ரோசி கஜனின் மீரா 6 – 1

6

 

“காலேல இருந்து இவனுக்கு எத்தின தடவைகள் ஃபோன் பண்ணீட்டன்!”

யன்னலால் பாதையைப் பார்த்திருந்துவிட்டு, கணவர் அருகில் வந்தமர்ந்தார், ஹெலன்.

“இன்னும் ஏன் வந்து சேரேல்ல எண்டு கேட்டால், ஒவ்வொரு தடவைக்கும் ஓரொரு காரணம் சொல்லுறான்! இந்தா வந்து கொண்டிருக்கிறன் என்றுட்டு வச்சவன் இன்னும் வந்தபாடில்லை!

வாற வழில என்னவோ ஏதோ எண்டு பயப்பட வேண்டியிருக்கே! இதுக்குத்தான் நாளைக்கே வா எண்டு சொன்னன். கேட்டால்தானே!” தொடர்ந்து சலித்துக்கொண்டார்.

பேரன், வருகிறேன் என்று சொன்ன நேரத்தை விடவும் அதிகளவு தாமதமாகியதில் பதற்றம் கொண்டிருந்தார்கள் பீட்டர், ஹெலன் தம்பதியினர்.

அந்தளவுக்கு காலநிலை தலைவிரித்தாடுதே!

பீட்டரும் புயல் காரணமாக இன்று வீட்டை விட்டு வெளியேறவில்லை.

இவருக்கு அடுத்து உணவகத்தைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்பவர் அங்கே அருகிலேயே வசிப்பதால், இப்படியான நேரங்களில் வசதியாகப் போய்விடும். ஜோரிக் வேறு இருக்கிறானே!

இன்று பேரனின் பிறந்தநாள் வேறா? மூவருமாகச் சேர்ந்து மதிய உணவுண்ணலாம் என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்துவிட்டார்.

பேரனுக்கும் மனைவிக்கும் பிடித்தமான வகையில், தானே மதிய உணவையும் தயாரித்திருந்தார், என்பது வயதான பீட்டர்.

முணுமுணுப்போடு அமர்ந்திருக்கும் மனைவியைப் பார்க்கப் பாவமாக இருந்தது!

“சாப்பிடாம அவனுக்காகக் காத்திருப்பம் எண்டு அவனுக்குத் தெரியும் ஹெலன். அப்பிடி வரமுடியாது எண்டு நிச்சயமாகத் தெரிஞ்சா, இவ்வளவு நேரத்துக்குச் சொல்லியிருப்பான். கொஞ்சம் அமைதியா இரு! வந்திருவான்.” சமாதானப்படுத்தும் விதமாகச் சொன்னவர் கவனமோ, தொலைகாட்சியில் சென்ற செய்திகளில்!

“பாப்பமே!” என, நம்பிக்கையின்றிச் சொன்ன ஹெலனின் பார்வையும், சுழன்றடிக்கும் புயலின் சேதாரங்கள் பற்றிக் கூறிக்கொண்டிருந்த விசேச செய்திகளில் சென்றிருந்த நேரம், முன்வாயிலில் சாவி போடும் அரவம் கேட்டது.

“சொன்னனே! இந்தா வந்திட்டான்.” என்றார் பீட்டர், அருகிலிருந்த ஹெலனிடம்.

அவர்களை முந்திக்கொண்டு எழுந்தது சீசர்; ஜோரிக்கின் உயர்ரக அல்சேசியன் நாய்!

அதன் புலன்களும் அவன் வரவிற்காகக் காத்திருந்தன போலும்!

ஒருகணம், எஜமான் வரும் அரவத்தை முகர்ந்துவிட்ட மகிழ்வில், தன் நெடிய கால்களை ஒன்றாக வைத்து ஒரு தரம் நிலத்தில் முகம் பதித்துவிட்டு, தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றது.

மறுநொடி, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று, உள்ளே நுழைந்த இளம் பெண்ணைப் பார்த்ததும் ஏகத்துக்கும் ஏமாற்றம் கொண்டது. ஆனால் என்ன? சட்டென்று பிறேக்கிட முடியவில்லை. அதே வேகத்தில் அவளை நெருங்கியது.

‘திடீரென்று என்னைக் கண்டோன்ன பீட்டரும் ஹெலனும் ஆச்சரியப்பட்டுப் போவீனமே!’ என்ற நினைவோடு உள்ளே நுழைந்த மீரா, சத்தியமாக, இப்படியொரு கர்ண கடுர வரவேற்பை மட்டும் எதிர்பார்க்கவேயில்லை.

சிவந்த கண்களோடு நாக்கையும் தொங்கப் போட்டுக்கொண்டு பாய்ந்து வந்த சீசர், அவளின் அரண்ட பார்வையைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. காரணம், அது ஜோரிக்கின் வளர்ப்பு!

