Skip to content
இதையெல்லாம் காயுவின் அன்னையிடம் இருந்து தெரிந்து கொண்டிருந்தார் , சரசு.
‘இவ்வளவு பாசம் உள்ளனி நானே இவேக்குத் தாயா இருக்கிறன் எண்டு சொல்ல வேண்டியதுதானே!’ என்ற மன ஆதங்கம், அவருக்கு. அதுவே கயலோடு சிடுசிடுக்க வைத்தும் இருந்தது. அப்போ சரி அப்படி அந்த வார்த்தைகளை உதிர்ப்பாளா என்று காத்திருந்து கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டுமே!
“இஞ்சாரம்மா, நான் ஏதும் மனம் நோகச்சொல்லி இருந்தா மனசுக்க வச்சிராத என்ன? தம்பி வந்து கத்தினாலும் வீண் பிரச்சினைகள் ஏன் எல்லா. அது பார்த்தா இப்பச் சந்தோமா இருக்கு. துக்கம் நடந்த வீட்டில சின்னனோ பெரிசோ சந்தோச காரியம் நடக்க வேணும் எண்டு சொல்லுவினம்.” அவள் கன்னம் தடவிச் சென்றார், அவர்.
இப்பிடியே நகர்ந்த நாட்களில்…
அன்று சனிக்கிழமை, கயல் லாதி பொறுப்பில் சமையலறை கலகலத்துக் கொண்டிருந்தது. அதுவரை, காயுவின் தாய், மற்றும் பூபாலனின் தாய் எடுத்துக் கதைத்துக் கொண்டும் இருந்தார்கள்.
“ஃபிரைட் ரைஸ் அதோட சிக்கன் கட்சு” தானே சமைக்கும் பாணியில் இரு பெரியவர்களுக்கும் சொல்லியிருந்தாள், லாதி.
“அதோட, சரசுப்பாட்டிக்கு கத்தரிப் பொரியலும் வெந்தயக் குழம்பும்.” என்று சொன்னபடி, தேவையான பொருட்களை பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தாள், கயல்.
“லாதி கொஞ்ச நேரம் தம்பியோட விளையாடுங்கவன் சிணுங்கிறான்.” என்று வந்த தகப்பனிடம் உடனடியாக மறுத்தாள்.
“நாங்க சமைக்கிறம் எல்லா? நீங்களே பாருங்கோ!”
“செல்லம் எல்லா, கொஞ்ச நேரம் தான். பிறகு வந்து சமையுங்க!” ஒருவாறு சமாளித்து அனுப்ப, ஏன் என்ற கேள்வி எழுந்த வேகத்தில் தன்னிடம் ஏதோ சொல்லவோ என்ற எண்ணமும் எழுந்தது, கயலுக்கு. இறைச்சியை வெட்ட ஆயத்தம் செய்தவளிடம், “நான் வெட்டித் தாறன் தள்ளும்.” கதையை ஆரம்பித்தான், பூபாலன்.
“பரவாயில்ல, நீங்க போங்க நானே பாத்துக்கொள்ளுறன்.” இறைச்சியை வெட்டத் தொடங்கியவள் அவன் நகராது நிற்பதையும் உணர்ந்தேயிருந்தாள்.
சுற்றி வளைக்காது பட்டென்று சொல்ல வேண்டும் என்றுதான் வந்திருந்தான். ஆனாலும்…இரு கைகளாலும் தலையைக் கோதிக்கொண்டவன் பார்வை கயலில். செய்யும் வேலையில் கவனமாக இருந்தாள்.
‘பொல்லாத பிடிவாதகாரி, தான் நினைக்கிறத மட்டும் தான் செய்வா!’ மனதுள் அவளை முறைத்தாலும், வலு தன்மையாக, “கயல்…ப்ளீஸ்…ஒருதரம் பிரணவ்வோட கதையுமன்.” சொல்லிவிட்டான்.
அதுவரை, பிள்ளைகள் சம்பந்தமாக எதையோ சொல்லப் போகிறான் என்று இவள் எதிர்பார்த்திருக்க…
கைகள் அசையாது நின்றுவிட, விசுக்கென்று திரும்பிப் பார்த்தாள், கயல்விழி.
“ப்ளீஸ் கயல், நீர் என்னதான் வீரி சூரியாவே இருந்தாலும் இந்த விசயத்தில பிழை விடுறீர். அவன் அருமையானவன் கயல். உமக்கும் அது நல்லாவே தெரியும். ஒண்ணுமே இல்லாத விசயத்துக்கு முறைச்சு வெட்டி விடுறது எல்லாம் எந்த வகையில் சேர்க்கிறது சொல்லும்.”
கடகடவென்று இறைச்சியை வெட்டத் தொடங்கினாள், கயல்விழி. மனம் ‘மறதி’ என்றதைத் தொட முயலும் விடயம் இது. அப்பப்போ முடியாது என்று அடம்பிடிகையில் எல்லாம் யாரும் அறியா வண்ணம் விழிக்கசிவோடு நாட்கள் நகர்கின்றன. அப்படி இருக்கையில் திரும்பவுமா?
