ரோசி கஜனின் மீரா 9 – 1

9

 

 

 

மூடியிருந்த கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தவள், ‘இருபத்திநாலு மணித்தியாலமும் பிஸியான ஆள் எங்கயாவது நிற்கிறானா என்ன?’ மனத்தில் முணுமுணுப்போடு கடையை ஆராய்ந்தாள்.

அங்கேயோ, அவள் தேடலுக்கு விடை கிடைக்கவில்லை.

வாயிலின், ஒரு புறமாக இருந்த இரு கவுண்டர்களிலும் வாடிகையாளர்களோடு மும்முரமாக நின்ற இளம்பெண்களைப் பார்த்தபடி முன்னேறியவள், சற்றே தள்ளி, பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தவனை நோக்கி நகர்ந்தாள்.

இவள், அவனை அணுகும் முன்பே, ஒரு முதியவர் அவனிடம் எதையோ கேட்க, அவரோடு நடந்தான் அவன்.

“பச்!”

மூன்று பிரிவுகளாகப் பிரித்து நீளவாக்கில் இருந்த கடையை ஒரு சுற்றுச் சுற்றி வந்தாள், மீரா.

பார்த்ததும் பார்மஸி போன்றிருந்தாலும், சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள், வீட்டுப்பாவனைக்கான மின் உபகரணங்கள், பதப்படுத்திய உணவு வகைகள், அவசரத்துக்குத் தேவைப்படும் வீட்டுப்பாவனைப் பொருட்கள், அலங்காரப்பொருட்கள், ஒரு பகுதியில் ஆடைகள் என்று எல்லாமே இருப்பதையும், ஆறு ஏழு ஆட்கள் மும்முரமாக வேலையில் நிற்பதையும் அவதானிக்க முடிந்தது.

‘ஹ்ம்…அப்ப உண்மையாவே பிஸி தான் போல! அதோட, பக்கத்தில ரெஸ்ட்டோரண்ட் கணக்கு வழக்கெல்லாம் இவன் தான் பார்ப்பானாமே! அதுதான் ஃபோனை எடுக்கேல்லையோ!’

அவன்பால் இருந்த மனச்சுணக்கத்தைப் போக்க நினைத்தாளோ என்னவோ, அவளுள்ளம் இப்படியும் எண்ணிக்கொண்டது.

மறுகணமே, ‘எது எப்பிடி எண்டாலும் ஒரு மெசேஜ் தட்டவுமா நேரம் இருந்திருக்காது?’ சுணக்கத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டவள், கடையின் கடைசிப்பகுதியில் இருந்த பெரிய சிவப்புக்கதவைத் திறந்து வெளிப்பட்ட பையனை நோக்கி விரைந்தாள்.

“எக்ஸ்கியூஸ் மீ!” என்று தன்னருகில் வந்து நின்றவளை, ‘என்ன விசயம்?’ என்பதாகப் பார்த்தான், அவன்.

“ஜோரிக் இருக்கிறாரா?”

“ஜோரிக்? நீங்க?”

‘நான் அவரிட ஃப்ரெண்ட் எண்டு சொல்லவா முடியும்? அப்பிடி இருந்தா இவனிட்ட வந்து கேட்டுக்கொண்டா நிற்பன்?’

ஜோரிக் மீதே விசனம் கொண்டாள், மீரா.

“நான் ஆரெண்டு சொன்னால்தான் அவர் இருக்கிறாரா எண்டு சொல்வீங்க போல!” என்றவள், கைப்பேசியை எடுத்து அதில் ஜோரிக்கின் இலக்கத்துக்கு அழைக்க முனைந்தாள்.

“அவர் உள்ளுக்க தான் இருக்கிறார். சாப்பிடப் போறார், அதுதான் கேட்டன்.” இவளை விடவும் சிலவருடங்கள் சிறியவனாக இருப்பான், அந்தப் பையன். இப்போதுதான் வேலைக்கு வந்தானோ என்னவோ! ஒருவித பதற்றத்தோடுதான் பதில் சொன்னான்.

“ஓ! உள்ள இருக்கிறாரா? சரி, நான் பார்த்துக் கொள்ளுறன்; நன்றி!” என்றவள், அக்கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தாள்.

கதைத்துக் கொண்டிருக்கையில் அவள் இப்படி நுழைவாள் என்று அவனே எதிர்பார்க்கவில்லை போலும்.

“கொஞ்சம் நில்லுங்க!” அவதியாகப் பின்னால் நுழைந்தான்.

இப்போது இவள் முறை!

“என்ன?” என்ற பார்வையோடு கேட்டும் வைத்தாள்.

“இங்க எல்லாம் வெளியாட்கள் வரக்கூடாது. வேலை செய்யிறவே மட்டும் தான்!” என்றவன், “அங்க வாசலில எழுதிப்போட்டும் இருக்கு!” தன்மையாகச் சொன்னான். ஆனாலும், தொடர்ந்து உள்ளே செல்லாது வெளியில் வந்துவிடு என்பதாக நின்றான், அவன்.

