காதல் காயங்களே 13 – 1

அத்தியாயம் 13

 

 

“அம்மா.!”

 

திடுக்கிட்டுப்போய் எழுந்து அமர்ந்தாள் மயூரி. உறங்கி எழுந்த கோலத்தில் நின்ற ஆதிராவைக் கண்டதும்தான் நிஜம் உறைத்தது! இவளுக்காகத்தானே சற்றுமுன்னர் வந்தவன் நிறையக் கேள்விகளைக் கேட்டுவிட்டுப் போனான். மெல்ல உயர்ந்த அவளின் கரங்கள் மகளைத் தனக்குள் கொண்டுவந்தது.

 

“என்னம்மா?ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்க?” தாயின் முகத்தில் தெரிந்த கலக்கத்தைக் கவனித்துவிட்டுக் கேட்டாள் ஆதிரா.

 

“ஒண்டும் இல்லையே.. அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல செல்லம்!” அதைச் சொல்லி முடிக்கும்போதே தன்னைச் சமாளித்துக்கொண்டிருந்தாள் மயூரி.

 

நிகழ்காலம் உறைக்க முகம் திருப்பி நேரம் பார்த்தாள். காலை ஆறுமணியைத் தாண்டி இருந்தது. ‘கடவுளே.. பிள்ளையை பள்ளிக்கூடம் அனுப்பவேணும். இதில இன்னும் சமைக்க இல்ல, நான் ரெடி ஆகேல்ல. ஒன்றுமே செய்ய இல்ல.’

 

தன்மீதே கோபம் வந்தது. ‘தேவையில்லாத நினைவுகளில் காலத்தைக் கழித்து என்ன காணப்போகிறாள்? அவனோடு சேர்த்து அனைத்தையும் தூக்கிப் போடவேண்டாமா?’

 

ஆனால், அவனோடான எந்த நினைவுகளையும் இலகுவில் மறக்கிறபடிக்கு அவன் உருவாக்கவே இல்லை. தன் மனத்தைச் சொன்ன நாள்கூட அவளே நினைத்தால் கூட மறக்கமுடியாத நிகழ்வுதான்.

 

“அம்மா தாயே! கனவு கண்டது காணும்! தேத்தண்ணியை பல்லுல காட்டுங்க!” உறக்கம் கலைந்துவிட்டதன் அடையாளமாக குரல் தெளிவாக வர, தாயின் மடியிலேயே வாகாக அமர்ந்துகொண்டு சொன்னாள் ஆதிரா.

 

மயூரிக்குச் சிரிப்பு வந்தது. அப்பட்டமான கிழட்டுக் கதை. எல்லாம் இந்த டிக்டாக் செய்ய வெளிக்கிட்ட பிறகு பழகிய பழக்கம். சும்மாவே அவளுக்கு வடிவேலுவின் காமெடிகள் மிகவுமே பிடித்தம். டிக்டாக் ஆரம்பித்த பிறகு அதை அப்படியே மூளைக்குள் ஏற்றி தானும் என்னவோ பெரிய மனுசி மாதிரி அப்படியே கதைப்பாள். இதில் அவளுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் வேறு!

 

இன்று, நேரம் ஆயிற்று என்று அரக்கப்பரக்க எழுந்துகொள்ள மனமின்றி மகளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள் மயூரி.

 

உடனேயே ஆதிராவும் அவளை அணைத்து முத்தமிட்டாள். இது அவர்களின் உலகத்தின் சொல்லப்படாத விதிமுறை. ஒருவர் தந்தால் மற்றவரும் கொடுக்க வேண்டும். அதே இடத்தில். சின்னச் சிரிப்போடு மகளின் மற்றக் கன்னத்துக்கும் கொடுக்க அவளும் தந்தாள். அப்படியே நெற்றி மூக்கு என்று நகர்ந்தவர்களின் முத்த யுத்தம் சிரிப்பில் வந்து முடிய, “இண்டைக்கு பள்ளிக்கூடம் இல்லையா?” என்றாள் காதோரமாக ஆதிரா குறும்புடன்.

