காதல் காயங்களே 14 – 1

அத்தியாயம் 14

 

 

அப்படியே அமர்ந்திருந்தான் பிரதீபன்! வெறுமையாய் கிடந்த அவர்களின் மேசையைப் போலவே அவன் விழிகளிலும் வெறுமை! ஆதிரா! சற்றுமுன் அவன் இதயத்தோடு சேர்த்து அந்த இடத்தையே அழகாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தவள் போய்விட்டாள்!

 

அவனைப் பார்த்து ஹாய் என்று கையசைத்த ஆதிரா.. அம்மா அடிப்பா என்று உதட்டைப் பிதுக்கிய ஆதிரா.. தாயின் கையிலேயே தொங்கிக்கொண்டு நடந்த ஆதிரா.. இருக்கையில் அமர்ந்திருக்கையிலேயே சின்ன நடன அசைவுகளைப் போட்டபடி அந்த இடத்தையே உயிர்ப்புடன் இயங்கவைத்த ஆதிரா.. அவனது இழப்பின் அளவை பலமடங்காய் உணரச் செய்யும் ஆதிரா!

 

கேக் துண்டினை வாங்குவதற்கு அவளுக்கு விருப்பமேயில்லை. ஆனாலும் அவனைப் பாவம் பார்த்துத்தான் வாங்கினாள். மறுக்கப்போகிறாளோ என்று பயந்து வாங்கிக்கொள் என்று கண்களால் அவன் கெஞ்சியபோது, அவள் கண்களில் இரக்கம் சுரந்தத்தைக் கண்டானே! என்னவோ அந்தக்கணத்தில் அவன் குழந்தையாகிப் போனது போலவும், அவள் தாயாகி அரவணைத்தது போலவும் நெகிழ்ந்தானே! அந்த ஈரமான மனதும் அன்பும் அவனைச் சுட்டது.

 

இந்த ஈரமும் இரக்கமும் அன்பும் அவனுக்கு இல்லாமல் போயிற்றே!

 

அவனுடைய குழந்தை இருந்திருந்தால் இன்றைக்கு இவளைவிட இரண்டு வயது பெரிதாக இருந்திருக்காதா? இதயம் ஒருமுறை நின்று துடித்தது!

 

இழப்பின் அளவை உணரவேண்டுமானால் இழந்ததின் அருமையை உணரவேண்டும். நீ இழந்தது உயிருடன் இருந்திருந்தால் உயிர்ப்புடன் இப்படித்தான் இருந்திருக்கும் என்று கணப்பொழுதில் அவனுக்குக் காட்டிவிட்டுப் போய்விட்டாள் ஆதிரா!

 

எங்கே அவனுடைய குழந்தை? அந்த வானத்தில் நட்சத்திரங்களோடு நட்சத்திரமாக மாறிக் கலந்திருக்குமோ! அல்லது இந்தக் காற்றிலே காற்றாகக் கலந்து அவனை வருடிச் செல்லுமோ?

 

அன்றைக்கு அவ்வளவு கெஞ்சினாளே! இரும்பாய் நின்றல்லவோ மறுத்தான்!

 

நிர்தாட்சண்யமாகத் தூக்கி எறிந்தானே! இல்லையில்லை கொன்று புதைத்தான். அவனுயிரை அவனே கொன்று புதைத்தான். தொண்டைக்குள் அடைத்தது. கண்கள் கலங்கிப் போயிற்று! நெஞ்சில் உயிரைப் பிழியும் வலி! என்னைத் தூக்கி எறிந்தாயா அப்பா? அதுநாள் வரை வரிவடிவம் கொடுக்கப்படாத அவனுடைய குழந்தை இன்றைக்கு ஆதிராவின் உருவில் வந்து நின்று கண்ணீருடன் கேட்டாள்.

 

ஆதிரா… அவன் உயிர் ஓலமிட்டது. தரையில் விழுந்த மீனாய் துடித்துக்கொண்டிருந்தான் பிரதீபன்.

 

அப்போது அவனுடைய குழந்தையே அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். கண்கள் கலங்க நம்ப முடியாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் பிரதீபன். அவனுடைய குழந்தை எங்கும் போகவே இல்லை.. அவனைப் பிரியவும் இல்லை. இதோ அவனிடமே வருகிறாளே!

