ரோசி கஜனின் மீரா 6 – 3

அவளோ, அந்த இடம் விட்டு அசையாது நின்று அவனையே ஒரு பார்வை பார்த்ததையும் அவன் கண்டுகொள்ளவில்லை.

“பாருங்க ஹெலன், இப்ப உங்கட பேரனிட்ட ஏதாவது கடனா கேட்டன்? பிறந்தநாளுக்கு வாழ்த்தினன்; அதுக்கு, இப்படி லேசாச் சிரிச்சா என்னவாம்?” தன் உதட்டை ஒரு புறமாக இழுத்துக் காண்பித்தாள்.

அப்போதும், அவன் உணவுத் தெரிவில் கவனமாக இருக்கவே, அவனைச் சீண்டிப்பார்க்க விளைந்தது அவளுள்ளம்.

“இங்க வந்து உங்க ரெண்டு பேரையும் கண்ணால காணும் வரை எனக்குச் சந்தேகம் தான் ஹெலன்.” ஒரு மாதிரிக்குரலில் சொல்ல, உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தவன் பார்வை, சட்டென்று இவளில் மோதியது.

அதைக் கண்டும் காணாதவாறு தன்னிடத்தில் சென்றமர்ந்து கொண்டவள், ஹெலன், பீட்டர் இருவரையும் வாழ்த்தினாள்.

குடும்பத்தில் அங்கமானவனின் பிறந்தநாளென்றால் அங்கத்தினர் எல்லோருக்கும் தானே மகிழ்ச்சி! அதனால், வாழ்த்தும் எல்லோரையுமே சேரும் எனும் வழக்கமுள்ள நாடு இது.

அதன்படி, மீரா அன்போடு சொன்ன வாழ்த்தைப் பெற்றுகொண்டே, “சந்தேகமா? என்ன சந்தேகம்?ஆரில?” என்றார் ஹெலன்.

“வேற ஆரில? எல்லாம் இவனில தான்.”

அதைச் சொல்லும் போதே அவள் விழிகள் நகைத்தன.

‘அப்ப அவ்வளவு சொன்ன பிறகும் சந்தேகத்தோடதான் வந்தாளா?’ மனதில் முணுமுணுத்தபடி, அவன் வேறு கடுகடுவென்று இருந்தானா? இவள் நகைப்புக்குக் கேட்கவும் வேண்டுமா?

“தான் உங்கட பேரன் எண்டு எப்பிடி எப்பிடியோ எல்லாம் சொல்லிப் பார்த்தான் தான். ஆனாலும், பீட்டர், ஹெலன் எண்ட ரெண்டு இனிமையான மனிதர்களோடு இப்பிடி ஒரு வெடுசுடு மனிதனை இணைக்கவே முடியேல்ல. இதில என்ர தவறேதும் இல்லைத்தானே பீட்டர்?” என்றவள், அதோடு நிறுத்தவில்லை.

“சின்ன வயசில இருந்து இரும்புக்கடையில வேலை பார்த்தான் போல!” பாவனையோடு சொல்லி, பெரியவர்கள் இருவரையுமே நகைக்க வைத்தவளை, இறுக்கமாகவே பார்த்தான், ஜோரிக்.

“அது சரிதான். உன்னைப் போல பல்லைகாட்டிக் கொண்டு திரிய ஆராலும் முடியாதுதான். அப்ப நீ சின்ன வயசில இருந்து பைத்தியங்களோட இருந்தியோ!”

“ஹலோ வேணாம்!”

“நீ தானே தொடங்கின!” என்றவன், “நீ சொல்லுறதை எல்லாம் கேட்டுச் சிரிக்க நான் ஒண்டும் உன்ர ஃப்ரெண்ட்ஸோ, இவர்களோ இல்லை.”

“ஹலோ! அப்படியாகலாம் எண்டு கனவிலும் நினைக்க வேணாம். இப்பிடி இரும்புக்கம்பி விழுங்கிய கேஸுகளை எல்லாம் என்ர ஃப்ரெண்ட் லிஸ்டில சேர்க்க முடியாதப்பா!”

அவள் விடாது சொல்ல, பெரிதாக நகைத்த ஹெலனுக்குப் புரையும் ஏறி விட்டது.

பேரனோடும் ஒருத்தி மல்லுக்கு நிற்கிறாளே!

