8
“இவ்வளவு நடந்தும் நம்மட்ட ஒரு வார்த்தை சொல்ல வேணும் எண்டு நினைக்கேல்ல. தானாக முடிவெடுத்து, ஆரோ ஒரு வீட்டில தங்கியிருந்திட்டு வந்திருக்கிறாள். நீங்க நல்லா செல்லம் கொஞ்சுங்க! எல்லாமே தான் நினைக்கிறபடிதானே நடக்கிறாள்! பிறகு, பெரியவே எண்டு நாம எதுக்காம்?” கணவனைக் கடிந்து கொண்ட நித்திக்கு, ஒருபோதுமின்றி ஆத்திரம்.
“எல்லாத்தையும் விடு மீரா, கார் போனதோட போகாது உனக்கு ஏதாவது நடந்திருந்தா?” தொடர்ந்தவருக்கு, பயத்தில் நெஞ்சு நடுங்கியது.
“ம்மா! அதுதான் ஒண்டும் நடக்கேல்லையே!”
“ஆங்! நடந்திருந்தா எண்டு அம்மா சொல்லுறதில என்ன பிழை? உனக்கு எப்பவும் நல்லதுக்குச் சொன்னால் விளங்காதே!”
கிடைத்த சந்தர்ப்பத்தில் விளையாடினான், சகோதரன் நிரூஜன்.
“டேய்! நீ வாயை மூடு சொல்லிப் போட்டன்! அப்பிடிப் பார்த்தா அந்த அறையில நான் இருந்து, மரம் விழுந்ததில ஏதாவது நடந்திருந்தா?” என்ற, மகள் சொல்வதும் சரியென்பதால், குறுக்கிட்டார் சதீஷ்.
“அதுதானே நித்தி? ரெண்டு யன்னல்களோடு சேர்ந்து அந்தப் பக்கச்சுவர் அப்பிடியே இடிஞ்சிருக்கு. அதேபக்கம் பிள்ளேட கட்டில் வேற இருந்திருக்கு. கொஞ்சம் யோசிச்சுப் பாரும். எல்லாம் நல்லதுக்குத்தான். இனி இந்தக் கதையை விடும்!”
“அது சரி, உங்களுக்கு உங்கட மகள் எது செய்தாலும் சரி.”
“அதேதான் மா!” என்று ஆரம்பித்த நிரூஜ், தகப்பனின் பார்வையில் அப்பால் நகர்ந்தவன், “ஒரு அவசரத்துக்கு தா எண்டால் என்ன கதையெல்லாம் வரும். இப்பக் காரே போச்சா?” நக்கல் அடித்தபடிதான் சென்றான்.
“என்ன நித்தி நீர்? கொஞ்சம் யோசிச்சுப் பாரும், மீரா மட்டும் நேற்று நடந்ததைச் சொல்லியிருக்க, அவ்வளவு புயலிலும் வெளிக்கிட்டுப் போயிருப்பம் தானே?”
மனைவியைச் சமாதானப்படுத்தி இந்த விசயத்திற்கு முற்றுப்புள்ளியிட முனைந்தார் சதீஷ்.
“அது வேற கதையப்பா!”
“இல்ல நித்தி. பிள்ளைக்குத்தான் ஒண்டுமில்லையே! பிறகு ஏன் நம்மைக் குழப்புவான் எண்டு இருந்திட்டாள்.”
“அதேதான்பா! அதோடு, உடனே ஆதவுக்கு ஃபோன் பண்ணி எல்லாமே சொல்லீட்டன்.” அவசரமாக இடையிட்டாள் மீரா.
“நான் இதுவரை வீட்டுக்குச் சொல்லாமல் எதையும் செய்ததில்லையேம்மா!” கண்கலங்கிவிட்டாள்.
“எனக்கு என்ன உன்ன இப்பிடி ஏச (திட்ட) வேணும் எண்டு ஆசையா?” மகளுக்கு அருகில் வந்தமர்ந்து அவளை அணைத்துக் கொண்டார், நித்தி.
