மகளின் பேச்சில், இருந்த பதட்டத்தையும் தாண்டி முறுவல் அரும்பிற்று அவள் இதழ்களில். உள்ளுக்குள்ளோ, ‘என்னத்துக்கு பாவமா இருந்தவன்? ஆதுக்கு கேக் ஏன் கொடுத்தவன்?’ என்கிற கேள்விகள் ஓடும்போதே, அன்றும் ‘ஆதுக்காக இன்னொருமுறை முயற்சி செய்துபாரன்.’ என்று கெஞ்சியது நினைவில் வந்தது.
‘அப்பா இல்லாத பிள்ளை எண்டு பாசம் வருது போல..!’ அவளின் உதடுகள் ஏளனமாய் வளைந்தன. தாயையும் மகளையும் யாருமே இல்லாத அனாதைகள் போல் நிற்க வைத்துவிட்டு, இப்ப வந்து பாசம் காட்டுகிறானாம்! பாவமாகப் பார்க்கிறானாம்!
அவன் இனி அவள் வாழ்வில் இல்லை. வருவதற்குச் சாத்தியங்களும் இல்லை. அதனால் அவளுக்குக் கவலையும் இல்லை. ஒருநாள் இரண்டு நாள் அல்ல பத்து வருடங்கள். அழுது துடித்து அடுத்து என்று வாழ்க்கையில் நகர்ந்து மீண்டும் அவள் ஓடத்தொடங்கிவிட்டாள்தான். தனியாக வாழவும் பழகிக்கொண்டாள் தான்.
ஆனால், நினைவுகள் அழியாதே! அவை மீண்டும் மீண்டும் கண்முன்னே வந்து காயப்படுத்திவிட்டுத்தானே போய்க்கொண்டிருக்கின்றன.
வேறு எதைப்பற்றிய யோசனையும் இல்லாமல் அவனை மட்டுமே நம்பிய நாட்கள் அழியாதே! அவளின் அப்பாவும் அல்லவா அவனை நம்பினார். அந்த அப்பாவின் கடைசிநாட்களில் கூட அவரோடு இருக்கமுடியாமல் அவளை ஓட வைத்துவிட்டு இப்போது எதற்கு இந்த நாடகமெல்லாம்?
“என்னவாம் உன்ர அங்கிள்?” மனக்கொதிப்பை மகளிடம் காட்டாமல் வீதியில் பார்வையைப் பதித்துச் சாதாரணம் போல் விசாரித்தாள்.
“நான் திரும்பிப் போகேக்க அழுத மாதிரி இருந்தவர் அம்மா. என்ர கைய பிடிச்சு கொஞ்சநேரம் என்னோட இருக்கிறியா எண்டு கேட்டவர். நான், நீங்க பேசுவீங்க எண்டுபோட்டு ஓடி வந்திட்டன்.” என்றாள்.
கசந்த சிரிப்பு ஒன்று அவள் உதட்டினில் வந்து போயிற்று! “ஏன் எண்டு சொன்னவரா?”
“இல்லையம்மா. நானும் நீங்க பேசுவீங்க எண்டு ஓடி வந்திட்டன்.” அதற்குமேல் தாயும் மகளும் பேசிக்கொள்ளவில்லை. ஆதிரா பாடலை இசைக்கவிட்டிருந்தாள்.
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
என்னவோ அவளுக்காகவே எழுதப்பட்ட வரிகள் போலிருந்ததில் இமைகளைச் சிமிட்டிக் கண்ணீரை அடக்கினாள் மயூரி! எல்லாமே தவறாகத்தான் போயிற்று! கட்டிய கோட்டையில் இருந்து கண்ட கனவு வரைக்கும்!
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே..
நறுக்கினானே! அவள் பதறப்பதற துடிக்கத் துடிக்க நறுக்கினானே! இரங்கவே இல்லையே! அதற்குமேல் அவளால் முடியவில்லை. “பாட்ட நிப்பாட்டம்மா!” என்று ஆதிராவை அதட்டிவிட்டிருந்தாள்.