 

“அங்கிள் இந்தாங்கோ!” என்று எதையோ நீட்டினாள் அவள்.

 

எதைக் கொடுக்கிறாள் ஏன் கொடுக்கிறாள் என்று உணராமலேயே அவள் கொடுப்பதை ஏந்திக்கொண்டது அவன் கை. பார்வை மட்டும் அவளை விட்டுப் பிரியவே இல்லை. என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விடாதே என்று அவளிடம் கெஞ்சிற்று! கண்ணைச் சிமிட்டினாலும் மறைந்துவிடுவாளோ என்று பயந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“என்ன எண்டு பாருங்கோவன் அங்கிள்!” செல்லமாய் உந்தியது அந்தக்குரல்.

 

பொக்கிசமாகப் பொத்தி வைத்திருந்ததை விரல்களை விரித்துப் பார்த்தான். ஒரு குட்டி வண்ணத்துப்பூச்சி. பலவர்ணங்களின் கலவையாக ஜொலித்தது.

அவளைப்போலவே!

 

இதை ஏன் அவனிடம் கொடுத்தாள்? கேள்வியாகப் பார்க்க, “இது வண்ணத்துப்பூச்சி ஸ்டாம்ப் அங்கிள்.” என்றுவிட்டு, அதை வாங்கி அங்கிருந்த பேப்பரில் அழுத்திக் காட்டினாள்.

 

வண்ணத்துப்பூச்சி ஒன்று முத்திரை போலே அச்சானது. “நீங்க தந்த கேக்குக்குப் பதிலா. இப்ப என்னட்ட இதுதான் இருந்தது.” என்றவள் மீண்டும் அதை அவனிடம் கொடுத்தாள்.

 

அவன் கொடுத்த அன்புக்குப் பதில் அன்பு. இந்தக்குணம் ஏன் அவனுக்கு இல்லாமல் போனது? ஏக்கத்தோடு அவளையே பார்த்தான். ‘இந்தத் துன்பங்களில் இருந்து என்னை மீட்டுவிட்டேன்..’ என்று கெஞ்சினான்.

 

“இது எனக்குப் பிடிச்ச ஸ்டாம்ப் அங்கிள். அதை உங்களுக்குத் தந்திருக்கிறன். துலைச்சுப்போடாதீங்கோ (தொலைத்துவிடவேண்டாம்)! உங்களிட்ட இருக்கா எண்டு அப்பப்ப செக் பண்ணுவேன்!” என்றவள், தாயிடம் திரும்பி ஓடமுனைய, எட்டி அவளின் கரத்தைப் பற்றினான் பிரதீபன்.

 

கரைசேரத் துடிக்கும் ஓடம்போல் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவனுக்கு அவளின் கைதான் கரைசேரும் துடுப்பாகத் தோன்றியதுபோலும். தாயின் கரத்தினை விதி வசத்தினால் விட்டிருந்தவன் மகளின் கரத்தைப் பற்றிக்கொண்டிருந்தான் அவன் அறியாமலேயே!

 

திரும்பிய ஆதிராவின் பார்வையில் பட்டது கலங்கிக்கிடந்த அவன் கண்களே! காரணம் அவளுக்கு விளங்கவில்லை.

 

“அங்கிள் அழுறீங்களா?” நம்பமுடியாமல் விழிகளை விரித்துக் கேட்டாள்.

 

இல்லை என்று தலையசைத்தான் அவன். அழ வைத்தவளே அழுகிறாயா என்று கேட்கிறாள். உதட்டினில் விரக்தியான சிரிப்பு ஒன்று வெறுமையோடு வந்தது.

 

அவன் காதோரமாகக் குனிந்தாள் அவள். “பொய் சொல்லாதீங்கோ! லேட்டா போனா உங்கட அம்மாவும் உங்களை மொத்துவாவா?” என்றாள் விழிகளில் குறும்பு மின்ன.

 

மனதை அப்படியே அவளின் செய்கை அள்ளினாலும் சிரிக்க முடியவில்லை அவனால். மனம் ஊமையாக அழுதது!

