத்தான் செய்யும். இதால போத்திக் கொள்ளு, கொஞ்சம் சரி குளிர் குறையும்.” என்றவன், அவள் வாங்காது தயங்கவே, “நான் ரெண்டு மூணு தடவைகள் பாவிச்சிருப்பன், பரவாயில்ல தானே?” என, ஒற்றைப்புருவம் உயர்த்தி விழிகளால் நகைத்தவன், அன்று டோவரில் வெடுசுடுமூஞ்சியாகத் தெரிந்ததற்கு நேர் எதிராக, இப்போ, அநியாயத்துக்கு அழகாகத் தெரிந்தான்.
சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டவள், “இல்ல, எனக்கு வேணாம்; நீயே போடு!” அவனைப் பாராது முணுமுணுத்துவிட்டுப் பாதையைப் பார்த்தாள்.
“ஏய்! நான் சும்மா சொன்னன். ஒரு தரமும் பாவிக்க இல்ல. பார், நடுங்கிற.” என்றபடி அவளில் போர்த்தி விட்டவனை, ஏனோ, இமைக்கவும் மறந்து பார்த்தாள், அவள்.
அவன், அவள் பார்வையைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
அவன்புறமாக வந்து கண்ணாடியில் ‘தட் தட்’ என்று தட்டிய காவலர், தான் பொறுமையிழந்து விட்டதை உணர்த்தி, அவனை எதையுமே கவனிக்கவோ சிந்திக்கவோ விடாது காரை எடுக்க வைத்தார்.
காரை அப்படியே திருப்பி, வந்த வழியே சிறிது தூரம் விட்டவன், ஓரமாக நிறுத்திவிட்டு அவளிடம் திரும்பினான்.
“ம்ம்…சொல்லு, உன்ர வீடு எங்க இருக்கு?”
“அதுக்கு முதல், உன்ர பெயர் என்ன எண்டு சொல்லு?” என்றவள், “நான் மீரா!” சிறு முறுவலோடு வலக்கரத்தை நீட்டினாள்.
தயங்காது பற்றிக்கொண்டான். “ம்ம்…தெரியும். சொந்த இடம் அல்மேரே; படிக்கிறதுக்காக அறை எடுத்துத் தங்கியிருக்கிற. இதைத்தான் அங்க போலீசிட்ட சொன்னியே!” என்றவன், “நான் ஜோரிக்!” முறுவலோடு அவள் கரத்தை விட்டான்.
“இனிச்சரி, வீடு எங்க எண்டு சொல்ல முடியுமா?
“உன்ர வீடு எங்க இருக்கு?” அவள் கேட்டதற்கு பதில் சொல்ல முதல் அழைத்தது அவன் கைபேசி.
“பச்! துலைஞ்சன்!” என்றபடிதான் அழைப்பை ஏற்றான்.
“ஓமா(பாட்டி) நான் வீட்டுக்குத் தான் வந்து கொண்டிருக்கிறன். இடையில ஒரு ஃப்ரெண்டைப் பார்த்ததில கொஞ்சம் பிந்தீட்டு!”
“……..”
“இல்ல இல்ல அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல. இன்னும் ஒரு ஒன்று ஒன்றரை மணித்தியாலத்தில் வந்திருவன்.”
…….
“ஓமா!” சற்றே அதட்டினான்.
“இவ்வளவு நேரம் என்ன செய்தன் எண்டு வீட்ட வந்து சொல்லுறன், முதல் வைய்யுங்க!” என்று விட்டு, அவளைப் பார்த்தவன், “என்ர பாட்டி. வரவேண்டிய நேரத்தில் ஒரு அஞ்சு நிமிசம் பிந்தினாலும் போதும் ஃபோனைப் போட்டு உண்டு இல்லை எண்டு ஆக்குவார்.”
அவன் சொன்ன விதத்திலேயே அவர்களிடையேயான பற்றுத் தெரிந்தது.
“உன்ர வீடு எங்க இருக்கு? என்னக் கொண்டு போய் விட்டுட்டு வீட்ட போகப் பிந்தினால்? பேசாமல் என்னை ஒரு பஸ் ஸ்டாப்பில விடு!” என்றவளை முறைத்துவிட்டு, விலாசத்தைக் கேட்டுக்கொண்டவன், “உன்னை விட்டுட்டு மற்றப்பக்கமாக என்ர வீட்ட போகலாம், கொஞ்சத் தூரம்தான்.” என்றபடி காரைச் செலுத்தினான்.
