அத்தியாயம் 24 – 2

“நான் இங்க இருக்கு மட்டுக்கும்.” சத்தமாகச் சொல்லிவிட்டாள். பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள், லாதி.

“இனி அழவே கூடாது, அம்மா கவலைப்படுவா சரியோ!” தாரக மந்திரம் போலாயிற்று அச்சொற்கள். கண்களைத் துடைத்துவிட்டாள். 

“அப்பா வந்திருவார் எல்லா?” லாதி விலக, இருவரும் ஃபோட்டோவைப் பார்த்தார்கள்.

நடுவில் பெரிதாக குடும்பப் படம்; இடக்கை, மனைவியைத் தன்னோடு அணைத்து அவள் தோள் சுற்றி வளைத்திருக்க, வலக்கையால் மகளைத் தம்மோடு சேர்த்துப் பிடித்திருந்தான், பூபாலன். லாதியின் இருகைகளும் தாயின் மடியைத் தனகாக்கி நல்ல உறக்கத்திலிருந்த  குழந்தை ஆதித்தில்.  குழந்தையின் முப்பத்தியோராம் நாள் எடுத்த புகைப்படம். 

சுற்றிலும் சிறிதும் பெரிதும் இதய வடிவிலும் ஓவல் வடிவிலும் அவர்கள் திருமணம் தொடங்கி, லாதியின் பிறப்பு, பிறந்தநாட்கள், சந்தோசமாக வெளியே சுற்றிய பயணத் தருணங்கள் என்று ஒவ்வொன்றும் பத்து வருட ஆனந்தத்தைப் பளிச்சிட்டுக் காட்டி நின்றது.

கருமை நிழல் உருவிலான ஒரு இதயவடிவ புகைப்படத்தில், குழந்தையை லாதியின் கையில் காயு கொடுப்பது போலவும் லாதியின் தலையில் கை வைத்தபடி பூபாலன் நிழல் உருவமும் பட்டென்று கண்ணைக் கவர்ந்திழுந்திட்டு. அதைப் பார்க்கையில் கயல் நெஞ்சுக்குள் வலி எழுந்திட்டு. 

சற்று முன்னர்தான் சமாதானம் ஆகியிருந்த லாதியின் விழிகள் சொல் கேளாது சொரிய ஆரம்பித்திருந்தன.

“அம்மா! மிஸ் யூ சோ மச் அம்மா! வை டிட் யூ லீவ் அஸ்? தட்ஸ் இஸ் அன்ஃபெயர் நோ!” விம்மலோடு பிதற்றினாள்.

“செல்லம்!”

ஒன்று இரண்டு என்று அவளால் ‘செல்லம்’ மட்டுமே சொல்ல முடிந்தது. லாதி நிமிரவில்லை. இக்கணத்தைத் தான் பூபாலன் தவிர்த்தானோ?

“பிள்ளேட அம்மா எப்பவும் இந்த வீட்டில இருப்பா. அதுக்கு இதான் அடையாளம். இங்க பாருங்கவன் தம்பியாவ, பிள்ளதான் பாத்துக்கொள்ள வேணும் எண்டு சொல்லி பிள்ளேட்ட தாறா!” சிறுமியைத் தேற்றிட எதை எதையோ சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்தவளால் தன் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. 

ஒருவாறு சமாளித்து, “அப்பா வந்தா ரூமில கொழுவ ஏலாது. நாம நாளைக்குப் பாப்பமா?”  என்று சொல்லவும் தான், “நோ… இப்பவே.” எழுந்தாள் லாதி.

அடுத்த பத்தாவது நிமிடத்தில், பூபாலன், காயு அறையில் கட்டிலின் பின்னால் சுவரில் நடுநாயகமாக இருந்த திருமணப்படத்தின் இடத்தை ஆக்கிரமித்திருந்தது அப்படம். 

தாய் தகப்பனின் திருமணப்படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட லாதியின் விம்மல் அழுகையாக வெடித்தது. மெல்ல நகர்ந்து அங்கிருந்த மேசையில் அப்படத்தைச் சாய்த்து வைத்தவள் அழுகையின் சுதியைக் கூட்ட, “வேலைக்கு நேரம் போகுதம்மா!” வெளியே அழைத்து வந்து விட்டாள், கயல்விழி.

மாடியிலிருந்து இறங்கிய  இருவரையும் பார்த்த சரசு வெகுவாகவே முகம் சுளித்தார்.

