அங்கு சென்று, அவர்களோடு கலகலத்துவிட்டு விடைபெறுகையில் மனதுள் ஒரு வகை வெறுமையுணர்வு தோன்றிற்று!
இதுவரை உணராத வகையில், அறிமுகமற்ற அவ்வுணர்வை, அத்தனை இலகுவில் இரசிக்க முடியாது தடுமாறியது, அவ்விள நெஞ்சம்!
அடுத்து வந்த நாட்களோ, மனதில் தேவையில்லாத உணர்வுகளுக்கு இடம் கொடுக்க நேரமின்றிப் போனது.
இவள் பெரியம்மா குடும்பம் வந்திருந்தார்கள். அவர்கள், அவுஸ்ரேலியாவில் இருந்து எப்போது வந்தாலும் கார்த்திகேயன் வீட்டில் தான் தங்குவார்கள். இந்தமுறை, அது பெண் வீடாச்சே! இவர்கள் வீட்டில் தான் தங்கினார்கள்.
ஆரம்பத்தில், மதுராவைத் தன் தம்பி கார்த்திகேயனுக்கு மணமுடிப்பதில் எதிர்ப்புத் தெரிவித்த இவள் பெரியம்மா, இப்போதெல்லாம், தம்பியைவிடத் தம்பி மனைவி மதுராவோடுதான் நெருக்கம் அதிகம். அதுவே, அவர்களின் மூத்த மகள் ஆரணியை மகன் விரும்புகிறான் என்றதும் சம்மதம் தெரிவிக்க வைத்திருந்தது.
அவர்களோடு, மதுராவின் உற்ற தோழி உஷா குடும்பமும் வந்திருந்தார்கள்.
மதுரா கார்த்திகேயன் இணைந்ததில் முக்கிய பங்கு யாருக்கென்றால் அது உஷாவிற்குத்தானே!
அன்று, கார்த்திகேயன் மனதார விரும்புகிறேன் என்றதை மதுராவால் ஏற்க முடியவில்லை. குழந்தைகள் மீதான, அவனது மாசற்ற பாசத்தையும் கருத்தில் கொள்ள விரும்பவில்லை.
அவனது நேசத்தையும் பாசத்தையும் மறுத்து, யாருக்கும் சொல்லாது குழந்தைகளோடு தனியாகச் சென்று உஷாவின் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாள்.
அந்நேரம், மிகத் தற்செயலாகத்தான் மதுராவைக் கண்டுகொண்டாள் உஷா. அதன்பின், மதுரா பற்றிய முழுவிபரமும் அறிந்துகொண்டவள், இரட்டையரோடு தனிமையாக இருந்த தோழியை அப்படியே விட்டுவிடவில்லை.
அங்கிருந்து வந்து இருவரையும் சந்திக்க வைத்து, அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டே ஊருக்குத் திரும்பியிருந்தாள்.
அதன்பின், தோழியுடனான உறவு மிக நெருக்கமாகத் தொடர்ந்து, இதோ இரண்டாவது மகள் ஆரபியை மருமகளாக்குவதில் வந்து நிற்கிறது.
உஷா குடும்பம் தம் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாலும் அடிக்கடி பெண் வீட்டுக்கு வரப்போக என்று இருந்தார்கள்.
வீட்டில், இத்தனை கலகலப்பும் கல்யாணக் களையும் வந்திருந்தாலும் ஒரு கிழமை லீவு முடிய, பல்கலையும் தொடங்கியிருக்க, இளையவர்கள் மூவருமே முணுமுணுப்போடுத்தான் சென்று வந்தார்கள்.
அதுவும் மீரா, “கலியாணம் முடியும் வரைக்கும் என்னால ரூமில இருக்க முடியாது!” என்று முடிவாகச் சொல்லிவிட்டு, வீட்டிலிருந்தே போய் வந்தாள். இப்போ, ஆரபியின் கார் வேறு இவள் வசமாகியிருந்தது.
