“காதல் சரி அதென்ன காயக்காரன்?” ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்ட அழகில் அவள் விழிகளில் மையல் வந்தது.
தன்னை மறந்து அவனையே பார்த்தாள்.
“என்ன?” என்றான் கொடுப்புக்குள் சிரித்தபடி.
ஒன்றுமில்லை என்று வேகமாகத் தலை அசைத்துவிட்டு முகம் திருப்பிக்கொண்டாள் மயூரி. அவளை உணர்ந்தவனாக நெருங்கி அமர்ந்து கரம் பற்றிக்கொண்டான் அவன். தளிர் விரல்களில் மெல்லிய நடுக்கம்.
அதை உணர்ந்தவனின் விழிகளில் சின்னதாய் ஆதங்கம்! என்னிடம் உனக்கு என்ன பயம் என்று கேட்பது போலிருந்தது.
“இப்பயெல்லாம் இரவும் பகலும் இந்தக் கையைப் பிடிச்சுக்கொண்டு இருக்கவேணும் மாதிரி இருக்கு மயூ! என்றைக்குமே விட்டுடாதடா எண்டு மனம் சொல்லுது. உனக்கு மட்டும் ஏன் இவ்வளவு தயக்கம்?” கடலிடம் தன் விழிகளை நிறுத்திக் கேட்டான் அவன்.
“இருக்காதா?” என்றாள் அவள் மனச் சிணுக்கத்தோடு. பெண் மனதின் பதட்டங்களை உணராமல் பயத்தை அறியாமல் இப்படிக் குறைபட்டால் என்ன செய்வாள்?
உரிமையாய் அவள் சிணுங்கியது ஒரு மனக்கிளர்ச்சியை அவனுக்குள் உருவாக்க வேகமாகத் திரும்பி ஆர்வமாய் பார்த்தான் பிரதீபன்.
“நீங்க ஆம்பிள.. தைரியமா நினைச்சதை கதைப்பீங்க செய்வீங்க. ஆனா நான்.. இது.. இப்படி இதெல்லாம் எனக்குப் புதுசு. பழக்கமில்லை…” தன் மனத்தைச் சொல்லமுடியாமல் அவள் தடுமாற அவன் ஆனந்தமாகச் சிரித்தான்.
“என்னவோ நான் மட்டும் இதில எக்ஸ்பேர்ட் மாதிரி சொல்லுறியே மய்யு. நீ சான்ஸ் தந்தா நான் எக்ஸ்பேர்ட் ஆகிடுவன். என்ன தாறியா?” என்றான் கண்ணைச் சிமிட்டி.
“தீபன்!” பொய்யாக அவள் அதட்டியபோதும் அவனுடைய சிரிப்பு அடங்கவே இல்லை. ஆசையாக அவளையே பார்த்தான்.
“சொன்னா அடிக்க வருவாய் மய்யு. இப்ப உன்ன பாக்க எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? அப்படியே உன்ன தூக்கி காத்துக்கூட புகாத மாதிரி எனக்குள்ளேயே வச்சிருக்க வேணும் மாதிரி இருக்கு.” என்று சொல்லும்போதே, அவனை முறைக்க முயன்று தோற்று முகம் இரத்தமெனச் சிவந்துவிட விரல்களை உருவிக்கொண்டு எழுந்துவிட்டாள் அவள்.
என்ன இவன்? கூச்சமே இல்லாமல். விறுவிறு என்று கடலை நோக்கி நடந்தவளையே இளநகை இலங்கப் பார்த்துக்கொண்டு இலகுவாய் படகில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அவன்.
‘சம்மதம் எண்டு சொல்ல முதலே இந்தப்பாடு படுத்துறான். சொல்லிட்டா.. கடவுளே..’ அந்த நினைவுகளே அவளை இன்பமாய் தத்தளிக்க வைத்தது. கடலையே பார்த்துக்கொண்டு நின்றவள் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தாள்.
இளஞ்சிரிப்புடன் அவளிடம் செல்லாமல் அவளையே பார்த்திருந்தான் அவன். இதைவிட வேறன்ன சம்மதம் வேண்டும் அவனுக்கு? ஆனால், அவள் தெளியட்டும்!
அவளோ தன் படபடப்பும் நடுக்கமும் அடங்கும்வரை அங்கேயே நின்றிருந்தாள். கால்களை நனைத்த அலையின் உற்சாகம் மெல்ல மெல்ல அவளையும் தொற்றிக்கொள்ள, தன்னை மறந்து, காதலோடு தன்னையே பார்த்துக்கொண்டு இருந்தவனையும் மறந்து, அலைகளோடு விளையாடத் தொடங்கியிருந்தாள்.