 

‘உன்ர அம்மாதான் என்னை மொத்துறவள். அதெல்லாம் ஒருகாலம். நானே பறிகொடுத்திட்டன். உன்ன.. உன்ர அம்மாவை.. என்ர சந்தோசத்தை.. என்ர வாழ்க்கையை.. எல்லாத்தையும்.’ அவளிடம் சொல்லிக் கதறவேண்டும் போலொரு வெறி அவனுக்குள் எழுந்தது.

 

பழக்கம் இல்லையே! வெளியே வீராப்பாக விறைத்துக்கொண்டு நின்றுதானே பழக்கம்.

 

“கொஞ்ச நேரம் என்னோட இரேன்.” கெஞ்சலாகக் கேட்டான்.

 

அவள் தயங்கிப் பின்னால் திரும்பிப் பார்த்தாள். ‘மயூரியும் நிக்கிறாளா?’ மனம் ஆவலாய் கேட்க அவனும் அவளுக்குப் பின்னால் பார்த்தான். இல்லையே..

 

“அம்மா கார் பார்க்கிங்குக்கு போறா. நான் போகவேணும். அம்மா வெய்ட் பண்ணிக்கொண்டு இருப்பா. லேட் ஆனா பேச்சு விழும்.” என்றவள், “பாய் அங்கிள்!” என்றபடி சிட்டாகப் பறந்துபோனாள்.

 

அவள் தந்துவிட்டுப்போன அந்த வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தான். அவளே அவன் கைகளுக்குள் பக்குவமாக இருப்பது போலிருக்க மார்போடு அணைத்துக்கொண்டான். இப்படி அவன் குழந்தையையும் மார்பில் தாங்கி மடியில் ஏந்தி வாழும் பாக்கியத்தை அவனே தூக்கி எறிந்துவிட்டானே!

 

அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் விருட்டென்று எழுந்து தானும் நடந்தான் பிரதீபன்.

 

ஓடிவந்து ஏறிய மகள் பெல்ட் போட்டுவிட்டாளா என்று பார்த்துவிட்டுக் காரை எடுத்தாள் மயூரி.

 

“எங்க இவ்வளவு வேகமா ஓடிப்போயிற்று வாறாய் ஆது?” பின் கண்ணாடி வழியே பார்த்து லாவகமாக ரிவர்ஸில் எடுத்து வீதியில் ஏற்றிக்கொண்டு கேட்டாள்.

 

“அந்த அங்கிளிட்ட அம்மா.”

 

ஒருகணம் அதிர்வோடு மகளைத் திரும்பிப் பார்த்தாள் மயூரி. அவனிடம் இவளுக்கு என்ன அலுவல்?

 

“அவரோட உனக்கு என்ன கதை? அதுவும் பழக்கம் இல்லாத ஆளிட்ட.” கியரை மாற்றி வேகத்தை அதிகரித்தவளின் குரல் அவளையும் மீறி அதட்டியது.

 

“வரேக்க கேக் தந்தவர் அதுதான் அதுக்குப்பதிலா என்ர ஸ்டாம்ப் குடுத்திட்டு வந்தனான்.”

 

அவள் அறியாமல் இது எப்போது நடந்தது என்று புருவங்களைச் சுருக்கி மகளைப் பார்த்தாள் மயூரி. “தெரியாத ஆக்களிட்ட எதுவும் வாங்கக் கூடாது எண்டு சொல்லியிருக்கிறன் எல்லோ?”

 

“அந்த அங்கிளை பாக்கப் பாவமா இருந்தது அம்மா. நான் முதல் வாங்கேல்ல. அவர் டக்கென்று தான் ஒரு துண்டு சாப்பிட்டு எனக்கும் தந்தவர். பிறகுதான் வாங்கினான். அதைவிட நீங்களும் என்னோடதானே இருக்கிறீங்க. நான் தனியா நிண்டிருந்தா வாங்கி இருக்க மாட்டன். அதுக்குப்பதிலாத்தான் ஸ்டாம்ப் குடுக்கப் போனனான்.நீங்கதானே சொல்லி இருக்கிறீங்க, யாரிட்டையும் எதையும் சும்மா வாங்கக் கூடாது எண்டு.”

error: Alert: Content selection is disabled!!