அப்படித்தான், அன்று பல்கலை வந்திருந்தவளிற்கு பகல் பொழுதிற்கு மேல் விரிவுரைகள் இல்லை என்றானது.
சந்தோசமாக வீடு செல்லப்புறப்பட்டவள், முதலில் சென்று நின்ற இடம் பீட்டரின் ரெஸ்ட்டோரண்ட்.
ரெஸ்ட்டோரண்டுக்கு எதிர்ப்புறத்தில் காரை நிறுத்திவிட்டு சட்டென்று இறங்காது அமர்ந்திருந்தவளுள் சற்றே தயக்கமும் தான்.
அங்கிருந்தே ஜோரிக்கின் கடையைப் பார்த்திருந்தாள்.
அன்று, பீட்டர் வீடு சென்று வந்த பின்னர் ஒரு தரம் தொலைபேசியில் கதைத்திருந்தாள்.
“கல்யாணத்துக்குக் கட்டாயம் வரவேணும்.” அழைப்பைத் துண்டிக்க முதல் நினைவூட்ட, “கட்டாயம் வருவம் மீரா.” என்றிருந்தார் ஹெலன்.
“ஜோரிக்கிட்டையும் சொன்னீங்க தானே ஹெலன்?” இவள் கேட்க,
“ம்ம்…அன்றைக்கே சொன்னம் அவன் வரமாட்டான்மா, எங்களப் போய்ட்டு வரச் சொன்னான்.” என்றிருந்தார் அவர்.
அந்தப் பதில், அவளே எதிர்பாராத அளவில் ஏமாற்றத்தைத் தந்தது இவளுக்கு!
‘மினக்கட்டு(மெனக்கெட்டு) வீடுவரை போய் கார்ட் கொடுத்தமா இல்லையா? பிறகெப்படி வரமாட்டன் எண்டு சொல்ல ஏலும்? அந்தளவுக்கு அவன் என்ன பெரிய கொம்பனோ!’ மனதுள் எழுந்த எரிச்சல், அவனிடம் நேரேயே கேட்டுவிட வேண்டும் என்று முடிவெடுக்க வைத்தது.
மீண்டும் ஹெலனுக்கே அழைத்தாள்.
“உங்கட பேரன்ட ஃபோன் நம்பர் தாங்க ஹெலன்!”
“ஜோரிக் நம்பரா மீரா?”
“எனக்குத் தெரிஞ்ச உங்கட பேரன் அவன் மட்டும் தானே?”
“ஹா..ஹா..என்ன கேட்கிற தொனியே சரியில்ல. என்ர பேரனோட அன்பாக் கதைக்க நம்பர் கேள், தாறன், சண்டை போட எண்டால் வேணாம் குழந்தாய்!”
“அய்யே! அவனோட சண்ட போடுறதுதானே என்ர வேலை.”
ச்சே! ச்சே! எங்கட ஹனி மீரா அப்படியில்ல எண்டு எங்களுக்குத் தெரியாதா! எண்டாலும், ம்ம்…பொறு தாறன்.” என்றுவிட்டே தந்திருந்தார் அவர்.
கைபேசி இலக்கம், கடை இலக்கம் இரண்டையுமே கொடுத்துவிட்டு, “கலியாணத்துக்கு வரச் சொல்லப் போறியா?” எனக் கேட்டவர் குரலில் சிறு ஆர்வம் வந்திருந்தது.
“ஏன்? சும்மா ஹாய் சொல்லக் கூடாதா ஹெலன்?”
“சொல்லலாம், தாராளமாகச் சொல்லலாம். நான் சும்மாதான் கேட்டன்.” என்று விட்டு வைத்த ஹெலன் முகத்தில், மிருதுவான முறுவலொன்று!
அன்று, மழையில் தெப்பலாக நனைந்தபடி, தம் வீட்டு வாயிலில் வந்து நின்ற மீராவின் முகம் அவருள் வந்து போனது.
அதுவும் தம் பேரன் முதுகின் பின்னால் நின்றபடி எட்டிப் பார்த்தாளே!