‘ஆசையா இவளோட கதைப்பம் எண்டு நான் கூட்டிக்கொண்டு வந்தா என்னை அம்போ எண்டு விட்டுப்போட்டு அலையோட விளையாடிக்கொண்டிருக்கிறாள்!’ மெல்லிய பொறாமை வந்தது அவனுக்கு.
“ஓய்! இங்க ஒருத்தன் தனியா குந்திக்கொண்டு இருக்கிறானே. பாவமே அவனோட கொஞ்சநேரம் கதைப்பம் எண்டு ஏதும் ஐடியா இருக்கா இல்லையா? ” கடுப்போடு குரல் கொடுத்தான் அவன்.
அப்போதுதான் அவன் நினைவு வந்து திரும்பிப் பார்த்தாள் மயூரி. அப்போதும் அவனிடம் வந்துவிடவில்லை. “இன்னும் கொஞ்சநேரம்.. பிளீஸ்!” என்று கெஞ்சியவள், அப்படியே அவனை மறந்தும் விட்டிருந்தாள்.
அலையைத் துரத்திக்கொண்டு ஓடுவதும், அது திரும்பி வரும்போது கால்கள் நனைந்துவிடாமல் திரும்பி ஓடி வருவதுமாக இருந்தவளுக்கு, இந்த விளையாட்டுச் சலிக்கவே இல்லையா என்று தோன்றியது அவனுக்கு. ‘டேய் லூசா கண் வெட்டாம அவளையே பாத்துக்கொண்டு இருக்கிறியே.. உனக்கு சலிச்சதா?’ என்று கேட்டது மனச்சாட்சி.
உதட்டினில் சிரிப்பு அரும்ப, அவளிடம் குப்புற விழுந்துகிடக்கும் தன் நிலையைத் தானே ரசித்தான் பிரதீபன்.
“இப்ப நீயா வரப்போறியா இல்ல நான் வந்து தூக்கிக்கொண்டு வரவா?” என்று மிரட்டியபிறகுதான் அவனை முறைத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள் அவள்.
“சொல்லுங்கோ! என்ன கதைக்கவேணும்!”
“காதல் காயக்காரனுக்கு விளக்கத்தைச் சொல்லு!”
இவ்வளவு நேரமும் அதற்கான பொருளை யோசித்துக்கொண்டு இருந்திருக்கிறான்!
உதட்டினில் அரும்பிய சிரிப்போடு, அவர்கள் மோதிக்கொண்டதை அறிந்து, மோதலுக்குப் பிறகு காதல் என்று நந்தினி சொன்னது தொடங்கி, அவளின் காயங்களைக் காட்டி அதைத் தந்தவன் காதல் காயக்காரன் என்று எல்லாவற்றையும் சொன்னவளுக்கு, நந்தினி சொன்னதுபோலவே ஆகிவிட்டதை எண்ணிச் சிரிப்பு வந்தது!
அவனும் அதையேதான் சொன்னான். “சாதாரணமா நடந்த ஒரு ஆக்சிடென்ட்! எங்கட வாழ்க்கையையே மாத்தியிருக்கு என்ன?” என்றான் இளம் முறுவலோடு.
“எண்டாலும் காயக்காரன் எண்டுறது பொருத்தமில்லை மயூ. அண்டைக்கு நீ யாரோ. ஆனாலும் எனக்கு அவ்வளவு கவலையா இருந்தது. இண்டைக்கு நீ எனக்கு உயிர். உன்ன எண்டைக்கும் காயப்படுத்தமாட்டன். என்ன நம்பவேணும் நீ!” அவளின் விரல்களைப் பற்றிக்கொண்டு கண்களில் ஒரு தவிப்போடு அவன் சொன்னபோது வியப்புடன் அவனைப் பார்த்தாள் மயூரி.
சும்மா விளையாட்டுக்கு வைத்த பெயர். அதைச் சாதாரணமாக எடுக்கமுடியாமல் தடுமாறுகிறான்.
அவளை விரும்புவதைக்கூட விளையாட்டுப்போல சொன்னவனுக்கு, அவளின் மீதான அவன் காதலை விளையாட்டாகக் கூட எடுக்க முடியவில்லை. அவனுடைய காதல் தீவிரம் விளங்குவது போலிருந்தது அவளுக்கு.
“உங்களை தெரியாதா எனக்கு? அது சும்மா விளையாட்டுக்கு அவள் சொல்லுறவள். அப்ப உங்கட பெயரும் தெரியாது தானே. அதுல அதையே உங்களுக்கு பெயரா வச்சிட்டம்!” என்றாள் அவனை அமைதிப்படுத்தும் விதமாக.
