Skip to content
‘அப்பாட்டச் சொல்லி அவாவ அவேட வீட்டவே போகச் சொல்ல வேணும்.” என்றது வரை வந்துவிட்டாள், அவள்.
கொஞ்ச நேரம் தான் சென்றிருக்கும் பூபாலன் வரும் அரவம் கேட்டது.
கயல் பார்வை லாதியிடம் திரும்பியது. கீறுவதில் லயித்திருந்த சிறுமியும் நிமிர்ந்தாள். பார்வை இவளிடம் தான் பாய்ந்திட்டு.
‘லாதி எழுந்தோடி தகப்பனைக் கட்டிப் பிடித்து அழுது குளறிவிட்டால்?’ அக்கணம் பயந்தாள், கயல். அதுவும் ‘உடையவே பார்ப்பீனம்’ என்று அவள் இடத்தை சரசு நன்கு உணர்த்திய பின்னர் மனதுள் பிசைந்தது.
“சாப்பிட்டிங்களா சித்தி? குட்டியன் தூக்கமா? பிள்ளைகள் சாப்பிட்டினமா? குளிச்சிட்டு வாறன்.” கேள்விகளுக்குப் பதில்களைப் பெற்ற கையோடு மாடியேறினான், பூபாலன்.
கைபேசியில் நோட்டிஃபிகேசன் விழ, அதைப் பார்த்துக் கொண்டே அறைக் கதவைத் திறந்து நிமிர்ந்தவன் இதயம் துடிப்பை மறந்திட்டு.
விழிகள் புகைப்படத்தில் குத்திட்டு நிற்க, சிலையானான், அவன். எவ்வளவு நேரம் நின்றிருப்பானோ! உடலை அசைக்க நினைத்தான். புகைப்படம் நோக்கிப் பாய்ந்து அப்படியே…
மனைவியே அங்கு நிற்பது போலிருந்தது அவனுக்கு.
“ஏண்டி இவ்வளவும் போதும் எண்டு நினைச்சுப் போயிட்டியா?” கத்துவதாக நினைத்தான். வார்த்தைகள் குளறலாக விழுந்தன. கண்ணீர் இன்னும் வற்றிடவில்லை என்றுணர்த்தியது. தொய்ந்த உடலைப் பெரும் பாடுபட்டு அசைத்து இழுத்து கட்டில் கால்மாட்டில் சென்று நின்றவனால் அதற்கு மேலும் நகர முடியவில்லை. பார்வை மட்டும் வசந்தமான வாழ்க்கையைக் காட்டி நிற்கும் இடத்தில்.
அச்சட்டம் தன்னுள் அடக்கியிருந்த அவர்கள் வாழ்வின் மகிழ்வான நாட்களில் அரக்கப் பறக்க அலைந்து திரிந்தது, மனம். தொலைந்தே போய்விட்ட தன்னுயிர் திரும்ப வராதா என்ற முட்டாள்த்தனமான பேராசை பேரலையாக உள்ளத்தை ஆட்கொண்டிட்டு.
கைகழுவி வந்திருந்தாலும் வெளியில் சென்று வந்ததும் உடுப்பை அப்படியே தோய்க்கப் போட்டு முழுக்குப் போட்ட பின்னரே எதிலும் கை வைப்பவன், இன்றோ, கட்டிலைப் பற்றியபடி அமர்ந்துவிட்டான்.
செக்கன்கள் நிமிடங்களாகி மணியையும் உரசிக் கடந்திருக்கும். விழிகள் குத்திட்டிருக்க அப்படியே தொய்ந்து கிடந்தானவன்.
அப்படியே இருந்தவனுக்கு, “மணி மூண்டு ஆகப்போகுது, சாப்பிடேல்லையா தம்பி?” கீழேயிருந்து வந்துரசிய சரசுவின் குரல் தான் சுற்றத்தை உறைக்க வைத்தது.
சூறைக்காற்றில் சிக்கிக்கொண்ட ஒற்றை இறகாய், இலக்கின்றி அடிபட்டுச் சென்ற சிந்தனையும் துவண்ட உடலுமாய் மெல்ல எழுந்து குளியலறைக்குள் புகுந்தானவன்.
