அவளின் அவமதிப்பில் உண்டான கோபத்தில் இனி அவளைப் பார்க்கவே கூடாது என்று எண்ணிக்கொண்டுதான் அவளின் வீட்டிலிருந்து வெளியேறினான். ஆனால், அவனுடைய அந்தக் கோபம் அவள் வீட்டிலிருந்து கார் வரைக்குமான தூரத்துக்குத்தான் நிலைத்திருந்தது. இதோ இந்தக் கணம் மீண்டும் அவளை எண்ணித் துடித்துக்கொண்டிருந்தான்.
அப்போது மெசேஜ் வந்ததாக சத்தமெழுப்பியது ஃபோன். எடுத்துப் பார்க்க, அவனுடைய தமக்கை பிருந்தா ஒரு ஃபோட்டோ அனுப்பியிருந்தாள். சேலையணிந்திருந்த ஒரு பெண் சின்னச் சிரிப்புடன் நின்றிருந்தாள்.
அந்தப் பெண்ணை எந்தக் கண் கொண்டு பார்ப்பான்? எதிர்காலத் துணை என்று எண்ணியா? அவன் இதயத்தில் இடம்பிடிக்கப் போகிறவள் என்றா? இல்லை அழகா இருக்கிறாளா என்றா? எந்தக் கோணத்திலும் இன்னோர் பெண்ணை ரசிக்க முடியாத நிலையில் அல்லவா அவனையும் நிறுத்தியிருக்கிறாள் மயூரி.
கையாலாகாத சினத்துடன் ஃபோனைத் தூக்கிப்போட்ட கணத்தில் அது அலறியது. இவன் ஆன்லைனுக்கு வந்துவிட்டுப் போனதைப் பார்த்ததும் அழைத்திருந்தாள் பிருந்தா.
“ஃபோட்டோ பிடிச்சிருக்காடா?”
“இந்த வேலை எல்லாம் என்னட்ட கொண்டுவராதீங்க எண்டு உங்க மூண்டுபேருக்கும் ஏற்கனவே சொல்லிப்போட்டன். பிறகும் எடுத்துவச்சு கரைச்சல்(தொந்தரவு) தந்தா என்ன சொல்ல நான்?” என்று சினந்தான் அவன்.
“உன்ன கேக்காம என்னெண்டு நாங்க முடிவெடுக்கிறது? நாளைக்கு நீ பிடிக்கேல்ல எண்டு சொன்னா?”
“நான் சொல்லமாட்டன்! நீயே பார். இப்ப வை!” என்றவன் வைத்தும் விட்டிருந்தான்.
இருக்கிற பிரச்சனைக்குள் இவர்கள் ஒரு பக்கம் என்று சினம் பொங்கிற்று! வேலைக்கும் நேரமாக, அப்படியே புறப்பட்டான்.
அன்றைய மயூரியின் மனநிலையை நன்றாக இருக்க விடுவதே இல்லை என்று எல்லோருமாகச் சேர்ந்து கங்கணம் கட்டியிருக்க வேண்டும். அவளின் அலைபேசி வைப்ரேட்டியது. யார் என்று பார்த்தால், அவுஸ்திரேலியா இலக்கம்.
“இவர் எதுக்கு இப்ப எடுக்கிறார்..” வாய்விட்டே முனகினாள் மயூரி. அவளின் இறந்தகாலத்தைச் சேர்ந்த யாருமே நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் போலும். அழைத்து ஓயும்வரை பார்த்துக்கொண்டே இருந்தாளே ஒழிய அழைப்பை ஏற்கவில்லை.
அதுதான் எல்லாம் முடிஞ்சு பேச்சே. கதைச்சு பேசி முடிச்சபிறகு திரும்ப என்ன?
அவளுக்கு மெல்லிய சினம் பற்றிக்கொண்டது. இப்போது மீண்டும் அழைப்பு வர, அந்தச் சினத்துடனேயே ஏற்று, “ஹலோ!” என்றாள், இறுக்கமான குரலில்.
மறுபுறத்தில் சின்ன அமைதி.
“சுகமா இருக்கிறியா மயூரி?”
“இல்லை எண்டு சொன்னா என்ன செய்யப் போறீங்க அர்ஜுன்?”
