ரோசி கஜனின் மீரா 9 – 2

சிறு வராண்டா; அதைக் கடந்ததும் சிறு வரவேற்பறை; அதன் வலது பக்க மூலையில் நான்கு பேர் அமரக்கூடிய வகையிலான உணவு மேசையொன்று போடப்பட்டிருந்தது. எதிரே, ஒரு இரட்டைச் சோஃபாவும் அதன் இருமருங்கிலும் ஒவ்வொரு ஒற்றைச் சோஃபாக்களும்; அவற்றுக்கு எதிரேயிருந்த சுவரில் தொலைகாட்சி என, கன கச்சிதமாக இருந்தது அவ்விடம்.

கையிலிருந்த உணவுப் பையை மேசையில் வைத்துவிட்டு, “உட்கார் மீரா, இதோ வாறன்.” எதிரே இருந்த சிறு சமையலறைக்குள் சென்று, இரு உணவுத் தட்டுகள், கத்தி, முள்ளுக்கரண்டி, கரண்டி என, உணவுண்பதற்குத் தேவையானவற்றைக் கொண்டுவந்து வைத்தான், ஜோரிக்.

“நல்ல பசி, காலமையும்(காலையிலும்) சாப்பிடேல்ல.” தண்ணீர் நிறைந்த ஜக்கையும் இரு கிளாஸ்களையும் கொண்டுவந்து வைத்துவிட்டு, அவளுக்கு எதிரிலிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், “கை கழுவிறது எண்டா அந்தா அங்க கிச்சன் இருக்கு, கழுவீட்டு வா!” என்றபடி, பார்சலை பிரித்தான்.

“எனக்குப் பசியில்ல ஜோரிக். சொல்லாமல் கொள்ளாமல் வந்து உன்ர சாப்பாட்டு நேரத்தக் குழப்பீட்டன் போலக் கிடக்கு, நீ சாப்பிடு!” என்றாள் அவள்.

மிக மிக இயல்பாக, காலம் காலமாகப் பழகிய உணர்வொன்று தம்மிடையே நிலவுவதை அவளைப் போலவே அவனும் உணர்ந்திருக்க வேண்டும்.

ஒரு கணம் அவளையே இமைக்காது பார்த்தான். ஆழ்ந்த பார்வை. ஒரேயொரு கணம்தான், மறுநொடி, பார்வையை உணவுப் பார்சலில் பதித்தபடி, “இப்ப சாப்பாட்டு நேரம் தானே? நீயும் சாப்பிட்டிருக்க மாட்ட. அப்பிடித்தானே? பிறகு, என்னோட சேர்ந்து சாப்பிடுறதில என்ன பிரச்சினை?” என்றான், மீண்டும் அதே பார்வையோடு.

“நான் இப்பத்தான் வெளியில இருந்து வந்தன். சைனீஸ் வைட் ரைஸ்…ஹ்ம்…மட்டன் சாப்பிடுவ தானே? கொஞ்சமாச் சாப்பிடு. உன்ர பிட்ஸா வந்திரும்.”

அவளுக்குப் பரிமாறிக் கொடுத்துவிட்டுத் தனக்கும் பரிமாரியவன், “ம்ம் சாப்பிடு! ஆறிப் போகப் போகுது.” உண்பதில் மும்முரமானான்.

சிலகணங்கள் அவனையே பார்த்திருந்தவள் இதழில் அழகிய இளமுறுவல்.

ஏன்? எதற்கு? என்ற காரணமெல்லாம் கேட்டால் அவளுக்கே தெரியவில்லை. ஆனால், இதுவரையிலும் இல்லாத புதுவகை அனுபவம் இது!

ஆரம்பத்திலிருந்தே இவன் அறிமுகம், புத்தம் புதிதான உணர்வுகளை அறிமுகப்படுத்த விளைகின்றதே!

அவ்வளவாகப் பழகாதவன், பார்த்ததும் வெறுப்பை உமிழ்ந்து அதையே எதிரொலியாக வாங்கிக்கொண்டவன். அன்று டோவர் நிகழ்வின் போது எவ்வளவு திட்டியிருப்பாள்!? அதுவெல்லாம் எப்போது எப்படித் தலைகீழானது?!

ஆகி இருக்கின்றதே! இதுவரையிலும் எங்கு போவதென்றாலும் தாய்க்குச் சுருக்கமாக ஒரு மெசேஜ் தட்டி விட்டுவிடுவாள்.

இன்றோ, மூச்சும் விடவில்லை. விரிவுரை இல்லை என்று தெரிந்ததும், நண்பர்களுக்குக் கொடுக்கவென்று வாங்கிய கல்யாண அழைப்பிதழ்களில் எஞ்சியிருந்த ஒன்றில் அவன் பெயரை எழுதியவள், சற்றும் தாமதியாது இங்கு வந்திருந்தாள்.