உச்சியில் கொட்டிய சுடு நீர் அவன் புலன்களை விழிக்கச் செய்து இருப்பை ஏற்றுக்கொள்ளேன் என்று அதட்டல் போட்டது. அப்படியே நின்றவனை, “அப்பா…அப்பா” லாதியின் குரலே வெளியில் வர வைத்திருந்தது.
“என்ன குஞ்சு, கண் எல்லாம் வீங்கி… அழுதீங்களோ?” ஈரத் தலையில் துவாயை வைத்தபடி வெளியில் வந்தவன் அதை விட்டுவிட்டு, மகளைத் தூக்கினான்.
தகப்பனைக் இறுகக் கட்டிப் பிடித்து அவன் நெஞ்சில் அழுந்த முகத்தைப் பதித்தவள் புரண்ட அழுகையைக் கட்டுப்படுத்தினாள். ‘இண்டைக்கு ஸ்வீட்டிய அப்பா வெளில அனுப்பப் போறார்’ உள்ளம் பயங்கரமான பயப்பிடியிலிருக்க வந்தவளாச்சே!
“நான்…நானும் தான் சேர்ந்து கொழுவினனான் அப்பா. ஸ்வீட்டிய ஏசாதீங்க ப்ளீஸ் அப்பா!” தழுதழுத்துச் சொல்ல விளங்காது முழித்தான், பூபாலன்.
“போஸ்ட் வந்து கனநாள் எல்லா? அதான் எப்பிடி இருக்கு எண்டு எடுத்துப் பார்த்திட்டுக் கொழுவினம். அம்மா தான் இதில கொழுவ வேணும் எண்டு ஸ்வீட்டிட்ட சொன்னவாவாம்.” அவள் தொடரவும் தான் விசயமே விளங்கிற்று.
“ஸ்வீட்டி பாவம் அப்பா, சரசுப் பாட்டி வேற நல்லா பேசிப் போட்டா(திட்டிவிட்டார்). ஸ்வீட்டி அழுதவா அப்பா. நீங்களும் ஏசாதீங்கப்பா!” அவன் கன்னமிரண்டையும் குட்டிக் கைகளால் பற்றியபடி கெஞ்சினாள்.
“சரி சரி பெரிய மனிசி!” அடைத்த குரலைச் செருமியபடி சொன்ன பூபாலன், மகள் தலையோடு செல்லமாக முட்டினான்.
“சித்தி ஏன் ஏசினவா?”
“கிஃப்ட் உடைச்சு இங்க கொழுவினதுக்குத்தான்.” கண்கள் குளமாகச் சொல்ல, மகளைத் தூக்கிக்கொண்டே இறங்கினான், பூபாலன்.
“எல்லாத்துக்கும் எந்த நேரமும் பேசுறா. எனக்குப் பிடிகேல்ல அவாவ.”
“உங்களையா பேசினவா? அப்பா என்ன எண்டு கேக்கிறன்.”
“அச்சோ! என்ன இல்லப்பா ஸ்வீட்டிய. ஷி ஹேட்ஸ் ஸ்வீட்டி!” ஆணித்தரமாகச் சொன்ன மகளை உண்மையில் அதிர்வோடுதான் பார்த்தான் பூபாலன். சரசு அப்படிப்பட்டவர் இல்லையே!
அன்று, குழந்தை நெற்றி வீங்க நின்றதைப் பார்த்துக் கோபப்பட்டான், அதுவும் கயலிடம். தாமதிக்காது, “நான் குளிக்க வைக்கேக்க தவறி வழுக்கிட்டான், தம்பி. அப்பவும் கயல் குளிக்கவாட்டிப் போட்டுத் தாறன் எண்டுதான் சொன்னா.” என்று, அவளை விட்டுக் கொடுக்காமல் தானே கதைத்தார். குழப்பமாக இருந்தது அவனுக்கு.
‘அதுதான் கயல் இப்ப எல்லாம் முகம் சுருங்க நடமாடுறாவோ?’ யோசனையோட இறங்கினான்.
பூபாலன் முகம் இருந்த விதமே சரசுவுக்கு என்ன நடந்திருக்கும் என்று உணர்த்திட்டு. அவருக்குமே கண்கள் கலங்கிற்று. ‘என்ன செய்ய ஏலும்? ஏற்கத்தானே வேணும்?’