“நிறைய நாட்களுக்குப் பிறகு இப்பிடி மனம் விட்டுச் சிரிக்கிறன் மீரா! இல்லையா பீட்டர்?”

கணவர் தந்த கிளாசிலிருந்த நீரைச் சிறிது பருகிவிட்டுச் சொன்னார் ஹெலன்.

“உண்மைதான்; ஜோரிக்கிட பிறந்தநாள் இப்பிடிக் களை கட்டும் எண்டு நானும் எதிர்பார்க்கேல்ல!” மகிழ்வோடு சொன்னார், பீட்டர்.

இல்லாத காலரைத் தடவிப் பார்த்த மீராவோ, ‘எப்பிடி?’ என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி அவனிடமே கேட்டு வைத்தாள்.

அவன் முகத்தில் மட்டும் அந்த இறுக்கம் தளரவே இல்லை.

“இப்ப இதைப் பகிடி போலச் சொன்னாலும் உண்மையாகவே நீ நம்பேல்ல எண்டு சொல்லு! நான் உங்கட ஃபோட்டோ காட்டின பிறகுதானே காருக்குள்ள ஏறினாள். என்னவோ, இவளக் கடத்த நான் பிளான் பண்ணி அலையிறது போல ஒரு பில்ட் அப்!” சிடுசிடுத்தான்.

‘சின்னப்பகிடியையும் ரசிக்க முடியாதா இந்த ஆளால்!’

மனம் சொன்னாலும் அவனுக்கு, பதில் கொடுக்கத் தவறவில்லை, அவள்.

“ஹலோ! என்னைக் கடத்துறதா? அப்பிடியெல்லாம் ஒருத்தன் அலைய முடியுமா என்ன? பிறகு அவன்ட கதை கந்தல்! சும்மாப் பகிடியாகக் கதைக்கிறதால நீ இப்ப தப்பினாய்! என்ர மச்சான், தம்பி எல்லாரும் காராத்தே பிளக் பெல்ட்! நானுமே ஜூடோ, கராத்தே அப்பிடி இப்பிடி என்று எல்லாமே போயிருக்கிறன். கைவசம் எல்லாமே இருக்கு!” பொய்மிரட்டல் விட்டாள்.

“அது சரிதான். மொத்தக் குடும்பமுமே ரவுடிக் கூட்டம்!”

டோவரில் கண்ட இவளின் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவராக நினைவில் வர, சீண்டலாகச் சொன்னான், அவன்.

“வேணாம் ஜோரிக், தேவையில்லாம என்ர குடும்பம் பற்றிக் கதைக்க வேணாம். எனக்கு அது பிடிக்காது.” இவள் பட்டென்று சொல்ல, “ஹேய் மீரா! அவன் பகிடிக்கு!” ஊடே புகுந்தார், ஹெலன்.

“இவனை உனக்கு முதலே தெரியுமா?” கேட்டார் பீட்டர்.

“தெரியுமாவா?” கேட்டபடி, வாய்க்குள் அடைத்த பீட்ஸாவை மென்று விழுங்கிவிட்டு தொடர்ந்தாள்.

“ஹ்ம்…தெரியும் தெரியும். ஆனால், உங்கட பேரன் எண்டு இன்றைக்கு இங்க வரமுதல் தான் தெரியும்.” என்றவள், அன்று டோவரில் நடந்ததை இம்மி பிசகாது சொல்லி, “உங்கட பேரன் கதைத்தது நியாயமா சொல்லுங்கோ பார்ப்பம்!” நியாயம் கேட்டாள்.

கேட்டிருந்த ஹெலனும் பீட்டரும் கபகபவென்று நகைத்தார்கள்.

அன்று நடந்ததை அவள் விபரித்த விதத்தில் ஜோரிக்கின் உதடுகளில் கூட முறுவல். அதைப் பார்த்த இவள் தான் முழியை உருட்டினாள்.

“உனக்கு ஒண்டு தெரியுமா மீரா? நீ எப்பவும் ரெஸ்ட்டோரன்ட் வந்திட்டுக் கலகலத்திட்டுப் போனால் எங்களுக்கு மாறி மாறி அட்வைஸ்தான்.” என்று ஆரம்பித்த ஹெலன், “ஓமா!” (பாட்டி) என்ற பேரனின் இடையீட்டைக் கவனித்தார் இல்லை.