“நடந்ததை நினைச்சாப் பதறுது மீரா. உனக்கு எங்க அது விளங்கப் போகுது? காரிட பின்பக்கம் அப்பிடியே நெளிஞ்சு போயிட்டாமே! அதே, கொஞ்சம் முன்னால விழுந்து உனக்கு ஏதாவது நடந்திருந்தா?”
வாகாக மடியில் சுருண்ட மகளின் தலையைக் கோதிய நித்தியின் விரல்கள் நடுங்கின; மனமும் தான்.
“அதோட, அவன்…அந்தக் கொதியன்…” என்று ஆரம்பித்த தாயை நிமிர்ந்து பார்த்த மீராவின் உதடுகளில் அழகிய முறுவல்! தாமதமின்றி விழிகளும் கைகோர்த்துக்கொண்டன!
“ம்ம்…கொஞ்சம் கொதியன் தான்மா! அதோடு நல்ல பெடி…(பையன்)” என்றவள், முகத்தில் இளமுறுவல்.
“முதல் முதல், அண்டைக்கு டோவரில் காணேக்க நல்ல சந்திப்பு இல்லை. அப்படியிருக்க, பதறிப்போய் ஓடி வந்து எல்லாமே செய்தான்.
உண்மையாவே நான் நல்லா அதிர்ந்து போய்த்தான் இருந்தனான். அந்த நேரம் அவன் வந்து முன்னின்று எல்லாம் செய்தது பெரிய உதவியா இருந்திச்சம்மா.
அந்தப் புயலிலும் மழையிலும் பேசாமலும் போயிருக்கலாம் தானே?
பீட்டர், ஹெலன் போல இல்லையெண்டாலும் கொஞ்சம் நல்லவன்தான்.” என, விடாது தொடர்ந்த மகளை அமைதியாகப் பார்த்தார், நித்தி.
“பார்ரா! பார்ரா! புயலொன்று வந்து போன வேகத்தில், சிடுமூஞ்சியனுக்கு ‘நல்லவன்’ பட்டம் வாங்கிக்கொடுத்த அதிசயம் தான் என்னவோ!”
அளவுக்கதிகமாக வியந்தபடி கடந்து சென்ற நிரூஜனை முறைத்தாள், அவன் தமக்கை.
“நீ என்ன சொன்னாலும் எனக்கு என்னவோ அவனைப் பார்த்ததுமே பிடிக்கேல்ல மீரா.” யோசனையோடு சொன்னார், நித்தி.
“அண்டைக்கு எப்பிடியெல்லாம் கதைச்சான். அதுவும் உப்புச் சப்பில்லாத விசயத்திற்கு! அண்ணாவும் இவரும் மன்னிப்பும் கேட்ட பிறகும்…பச்!” முகத்தைச் சுளித்தார்.
“உனக்கு அவசரத்தில் உதவினான் தான். அதோட சரி. இனிமேலும் வீணாகக் கதை வச்சுக் கொள்ள வேணாம்.” தொடர்ந்து, கண்டிப்போடு சொல்லவும் செய்தார்.
“ம்மா… என்ன நீங்க? ரெண்டு வருசமாப் பீட்டரைத் தெரியும். ரெஸ்ட்டோரண்டுக்கு போய் வாறன். இதுவரை அந்த மனுசனைக் கண்டதே இல்லை. அவன் எங்க இருக்கிறான் எண்டு தேடிப்பிடிச்சுக் கதைக்கிறதுதானே எனக்கு வேலை!” சற்றே அலுப்போடு சொன்னாள், மீரா.
“இல்லம்மா, ஏனோ சொல்ல வேணும் போல இருந்திச்சு, சொல்லிப்போட்டன்.” என்ற மனைவி, தொடர்ந்து அதையையே கதைக்க விடாது குறுக்கிட்டார், சதீஷ்.