அதோடு, அவளின் பின்னால் தெரிந்த எஜமானனின் முகம் வேறு கவ்வியிருந்த தொய்வை விரட்டி விட்டதே!

சந்தோசத்தில் சத்தமாகக் குரைத்தபடி நெருங்க, சீசரோடு போட்டியிட்ட அலறல் சத்தத்தோடு கையிலிருந்த பைகளையும் கீழே விசிறிவிட்டு, ஒரே பாய்ச்சலாக ஜோரிக்கின் முதுகின் பின் தஞ்சம் அடைந்து விட்டாள் மீரா.

கண்ணிமைப்பொழுதில் இது நடந்திருந்தது.

எதிர்பாராது அவள் இப்படிச் செய்ததில் திடுக்கிட்டுப் போனான், ஜோரிக்.

சில கணங்களின் பின்னரே காரணத்தை உணர்ந்தவன், ஓடி வந்த சீசரை இரு கையாளும் அணைத்துப் பிடித்துக்கொண்டான்.

அது, அவன் முகத்தை முகர்ந்துவிட்டு அவன் தோள் வளைவால் எட்டிப் பார்த்தது.

அவன் முதுகின் பின்னால் நின்றபடி மெல்ல நிமிர்ந்த மீரா, “ஹேய்..” நாயைத் தள்ளுவதாக நினைத்துத் தள்ளினாலோ என்னவோ, ஜோரிக்கின் முதுகில் பிடித்துத் தள்ள, “ஏ…ய் மீரா!” தடுமாறியபடி முன்னால் போய் நின்றான், அவன்.

“அவன் ஒண்டும் செய்ய மாட்டான்; நீ கொஞ்ச நேரத்துக்கு டான்ஸ் ஆடாமப் பேசாம நில்லு!” இவளைக் கண்டிக்கவும் செய்தான்.

“டான்சா?” கொலைவெறியானவளுக்கு அதைக்காட்டத் தருணம் தான் வாய்க்கவில்லை. சீசர் அந்தளவுக்கு மிரட்டினான்.

“இல்ல…அதைப் பார்க்கவே பயமாக இருக்கு!” என்றபடி விருட்டென்று வெளியில் இறங்கி விட்டாள்.

கொட்டும் மழையைச் சற்றும் பொருட்படுத்தாது, அங்கிருந்தே சீசரை முறைத்தவளை, உள்ளடக்கிய நகைப்போடு பார்த்தான், அவன்.

“பச்! சொல்லுறனே…அவன் ஒண்டும் செய்யமாட்டான், உள்ளுக்கு வா!”

“மாட்டன். பீட்டர் ஹெலன் வீட்டில இல்லையா என்ன?” சந்தேகமாகத்தான் கேட்டாள்.

‘இருந்திருந்தா இவ்வளவு சத்தத்துக்கு வந்திருப்பார்களே!’ என எண்ணியவளுக்கு, சற்றும் எதிர்பாராது, இவளை ஜோரிக்கோடு கண்ட அதிர்வில் அவர்கள் அசையாதிருந்துவிட்டது தெரியாதே!

மீரா அப்படிக் கேட்டதும், அவன் முகத்தில் இலேசாக அரும்பியிருந்த நகைப்பும் வடிந்து போயிற்று!

அவளை முறைத்த வேகத்தில், “சீசர், நீ உள்ள போ!” குரல் உயரவில்லை என்றாலும் எஜமானின் கட்டளை இனிக்கவில்லை சீசருக்கு! அதோடு, அதட்டல் போட்ட கோபமோ என்னமோ அவன் கட்டளையை ஏற்கேன் என்றான், சீசர்.

அதற்கிடையில், வாயிலில் ஏற்பட்ட களேபரம் பார்த்துச் சுதாகரித்து விட்டனர் பீட்டர், ஹெலன் தம்பதியினர். நடந்ததைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தபடி முன்னேறியவர்களில், பீட்டர் சீசரைப் பிடித்துப் பக்கத்து அறையில் விட்டுப் பூட்ட, “மீரா! என்னடா இந்த நேரத்தில? முதல் உள்ளுக்கு வா! வா!” வியப்போடு நெருங்கிய ஹெலன், உள்ளே வந்தவளின் தோற்றத்தில், “என்ன நடந்தது உனக்கு?” அதிர்ந்து விட்டார்.

அதோடு, அவரின் பேரனை இவளுக்கு அறிமுகமில்லையே! என்னதான் தம்மோடும் நல்ல பழக்கமிருந்த போதும், இதுநாள் வரை வீட்டுக்கெல்லாம் வந்திராதவள், இன்று பேரனோடு வந்திருக்கிறாள் என்றால்?

‘இவனுக்கோ இந்தப் பிள்ளையை அவ்வளவாப் பிடிக்காது.’