சட்டென்று நிமிர்ந்தான் ஜோரிக். தன்னையே பார்த்திருந்தவள் பார்வை, அவள் உதடுகளில் நெளிந்த கவர்ந்திழுக்கும் முறுவல், சற்றே தடுமாறிவிட்டான் தான். ஆனாலும் சமாளித்துக் கொண்டான்.

“சாப்பிடு மீரா, நல்லா இருக்கும். நம்பிச் சாப்பிடு!” மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான்.

“ம்ம்…” தானும் உண்ணத் தொடங்கினாள், அவள். அவளுக்கும் பசித்தது தான். ஆனாலும் வயிற்றை விட மனம் இனிதாக நிரம்பியது போலுணர்ந்தாள்.

இவர்கள் உண்டு முடிக்க முன்னரே திறந்திருந்த கதவில் தட்டியபடி வந்து நின்றான், ஆன்டனி.

“உள்ளுக்கு வா ஆன்டனி. நன்றி நன்றி. இப்பிடி வை.” பிட்ஸா வைக்க இடம் ஒதுக்கிக் கொடுத்தான். அவன் வைத்துவிட்டு விடைபெற்றுச் சென்றபின், “உனக்கு ரைஸ் பிடிக்கேல்ல எண்டால் அப்பிடியே வச்சிட்டு இதைச் சாப்பிடு!” என்றான்.

“இல்ல…நல்லா இருக்கு. அதோட, தட்டில் பரிமாறிய சாப்பாட்டைச் சாப்பிட்டு முடிக்கேல்லயோ என்ர அம்மா உண்டு இல்லையென்றாக்கி விடுவார் தெரியுமா? ஒரு பருக்கையும் வீசக் கூடாதுதெண்டு சின்ன வயசிலேயே கட்டளை!”

முறுவலோடு சொல்லிக்கொண்டே, தட்டில் இருந்ததைச் சாப்பிட்டு முடித்தாள்.

“நல்ல பழக்கம். எத்தின பேர் ஒரு வாய்ச் சாப்பாடு கிடைக்காதா எண்டு ஏங்கிக் கொண்டிருக்கீனம்? சாப்பாட்ட வீணாக்கக் கூடாது எண்டது ஒவ்வொருவரும் சின்ன வயசிலிருந்து பழக வேண்டிய பழக்கம் தான்.” என்றுவிட்டு எழுந்து சென்று, இன்னொரு தட்டைக் கொண்டு வந்து வைத்தவன், பீட்ஸாவில் ஒரு துண்டை எடுத்தும் வைத்தான்.

“நானே எடுப்பன் ஜோரிக், நீ சாப்பிடு!” என்றவள், பீட்ஸாவை உண்ணாது பார்த்திருந்தாள்.

“ரெஸ்ட்டோரண்டுக்கு வந்தால் சண்டைபோட்டுச் சாப்பிடுவ, இப்ப என்ன பார்த்துக் கொண்டிருக்கிற?”

இயல்பாகச் சொன்னவனை, வியப்போடு பார்த்தாள் அவள்.

“நாங்க சண்டைபோட்டுச் சாப்பிடுறது உனக்கு எப்பிடித் தெரியும்?” ஒருமாதிரிக் குரலில் கேட்டுவிட்டாள்.

“அதுவா?” சற்றே தடுமாறிவிட்டான், ஜோரிக்.

“இல்ல…ரெஸ்ட்டோரண்ட், கடை ரெண்டிலும் உள்ள கமராக்களை என்ர ரூமில…கீழ இப்ப வரேக்க சாப்பாடு வச்சிருந்து எடுத்திட்டு வந்தனே, அந்த ரூமில இருந்து பார்க்கலாம்.”

“ஓ!”

“அந்த ‘ஓ’ அவனுக்கு என்ன உணர்த்தியதோ, அவளைச் சிறு சிரிப்போடு பார்த்துவிட்டுக் கேலியாக ஆரம்பித்தான்.

“உன்னைப் பார்க்க வேணும் எண்டெல்லாம் பார்க்க இல்ல மீரா. நீதான் பார்க்க வச்சனி. என்ர இடத்தில ஆர் இருந்திருந்தாலும் பார்த்திருப்பீனம்.” என்றதும் மீராவின் விற்புருவங்களிரண்டும் மேலேறி இறங்கின. விழிகளிலும் கேலி!

அவள் பாவனையைப் படித்தவன், “நம்பேல்ல என்ன நீ? ரெஸ்ட்டோரண்ட்டுக்கு வந்தா எண்டைக்காவது அமைதியா இருந்து சாப்பிட்டுட்டுப் போயிருக்கிறீங்களா? இல்லையே! எவ்வளவு கலாட்டா? போதாக்குறைக்கு சமையலறை வரைக்கும் போய், உங்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து, அங்க வேலை செய்யிற ஆட்களையும் குழப்பி, இப்பிடி நீ நடந்து கொண்டதால தான் பார்க்க வேண்டி வந்தது.”

நீண்ட விளக்கம் கொடுத்தவனை, நன்றாகவே முறைத்தாள் அவள்.