“அவன் நல்லவனோ கெட்டவனோ எப்பிடியும் இருந்திட்டுப் போகட்டுமன், நமக்கென்ன வந்தது? விடுங்க!” அசட்டையாகச் சொல்ல, “அதுதானே!” என்றாள் மீரா.
ஆனாலும், அவள் மனம் சுணங்கிப் போனதே உண்மை.
‘பாவம்! அவன் அப்படியொண்டும் கெட்டவன் இல்லம்மா. கொஞ்சம் கரடுமுரடானவன் தான். ஆனாலும்…’ மீண்டும் வாதிட முனைந்த நாவை அடக்கிக்கொண்டாள்.
அவள் தாய் வீணாக யாரையும் பிழை சொல்லமாட்டார் என்பதுதான் அவளுக்குத் தெரியுமே!
‘ஜோரிக் அண்டைக்கு நடந்தவிதம் அப்பிடி. எனக்கே கோபம் வரரேல்லையா? இன்னும் கொஞ்சம் பழகினால் அவன் பற்றி அம்மாவும் தெரிஞ்சு கொள்ளுவார்.’ என்றெண்ணிய வேகத்தில் திடுக்கிட்டுப் போனாள்.
‘ ‘பழகாதே!’ எண்டு இப்பத்தானே சொன்னவர். நான் என்ன நினைக்கிறன்? எல்லாத்துக்கும் முதல், மரியாதைக்காகச் சரி உள்ளுக்கு வர மாட்டன் எண்டவன் அவன். சரி, ஃபோனைத் தரத் திரும்பி வந்தும் “ஏதாவது குடிக்கிறீங்களா?” எண்டோன்ன வேணாம் எண்டிட்டுப் போகேல்லையா? அவனாவது பழகிறதாவது!’
இந்த ரீதியில் சென்ற சிந்தனைக்குத் தடை போட்டது, அவள் தந்தை சதீஷின் பேச்சு.
“நடந்து முடிஞ்சதுகளைக் கதைச்சு ஒரு பயனுமில்ல நித்தி. இனி அந்தக் கதையே வேணாம்.” என்றவர், “நம்மட மகள்ட இக்கட்டான நிலையில உதவின பீட்டர், ஹெலனோடு ஃபோனில கதைக்கிறதை விட நேரில போய் நன்றி சொல்லீட்டு வருவமா?” வினவினார்.
“ம்ம்…அதுவும் சரிதான்…” மெல்ல இழுத்தார், நித்தி.
“ஓமப்பா, நாம நேரில போனா ஹெலன், பீட்டர் ரெண்டு பேருமே சந்தோசப்படுவீனம்.” மீராவும் சந்தோசமாக ஆமோதித்தாள்.
“இப்ப ஃபோனில கதைப்பம்; ரெண்டு நாளில வாறம் நிப்பீங்களா எண்டு கேட்டுட்டுப் போயிட்டு வருவம்.” எனக் கதைத்துக்கொண்டபடி, இருநாட்களின் பின், மதுரா கார்த்திகேயனும் கூட வர, பீட்டர் ஹெலனைச் சந்திக்கச் சென்றிருந்தனர்.
அவர்களிற்கோ, இவர்களைக் கண்டதும் அத்தனை சந்தோசம்.
இன்முகமாக வரவேற்றவர்களை சதீஷ், கார்த்திகேயன் தம்பதிகளுக்கு மிகவும் பிடித்துத்தான் போயிற்று!
மீரா அவ்வளவு சொன்ன போதும், அதுவும், ஜோரிக் என்பவனை முன்னரே அறிமுகமாகி இருந்ததில் இவர்களில் அவ்வளவு நல்லெண்ணம் வந்திருக்கவில்லை என்பதே உண்மை..
சென்றமர்ந்த சிலநிமிடங்களில், அந்த எண்ணத்தை அறவே போக்கிவிட்டார்கள், பீட்டர் தம்பதியினர்!
இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக கலகலவென்று அரட்டை அடித்துவிட்டே புறப்பட்டிருந்தார்கள்.