அந்தக் காட்சியில் இருவருள்ளும் ஏதோ ஒரு அந்நியோன்யம் தெரிந்ததை இவர் மனம் உணர்ந்தது.
சீசருக்குப் பயந்துபோய் அவன் பின்னால் ஒன்றியவள், அவன் போட்டிருந்த டி சர்ட்டை இறுகப்பற்றி நின்றாள் போலும்; அது, அவன் கழுத்துவரை எழுந்து நெரிக்க, சீசருக்கும் மீராவுக்கும் இடையில் நின்ற பேரன் அன்று அதிக கம்பீரமும் அழகுமாகத் தெரிந்தானே!
அப்போதே இவருள் ஒருவித ஆர்வம் எழுந்ததுதான். அதுவே, பின்னர் மீராவை வரவேற்று அவளுக்கு நடந்ததைக் கேட்டு என்று எங்கோ போய்விட்டது. அந்த உணர்வும் ஆர்வமும் இப்போது மீண்டும் வந்திருந்தது.
‘பெண்துணையின்றி என்னால வாழ்ந்திர முடியும்.’ அசட்டையாகச் சொல்வான், ஜோரிக்.
சவாலுக்கு அது இலகுபோலத் தெரிந்தாலும், “அது என்ன வாழ்வு? இயற்கைக்கு விரோதமான நடவடிக்கையல்லவா? பெண்துணை தேவையில்லை என்றவனா ‘லின்’ உடன் சேர்ந்து வாழ்ந்த? அதுவும் ஆறு வருடங்கள். அதற்கு முதலிருந்தே அவளோட நட்போட இருந்தியே!” இவரும் இலேசில் விடாது கேட்டு விடுவார்.
அவன் அதையெல்லாம் இலகுவாகவே சமாளித்து விடுவான்.
“இப்பவும் ‘லின்’னோடு எனக்கு ஒரு விரோதமும் இல்ல பாட்டி. என்னைப்பற்றி நல்லாத் தெரிஞ்சவள், அவளும் விரும்பினாள். சேர்ந்து வாழ்ந்தம். பிறகு, கலியாணம் குழந்தை எண்டா…என்ர மனம் தெரிஞ்சே கேட்டாள். அது சரிவராது என்றதும் பிரிஞ்சு போய்ட்டாள்.” இலகுவாகச் சொல்வானே!
“அப்ப, ஆண்டாண்டுக்கு இப்பிடியே இருந்திருவியா?
“ஹா..ஹா…என்னைப் போலவே கலியாணம் குழந்தை எண்ட எந்தக் கட்டுப்பாடுமில்லாது, வாழ்க்கையை வெகு இலகுவாக எடுத்துக்கொள்ளும் ஒருத்தியைச் சந்திச்சாச் சேர்ந்து வாழுவன். இல்லையெண்டாலும் பரவாயில்லை. இப்போதும் நான் சந்தோசமாகத்தான் இருக்கிறன். சொல்லப் போனால் கேர்ள் ஃப்ரெண்ட் எண்ட ஒருத்தி இருக்கிறதே எனக்கு இடைஞ்சல். என்ர நேரம் முழுதும் தொழிலுக்கு!”
அதே அசட்டையான பதிலோடு நகர்ந்து விடுவான்.
இவர்களின் வீட்டுக்கு வந்தால் ஹெலனும் பீட்டரும் ஏதோ ஒருவகையில் அவன் வாழ்வின் அடுத்த கட்டம் பற்றிப் பேசி விடுவார்கள். அதனாலேயே வருகையையும் குறைத்துக் கொண்டான்.
இப்படி அவன் ஒற்றையாக வாழ்க்கையை ஓட்டுவதைப் பார்த்து இவர்கள் தான் கவலை கொள்வார்கள். அந்தத் தனிமையை, தான் விரும்புவதாக அவன் சொல்வதையும் மனதார ஏற்க முடியவில்லை.
