பயந்துபோனார் புஸ்பவதி. பழைய குருடி மீண்டும் கதவைத் திறடியேதானா? வேகமாகச் சமாளிக்க முயன்றார்.
“சரிசரி விடு. இனி உன்னை ஒண்டும் கேக்கேல்ல. உனக்கு நாங்க பாத்தா காணும் தானே. உன்ர தங்கச்சியோடையும் கதைச்சிப்போட்டு நாங்களே முடிவு எடுத்துப்போட்டுச் சொல்லுறோம். நீ போ. போய் உன்ர அலுவல்களை பார்!” வேக வேகமாகச் சொல்லிவிட்டு இன்னும் எதையாவது சொல்லி முற்றிலுமாக மறுத்துவிடுவானோ என்று பயந்து, அங்கிருந்து எழுந்து நழுவ முயன்றவரைக் கரம்பற்றித் தடுத்தான் அவரின் மகன்.
‘கடவுளே.. விடமாட்டானோ..’ பயத்துடன் பார்த்தார் அவர்.
“இப்போதைக்கு ஒண்டும் பாக்காதீங்கோ!” என்றுவிட்டு எழுந்து அறை நோக்கி நடந்தான். மறுக்க முடியாத குரல். இதற்குமேல் இதைப்பற்றிப் பேச ஒன்றுமில்லை என்று சொல்லியது.
அதிர்ந்து போகிறவனையே பார்த்தார். எதற்குப் பயந்தாரோ அதைச் சொல்லியே விட்டானே! மகனேயானாலும், வயது வந்த முழுமையான மனிதன். அவனிடம் அதட்ட முடியுமா? தன் கையறு நிலை அவரை வதைத்தது. ஒரு கோபமும் சட்டென்று மூண்டது.
“ஏன் தம்பி, திரும்பவும் இப்படிச் சொல்லுறாய்?”
அவரின் கேள்வி மனத்தைச் சுட்டாலும், ஒன்றுமே சொல்லாமல் நடந்தவன் நின்றான். திரும்பி, “வாறவள் எனக்குப் பிடிச்சவளா இருந்தா காணுமா இல்லை..” என்று, விழிகளில் கூர்மையோடு அவரை நோக்கிக் கேட்டான்.
அந்த ‘எனக்குப் பிடிச்சவளா’ வில் புஸ்பவதியின் மனது துணுக்குற்றது.
இதைத்தான் அவர் எப்போதிலிருந்தோ சொல்லிக்கொண்டிருக்கிறார். அன்றெல்லாம் அமைதியாக இருந்தவன் இன்று அதற்கு அழுத்தம் கொடுத்துக் கேட்கிறான் என்றால்.. அவருக்கு அவளைப் பிடிக்காமல் போகச் சாத்தியங்கள் உண்டு என்கிறானா? இன்றைய நிலையில் அவனுக்கு மனைவியாக யார் வந்தாலும் அவர் மறுக்கப்போவதில்லை. பிறகு ஏன் அப்படிச் சொன்னான்? அவர் மறுக்கும் இடத்தில் இருக்கும் பெண்ணைப் பார்த்துவிட்டானா? அவர் எப்படியானவளை எல்லாம் மறுப்பார்? என்று உள்ளே யோசனை அதுபாட்டுக்கு திறந்துவிட்ட கோழிக்குஞ்சுகளாய் கண்டபாட்டுக்கு ஓடினாலும், மகனின் மேல் நிறையவே நம்பிக்கையும் உண்டே!
எனவே, அவன் பதிலுக்காகத் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்டு, “அதைத்தானே தம்பி நானும் உனக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறன். நீதானே இவ்வளவு நாளும் ஒண்டுமே சொல்லாம இருந்தனி(இருந்தாய் நீ)!” என்றார்.
“அப்ப கொஞ்சம் பொறுங்கோ. இதுக்கு ஒரு முடிவு கட்டுறன்.” என்றுவிட்டு நடந்தவனைக் குழப்பத்தோடு பார்த்தார் புஸ்பவதி.
