காதல் காயங்களே 16 – 2

“ஐயோ என்ன விடுங்கோ.. என்ர அம்மா! எங்க போயிட்டீங்க.. அம்மா அம்மா! என்ர அம்மா.. என்ன நடந்தது உங்களுக்கு? என்ன விட்டுட்டு எங்க போனீங்க.. ஐயோ இல்ல உங்களுக்கு ஒண்டும் நடக்கேல்ல எழும்புங்கோ.. அம்மா.. எழும்புங்கோ அம்மா. நான் இனி எங்கயும் போகேல்ல. உங்களோடையே இருக்கிறேன். அம்மா.. எழும்புங்கோ அம்மா!” யாராலும் அவளைத் தடுக்கவே முடியவில்லை. அந்த மெல்லிய உடலுக்குள் அத்தனை வலு எங்கிருந்துதான் வந்ததோ? அத்தனை பேரையும் சுழற்றி அடித்துவிட்டு தாயிடம் பாய்ந்து கதறினாள் மயூரி!

 

பார்த்திருந்தவர்களின் விழிகளிலும் கண்ணீர். தாயை இழப்பது என்றால் சும்மாவா? நம்மைப் பெற்று வளர்த்து சோறூட்டி சீராட்டி துணை நின்று சிரித்து விளையாடி நடைபழக்கி பேசக் கற்றுக்கொடுத்து, வாழக் கற்றுத்தந்து என்று ஒரு தாய் ஆற்றாத செயல் என்று ஒன்று உண்டா என்ன? தாயாய், தோழியாய், சேயாய், வேலைக்காரியாய், நம் கோபத்தின் வடிகாலாய் என்று தாய் ஏற்காத பாத்திரமும் உண்டோ?

 

அவளின் அழுகை குறையவே இல்லை. கடைசியாக வந்தபோது, உயிருக்குள் நிரப்பிக்கொள்வது போல தன்னையே பார்த்த அம்மா, கவனமா தைரியமா இருக்கவேணும் என்று சொன்ன அம்மா, நடுங்கும் கைகளால் அவளை வருடிக்கொடுத்த அம்மா.. ஐயோ ஐயோ என்று மனம் கிடந்து துடித்தது.

 

அவள் படுகிற பாட்டில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவளருகில் வந்து அமர்ந்தார் தேவகி.

 

“அம்மாச்சி! அழாதயடி! இருக்கிற காலம் வரைக்கும் நல்ல மனுசன் நல்ல பிள்ளை எண்டு நல்ல வாழ்க்கைதான் வாழ்ந்தவா. இன்னும் நோய் வாட்டி துன்பப்படாமல் சுகமாத்தான் போயிருக்கிறா. நீ அழாதயன. அங்க அப்பாவைப் பார் செல்லம். ஒரு சொட்டுக் கண்ணீர் விடாம பித்துப் பிடிச்சவர் மாதிரி நேற்றுல இருந்து குந்திக்கொண்டு இருக்கிறார்!” என்று சொல்லவும் தான், “அப்பா..!” என்று அழுகையோடு விழுக்கென்று நிமிர்ந்தவளின் விழிகள் அலைபாய்ந்து அப்பாவைத் தேடிக் கண்டு பிடித்து அவர் கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுத்தது.

 

அவளின் தாயின் தலைமாட்டில் விளக்கொன்று ஏற்றி வைக்கப்பட்டிருக்க அதன் அருகிலேயே அமர்ந்திருந்தார் செல்வேந்திரன். அனைத்தையும் பறிகொடுத்த தோற்றம் இன்னுமொருமுறை அவளை உலுக்கியது. பார்வை மனைவி மீதே இருந்தது. சிமிட்டுகிறாரா என்று கண்டு பிடிக்கவே முடியவில்லை.

 

“அப்பா..” தழுதழுத்தபடி அவரிடம் ஓடிப்போய் அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்தாள் பெண். அவரிடம் அப்போதும் அசைவே இல்லை. அவள் முகம் சுருக்கினாலே தாங்காத அப்பா.. அவள் அழுகிறாள் தேற்றாமல் அரவணைக்காமல் உணர்வே அற்றுப்போய் இருக்கிறாரே.

 

“அப்பா..” அச்சத்தோடு பார்த்தாள். அவரின் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினாள். அவளை அவர் உணரவே இல்லை. அவருக்கும் என்னவும் ஆகிவிடுமோ? பயத்தில், கண்ணீர் வடிய, “அப்பா.. என்னை பாருங்கப்பா…” என்று உலுக்கினாள் மயூரி.

 

“ஹா.. என்னம்மா?” என்றவரின் விழிகள் இலக்கற்று அலைபாய்ந்து மீண்டும் மனைவியின் மீதே வந்து நின்றுபோயிற்று!