ஆதிராவின் பொறுமை பறந்துபோயிற்று! தாயை முறைத்தாள்.
“மயூரி! கொஞ்சமாவது நல்ல அம்மா மாதிரி நடக்கப்பழகுங்க! எப்ப பாத்தாலும் அதட்டலும் உருட்டலும். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க என்னைப்பற்றி? எனக்கும் கோவம் வரும் ரோசம் வரும்.” என்று சீறியவளைக் கண்டு சட்டெனச் சிரித்துவிட்டாள் மயூரி.
அப்படியே அவள்தான். அவளும் செல்வேந்திரனிடம் இப்படித்தானே!
“என்ன சிரிப்பு? நான் கோவமா இருக்கிறன்! ஏதும் சாக்கி வாங்கித்தந்தா அந்தக் கோபம் போறதுக்குச் சான்ஸ் இருக்கு!”
“அதுதானே பாத்தன்! எங்க ஆரம்பிச்சு நீ எங்க வந்து நிப்பாய் எண்டு எனக்குத் தெரியாதா! கோபம் வருது உனக்கு. ரோசம் வேற! சாக்கியும் இல்ல ஒண்டும் இல்ல!” என்று மகளுக்கு மேலால் முறுக்கினாள் தாய்.
சட்டென்று தன் போர்முறையை மாற்றினாள் மகள்.
“அது சும்ம்..ம்மா அம்மா. அம்மா அம்மா என்ர செல்ல அம்மா. என்ர குட்டி அம்மா. என்ர நல்ல அம்மா. நான் என்ன கேட்டாலும் வாங்கித்தாற அச்சா அம்மா வாங்கித் தருவாவாம். என்னம்மா, வாங்கித் தருவீங்க தானே?” அப்படியே தலைகீழாக மாறிக் கெஞ்சியவளின் சாதுர்யத்தில் சிரிப்புவந்தாலும், “உனக்குத் தேவை எண்டதும் நடிக்கிறாய் என்ன? கடைசிவந்தாலும் மாட்டன்!” என்றாள் மயூரி.
சட்டெனப் பாட்டுக்கு மாறியிருந்தாள் ஆதிரா.
“அம்மா.. !
நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை..
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்…” அதற்குமேல் பாட முடியாமல் கலீர் என்று சிரிக்கத் தொடங்கியிருந்தாள் ஆதிரா.
இதற்காகத்தானே மயூரி இவ்வளவு நேரமும் முறுக்கியது. அவளின் காயத்துக்கு மகளின் இந்தப் பாடல்கள் மிகப்பெரிய மருந்தாயிற்றே! அதனால் தான் ஆதிராவை அவள் அறியாமலேயே இந்த டிக்டாக் பக்கம் மயூரி திருப்பி விட்டதே. வாஞ்சையோடு மகளைத் திரும்பிப் பார்த்தாள்.
தன்னைச் சுற்றிப் படர்ந்திருக்கும் எந்தச் சிக்கலைப் பற்றியும் அறியாமல் சிரித்துக்கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பை என்றைக்குமே மங்க விட்டுவிடக்கூடாது என்று அந்தத் தாய்மனம் உறுதி பூண்டது!
‘உன்ர சந்தோசத்துக்காக அம்மா என்னவும் செய்வன் ஆதும்மா.. எந்தக் கஸ்ட்டத்தையும் தாங்குவன்.’ ஆசையோடு மகளைத் தழுவியவளின் விழிகளில் சப் வேயில் நடந்ததுதான் ஓடியது.