‘கல்யாணத்த கட்டு தம்பி எண்டா எதுக்கோ முடிவு கட்டுறன் எண்டுறானே.. என்னத்த பெத்து என்னத்த வளத்தனோ?’ அவருக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
அவன் அறைக்குள் சென்று மறைந்ததும் குடுகுடு என்று தங்களின் அறைக்குள் இருந்த கணவரிடம் ஓடினார்.
“இஞ்சருங்கோப்பா, என்ன சொல்லிப்போட்டு போறான் தெரியுமா?”
“ஒரே வீட்டுக்கதானே இருக்கிறன். கேக்காம இருக்குமா?” நிதானமாகச் சொன்னார் திருநாவுக்கரசு.
“கேட்டுக்கொண்டுதான் சத்தமே இல்லாம இருந்தனீங்க போல. அதுசரி! இடியே விழுந்தாலும் அசராத மனுசன் தானே நீங்க.”
மகன் மீதிருந்த கோபத்தைத் தன்மீது காட்டியவரைச் சின்னச் சிரிப்போடு பார்த்தார் திருநாவுக்கரசு.
பின்னே, புஸ்பவதிக்கு என்றே பட்டாபோட்டுக் கொடுத்த நிலமாயிற்றே இந்தத் திருநாவுக்கரசு!
“நீங்க சிரிக்கிறதுக்கு இங்க நான் என்ன படமா காட்டிக்கொண்டு இருக்கிறன்?” சினத்தில் சீறினார் அவரின் மனையாட்டி.
திருநாவுக்கரசின் சிரிப்பு மங்கவே இல்லை.
“கதவைச் சாத்திப்போட்டு பக்கத்தில வந்து இரம்மா! நீ என்னோட பிடிக்கிற சண்டை நமக்குள்ள மட்டுமே இருக்கட்டும்!” பேச்சில் சின்னக் கேலி இழையோடச் சொன்ன கணவரை முறைத்தார் புஸ்பவதி.
ஆயினும் அவர் சொன்னதைச் செய்தார். தன்னருகில் அமர்ந்துகொண்ட மனைவியின் காலைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு முழங்காலினை(முட்டி) அழுத்திக்கொடுத்தார் திருநாவுக்கரசு.
கணவரின் அனுசரணையான அச்செயலில் நெகிழ்ந்துபோனார் புஸ்பவதி. “இப்படி ஒரு வாழ்க்கையை அவனும் வாழவேணும் எண்டுதானேப்பா கிடந்து பாடா படுறன். வழிக்கு வாறான் இல்லையே!” நம்பிக்கையை இழந்துவிட்ட கசப்பில் புலம்பினார் அவர்.
“எல்லாம் கெதியில நடக்கும். சும்மா மனத்தைத் தளரவிடாத!”
புஸ்பவதிக்கோ நம்பிக்கை அறவே இல்லை.
“சொல்லு, என்னவாம் உன்ர மகன்.”
“அதுதான் உங்களுக்கு எல்லாம் கேட்டுத்தான இருக்கு. பிறகென்ன?”
“ம்ம்…” என்றவர் சற்றுநேரம் ஒன்றுமே சொல்லவில்லை. மனைவியின் கால்களை மட்டும் அழுத்திக்கொடுத்தார்.
அவர் எதையோ யோசிக்கிறார் என்று விளங்கிற்று புஸ்பவதிக்கு.
“என்ன யோசிக்கிறீங்கள்? நீங்களாவது உங்கட மனதுக்க என்ன கிடக்கு எண்டு சொல்லித் துலையுங்கோவன்! வரவர இந்த வீட்டுக்க இருந்து எனக்கு விசர் பிடிக்கும் போலத்தான் கிடக்கு.”
“நீ ஆசைப்பட்ட மாதிரியே கெதியில உனக்கு ஒரு மருமகள் வருவாள்.” வாக்குபோலச் சொல்லும்போதே புஸ்பவதியின் முகம் மலர்ந்துபோயிற்று!