“ ‘ஸ்டுடென்ட்ஸுக்கு இப்படிக் கண்டபடி இடம் கொடுக்க வேணாம். வந்தால் வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டுட்டுப் போகாம அது என்ன சமையல் செய்யிற இடமெல்லாம் போய்த் தங்களுக்கு வேண்டிய மாதிரி செய்து சாப்பிடுறது?’ எண்டு கத்துவான் தெரியுமா?” என்றதும், அவனை முறைத்தாள், மீரா.

“இப்பத்தான் ஹெலன் எனக்கு எல்லாமே விளங்குது! முன்ன பின்னத் தெரியாதவனுக்கு எப்பிடி அப்பிடிக் கோபம் வரும் எண்டு அண்டைக்கே நினைச்சனான்.

அம்மாவும் மாமியும் இவனை முதலே தெரியுமா எண்டு வேற கேட்டீனம் தெரியுமா? அந்தளவுக்கு ஒரு கிலோ காஞ்ச மிளகாயை அரைச்சு ஒரேயடியாச் சாப்பிட்ட கணக்கா நின்றவன்.” என்றுவிட்டு, “என்ன காஞ்ச மிளாகாய்? அதுவும் ஒரு கிலோவா?” என்றவனிடம் திரும்பினாள்.

“அதுசரி, பீட்டரின் ரெஸ்ட்டோரண்டில நான் என்ன செய்தாலும் உனக்கு என்ன வந்திச்சு? இதுவரைக்கும் உன்ர கடையில ஒரு பெர்ப்பமின்ட் வாங்கச் சரி வந்திருக்கிறனா என்ன?” நேருக்கு நேராக, சண்டையிடும் பாவனையில் ஆரம்பித்தவளை, கையுயர்த்தித் தடுத்தான், அவன்.

“இந்த வாய் மட்டும் இல்லையோ…” என்று ஆரம்பித்தவன், ‘பிறகு இதுக்கும் டிசைன் டிசைனா சண்டை போடுவாளே!’ என எண்ணியவாறே, “கதைச்சது போதும். பார், சாப்பாடெல்லாம் ஆறுது, சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கதை!(பேசு)” என்றான் கிண்டலாக!

“ஆங்! அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். உன்னைப் போய் நல்லவர் எண்டு நினைச்சனே! அண்டைக்கு டோவரில வச்சு சரியான சுடுதண்ணிப் பார்ட்டி எண்டு நினைச்சுப் போட்டனே எண்டெல்லாம் கவலைப்பட்டன். ஆனால், நான் நினைச்சதில பிழையே இல்ல.”

சிடுசிடுப்பு இவள் வசமாகியிருந்தது.

அதோடு இந்தக் கடிபாட்டுக்கு முற்றுப்புள்ளி விழவில்லை; மாறி மாறி வாக்குவாதங்கள்; வாய்ச்சண்டை எனத் தொடர, இவர்களைப் பார்த்து பெரியவர்களின் நகைப்பும் சேர, அன்றைய தினம், அந்த உணவறை மட்டுமின்றி வீடே கலகலவென்றிருந்தது.

“நாளைக்குக் காலையில வெளிக்கிட்டு நில்லு; வீட்டில கொண்டுபோய் விடுறன்.” என்றுவிட்டு, “காற்றும் மழையுமாகக் கிடக்கு ஜோரிக்; இண்டைக்கு இங்கயே நில்லு!” என்ற பெரியவர்களிடம், “கடைகளை நானே நிண்டு மூடுறது போல வராது.” என்று சமாதானம் செய்துவிட்டு, அவன் விடைபெறும் வரை இது தொடர்ந்தது.

எப்போதுமே இறுக்கமாக இருக்கும் பேரன், மீராவோடு ஏட்டிக்குப் போட்டியாகக் கதைத்தாலும், இருவரின் உரையாடலிலும் பொதுவாக ஒரு சுவாரஸ்சியம் இருப்பதைப் பெரியவர்களால் நன்றாகவே அவதானிக்க முடிந்தது.

மீராவை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் அல்லவா? இப்போதோ, இருவரையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு கணமேனும் அவர்கள் உள்ளத்தில் ஆசை தோன்றத்தான் செய்தது.

‘மறுகணமோ, இதிலெல்லாம் நாம ஆசைப்பட்டுச் சரியா? அவனவன் விருப்பம் கொள்ள வேணும்!’ பெருமூச்சோடு எண்ணிக்கொண்டார்கள்.

 

error: Alert: Content selection is disabled!!