 

அதிர்ச்சியோடும் பயத்தோடும் அவள் பார்க்க, “எத்தனை வருசம் சொல்லு வாழ்ந்தவே. அதுதான் அவரால இத நம்பேலாதா அதிர்ச்சி!” அவளின் அருகிலேயே நின்ற தேவகி எடுத்துச் சொன்னார்.

 

அதுமட்டுமல்ல, அடுத்து நடக்கவேண்டிய காரியங்களை ஆரம்பிக்கவேண்டி இருந்தது. தகப்பனின் அருகிலேயே இருந்து தனக்குள் மருகிக்கொண்டு கண்ணீர் வடிக்கும் அவளிடம் கேட்கவும் முடியவில்லை. கேட்காமல் இருக்கவும் முடியாதே.

 

மெல்ல அவளின் அருகில் போனார். “அம்மாச்சி.. கொஞ்சம் வாவன்!” என்று அழைத்துக்கொண்டு செல்வேந்திரனின் காதில் விழாத தூரத்துக்குச் சென்றார். எப்படி ஆரம்பிப்பது? என்று அந்த முதிர்ந்த பெண்மணிக்கு கூட விளங்கவில்லை.

 

ஒரு பெரிய மூச்சினை இழுத்து விட்டுவிட்டு, “அடுத்த காரியம் எல்லாம் பாக்கவேணும் மா. ஐயா எல்லாரும் வருவினம்.. ஆரம்பிப்போமா? வெயிலுக்குமுதல் எடுக்கவேணும்..” என்றதும் அவளின் விழிகள் அதிர்ந்து விழிக்க கண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டியது!

 

எடுப்பதா… அம்மாவை எடுத்துக்கொண்டு போவதா?

 

“என்ர செல்லம் அழாதையடி!” என்று அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டார் அவர். “அப்பா பாவம்.. இன்னும் நம்பேலாமா தவிச்சுப்போய் இருக்கிறார். அவருக்கு ஒண்டையும் சொல்லி விளங்கப்படுத்த ஏலாது. எனக்கு விளங்குது.. உன்ர மனமும் நீயும் படுற பாடும். ஆனா நீதான் பொறுப்பா நிண்டு எல்லாம் செய்யவும் வேணும்.” என்றபோது, அவளுக்கு என்னவோ திடீர் என்று அன்னைக்கே அன்னையானதுபோல் ஒரு எண்ணம். அவளைக் குறையில்லாமல் பெற்று வளர்த்தவரின் இறுதிப்பயணம், குறையில்லாமல் அனுப்பிவைக்க வேண்டும். அப்பாவையும் இனி அவள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

ஐயோ அம்மா.. என்று மனம் ஓலமிட்டது. “எனக்கு ஒண்டும் தெரியாது ஆன்ட்டி..” கண்ணீருடன் சொன்னவளை நீ வா என்று அழைத்துக்கொண்டு போனார் தேவகி. அதன்பிறகு அழுவதற்கு அவளுக்கு நேரமேயில்லை. செல்வேந்திரன் அசைவற்றுப்போய் அமர்ந்திருந்தார். அவரே கொல்லிவைக்கட்டும் என்று முடிவாக அவரை அந்த வேலைகளை வாங்குவதிலேயே அவளின் நேரம் சென்றது.

 

அப்பாவை அப்பாவைப் பார்த்தபடி தளும்பிய விழிகளைத் துடைத்தபடி ஆகவேண்டியவற்றைப் பார்க்கலானாள் மயூரி. அம்மாவுக்காக அழுவாளா பித்துப்பிடித்துப்போய் அமர்ந்திருக்கும் அப்பாவுக்காக அழுவாளா? யாரின் தோளிலாவது சாய்ந்து கதற முடிந்தால்?

 

‘தீபன்.. ஐயோ ஒருக்கா வந்திட்டுப் போங்கோவன்..’ அவள் மனம் அரற்றியது!

 

துக்கத்தை விழுங்கிக்கொண்டு, பின்வீட்டு தம்பியைப் பிடித்துத் தனியாக அழைத்துக்கொண்டுபோய் தன்னுடைய பேங்க் காட்டையும் பின் நம்பரையும் எழுதிக் கொடுத்து, எடுக்கக்கூடிய பணத்தை எடுத்துக்கொண்டு வா என்று அவனை அனுப்பிவிட்டுத் திரும்பியவள் கண்முன்னே நின்ற பிரதீபனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.

 

ஒருகணம் தான். அடுத்த நொடியே ஒரே பாய்ச்சலில் ஓடிவந்து அவன் கைகளில் உடைந்தாள் மயூரி. அவன் மார்பில் முகத்தை புதைத்து கதறித் தீர்த்தாள். “ஐயோ என்ர அம்மா தீபன்.. அம்மா அம்மா!” சத்தமே வரவில்லை. ஆனால் கதறித் தீர்த்தாள். அவ்வளவு நேரமும் நெஞ்சுக்குள் புதைத்துவைத்திருந்த அத்தனை துயரையும் அவன் காலடியில் கொட்டுகிறவள் போன்று துடித்துக் கண்ணீர் வடித்தாள்.