அவளைப் போயிரு என்று சொல்லிவிட்டு பிராக்குப்பார்க்க அவள் என்ன கவனமில்லாத தாயா? உணவுக்குச் சொல்லிவிட்டு என்ன செய்கிறாள் என்று பார்வையைத் திருப்பியபோது, யாருடனோ சைகையில் ஆதிரா கதைத்துக்கொண்டிருந்ததைக் கவனித்துவிட்டாள் மயூரி. யார் என்று பார்க்க பிரதீபன். ஒருநிமிடம் அதிர்ந்தாள் தான். பிறகு, அப்படி என்ன செய்துவிட முடியும் அவனால்? என்று தோன்றியது.
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று காணாதவள் போன்று அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். பிரதீபனின் உணர்வுகளைப் பிரித்தறியும் பக்குவம் ஆதிராவுக்கு இல்லாமல் இருக்கலாம். மயூரிக்கு உண்டே! அவனுடைய மன உணர்வுகளை எல்லாம் நன்றாகப் படித்துக்கொண்டுதான் இருந்தாள். அவனுடைய ஏக்கத்தையும் வலியையும் கூட!
அவனுக்கு வேண்டும் என்றுதான் சொல்லிற்று மனது! கூடவே கனத்தும் போயிற்று! அவள் உயிராக நேசித்த தீபன்.. அவளின் தீபன்.. சின்னதாக முகம் சுருக்கினாளே தாங்கமாட்டாள். துடித்துப்போவாள். ஆனால் இன்றைக்கோ.. அவனின் வலியை ஒருவித திருப்தியோடு உள்வாங்கியது அவளின் உள்ளம்.
பெருமூச்சுடன் வீட்டுக்குள் காரை விட்டாள் மயூரி.
இங்கே வீடு வந்தவனைக் கேள்வியோடு ஏறிட்டார் அன்னை புஸ்பவதி.
“அக்காட்ட நீ ஒண்டுமே சொல்ல இல்லையாம் எண்டு எடுத்துச் சொல்லிக்கொண்டு இருந்தாள் அப்பு. ஒருக்கா நீயும் பாத்துச் சொன்னாத்தானே எங்களுக்கும் உனக்குப் பிடிச்சவளை கண்டுபிடிச்ச திருப்தி இருக்கும்.” என்றார் ஆவலோடு.
அதற்கு ஒன்றும் சொல்லவில்லை அவன். பேசாமல் அப்படியே சோபாவில் தொப்பென்று விழுந்தான். தலையைப் பின்னோக்கிச் சரித்துக் கண்களை மூடிக்கொண்டான்.
ஆதிராதான் கண்ணுக்குள் வந்து நின்றாள். அப்பா என்று அழுதாள். நெஞ்சின் ரணம் முகத்தில் வலியாக வெளிவர அவன் புருவங்கள் முடிச்சிட்டுக்கொள்ள தாடை இறுகிற்று!
அவனுடைய அமைதி புஸ்பவதிக்கு பீதியைக் கிளப்பியது. எதையோ இழந்துவிட்டவன் போன்ற தோற்றம் வேறு பெற்ற மனத்தைப் பிசைந்தது. ‘இந்தளவுக்கு என்ர பிள்ளையின்ர மனதுக்க என்னதான் கிடந்து அரிக்குது? கேட்டாலும் சொல்லமாட்டான்.’ கண்கள் கலங்கும் போலிருக்க அவனருகில் சென்று அமர்ந்தார்.
தான் நெருக்கியதால் மட்டுமே சம்மதித்தான் என்று அவருக்கு முதலே தெரியும் தானே. மனைவி என்று ஒருத்தி வந்துவிட்டால் எல்லாம் மாறும் என்று நம்பிக்கொண்டுதான் பெண் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் இவனைப் பார்த்தால் திரும்பவும் ஆரம்பிக்கப் போகிறானோ.. அவர் நினைத்து முடிக்கவில்லை, கண்களைத் திறந்து அவரைப் பார்த்து, “அம்மா.. கொஞ்ச நாளைக்கு இந்தக் கதையை நிப்பாட்டுங்கோ!” என்றான் அவன்.

