Skip to content
அவ்வீட்டில், காயுவின் இறப்பின் பின்னர் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்த உயிர்ப்பு அப்படியே உறைந்து நின்றாற் போலிருந்தது. முதல் நாள், காயுவின் அன்னை கதைத்த வார்த்தைகளும் அவரின் துக்கமும் துயரமும் அப்படியே பசுமையாக இருக்கையில் …
செய்தி கேட்ட மறுநிமிடம் புறப்பட்ட காயுவின் சகோதரன் குடும்பத்தோடு சரசுவும் சென்றுவிட, வலு சோர்வாக உள்ளே வந்தான், பூபாலன். நடப்பை அறியாத குழந்தை, “ப்பா…ப்பா…” தத்தி தத்திப் பின்னால் வர அப்படியே அணைத்துத் தூக்கிக்கொண்டு வரவேற்பில் கிடந்த ஒற்றைச் சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
“நான் கிழவி இருக்க, நீ ஏண்டியம்மா அவசரப்பட்டுட்ட? பெத்த வயிறு எரியுதே அம்மாச்சி!” இங்கு வந்து நின்ற மூன்று நாட்களில் வார்த்தைக்கு வார்த்தை புலம்பியிருந்தார், காயுவின் அன்னை. இன்னமும் அவர் குரல் ஒலிப்பதாகப்பட்டது அவனுக்கு.
அப்படியொன்றும் பெரிய வயதும் இல்லை; அறுபத்தியிரண்டு முடிந்திருந்தது; மகளின் இழப்பு ஒரு இருபது வருடங்களை அதிகரித்து விட்டுட்டு. பூபாலனின் கண்களால் துளிர்த்த நீர் உருண்டு தெறித்தது. மாமி என்றாலும் அவனுக்கு ஒரு தாயாக உணர வைத்தவர்.
தகப்பனின் மீசையைப் பிடித்து இழுத்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, அப்படியான நேரங்களில் தகப்பன் கிச்சுக்கிச்சு மூட்டி விளையாடுவதை எதிர்பார்த்தான். அவனோ, மகன் நினைவும் இல்லாமல் இருந்தானே! பட்டென்று ஒரு அடி போட்டான், ஆதித். அதிர்ந்த தந்தையின் கண்களருகில் சென்று உற்றுப் பார்த்தான்.
“ரௌடி!” மகனை இரு கைகளுக்கும் அடக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் அந்தக் குழந்தையின் தொடுகை மூலம் இழப்புகளில் நொந்து துடிக்கும் இதயத்துக்கு மருந்திட முனைந்தான்.
“தம்பி நான் சொல்லித்தான் உங்களுக்கு விளங்கோணும் எண்டு இல்ல. அவளும் நீங்களும் காலத்துக்கும் பிள்ள குட்டிகளோட சந்தோசமா இருப்பீங்க எண்டு நினைச்சு இருக்க…” அழுதபடி ஆரம்பித்திருந்தார், காயுவின் அன்னை.
“தாயில்லாப் பிள்ளைகள் எண்டோ, எங்கட அம்மா மட்டும் இப்ப இருந்திருக்க எண்டோ அவையள ஏங்க வச்சிராதீங்க தம்பி! உங்களக் கெஞ்சிக் கேக்கிறன், கண்ணுக்கு முன்னால நடக்கிறதுகளப் பாத்து நல்ல முடிவா நீங்க எடுக்க வேணும்.”
முதல் நாள் இவனிடம் தனியாக அவர் சொன்னபோது, முகம் இறுக நின்றிருந்தான், பூபாலன். தளர்ந்து செய்வதறியாது நின்று அரற்றுபவரோடு தர்க்கமோ, விவாதமோ செய்ய அவன் முனையவில்லை.
இருந்த போதும், அவன் மௌனம் தந்த துணிவில், “அந்தப் பிள்ள கயல்…” தொடர்ந்தவரை அதன்பின் கதைக்க விடவில்லை, அவன்.
“உங்களில நான் எவ்வளவு மரியாதையும் அன்பும் வச்சிருக்கிறன் எண்டு உங்களுக்கே தெரியும் மாமி. இந்த விசயமா வேற ஒண்டும் சொல்லிராதீங்க ப்ளீஸ்! என்ர பிள்ளைகள என்னால நல்ல முறையில வளக்க ஏலும் மாமி. வளப்பன், யோசியாதீங்க!” நறுக்கென்று சொல்லிவிட்டு விசுக்கென்று விலகியும் இருந்தான்.
அதன் பிறகு விடைபெறுகையில் கதைத்தது தான். அப்போதுமே தன் மனதை உணர்த்தத் தவறவில்லை, அவர். ‘ஏற்கனவே நொந்து போய் இருந்தவரை நானும் நோகச் செய்திட்டன்’ மனதுள் வருந்தினான், பூபாலன்.
அமைதியாக இருந்த தந்தையோடு இருக்கப் பிடிக்கவில்லை, குழந்தைக்கு. வழுவி இறங்கி குடுகுடுவென்று, உள்ளே வந்த கயலிடம் சென்றான்.
“அப்பா, அம்மம்மாவப் பாக்க நாம போறம் எல்லா?” கண்களில் கசிவோடு வந்தணைந்தாள், லாதி.