முற்றும் துறந்த முனிவர் மாதிரி மகனின் எந்த விசயத்திலும் கலந்துகொள்ளாமல் இருந்தாலும், வேதவாக்குப்போல கணவர் கணித்துச் சொல்லுகின்ற விடயங்கள் அப்படியே நடக்கும் என்பது அனுபவத்தில் அவர் கண்டுகொண்டது.
படக்கென்று கால்களைக் கீழே போட்டுவிட்டு, “என்னெண்டு அப்பா இவ்வளவு நம்பிக்கையா சொல்லுறீங்கள்?” என்று ஆவலோடு கேட்டார்.
“உன்ர மகன் சொல்லிப்போட்டு போனதை நீ சரியா காதுகுடுத்துக் கேக்கேல்லையாம்மா?” பதில் கேள்வி கேட்டார் அவர்.
அப்படி என்ன சொன்னான் என்று அவர் பார்க்க, “எனக்கும் சரியா சொல்லத் தெரியேல்ல. ஆனா, நீயே யோசிச்சுப்பார் முப்பத்தஞ்சு வயசுவரைக்கும் ஒரு ஆம்பிளை பிள்ளை கல்யாணமே வேண்டாம் எண்டு வாழமாட்டான். யாரையாவது கூட்டிக்கொண்டு வா எண்டு நீ சொல்லியும் அவன் அசையேல்ல. அப்ப அவனுக்குள்ள என்னவோ இருந்திருக்கு. அந்த என்னவோ என்ன எண்டுறதுதான் எங்களுக்குத் தெரியாது. இவன் யாரையாவது விரும்பி இருக்கலாம். ஏதும் சண்டைல அந்தப்பிள்ளை இவனை விட்டு பிரிஞ்சு போயிருக்கலாம். அதனாலேயே இவன் கட்டாமல் இருந்திருக்கலாம். இண்டைக்கு அவளை ஏதோ ஒரு நிலையில இவன் பாத்திருக்கலாம். அவளையே கட்ட நினைக்கலாம். அதாலையே வாறவள் எனக்குப் பிடிச்சவளா இருந்தா காணுமா எண்டு அவன் கேட்டிருக்கலாம். இப்படி எதுவும் இருக்கலாம். ஆனா, அவனுக்குப் பிடிச்சவள் எந்த நிலையில இருக்கிறாள் எண்டுறதும் நமக்குத் தெரியாது.” என்றவரின் விழிகள் மனைவியை ஊடுருவியது.
என்னவோ அவன் நெஞ்சைத் திறந்து பார்த்துவிட்டு வந்து கதை சொல்லுகிறவர் போல் சொன்ன கணவரைப் பேச்சற்றுப்போய் பார்த்துக்கொண்டிருந்தார் புஸ்பவதி. இதுதானே அவர் மனதிலும் அவன் சொல்லும்போது நிரடியது.
“என்னப்பா பயம் காட்டுறீங்கள்?”
“என்னத்துக்கு பயம்? அவனுக்கு வயசு காணும். நல்லது கெட்டதை யோசிக்கவும் தெரியும். இப்பவும் அவன் ஒண்டும் முடிவா சொல்ல இல்ல தானே. யோசிக்கிறான் போல. யோசிச்சு முடிவு எடுத்து உன்னட்ட சொன்னா அதை ஏற்றுக்கொள்ளுற நிலையில நீ இருக்கவேணும். பிறகு, அந்தநேரம் எதையும் குழப்பக்கூடாது. அதுக்குத்தான் இப்பவே நான் இதை உனக்குச் சொல்லுறன்!” நிதானமான குரலில் மனைவியிடம் எடுத்துரைத்தார் திருநாவுக்கரசு.
“என்னவோ போங்கோப்பா. எனக்கு ஒண்டுமா விளங்கேல்ல. ஒரு பேரப்பிள்ளையை பாக்கிறதுக்கு படாத பாடு படவேண்டிக் கிடக்கு!” என்று அலுத்தபடி சரிந்துகொண்டார் புஸ்பவதி.