இலேசாக முறுவலித்தாள், மீரா.

“அதை நானும் வாசிச்சன். ஜோரிக்கைச் சந்திப்பதற்குத்தானே போறன்; அவன் ஒண்டும் சொல்லமாட்டான்.” என்றவள், மீண்டும் நடக்க எத்தனிக்க, “டேமியன், இங்க நிண்டு என்ன செய்யிற? அதுசரி, இவர் ஆர்? இங்க வெளியாட்கள் வரக்கூடாது எண்டு உனக்குத் தெரியாதா?”

கடிந்து கொண்டபடி உள்ளிட்டான், ஒரு நடுத்தர வயதுள்ளவன்.

‘கடையைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்பவனோ!’ அவன் தோரணை அப்படித்தான் இருந்தது.

கடைப்பையனோடு கதைத்தாலும் அவன் பார்வை மீராவை அளவிட்டது; அதுவும் ஒரு கண்டிப்போடு!

“ஜோரிக்கைச் சந்திக்க வேணும் எண்டவர்; கதைச்சுக் கொண்டிருக்கேக்கயே உள்ள வந்திட்டார்.” தடுமாறினான் அந்தப் பையன்.

“நீ போய் உன்ர வேலையைப் பார்!” அவனை அனுப்பிய வேகத்தில், “இங்கெல்லாம் வெளியாட்கள் வரக்கூடாது, வெளியில வந்து நில்லுங்க. உங்கட பெயர் சொல்லுங்க, அவரிட்ட சொல்லுறன்.”

கதவைத் திறந்து பிடித்தபடி அவன் சொன்ன தோரணையில் முகம் சுண்டிப்போனாலும் சமாளித்துக் கொண்டாள், மீரா.

“இப்ப என்ன இங்க இருந்து எதையாவது களவெடுத்திருவன் எண்டு பயப்படுறீங்களா? அப்பிடியெல்லாம் எதையும் திருடிக்கொண்டு போகமாட்டன்.” கேலியாகச் சொல்லிக்கொண்டே உள்ளே நகர முயன்றவளை, கரம் நீட்டித் தடுத்தான், அவன்.

“நானும் அப்பிடிச் சொல்லேல்ல. இங்க வெளியார் வாறதில்ல, அவ்வளவும் தான்.” கண்டிப்போடு சொல்லி, வெளியே போ என்ற ரீதியில் கைகாட்டினான்.

அவமானமாகிப் போனது அவளுக்கு! அவளும் தான் என்ன உரிமையில் அப்படி உள்ளிட்டாள்? யாரைத் தேடி வந்தாளோ அவன் இக்கடையின் உரிமையாளன் தான். அதற்காக!

‘எனக்கு இது தேவைதானே? ஃபோன் பண்ண எடுக்கேல்ல. மெசேஜூக்குப் பதிலில்ல. பிறகு ஏன் இங்க வந்தன்?’

தன்னைத்தான் திட்டிக்கொண்டு வெளியேற ஒரு எட்டு எடுத்து வைத்திருப்பாள், “மீரா!” என்ற குரல் நின்று திரும்ப வைத்தது.

ஜோரிக் தான், இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்; ஒரு வேக நடையில்!

அப்படியொன்றும் அதிக நாட்கள் இவனோடு பழகவில்லை. நட்புப் பாராட்டவில்லை. ஆனாலும், ஏனோ அவள் விழிகளில் மெல்லிய நீர் படலம்.

அவளையே பார்த்தவாறு வந்தவன் என்னவோ இயல்பாக இருப்பது போலிருந்தாலும், அவளை அங்கு எதிர்பாராது சந்தித்த வியப்பு விழிகளில் தெரியாதில்லை.

நடந்ததை ஊகித்திருப்பான் போலும்.

“நான் பார்த்துக் கொள்ளுறன்.” கடைப்பொறுப்பாளர் முதுகில் தட்டி அனுப்பி வைத்தவன், “நீ வருவ எண்டு எதிர்பார்க்கவே இல்ல. வா!” என்றபடி உள்ளே நடந்தான்.

அவள் அசையவில்லை. இப்போது அவன் பின்னால் சென்று அவனோடு அளவளாவும் மனநிலை அவளை விட்டுப் போயிருந்தது.

“சொறி மீரா! நீ கோல் பண்ண பண்ண எடுக்கேல்ல. மெசேஜ் பார்த்தன், பிறகு பதில் போடலாம் எண்டு விட்டிட்டு மறந்தே போய்ட்டன்.”

நெஞ்சறியப் பொய் சொன்னபடி திரும்பியவன், அவள் அப்படியே நிற்கவும், கணம் தாமதித்தவனின் விழிகள் அவள் விழிகளில் ஊன்றிப் படிந்தன.

அவள் அப்போதும் அசையவில்லை. வெளியேறும் முடிவெடுத்துத் திரும்ப எத்தனிக்க, விறுவிறுவென்று அவளை நெருங்கினான், ஜோரிக்.