“மகள்கள் ரெண்டுபேருக்கும் கலியாணம் வச்சிருக்கிறம். இங்க அம்ஸ்டர்டாமில் தான், நீங்களும் கட்டாயம் வர வேணும்!” என்று கார்த்திகேயன் சொல்ல, மதுரா வழங்கிய அழைப்பிதழை ஆர்வமாகப் பெற்றுக் கொண்டார்கள்,பீட்டர் தம்பிதியினர்.
“நிச்சயம் வாறம்!” என்றும் சொல்லியிருந்தார்கள்.
இவர்களைச் சந்திக்கப் புறப்படுகையில் ஆரணி, ஆரபி தான் “அவர்களையும் கலியாணத்துக்கு அழைப்பமே!” என்றிருந்தார்கள். அந்தளவுக்கு, அவர்கள் பற்றி வளவளத்திருந்தாள், மீரா.
“அதுவும் சரிதான், ஒரு கார்ட்டில பெயரை எழுதித்தாம்மா!” என்று கார்த்திகேயன் சொல்ல, ஆரபி தான் எழுதிக் கொடுத்திருந்தாள். அந்நேரம் மீராவும் அருகில் தான் இருந்தாள்.
பீட்டர், ஹெலன் என்று எழுதியவள், சற்று நிதானித்துவிட்டு, “அந்தச் சுடுதண்ணிக்குப் பெயர் ஜோரிக் தானே?” என்று கேட்டபடி எழுதி, மீராவிடம் நுள்ளும் கிள்ளும் வாங்கியிருந்தாள்.
“இதென்னடி அநியாயமாக் கிடக்கு! அந்தப் பட்டப் பெயரெல்லாம் நீதானேடி எங்களுக்குச் சொல்லித் தந்தனீ. இப்ப என்னவோ நாங்களாச் சொல்லுறது போலவும், உனக்கு அதில விருப்பம் இல்லை போலவும், எல்லாத்தையும் விட, அந்தாள் ஏதோ கோபப்படவே தெரியாத பச்சக்குழந்த போலவும்…நாங்க பொய் சொல்லறது போலவும்…என்னடி மீரா?”
நீளமாகக் கேலி செய்த ஆரபியைத் தொடர விடாது இடையிட்டாள், மீரா.
“ஏய்…பொறு பொறு! அப்பிடியெல்லாம் நான் சொல்லேல்லயே! சரி, அவன் கோபக்காரன் எண்டே வச்சுக் கொண்டாலும், நல்லவனா இருக்க முடியாதா? கோபம் ஆருக்குத்தான் வரேல்ல. நம்மட நிரூஜ் எவ்வளவு கோபப்படுறான்.” படபடத்தாள் மீரா.
பகிடியாகச் சொன்னதற்குத் தீவிரமாக வாதாடத் துணிந்தவளை ஒரு மாதிரிப் பார்த்தாள், ஆரபி.
“இங்க பாரடி மச்சாள், அவன் நல்லவனாக, வல்லவனாக, கோபக்காரனாக, ஆராகவும் எப்படியும் இருந்திட்டுப் போகட்டும். உனக்கு இன்னும் ஒரு வருசம் இருக்கு. ஒழுங்காப் படிச்சு முடிச்சிட்டு வா!”
ஆரணி பட்டென்று இப்படிச் சொன்னதும், சற்றே, தடுமாறிச் சமாளித்துவிட்டு நகரந்தாள், மீரா.
அதோடு, தேவையில்லாது அவன் பற்றிக் கதைப்பதில்லை என்றும் தீர்மானித்துக் கொண்டாள்.
அதன்பின், பீட்டர் வீடு செல்கையிலோ குட்டியே குட்டி நப்பாசை!
‘அவனும் இருப்பானோ! நாங்க வருவதுதான் ரெண்டு நாட்களுக்கு முதலே தெரியுமே! பீட்டர், ஹெலன் சொல்லாமலா இருந்திருப்பினம்.’ என்றெல்லாம் எண்ணியது இவளுள்ளம்.