குழந்தையைத் தூக்கிக்கொண்ட கயல் சற்றே தள்ளியே நின்றிருந்தாள். அவள் விழிகளிலும் கண்ணீர் தான். நீயும் எனக்கு மகள்தான் என்றவர் அடுத்த நாளே போய்ட்டாரே! கழியும் ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்வில் என்ன மாதிரி விளையாட்டு விளையாடுகிறது. எல்லாம் தெரிந்தவர் நாம், அறிவாளிகள் என்றெல்லாம் நெஞ்சை நிமிர்த்தும் நம் இறுமாப்புக்கு என்னமாதிரி அடிபோட்டுவிடுகின்றது.
கண்ணீரோடு நின்றவளுக்கு, “வந்த களை தூங்கப் போறன்.” என்றுவிட்டுப் படுத்தவர், “விடிய எழும்பி வரேல்ல எண்டு பார்த்தா…நம்மள விட்டுப் போய்ட்டார்!” என்று, காயுவின் தங்கை சொன்னது பொய்யாக இராதா என்றிருந்தது.
“அப்பா எப்ப வெளிக்கிடுறம்? ” லாதி.
“போகோணும் செல்லம்.” சொன்னவன், பார்வை கயலிடம்.
“இப்பவே விசாக்கு அப்ளை பண்ணுவம் கயல்.” எழுந்தான்.
“இல்ல…நான்…என்ன நினைக்கிறன் எண்டா, இனி எனக்குக் கனடா விசா எடுத்து…அதும் இந்தக் கொரோனா நேரம் தருவாங்களோவும் தெரியாது. வீண் இழுபறி! நீங்களும் லாதியும் போய்ட்டு வாங்கோவன். ஃப்ளைட்டில எண்டாலும் சரிதானே. நானும் குட்டியனும் இங்க இருக்கிறம். ஆன்ட்டியே இல்லையாம் பிறகு என்ன?”
“நானும் அப்பாவும் மட்டுமா? நோ நோ ஸ்வீட்டி நீங்களும் வர வேணும். ப்ளீஸ்!”
“ஏன் கயல்? அவா உம்மையும் தன்ர மகள் எண்டு எத்தனையோ தடவைகள் சொல்லி இருந்தவா. உண்மையில உம்மில நல்ல விருப்பம். கடைசியாப் பாக்க வேணும் எண்டில்லையா உமக்கு?”
சிறிது நேரம் எதுவும் சொல்லவில்லை, அவள். அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள் அருகில் குழந்தையை அமர்த்தி அங்கிருந்த விளையாட்டுச் சாமானை எடுத்துப் போட்டாள். அவனோ, அவள் மடிக்கு மாறி அமர்ந்து அந்த விளையாட்டுப் பொருளை தன் மடியில் இருத்தி விளையாடத் தொடங்கினான்.
“சொல்லுமன்.” பூபாலன்.
“இல்ல எனக்கு… எனக்கு வர ஒரு மாதிரிக் கிடக்கு. ஆரையும் பெரிசாத் தெரியவும் மாட்டுது.” என்றவளுக்கு, உண்மையாகவே பார்க்கில் போல் யாராவது கேட்டால் என்ற தவிப்பு. சிறிதாகவும் சந்தர்ப்பம் கொடுப்பான் ஏன் என்றும் இருந்தது. ‘இப்பிடியெல்லாம் யோசிக்கிற நீ இங்க தொடர்ந்து தங்கியிருந்ததே பிழை’ மனம் குத்தினாலும் அவளுக்குப் போக வேண்டும் போலிருக்கவில்லை.
“இதென்ன கதை? காயுட தம்பி, தங்கச்சி குடும்பங்கள உமக்கு நல்லாவே தெரியும். பிறகென்ன? கொரோனா எண்டதால பெரிசாச் சனம் வந்து போயும் இராது. நீர் வெள்ளி மட்டும் லீவு எடுத்தாக் காணும், ஞாயிறுருக்கு வந்திரலாம்.”
“அதுமட்டும் இல்ல கயல், உம்மையும் சின்னவனையும் விட்டுப்போட்டு என்னால நிம்மதியாப் போயிட்டு வரேலாது. இந்த நேரம் நாம கார்ல போறது தான் இன்னும் சேஃப். கட்டாயம் போக வேண்டியதால தான் நான் வெளிக்கிடுறன். இல்லாட்டி கடைசிவரை வெளிக்கிடன். என்ன சொல்லுறீர், வாறீர் தானே?”
“எனக்கு இனி விசா கேட்டு பிசிஆர் எடுத்து உங்களுக்கு வீண் மினக்கேடு!”
“பிசிஆர் எல்லாரும் தானே எடுக்க வேணும் …விசா எல்லாம் பெரிய வேலை இல்லை கயல் …”
“இப்ப நான் …” ஆரவம்பித்தவளை ஒரு மாதிரிப் பார்த்தான் அவன்.
“வேற ஏதாவது பிரச்சினையா கயல்? அல்லது…என்னோட …எங்களோட வாறதில உமக்கு விருப்பம் இல்லையா? என்ன எண்டாலும் வெளிப்படையாவே சொல்லும். எப்பவுமே அதுக்கு நீர் என்னட்டத் தயங்கவே தேவேல்ல!”
மளுக்கென்று வழிந்த கண்ணீரை துடைக்கவும் மறந்து ஒரு கணம் அவனையே பார்த்தவள் கண்களைத் துடைத்து விட்டு முறைத்தாள்.
error: Alert: Content selection is disabled!!