“நான் அங்க வரலாம் இல்ல நீ திரும்ப இங்க வரலாம். நாங்க மூன்றுபேரும் சந்தோசமா வாழலாம்.” அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நாரசாரமாக அவள் காதுகளில் விழுந்தது.
“போதும் அர்ஜுன்! நிப்பாட்டுங்க! என்னை நிம்மதியா இருக்க விடவே கூடாது எண்டு முடிவுபண்ணி இருக்கிறீங்களா? நான்தான் எதுவுமே எனக்கு வேண்டாம் ஆதிரா மட்டும் போதும் எண்டு சொல்லிப்போட்டுத்தானே வந்தனான். பிறகும் ஏன் தொல்லை தாறீங்க?” இயலாமையோடு கேட்டாள் அவள்.
கோபம், வெறுப்பு என்பதையும் தாண்டி போராடத் தெம்பில்லை. என்னவோ ஒரு சோர்வு. எல்லாமே விட்டுப்போன உணர்வு.
அவளை அவள் பாட்டுக்கு விட்டாலே போதும் போலிருந்தது.
“ஆதிரா எனக்கு மகள்..”
“வாயை மூடுங்க! அவள் எனக்கு மட்டும் தான் மகள். அவள் என்ர மகள். இனி இப்படி ஏதாவது கதை வந்தது.. கதை என்ன.. ஃபோனே எனக்கு வரக்கூடாது!” பெருஞ்சினத்தில் சீறிவிட்டு வைத்தவளுக்கு, நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. முகமெல்லாம் சிவந்து போயிற்று!
‘மகளாம் மகள்!’
‘கடவுளே..’ இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கிப் பிடித்தவளுக்கு தலைவலியில் தலை வெடித்துவிடும் போலிருந்தது.
ஒரு ஸ்ட்ரோங் டீ குடித்தால் பரவாயில்லாமல் இருக்கும்போலிருக்க, டீயை வாங்கிக்கொண்டு வந்து காண்டீனின் முன்னால் இருந்த மரத்தின் கீழிருந்த வாங்கிலில் அமர்ந்துகொண்டாள். வீசிய காற்று மெல்லிய இதம் சேர்க்க, சூடான டீ தொண்டைக்குள் சுகமாக இறங்கியது.
மனதோ நந்தினியின் அருகாமைக்கு வெகுவாகவே ஏங்கிப் போயிற்று! ஒருமுறை அவளின் தோளில் சாய முடிந்தால் இந்தப் பாரமெல்லாம் இறங்கக்கூடும். அன்றிலிருந்து இன்றுவரை இவளைத் தாங்குகிறவள் அவள் ஒருத்திதான். தன் திருமணத்தைக்கூட இவளுக்காக மறுத்தவள். ‘நீ இப்படி இருக்கேக்க நான் எப்படியடி கல்யாணம் கட்டுவன்?’ என்று கேட்டவள்.
‘நீ கட்டாட்டி உன்னைவிட்டு போய்டுவன் நந்து’ என்ற இவளின் மிரட்டலுக்குப் பயந்து மாத்திரமே திருமணம் புரிந்தவள். ஒருவருட ஒப்பந்தத்தில் ஜெர்மன் போயிருந்தாள். மேலும் நான்கு மாதங்கள் கழிந்தும் வந்தபாடில்லை. அடுத்தவாரம் பெரும்பாலும் வந்துவிடலாம் என்று போனவாரம் சொன்னாளே என்று நினைவுவர வேகமாக அவளுக்கு அழைத்துவிட்டிருந்தது அவளின் விரல்கள்.
“மைன் ஷட்ஸிலைன்! வீ கேட்ஸ் டிய(ர்)?”எடுத்ததுமே உற்சாகமாக ஆர்ப்பரித்தாள் நந்தினி.
ஜெர்மன் கதைக்கிறாளாம்! தானாகவே மயூரியின் உதட்டினில் முறுவல் மலர்ந்தது. நான்கைந்து வார்த்தைகளைப் பிடித்துவைத்துக்கொண்டு இப்படித்தான் மயூரியைப் படாத பாடு படுத்துவாள்.
அவளுக்கே ஒரு குழந்தை உண்டு. ஆனால், இன்னுமே குழந்தைத்தனம் மாறாத உயிர் நண்பி!