இந்தளவுக்கு என்னைத் தெரிந்து வைத்திருக்கிறவள், என் கலக்கத்தை கண்களைப் பார்த்தே கண்டுபிடிக்கிறவள் காதலை மட்டும் ஏன் சொல்ல மறுக்கிறாள்? கேள்வியோடு பார்த்தான் அவன்.
அவளுக்கும் அது புரியாமல் இல்லை. பருவமெய்திய நாள் தொட்டு இன்றுவரையில் முதன் முதலாக அவளைக் கவர்ந்த ஆண் அவன்தான். அவனின் சின்னச் சின்ன செய்கையைக் கூட அவள் மனம் ரசிக்கிறது. அவன்பால் அவள் ஈர்க்கப்படுகிறாள். இது காதல் தான். அவள் மனத்துக்குத் தெரிகிறதுதான். என்றாலும், கண்ணுக்குத் தெரியாத பயம் ஒன்று, காதல் என்று சொல்லி அவனுக்கும் அவளுக்குமான ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்துக்குள் நுழைந்துவிடமுடியாமல் அவளை மிரட்டிக்கொண்டிருந்தது.
ஏன் இந்தப் பயம்? அப்படிப் பயந்தால் அவனோடான இந்தத் தனிமையை அவள் அனுமதிக்கக் கூடாது. அதுதானே ஒழுங்கு!
அவனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் யோசிப்பதே அபத்தமாகப் பட்டது. என்ன செய்ய, இதையெல்லாம் மனம் விரும்புகிறது. நடப்பதெல்லாம் சரியா என்று அறிவு கேட்கிறது. மனதும் அறிவும் சண்டையிட்டுக்கொள்ள ஒரு முடிவுக்கு வரமுடியாமல் அவள் திண்டாடுகிறாள்.
இது எல்லாவற்றையும் தாண்டி அம்மாவும் அப்பாவும் பின்னனியில் நின்று அவளைக் கவலையோடு பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். என்ன சொல்வாள்?
“எனக்கு ஒரு அக்காவும் தங்கச்சியும் இருக்கினம் மயூ.” அவன் பேச்சு அவளின் சிந்தனையைத் திசை திருப்பி அவனிடம் கொண்டுவந்தது.
“அவே ரெண்டுபேரையும் நான் பாக்கவேணும். கல்யாணம் செய்துவைக்க வேணும். அதுக்குப் பிறகுதான் எங்களை பற்றி…” என்றவன் அவள் விழிகள் விரிந்ததைக் கண்டு சிரிப்புடன் பேச்சை நிறுத்தினான்.
அவள் சம்மதமே சொல்லவில்லை என்று யோசித்துக்கொண்டு இருக்கிறாள். அவனானால் எதிர்காலம் பற்றி பகிர்கிறானே!
“உனக்குத்தான் உன்ர மனத்தைப்பற்றித் தெரியேல்ல. எனக்குத் தெரியும்!” என்றான் அவன்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். “ஒரு ரெண்டு இல்ல மூண்டு வருசம் போகட்டும் மயூ. அதுக்குப் பிறகு, லைஃப்ல வடிவா(நன்றாக) செட்டில் ஆகிப்போட்டு கலியாணம் கட்டுவோம். அதுவரைக்கும் கூட நீ யோசிக்கலாம்.” என்றான் கடைசியில்.
அவள் முறைக்க அவனோ சிரித்தான்.
அடுத்தநாள் வேலைக்குப் போனவளைப் பிடித்துவைத்து வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டாள் நந்தினி. அன்று தொட்டு இன்றுவரை நடந்த அனைத்தையும் அவள் வாயிலிருந்து பிடுங்கிவிட்டே விட்டாள்.
அதன்பிறகான நாட்கள் அவர்களுக்குச் சொர்க்கமாய் நகர்ந்தன. தினமும் வேலைக்கு அவனே கொண்டுபோய் விட்டான். எப்போதாவது வார இறுதிகளில் கடற்கரையில் போய் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படியான தனிமைகளில் அவளின் விரல்களைப் பற்றுவதையும் பூவைப்போல வருடிக்கொடுப்பதையும் அவன் தவற விடுவதே இல்லை. சில நேரங்களில் ஒவ்வொரு விரல்கள் மீதும் உதட்டினை ஒற்றி எடுப்பான். மனம் மயங்கிக் கிறங்கிப்போகும் மயூரிக்கு.
என்ன பதில் என்று அவனும் கேட்கவில்லை அவளும் மறுக்கவில்லை. அப்போதுதான் அவர்கள் இருவரினதும் வாழ்க்கையையே புரட்டிப்போடும் சம்பவமும் சம்பவித்தது!