இதோ, அப்படிச் சொல்லிச் சொல்லியே முப்பது வயதாகப் போகுதே!
மீரா, அவளின் குடும்பப்பின்னணி எல்லாம் பார்த்த ஹெலனுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லையென்றாலும், அவள் ரெஸ்ட்டோரண்ட் வந்து போகையில், தேவையே இல்லாது கோபப்படும் பேரன், ஏதோ ஒருவிதத்தில் அவளால் பாதிக்கப்படாது அப்படி நடக்க முடியாதே என்று நினைத்திருந்தார் தான்.
அதுவே, அன்று அவளை அழைத்து வந்து பார்த்து பார்த்துக் கவனித்துக் கொண்ட போது, பீட்டர் ஹெலன் இருவருக்குமே ஆச்சரியம் தான்.
அவளுக்கு என்னென்ன தேவையென்று ஓடியோடிக் கவனித்துக் கொண்டானே!
சிலவேளை தாம் ஆசைப்படுவது எட்ட முடியாததாகவும் இருக்கலாம். அவனில் மீராவுக்கும் ஏதோ ஒரு இளக்கம் இருப்பது போலவேதான் இவர்கள் பார்வைக்குத் தெரிகிறது.
இப்போதைக்கு, “ம்ம… நடப்பதைப் பார்ப்பம்!” என்று செல்வதை விட்டு வேறென்ன செய்ய முடியும்?
அன்று அப்படி, ஹெலனிடம் தொலைபேசி இலக்கம் வாங்கிய வேகத்தில் அவனுக்கு அழைத்திருந்தாள், மீரா.
உடனே எடுத்தவன், “ஓ நீயா? எப்பிடி இருக்கிற?” பொதுவாகச் சில வினாடிகள் கதைத்தவன், “நான் கொஞ்சம் பிஸியா நிக்கிறன் மீரா, பிறகு கதைப்பமா?” என்று, இவள் பதிலுக்கும் காத்திராது வைத்துவிட்டான்.
அவன் செய்கையில் முகத்தில் அறைவாங்கிய வலி இவளுள்!
“திமிர் பிடிச்ச சுடுதண்ணி!” திட்டித் தீர்த்தாள்.
அப்போதும், “இனிமேல் உனக்கு எடுத்தன் எண்டால் என்ர பேர் மீரா இல்லடா!” என்று சொல்லிச் செல்லும் தன்னியல்பைத் தொலைத்து, மீண்டும் மீண்டும் நான்கு முறைகள் எடுத்தும் அவன் தான் அழைப்பை ஏற்கவில்லை.
“ரெண்டு நிமிசம், என்ன சொல்லுறன் எண்டு கேட்க நேரமில்லாத நீ உழைப்பாளி. நான், சும்மா ஊர் சுத்தித் திரியிற வேலை வெட்டி இல்லாதவளா?”
மனத்தின் கொதிப்பை எல்லாம் ஒன்றாக்கிக் குறுஞ்செய்தியாகவும் அனுப்பிப் பார்த்தாள்.
அதற்கும் பதிலில்லை.
அதன் பிறகு, ‘அவனோட கதை எதுக்கு? மரியாதை தெரியாத முசுடு!’ என்றெண்ணி, தொடர்பு கொள்ளும் ஆவலைச் சிலநாட்களாக வலுக்கட்டாயமாக அடக்கியிருந்தாள்.
அப்படியிருந்தும், இன்று, இதோ நேரிலேயே வந்துவிட்டாள்.
“ம்ம்…இப்பிடி இருந்தால் சரிவராது.” தனக்குத்தானே சொல்லிக்கொண்டு காரை விட்டிறங்கியவள், அவனுக்கென்று தனியாக எழுதிய கல்யாண அழைப்பிதழ் கைப்பைக்குள் உள்ளதா என்று மீண்டும் ஒருதடவை பார்த்துவிட்டு, பீட்டரின் ரெஸ்ட்டோரண்டைக் கடந்து அவன் கடைக்குள் புகுந்தாள்.