 

“இதுக்குத்தான் படிச்சுப் படிச்சு சொன்னன், நீர் காதிலும் வாங்கேல்ல. ஆறா இரணம் அவேக்கு. அதில இருந்து கொஞ்சம் சரி மீள இடம் குடுக்க வேணும். அதுக்க அதை எடுத்து மாட்டவா வேணும் சொல்லும்? தங்கட வீட்டில எத எப்ப எப்பிடிச் செய்யோணும் எண்டு வீட்டுக்காரனுக்குத் தெரியாதா? அது அத உடையவே பாப்பினம், நீர் உம்மட வேலையப் பாக்கலாம்.” படபடவென்று சொன்னவர், முகம் சுருங்க நின்றுவிட்ட கயல்விழியை நேராகவே பார்த்தார். 

“என்னடா இப்பிடிச் சொல்லுறா எண்டு நினையாதேயும், இப்ப அதை எடுக்காட்டி இந்தப் பிள்ள இப்பிடி முகம் வீங்க அழுமா என்ன?” கோபத்தோடு சொல்ல, ஒரே வளியில் முகத்தைத் துடைத்துவிட்டு,  கயல் கரத்தை இறுகப் பற்றியபடி அவரைப் பயத்தோடு பார்த்தாள், லாதி.

கயல்விழியால் ஒற்றை வார்த்தை உதிர்க்க முடியவில்லை. ‘உடையவே பாப்பினம் நீர் ஆர்?’ என்ற வகையில் இருந்த சரசுவின் நேரடிப் பேச்சு அவளை வாயடைக்க வைத்திருந்தது. இப்படி எத்தனையோ தடவைகள் கதைத்திருக்கிறார் தான். என்றாலும் அந்த ‘உடையவே’ என்ற சொல்லு அவளை இந்த வீட்டுக்கு மிக மிக அன்னியமாக உணர வைக்கிறதே! அவளால் அதைக் கொஞ்சமும்  ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த வீட்டில் தானும் ஒருத்தி என்று மனதுள் எண்ணாதா இப்படியெல்லாம் செய்கிறாள். 

பட்டென்று தன்னறைக்குள் செல்ல முயன்றவள் நின்றாள். சரசுவின் மடியில் பால் குடிச்சபடி  நித்திரையாகி இருந்தான், ஆதித். 

“லாதி நீங்க கொஞ்ச நேரம் படம் கீறுங்கோ, பிறகு வாசிக்கலாம்.” சொல்லிக்கொண்டே வந்து, குழந்தையைத் தூக்க முயன்றவளைத் தீர்க்கமாகப் பார்த்தார், சரசு.

“நான் இங்க வந்து தங்கினதே என்னால இயன்ற மட்டும் காயு குடும்பத்துக்கு உதவி செய்யத்தான் எண்டு நானும் எத்தனையோ தரங்கள் சொல்லிட்டன். விடும் நானே படுக்க வைக்கிறன். நீர் உம்மட அலுவலப் பாரும்.” வெடுக்கென்று சொல்லவும் செய்தார்.

“சொறி! நான்..நான் இனிக் கவனமா நடக்கிறன். இப்ப இவனைத் தாங்கோ. நான் இருக்கிற அறைக்க தானே கிடத்திறது.”

 

“சொறி எல்லாம் எனக்குச் சொல்லத் தேவையில்ல பிள்ள. எனக்கு என்ன உம்ம ஏச வேணும் எண்டு ஆசையா சொல்லும்? உமக்குத் தேவையில்லாத சோலி ஏன் எண்டு சொன்னன். அவையள் தங்கட விசயங்களப் பார்த்துக்கொள்ளுவினம். பாக்க வேணும். நீர் நாளைக்கு உம்மட பாட்டில போயிருவீர். அவே அந்தரித்து நிக்கிறதே? அதைவிட, இப்பவே நாங்க தாயில்லாத பிள்ளைகள் எண்டு உணர்ந்து வாழப் பழகட்டுமன்.” குழந்தையைக் கொடுத்தார்.

‘இங்க பாருங்க என்னை எவ்வளவும் சொல்லுங்க. பிள்ளைகளப் பார்த்து இப்பிடியெல்லாம் கதைக்க வேணாம் சரியோ.’ மனதில் எழுந்த சீறலுக்கு நாக்கு வளையவில்லை. 

கண்ணீர் திரளத்தான் குழந்தையை வாங்கிக் கொண்டு நகர்ந்தாள். அவனைக் கிடத்திவிட்டு, லாதி பார்க்கா வண்ணம் கண்களைத் துடைத்தபடி கனணியை இயக்கினாள், கயல்விழி. அதே அறையில் இருந்த குட்டி மேசையில் வரைய அமர்ந்த லாதியின் பார்வை கயலில். ‘சரசுப் பாட்டி பொல்லாதவா!  அதும் ஸ்வீட்டிய அவாக்குப் பிடிக்கேல்ல. எனக்கு அவாவப் பிடிக்கேல்ல!’ மனதுள் முணுமுணுத்தாள். 

 

error: Alert: Content selection is disabled!!