“அது என்ன உன்ர ரெஸ்ட்ரோரண்ட்டா? இல்லையே! என்ர ஃப்ரெண்ட்டுக்குச் சொந்தமானது.” நிமிர்வாகவே பதில் சொன்னவளையே பார்த்தவன், “அப்ப நான் உன்ர ஃப்ரெண்ட் இல்லையா? இப்பத் தானே ஃப்ரெண்ட் எண்டு அறிமுகம் செய்து வச்சன்!” என்றான், அடக்கிய முறுவலோடு!

“அது மனத்திலிருந்து சொல்ல வேணும். சும்மா…கடனே எண்டு வார்த்தைக்காக இல்லை.”

இப்போது முறைப்பது போலப் பார்த்தான், அவன்.

“நானும் மனத்திலிருந்துதான் சொன்னன் மீரா.” என்றுவிட்டு, சட்டென்று பேச்சை மாற்றினான்.

“இந்தா இதையும் சாப்பிடு.” பீட்ஸாவை அவள் புறம் தள்ள, “போதும் போதும் நீ சாப்பிடு!” அவன் புறமாகத் தள்ளிவைத்துவிட்டு, தன் தட்டில் இருப்பதை உண்டாள், அவள்.

பொதுவாகக் கதைத்தபடி உண்டுவிட்டு மேசையை ஒதுக்கியவனோடு தானும் சேர்ந்துகொண்டவள், ஈரக்கரத்தைத் துண்டில் துடைத்துவிட்டு வந்து முதல் அமர்ந்திருந்த அதே கதிரையில் அமர, அங்கு கிடந்த சோஃபாவில் சென்று அமர்ந்தான், ஜோரிக்.

“ம்ம்..சரி சொல்லு, என்ன திடீரென்று என்னத் தேடிக்கொண்டு வந்திருக்கிற?

பதில் சொல்லாது முறைத்தாள், அவள்.

“ஹா…ஹா…” வாய்விட்டுச் சிரித்தான், அவன்.

“கோவிக்காத மீரா, உண்மையாவே வேலை வேலை…”

“அது ஒரு சாட்டு! நீ வேண்டுமெண்டே எடுக்கேல்ல. பதிலுக்கு ஒரு மெசேஜ் போட அப்பிடி என்ன மணித்தியாலக் கணக்கா பிடிக்கும்?” இடையிட்டாள்.

“அதுதான் சொறி எண்டனே! உண்மையாவே வேலையில தான் மறந்திட்டன்.”

“நம்பீட்டன்!”

“நீ நம்பினாலும் நம்பேல்ல எண்டாலும் அதுதான் உண்மை!” என்றவன், அவள் பார்வையைத் தவிர்த்துத் தொலைகாட்சியை உயிர்ப்பித்தான்.

“ம்ம்…பிறகு சொல்லு. கேட்க நினைச்சு மறந்து போனன், நீ தங்கியிருந்த அறை எல்லாம் திருத்தியாச்சா? அங்கதான் இப்பவும் இருக்கிறியா?

“திருத்தியாச்சு; ஃப்ரெண்ட்ஸ் வந்திருக்கீனம். நான் கலியாணம் முடியும் வரைக்கும் வீட்டில இருந்து வந்து போறன்.”

“ஓ! ஒவ்வொருநாளுமா? வீண் அலைச்சல்.”

“அது எல்லாம் பரவாயில்ல. வீட்டில எல்லாரும் ஒண்டா நிற்க எனக்கு இங்கு நிண்டால் விசரே வந்திரும். அதனால தானே அண்டைக்கு அவ்வளவு புயலிலும் வெளிக்கிட்டுப் போனனான்.” என்றவளுக்கு, பதில் சொல்லவில்லை அவன்.

அவனறிய தனிமைதான் அவனுக்கு எல்லாமே! அப்போ, அவள் சொல்வதை எந்தளவுக்கு விளங்கிக் கொள்வது?

தன் கைப்பையிலிருந்து கல்யாண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு எழுந்து போய் அவனிருந்த சோஃபாவின் மறுகரையில் அமர்ந்துவிட்டு அழைப்பிதழை நீட்டினாள், மீரா.

“என்ன இது…கார்ட்?” வாங்கிப் பிரித்தவன், கேள்வியாகப் பார்த்தான்.

“அதுதான்…பாட்டி வீட்டில குடுத்தியே!”

“அது நான் குடுக்கேல்ல, மாமா ஆட்கள் குடுத்தவே. இது…” என்றவள், ஒருகணம் அவனையே பார்த்தாள்.

“இது என்ர ஃப்ரெண்டுக்கு நான் தாறது. வருவ தானே?”

தலையை ஒருபுறமாகச் சரித்து, ‘கட்டாயம் வரவேணும்.’ என்ற கட்டளை…அன்புக் கட்டளை விழிகளில் மின்னக் கேட்டவளுக்கு, பதில் சொல்லத் தெரியாது அமர்ந்திருந்தான், அவன்.

error: Alert: Content selection is disabled!!