“எத்தின மணியாச்சு, சாப்பிடுங்க தம்பி.” எழுந்தார்.
“நீங்க இருங்கோ சித்தி. நான் எடுத்துச் சாப்பிடுவன்.” என்று விட்டு கயல் அறையில் மெல்லத் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.
“ஏசப்போறார் போலக் கிடக்கு. இந்தப் பிள்ள சொன்னது கேளாமல் ஆடினா வாங்கட்டும்.” சரசு முணுமுணுத்தது பூபாலன் காதில் விழவே செய்தது.
உள்ளேயோ, பூபாலனைக் கண்டதும் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு விருட்டென்று எழுந்து கொண்டாள், கயல்.
“சொ…றி உண்மையாவே சொறி!” தாமதியாது சொன்னவள் கண்களின் கலக்கத்தை மறைக்க முயன்றாள். முடியவில்லை.
“இனி ஒருநாளும் தேவையில்லாமல் இந்த வீட்டில ஒண்ணும் செய்ய மாட்டன்.” தொடர்ந்து அவள் சொன்ன விதத்தில் சரசு என்னவோ நன்றாகவே சொல்லி இருப்பது புரிந்தது, அவனுக்கு.
“சித்தி ஏசினாவாம், லாதி சொன்னா. நீங்களும் ஏசிப் போடாதீங்க எண்ட வெருட்டல் வேற ஆளிட்ட இருந்து வந்திச்சு!”
மகள் கன்னத்தில் கொஞ்சியபடி சொல்ல லாதிக்கு அவ்வளவு சந்தோசம். பின்ன? ஸ்வீட்டி தன்னால் தானே தகப்பனின் ஏச்சில் இருந்து தப்பி விட்டாள்!
“சித்தி சொன்னது எது எண்டாலும் பெரிசா எடுக்காதேயும். அவா மனசில அன்பு இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டா.” ஆதரவாக அவன் சொன்னதில் கயல் விழிகளால் பட்டென்று விழுந்து தெறித்தன, நீர் மணிகள்.
“ அழுகிறீரா என்ன? அப்பிடி என்ன சொன்னவோ?”
“இல்ல இல்ல ஒண்ணும் இல்ல.” கண்களைத் துடைத்துக் கொண்டவள், “லாதி கீறிட்டா புத்தகம் எடுத்து வாசியுங்கோ, பிறகு ஸ்வீட்டிக்கு அந்தக் கதையச் சொல்ல வேணும்.” என்றுகொண்டே மீண்டும் கணனியில் அமர்ந்து கொண்டாள்.
“ஒகே.” தாமதியாது இறங்கிச் சென்றாள், லாதி.
“சாப்பிட்டீட்டிரா?” வெளியேறியவன், மீண்டும் வந்து வினவினான்.
“இல்ல, எனக்கு இப்பப் பசிக்கேல்ல. இது இப்பவே செய்து குடுக்க வேணும். முடிச்சிட்டுச் சாப்பிடுறன். நீங்க?”
“இனித்தான். அதெப்பிடி பசிக்காமல் இருக்கும்?” வெளியேறியவன், அடுத்த ஐந்தாவது நிமிடம் அவள் முன்னால் சாப்பாட்டுத் தட்டை வைத்தான்.
“என்ன பாக்கிறீர்? சாப்பிட்டுச் சாப்பிட்டுச் செய்யும்.” நகர்ந்தவன், லாதிக்கு நறுக்கிய பழக்கங்கள் அடங்கிய கிண்ணத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான்.
அன்று வெள்ளிக்கிழமை. சரசு தான் சமைத்திருந்தார். மரக்கறிகள் சோறு, பப்படம் அதோடு கரண்டியும் வைத்திருந்தான்.
“ஏதாவது வேணும் எண்டா வந்து எடும் என்ன?” கிளாஸ் நிறைய தண்ணீரை வைத்து விட்டுச் செல்ல, “ஐயோ என்ன நீங்க… நான் பிறகு சாப்பிடுவன் நீங்க சாப்பிடுங்க.” என்றவளுக்கு, முறைப்பையே பதிலாகக் கொடுத்துச் சென்றானவன்.
இதையெல்லாம் பார்த்தும் பாராத பாவனையில் இருந்தார், சரசு.
error: Alert: Content selection is disabled!!