அதன்பின் காரினுள் அமைதியே நிலவியது.
நடந்த நிகழ்வைக் கேள்வியுறுகையில் வீட்டினரிடம் எவ்வாறான எதிரொலி கிடைக்கும் என நன்கறிந்தவள், அவர்களை எப்படிச் சமாளிப்பது என்ற தவிப்பில் ஆழ்ந்திருந்தாள்.
அவனோ, வெளிப்புறம் பார்த்தபடி அமைதியாக வருபவளை ஒருதரம் பார்த்துவிட்டுக் காரைச் செலுத்துவதில் கவனம் செலுத்தினாலும், இந்தளவுக்கு அக்கறையெடுத்து அவளுக்கு உதவுவதில் ஆச்சரியமே கொண்டான்.
‘அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் எவரும் செய்யும் மனிதாபமான உதவியிது!’ மனதுள் சொல்லிக் கொள்ளவும் செய்தான்.
இத்தாலியன் வகையிலான ரெஸ்டாரன்ட்; ஓரளவு பெரியது என்றுதான் சொல்லவேண்டும்; இவன் தாத்தாவினதுதான்; பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருப்பது; தாத்தாவோடு சேர்ந்து இவனும் தான் பார்த்துக் கொள்கிறான்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், அதனருகில் விலைக்கு வந்த கடையை வாங்கி, பார்மஸி வகையிலான பெரிய கடையாக்கியிருந்தான். இப்போதெல்லாம் வீட்டுப்பாவனைக்குத் தேவைப்படும் மற்றைய பொருட்களும் அங்கே கிடைக்கும் வகையில் செய்து கொண்டு வருகிறான்.
கடையும் எதிர்பார்த்ததையும் விட நல்ல வருமானம் ஈட்டித் தருகிறது. அதுவே, ஆறுமாதங்களுக்கு முதல், கடையோடு மேலேயிருந்த மாடிக்குடியிருப்பைச் சொந்தமாகவே வாங்க வைத்திருந்தது.
அதற்கு முன்னரே, கிழமையில் பாதி நாட்கள் தன் கடைக்குப் பின்னேயுள்ள சிறிய அறையில் தங்கிக்கொள்பவன், இப்போதோ, தன் வீட்டில் தான்.
இன்று இவன் பிறந்தநாள்; இருபத்தியொன்பதாவது பிறந்த தினம்.
“புயலாக்கிடக்கு…நீ நாளைக்கே வா! கொஞ்சத்தூரம் தானென்றாலும் ஏன் வீணா வெளிக்கிட்டுத் திரிவான்.” என்றுதான், இவன் தாத்தா, பாட்டி. முதலில் சொன்னார்கள்.
ஆனாலும், அவனை எதிர்பார்ப்பார்கள் என்பது இவனுக்குத் தெரியுமே!
கண்டதும் மலர்ந்து போவார்களே! அதையெல்லாம் எண்ணியே, “இல்ல பாட்டி, நான் கட்டாயம் வருவன்.” என்று சொல்லி, சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது புறப்பட்டிருந்தான்.
“சில மணித்தியாலங்களில திரும்பி வருவன்.” என்று கடையில் பொறுப்பாக இருப்பவனிடம் சொல்லிவிட்டு வந்தவன், இப்போதோ, பாதையில் அச்சில மணிநேரத்தைச் செல்விட்டிருந்தான்.
‘இவளை, இவள் வீட்டில் விட்டுட்டு, வீட்ட போகமுதல் கடைக்கு அழைத்து நான் வரக்கொஞ்சம் பிந்தும் எண்டு சொல்ல வேணும். இந்த மழையில ஆர் கடைக்கு வரப் போகீனம்? எண்டாலும் …’ என எண்ணிக் கொண்டே, “இந்த ரோட்டில் தானே உன்ர வீடு?” காரைத் திருப்பி, சற்றுப் போனதுமே, இரண்டாகப் பிரிந்த பாதையின் இடப்புறம் அவள் கை காட்டத் திருப்பியவன், “ஐயோ! இதென்ன?” என்ற அவளின் கூவலோடு, அவசரமாகத் தன் பார்வையையும் இணைத்துக் கொண்டான்.