நெஞ்சம் நண்பியின் பால் கரைய, “அடி நந்து தூஷணம்(கெட்டவார்த்தை) ஏதும் கதைக்கிறியாடி?” என்று வேண்டுமென்றே கேட்டாள் மயூரி.
“மாடு மாடு! உன்னைப்போய் செல்லம் எண்டு கூப்பிட்டனேடி. இதுக்கு என்ர புருசனை கூப்பிட்டிருக்க நாலைஞ்சு உம்மா கிடைச்சிருக்கும்!” என்று அவள் சொல்லி முடிக்கமுதலே, இச் இச் என்று நான்கைந்து உம்மாக்களை அனுப்பிவிட்டிருந்தாள் மயூரி.
கதிகலங்கிப்போனாள் நந்தினி.
“அடியேய்! என்னடி செய்தனி(செய்தாய் நீ) இப்ப?”
“நீதானேடி உம்ம்..மா கேட்ட?” அந்த உம்மாவையே ஒரு மார்க்கமாகச் சொன்னாள் மயூரி.
நந்தினியான நந்தினியே அரண்டுபோனாள்.
“அம்மா தாயே! ஆளைவிடு! என்ர புருசனுக்கு துரோகம் செய்ய என்னால ஏலாது!” என்றவளின் பேச்சில் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியிருந்தாள் மயூரி.
மனதின் பாரமும் அகன்று இலேசாக உணர்ந்தாள். இதுதானே நந்தினியின் மந்திரம்.
“ஆதிரா குட்டி என்னடி செய்றாள்?”
“மேடத்துக்கு என்ன? டிக்டாக், ஸ்கூல், டென்னிஸ் எண்டு அவா ஒரே பிசி.” மகளின் நினைவில் மனம் கனிய அன்று காலையில் அவள் அடித்த கூத்தைச் சொல்லிச் சிரித்தாள்.
“உனக்கு இண்டைக்கு லீவா என்ன?” அவளை எப்படி இருக்கிறாய் என்று நேரடியாகக் கேட்கவில்லை நந்தினி. தன்னைத் தேடி அழைக்கிறாள் என்றாலே அவள் மனது எப்படியோ காயப்பட்டிருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம்.
“வேலைதான்டி. அர்ஜுன் எடுத்தவர். அதுதான், நல்லா பிடிச்சு குடுத்துப்போட்டு வச்சிட்டன்!” மனநிலை சற்றே மாறியதில் அவளின் குரலும் இறுகிப்போயிற்று.
“மய்யு..” என்று அவள் ஆரம்பிக்கையிலேயே, “எருமை, உனக்கு எத்தனை தரமடி சொல்லுறது, அப்படி கூப்பிடாத எண்டு.. கேக்கவே மாட்டியா?” என்று சீறினாள் மயூரி.
ஒருகணம் நந்தினியின் பக்கமிருந்து சத்தமே இல்லை.
அடுத்த கணமே, “நந்து.. சாரிடி.. ரியலி சாரி.. அது ஏதோ நினைவில்.. நந்து பிளீஸ் நீயும் கோவிச்சிறாதடி. நான் தாங்கவே மாட்டேன்!” எனும்போதே மயூரியின் குரல் உடைந்துபோயிற்று.
ஆதிரா மயூரியின் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தாலுமே, மனதின் வேதனைகளை மனம் திறந்து அவளிடம் சொல்லமுடியாதே. எந்தத் தயக்கமும் இன்றி அவள் பகிரும் ஒரே உறவு நந்தினி மட்டுமே! அந்த நந்தினியின் சின்ன விலகலைக் கூட அவளால் தாங்கவே இயலாது.
“என்னவோ இதுதான் நீ என்னை திட்டினது முதல் முறை மாதிரியும் எனக்கு ரோசநரம்பு இருக்கிற மாதிரியும் சீனப்போடுறியேடி மாட்டு மயூரி!” என்றவளின் பேச்சில் திரும்பவும் சிரிப்பு வந்துவிட்டிருந்தது மயூரிக்கு.
“நீ எந்தக் காலத்திலையும் திருந்திடாத எரும!” என்று திட்டிவிட்டு, “என்னடி சொல்ல வந்தனீ?” என்று கேட்டாள் மயூரி.