அவள் பட்டென்று எதிர்வினையாற்றாது இருப்பது பூபாலனுக்குச் சற்றே நம்பிக்கை அளித்தது.
“அவன்…அவனுக்கு ஒரு இடத்தில பேசி முடிச்சிருக்காம் கயல்.” சொல்லி முடிக்கவில்லை, மீண்டும் விசுக்கென்று திரும்பினாள். சொன்னதைக் கிரகித்துவிட்ட பாவனையில் நெற்றி ஏறியிறங்கியது.
“என் வாழ்த்தையும் சேர்த்துச் சொல்லிவிடுங்க!” உணர்வுகள் மறைத்த குரலில் சொன்னவளை முறைத்தான், பூபாலன்.
“உம்ம! நான் என்ன சொல்ல வாறன் நீர் என்ன சொல்லுறீர். அவனிட்ட கதைச்சா…” என்றுவிட்டு நிறுத்திவிட்டான்.
“இங்க பார் பூபாலன், இப்பிடி என்னட்ட வந்து கதைக்கிற எண்டது கயலுக்குத் தெரியுமா சொல்லு? ஒரு நாள் சரி எங்கள்ட விசயத்தில அவவிட்ட இருந்து ஏதாவது ஒரு முனைப்பு வந்திருக்கா யோசிச்சுப் பார். இப்பவும் உனக்குப் பக்கத்தில இருக்கிற அவவ விட்டுப்போட்டு என்னட்ட வந்து கதைக்கிற! அவவுக்கு உண்மையா விருப்பம் இருந்திருக்க இத்தனை நாளில ஒரு தரம் கதைக்க நினைச்சு இருப்பா பூபாலன். நான் இயன்ற மட்டுக்கும் முயன்று தோற்றவன். என்னட்ட இனி கதைச்சு ஒண்ணுமே ஆகாது விடு!” ஆக்ரோசமாகவே சொல்லியிருந்தான், அவன்.
“கயல் உன்னோட கதைப்பா. அப்ப நீ உறுதியா நிண்டு கட்டுவ தானே?” அவ்வளவு உறுதியாகச் சொல்லி விட்டு வந்திருந்தான்.
அவளோ, “ப்ளீஸ்… நீங்க எப்பிடி எப்ப இந்த விசயமா கதைச்சாலும் என்ர பதில் ‘முடிஞ்சது முடிஞ்சது தான்’ எண்டது மட்டுமே. தயவு செய்து இதப் பற்றிக் கதைக்க வேணாம்!” சுள்ளென்று சொன்ன விதம் பூபாலன் முகத்தைக் கறுக்க வைத்திட்டு.
“நீர் மட்டும் எல்லா விசயத்திலும்…இந்த வீட்டில எல்லாமே செய்யலாம். நான் ஏதாவது கதைச்சா ‘என்ர விசயம் நெருங்காத’ எண்டு சொல்லுறது. அவன் அண்டைக்கு உங்கட விலகலுக்கு என்ர பிள்ளைகளக் காரணம் காட்டி இருந்தவன் கயல். தன்ர அன்பை விட உமக்குச் சின்னாக்கள் தான் முக்கியம் எண்டு சொன்னவன். அவையளக் காரணமா வச்சு நீங்க பிரியிறது எனக்கு எப்பிடி இருக்கும் யோசிச்சுப் பாரும். இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போயிரும் கயல்.” கோபமாகவே சொன்னான்.
“இங்க பாருங்க, அவர் உங்கட ஃபிரெண்ட்; என்ன சொல்லி இருந்தாலும் அங்க கதைச்சிருக்க வேணும். லாதியும் தம்பியும் இதுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பில்ல போதுமா? இனி ஆளை விடுங்க. லாதி இங்க வாங்க …” என்று நகர்ந்தவளோடு இனிமேலும் முகம் கொடுத்துக் கதைத்தால் என்று கோபம் பூபாலனுக்கு.
“நான் இங்க இருக்கிறதால உங்களுக்கு நிம்மதி போகுது எண்டா, அதுக்கு நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க? கொஞ்ச நாள் தானே, பொறுத்துக் கொள்ளுங்க நான் போயிருவன்.” சிடுசிடுவென்று சொன்னவளை என்ன செய்வது?
“உம்மோட கதைக்க வந்த என்னைச் சொல்ல வேணும்.” விருட்டென்று வெளியேறியவன், அவள் மீதான தன் கோபத்தை அன்று மதிய உணவுக்கு வெளியில் சென்று தீர்த்துக் கொண்டான். கடைசியில் அவன் அத்தனை முயற்சியும் தோற்று, பிரணவுக்கு வேறு இடத்தில் கல்யாணம் நடந்தேறியிருந்தது. கொரோனா காரணத்தால் வெகு எளிமையாக வீட்டோடு நடந்திருந்தது.
error: Alert: Content selection is disabled!!