கேள்விகளும் எண்ணங்களும் மனதில் திரள நின்றவரை ஓரெட்டில் நெருங்கி, கன்னத்தைப் பட்டும் படாமலும் அவர் கன்னத்தோடு உரசி எடுத்தவள், “நீங்க வா வா எண்டு சொல்லேக்க எல்லாம் இங்க வரக் கிடைக்கேல்ல ஹெலன்; இண்டைக்குப் பார்த்தீங்களா எதிர்பாராம வந்திருக்கிறன்.” என்று ஆரம்பித்து, நடந்ததைச் சுருக்கமாக விபரித்தாள்.

அவள் சொல்வதைக் கேட்டிருந்த பெரியவர்கள் அவளை அழைத்து வந்தவனை மறந்தே போனார்கள்.

சற்றுநேரம் நின்று பார்த்தவன், ‘வா வா எண்டு எத்தின ஃபோன்! அப்பிடியிருக்க, வந்தவனோடு ஒரு வார்த்தை? ஹ்ம்ம்…’ உதட்டைப் பிதுக்கியபபடி மெல்ல நகர்ந்து மாடியேறினான்.

அவன் சென்று சற்று நேரத்துக்குப் பின்னரே, “எங்க ஜோரிக்?” தேடினார் ஹெலன்.

“மீராவோட கதைச்சுக் கொண்டிருக்க மேல போய்ட்டான் போல! தண்ணிச் சத்தம் கேட்குது, குளிக்கிறானாக்கும்!” என்ற பீட்டர், “அவன் வரவிட்டு நீயும் குளிச்சு உடுப்பை மாற்று. உன்ர வீட்டுக்கும் எடுத்துச் சொல்லு!” என்றார், பாசத்தோடு!

“நான் இங்கதான் நிக்கப் போறன் எண்டு மாமாட மகனிட்ட மட்டும் தான் பீட்டர் சொல்லியிருக்கிறன். நடந்ததைக் கேட்டா அப்பாவும் மாமாவும் வர நிற்பீனம், அதனால தான்.” என்றவள், “நீங்க ஒருக்கா மாமாட மகனோட கதைக்கிறீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, ஆதவ்க்கு அழைத்தாள்.

ஜோரிக்கோடு தான் வந்ததை அவனிடம் மறைத்து, அந்த இடத்தில் பீட்டரை வைத்ததை ஏனோ சொல்ல முடியவில்லை.

எப்படிச் சொல்வது? ஏன் என்று கேட்கமாட்டாரா?

நொடியும் தாமதமின்றி இவளின் அழைப்பை ஏற்று விட்டான் ஆதவ். எப்போது அழைப்பாள் என்று பார்த்துக்கொண்டிருந்திருப்பான் போல!

“ஆதவ், இப்பத்தாண்டா வந்தம். பீற்றரிட்டக் குடுக்கிறன், கனக்க அலட்டாமல் (நிறையப் பேசாமல்) சும்மாக் கதைச்சிட்டு வை! நான் கொஞ்சத்தில உனக்கு எடுக்கிறன்.” கவனமாகத் தமிழில் சொல்லிவிட்டே, கைப்பேசியைப் பீட்டரிடம் கொடுத்தாள்.

அவனும் நலம் விசாரித்துவிட்டு, “உங்கட உதவிக்கு மிக்க நன்றி பீட்டர். மீரா நாளைக்கு இங்க வரும் வரைக்கும் உங்கட வீட்டில தங்கிறதில பிரச்சனை இல்லையே!” பெரியவனாகக் கேட்டான்.

“அப்படியெல்லாம் ஒண்டுமில்ல. எங்களுக்கு நல்ல சந்தோசம் தான்.” என்ற பீட்டர், அவனுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கையில் மெல்லக் கைப்பேசியை வாங்கி விட்டாள் இவள், ‘ஹப்பாடா! தப்பிச்சிட்டன்!’ என்ற ஆசுவாசமூச்சோடு!

அப்போது, “எப்பிடியும் இண்டைக்கு இங்கதானே இருக்கப் போறாள். பிறகென்ன? முதல் ஈர உடுப்ப மாற்றிட்டு வரட்டுமே! பிறகு ஆறுதலா இருந்து கதையுங்கோ!” என்றபடி இறங்கி வந்தான், ஜோரிக்.

நீராடிவிட்டு வருவதன் அடையாளமாகச் சுத்தமாக இருந்தான்.

சில கணங்கள் அவனைப் பார்த்திருந்தவள், காரணமின்றிப் பார்த்திருந்தது போலவே காரணமின்றியே பார்வையை விலக்கிவிட்டாள்.

“ம்ம்…நானும் முதல் வேலையாக் குளிக்க வேணும் ஹெலன்.” அவரிடம் திரும்பினாள்.

error: Alert: Content selection is disabled!!