 

அவனுக்கும் அழுகை வந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு அவள் விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டிருந்தான். மூச்சோடு அழுகையும் ஒன்றாகும்போது வருகிற விக்கலைத் தாண்டி ஒரு சத்தம் வரவில்லை. ஆனால், உயிரே போகிறது போல் கதறினாள். அவனுக்கும் தெரியுமே.. அம்மாவும் அப்பாவும் என்றால் அவளுக்கு உயிர் என்று. என்றாலும் இந்தளவுக்குத் துடிப்பாள் என்று அவனே எதிர்பார்க்கவில்லை.

 

கண்கள் கலங்க கொஞ்சநேரம் அவளை அழவிட்டான். சற்று நேரமானதும், ஆட்கள் அவளைத் தேடுவதும் கண்ணில் விழ, “மய்யும்மா. போதும் டா அழுதது. இங்க பார். அம்மான்ர உடம்பு தான் போகப்போகுது. உயிர் உன்ன சுத்தித்தான் இருக்கும். அழாத. நீயும் உடைஞ்சா அப்பா தாங்கமாட்டார். இனி அவருக்கு நீதான் செல்லம். அழாதடி ஆக்கள் உன்ன தேடினம் பார்.” என்று அவளின் எண்ணங்களை நடக்கும் விசயத்துக்கு திருப்பிவிட்டான். அது கொஞ்சம் வேலை செய்தது. கண்ணீர் நிற்காதபோதும் கதறல் நின்று போயிற்று!

 

“அம்மா இருக்கிறவரைக்கும் நல்லாத்தான் இருந்தவா. இனியும் இருந்தா அவவாலேயே தாங்க ஏலாதாம். யோசிச்சு பார், இருந்து அந்த வலிய அனுபவிக்கிறத விட நித்திரைல அவாவுக்கே தெரியாம போயிருக்கு உயிர். கஷ்டம் தான்மா. ஆனா என்ன செய்ய? கடைசி நேரம் நீயும் வந்து சந்தோசமா இருந்திட்டு போயிருக்கிறாய் தானே.” என்றான்.

 

அவள் கண்ணில் நீர் கோர்க்க கேள்வியோடு பார்த்தாள். அவன் ஆம் என்பதாகத் தலையசைத்தான். “அப்பவே டொக்டர் சொல்லிட்டாராம்.. கஷ்டம் எண்டு. உனக்குத்தான் மாமா சொல்ல இல்ல.” என்றான்.

 

அதற்கும் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். அதுதான் அப்பா அவளைத் துரத்துவதிலேயே குறியாக இருந்திருக்கிறார். அவர்களின் சோகமும் துயரமும் முடிந்தவரை தன்னை அண்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரின் கண்களில் அவள் அவ்வப்போது பார்த்த மாற்றமும் அதுதான்.

 

மனதுக்குள் அதைச் சுமந்து சுமந்து, இன்றைக்கு என்னைவிட்டுப் போய்விடுவாளோ நாளைக்கு போய்விடுவாளோ என்று பயந்து பயந்து.. கடைசியில் ஒருநாள் அது நடந்தேவிட்டபோது தாங்கமாட்டாமல் சமைந்துபோனார் என்று இப்போது அப்பாவின் நிலையின் காரணம் அவளுக்கு முழுமையாக விளங்கிற்று.

 

மனதளவில் என்ன பாடுபட்டிருப்பார்? அதுவும் அவள் வந்துநின்றபோது அவளோடு சிரித்து விளையாடியபடி மனதுக்குள் எப்படி அழுதிருப்பார். நினைக்க நினைக்க கண்ணீர் பெருகியது. அவளுக்கு எவ்வளவு நல்ல அம்மாவும் அப்பாவும் கிடைத்திருந்திருக்கிறார்கள்?

 

அவளின் கண்ணீரைக் கண்டுவிட்டு, “போதும் மய்யும்மா. வா முன்னுக்குப் போவம்..” என்று அவளையும் அழைத்துக்கொண்டு போனான் பிரதீபன்.

 

அதன்பிறகான பொறுப்பு எல்லாம் அவன் கைக்கு மாறிப்போயிற்று. எப்படி மாறியது யார் மாற்றினார்கள் என்றே இல்லாமல் மாறியது. சுடலை வரை கொண்டுபோய் கடைசிக் காரியம்வரை நின்றுவிட்டு வந்தான் அவன். செல்வேந்திரனை முற்றிலுமாகக் கவனித்துத் தாங்கிக்கொண்டது அவன்தான்.

error: Alert: Content selection is disabled!!