பாதையோரமாக இருந்த பெரியமரமொன்று அருகிலிருந்த வீட்டின் மீது சரிந்திருந்தது.
“அதா நீ தங்கியிருக்கும் வீடு?”
அவள் பாவனையை வைத்துத்தான் கேட்டான்.
“ஓம் அதுதான்!” என்றபடி இறங்கி ஓடியவள், வாசலில் நின்ற வீட்டுக்காரப்பெண்மணியிடம் விரைந்தாள்.
இவனும் பின்னால் சென்றான்.
“மீரா பாத்தியா? உங்கட அறையில தான் விழுந்திருக்கு! காலேல நீ போகேக்க ‘வேணாம்’ எண்டு சொல்ல நினைச்சன். அது பார்த்தால்…நீ உன்ர அறையில இருந்திருக்க…சின்னதாக் காயப்பட்டிருந்தாலும் என்னால தாங்கிருக்க முடியாது.” என்று புலம்பிய அப்பெண்மணி, அவளின் கலைந்த கோலம் உறைக்க, பேச்சையும், தன் வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்ததையும் மறந்தே போனார்.
“உனக்கு…என்ன நடந்தது?” அதிர்வை உதறிவிட்டுப் பதறியவரிடம் சுருக்கமாக நடந்ததைச் சொன்னவள், தன் பின்னால் வந்து நின்றவனை அறிமுகமும் செய்து வைத்தாள்.
அறிமுகம் செய்யும் அளவிற்கு அவனைப் பற்றி என்ன தெரியும்? பெயரைச் சொல்லி, தனக்கு உதவியதையும் சொன்னாள்.
அவனை, மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தார், அப்பெண்மணி.
அதோடு, “ஹலோ” என்று அவன் கரம் நீட்ட, பற்றிக் குழுக்கியவர், “உள்ளுக்கு வா!” இருவரையும் அழைத்துச் சென்றார்.
“நீ போய் முதல் உடுப்பை மாற்று மீரா!” அவளிடம் சொல்லிவிட்டு “உங்கட அறை திருத்திற வரைக்கும் பாவிக்க முடியாது…” இழுத்தார்.
அந்த வீட்டில் இருப்பதே இரண்டு அறைகள் தானே?
அவரின் தயக்கம் புரிந்த மீராவின் முகத்தில் சிறு குழப்பம்.
‘இப்போதைக்கு வீட்ட போவதை நினைக்கவும் முடியாது. நாளைக்குப் போகும் வரை நான் எங்க தங்குவது?’ என்ற அவள் சிந்தனையைக் கலைத்தான் அவன்…ஜோரிக் !
“மீரா, உனக்கு ஆட்சேபனை இல்லையெண்டா என்னோட வா, வீட்டில தாத்தாவும் பாட்டியும் இருக்கீனம். இண்டைக்கு அவையளோட தங்கீட்டு நாளைக்கு உன்ர வீட்டுக்குப் போகலாம்.” என்றதும், இதைச் சற்றும் எதிர்பாராதவள் தடுமாற்றத்தோடு பார்த்தாள்.
அவன் சொன்னதைக் கேட்ட வீட்டுக்காரப்பெண்மணியோ, ‘அறியாதவேன்ட வீட்டில எப்பிடி நம்பித் தங்கிறது?’ மீராவிடம் விழிகளால் பேசினார்.
அதைக் கவனித்தானோ என்னவோ, எதுவோ சொல்லவர, அப்பெண்மணியே ஆரம்பித்தார்.
“உனக்கு இவன முதலே தெரியுமா மீரா?” என்றுவிட்டு, பதிலை எதிர்பார்க்காது, “நீ போய் உடுப்ப மாற்று! இங்க பக்கத்து வீட்டில கேட்டுப் பாக்கிறன். ஒரு இரவுக்குத்தானே?” முடிவாகச் சொன்னார்.
“மீராவுக்கு என்ர தாத்தாவ நல்லாவே தெரியும். அதனால, அறியாத தெரியாதவே எண்ட யோசனை தேவையில்ல. எது எண்டாலும் உன்னிஷ்டம்.” என்றான் அவன்.
“உன்ர தாத்தாவ எனக்குத் தெரியுமா?” நெற்றி சுருங்கக் கேட்டாள், மீரா!