“மீரா, அவே ஏதாவது சொன்னவையா? அவேக்கு நீ ஆரெண்டு தெரியாதுதானே? சொறி மீரா! வா…உன்னை அவேக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறன்.”

அவளின் கரத்தைப் பற்றிய வேகத்தில் வெளியே அழைத்துச் சென்றவன், “ஜோன்!” அந்த நடுத்தர வயதுள்ளவனை அழைக்க, விறுவிறுவென்று வந்தான், அவன்.

இவர்களின் பார்வை வட்டத்தில் நின்ற மற்ற வேலையாட்கள் பார்வையும் இங்கேதான்.

“இவள் மீரா, என்ர ஃப்ரெண்ட்; அதோட, தாத்தா பாட்டிக்கு மிகவும் வேண்டியவள்.” கணீரென்று அறிமுகம் செய்து வைத்தான்.

“இதுக்கு முதல் இங்க வந்து நான் காணேல்ல ஜோரிக், அதுதான் உள்ள விடேல்ல.” என்றான், ஜோன்.

“அதில ஒரு குறையுமில்ல ஜோன். இப்ப ஆரெண்டு தெரியும் தானே?” அவன் சொல்லி முடிக்க முதல், சினேக முறுவலோடு மீராவை ஏறிட்டான் அவன்.

“ஹாய், நான் ஜோன்; இந்தக் கடையின் மனேஜர்.” கரம் நீட்டினான்.

“நான் மீரா…” வருவித்த முறுவலோடு கரம் பற்றிக் குலுக்கியவள், “ம்ம்… சரி வா.” என்று நடந்தவனைப் பின் தொடர்ந்தாள்.

“பெரிசா அறிமுகம் செய்து வைக்கிறானாம். இவன்ட கடையில வேலை செய்யிறவேட்ட அறிமுகம் செய்து வைக்கேல்ல எண்டு ஆர் இப்ப அழுதவே?”

தமிழில் முணுமுணுக்க, முறுவலோடு பார்த்தவன், “நான் இனித் தமிழ் படிக்க வேணும் போல!” கேலி!

பதில் எதுவும் சொல்லாது ஒரு பார்வை மட்டும் பார்த்தாள், அவள்.

“இண்டைக்கு என்ன கம்பசுக்குப் போகேல்லையா?”

“போயிட்டுத்தான் வாறன்.”

“ம்ம்…இப்பிடி வா!” என்றபடி நடந்தவன், “இது தாத்தாவேட ரெஸ்ட்டோரண்ட் பின்பகுதி. கிச்சன் உனக்குத் தெரியும் தானே? அதுக்கு அடுத்ததா இருக்கிற பகுதி. நான் இந்தக் கடையை வாங்கினோன்ன ரெண்டும் பக்கம் பக்கம் எண்டதால இடையில இருந்த சுவரை எடுத்திட்டன்.” என்றபடி முன்னேறினான்.

“சாப்பிடுவம் எண்டு வெளிக்கிட்டன், அப்பத்தான் உன்ர குரல் கேட்டுச்சு!” அங்கிருந்த மேசை மீதிருந்த உணவுப் பார்ஸலை எடுத்துக் கொண்டவன், “ஆன்டனி!” சற்றே பெரிதாக அழைக்க, ரெஸ்டாண்டில் இருந்து ஒருவன் எட்டிப் பார்த்தான்.

மீராவுக்கும் நன்கு பரீட்சயமானவன் அவன்.

“ஹாய் மீரா!” என்றவாறே இவர்களை நோக்கிவர, “சீ பூட் பிட்ஸா ஒண்டு மேல வீட்டுக்கு அனுப்பி வை!” என்றதும், “மீராவுக்கா?” என்றான், அவன்.

“இல்ல இல்ல, எனக்கு ஒண்டும் வேணாம் ஜோரிக்.” என்று அவள் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாது, “ஓம்; மீராவுக்குத்தான்.” என்றவன், “வா…” என்றபடி அருகிலிருந்த படிகளால் மேலே ஏறத்தொடங்கிவிட்டான்.

கணம் தாமதித்தவள், “எப்பிடி இருக்கிற ஆன்டனி? பீட்டர் வந்திட்டாரா?” அவனிடம் நலம் விசாரித்துவிட்டு, “அவர் இன்னும் வரேல்ல.” என்றதும், படிகளால் ஏறி மறைந்துவிட்டவனைப் பார்த்துவிட்டு, விடைபெற்று படிகளால் ஏற, மேல் படியில் இவளுக்காகக் காத்து நின்றவன், இவளைக் கண்டதும் முன்வாயிலைத் திறந்தான்.

“இது தான் உன்ர வீடா?”

“ம்ம்…ஆறு மாசங்களுக்கு முதல் தான் வாங்கினன். அதுவரைக்கும் கீழ இருந்த ரூமிலதான் அநேகம் தங்குவன்.” என்றபடி, “உள்ளுக்கு வா!” என்று முன்னே சென்றவனைத் தொடர்ந்த மீராவின் விழிகள் சுற்றிச் சுழன்றன.

error: Alert: Content selection is disabled!!