 

பொய்யாக முறைத்தாள் மயூரி. பள்ளிக்கு கள்ளமடிப்பதற்கு அவளைக் கேட்டுத்தான். “அடி கழுதை! ஓடு.. ஓடிப்போய் முகத்தை கழுவிக்கொண்டு வா!” அவளை பாத்ரூமுக்குத் துரத்திவிட்டுவிட்டு எழுந்தவளின் நேரம் மின்னலாக மறைந்தே போயிற்று!

 

“இந்தா ஆது தேத்தண்ணி. கெதியா குடி. நேரமாகுது!” ஒரு பானையும் டோஸ்ட் செய்து ஆதிராவுக்குப் பிடித்த விதமாக நுட்டெல்லா பூசிவைத்தாள்.

 

“இண்டைக்கு அம்மா சமைக்கேல்ல செல்லம். பின்னேரம் ‘சப் வே’ க்கு போவமா?”

 

“அப்ப எனக்கு ஒரு கிட்ஸ் பக் வேணும்.”

 

“சரி. இப்ப வந்து சாப்பிடு. ஓடிவா!” தான் கொண்டுபோகவேண்டியவற்றை எடுத்து வைத்தபடி சொன்னாள் மயூரி.

 

எப்போதுமே விரித்துவிடுகிறவள் இன்று தோள்களைத் தொட்டுநின்ற முடியினைத் தூக்கி உச்சியில் ஒரு போனிடெல் போன்று போட்டுக்கொண்டு மெல்லியதாக லிப் க்லோஸ் தீட்டிக்கொண்டாள்.

 

வெள்ளை யுனிபார்மில் வந்த ஆதிரா அமர்ந்துகொள்ள இரட்டை பின்னல் மயூரி போட, அவள் பாணுடன் தேநீரை அருந்தினாள்.

 

மயூரி பின்னலைப் பின்னி முடித்த கணம், படக்கென்று திரும்பி, “என்னடா சொன்னேன் உங்கிட்ட? என்னா சொன்னேன்? எவ்வளவு செலவானாலும் பரவால்ல, மனுசன் குடிக்கிறமாதிரி டீ போட்டு குடுடான்னா மாடு குடிக்கிற களனித்தண்ணி மாதிரி டீ போட்டு குடுத்திருக்கிற. ஆ? நாய் குடிக்குமாடா இந்த டீய? டேய்! கம்மாகரைல பன்னி திரியுதே அந்த பன்னி நக்குமாடா இந்த டீய!” என்று வடிவேலைப்போலவே பேசிக்காட்டி தேநீர் கோப்பையை மயூரியின் முகத்தில் வீசினாள் ஆதிரா.

 

“ஆது…! என்ன செய்றாய்!” பதறியடித்துக்கொண்டு விலகினாள் மயூரி.

 

ஆனால், கோப்பை ஆதிராவின் கையிலேயே தங்கிவிட அதற்குள்ளிருந்த கடைசித் துளி மட்டுமே மயூரியின் முகத்தில் பட்டுத் தெறித்தது. ஆதிராவோ தாய் துள்ளி விலகி ஓடிய விதத்தைக் கண்டு விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியிருந்தாள்.

 

மயூரிக்கு நடந்ததை ஊகித்து விளங்கிக்கொள்ளவே சற்றுநேரம் பிடித்தது. கண்ராவி டிக்டாக்! ஒருகணம் பதற வைத்துவிட்டாளே!

 

“மாட்டுப்பெட்ட! உன்ன.. நானே நேரம் போயிட்டு எண்டு அவதி அவதியா வெளிக்கிடுறன். இந்த நேரம் பாத்து விளையாட்டு உனக்கு!” கடுப்புடன் துரத்தியவளின் கையில் அகப்படாமல் சுற்றிச் சுற்றி ஓடிய ஆதிராவை ஒருவழியாக எட்டிப்பிடித்து கிச்சுக் கிச்சு மூட்டினாள் மயூரி.

 

உருண்டு பிரண்டு சிரித்தபடி தாயிடமிருந்து விடுபட முயன்று தோற்று,

“ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்..

அம்மாவை வாங்க முடியுமா..

நீயும் அம்மாவை வாங்க முடியுமா?” என்று பாடிக்கொண்டு அன்னையைக் கொஞ்சினாள் பெண்.

 

நெஞ்சம் கனிய கண்கள் கலங்கிப் போயிற்று மயூரிக்கு. அவளின் வேதனைகளைத் துடைக்க என்றே வந்த கடவுளின் கொடைதான் ஆதிரா. அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டு, “உண்மையாவா?” என்றாள் வேடிக்கைபோல.

 

காயப்பட்டுக் கிடந்த உள்ளமோ என்ன சொல்லுவாள் என்று தீவிரமாக எதிர்பார்த்தது. “உண்மை இல்லையா? நீங்க நல்ல அம்மா இல்லை எண்டு உங்களுக்கே தெரிஞ்சு போய்ட்டா?” என்று தலையைச் சரித்துப் பதில் கேள்வி கேட்டாள் அவள்.

 

“போடி போக்கிரி!” சிரிப்பும் செல்லமுமாக அவள் தலையில் குட்டிவிட்டு, நேரமாயிற்று என்றதும் இருவரின் பேக்குகளையும் அள்ளிக்கொண்டு காருக்கு ஓடினார்கள் இருவரும்.

 

“இண்டைக்கு பின்னேரம் டென்னிஸ் ட்ரெயினிங் இருக்கு ஆதிரா.” நினைவு படுத்தியபடி அவளைப் பள்ளிக்கூடத்தில் இறக்கிவிட்டுவிட்டு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தபோது பழைய மயூரி திரும்பியிருந்தாள்.

 

ஆனாலும், காலையில் மனது கெட்டுப்போனதில் ஒரு சோர்வு. எப்போதடா வேலை முடியும், வீட்டில் போய் அடையலாம் என்று இருந்தது. ஆதிரா பக்கத்தில் இருந்தாலே போதும். தன்னோடு சேர்த்து இவளையும் உற்சாகப் பந்தாக மாற்றிவிடுவாள்.

 

மயூரியின் வீட்டிலிருந்து புறப்பட்ட பிரதீபன் காரை வீதியோரமாக நிறுத்திவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டான். அடுத்து என்ன? எதுவுமே புலப்பட மறுத்தது.

 

மயூரி… எப்படி இருந்தவள். அவன் பார்த்துப் பார்த்து ரசித்த பட்டாம் பூச்சி! இன்று, தன் சிறகுகளைத் தொலைத்துவிட்டு நிற்கிறாள். “ஐம் ரியலி சாரி மய்யு…” அவன் உதடுகள் வேதனையோடு முணுமுணுத்தது!

 

‘என்னைப்போல ஒருத்தியோட எந்த நல்ல ஆம்பிளை வாழுவான்?’ அவள் கேட்ட கேள்வியே அவனைச் சித்ரவதை செய்தது. அவளைப்பற்றி அவளே கீழாக நினைக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டானே!

 

‘உன்னைப்போல ஒருத்தியோட வாழ எனக்கு குடுத்துவைக்கேல்ல மய்யு..’ நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து யாரோ அழுத்துவதுபோல் வலித்தது.

 

அவன் இதயத்தை தொட்ட முதல் பெண்! தன் கைகளுக்குள் வைத்து பூஜித்த காதல் தேவதை. இன்றைக்குத் தன் சந்தோசங்களைத் தொலைத்துவிட்டு நிற்கிறாள்!

 

‘மய்யு…’ அவன் மனம் அரற்றியது!

 

கடவுளே…

 

“நான் செய்தது பிழை எண்டால் நீ செய்ததும் பிழைதான் மய்யு, இண்டைக்கு நம்ம வாழ்க்கையும் தலைகீழா மாறிப்போனது இல்லாம அந்தக் குழந்தையும் இப்படி நிக்கிறாளே!”

 

இனி என்ன செய்வது? அவளோடு எப்படிக் கதைப்பது? எதற்கும் சந்தர்ப்பம் தர மறுக்கிறாளே. இன்னும் எந்த முறையில் அவளை அணுகுவது என்றும் தெரியவில்லை.

 

error: Alert: Content selection is disabled!!