ரோசி கஜனின் மீரா 11 – 3

இவ்வளவையும் தன்னுள் புதைத்து வைத்திருக்க முடியாது திண்டாடியது மீராவின் உள்ளம்.

‘மத்தியானம் வந்ததில இருந்து ஆளே சரியில்ல; என்னவாச்சு இவளுக்கு? இப்படி இருக்க மாட்டாளே!’

யோசனையோடு, அவள் காலில் மெல்லத் தட்டினாள் ஆரணி.

“மீரா! உடம்புக்க ஏதாவது செய்யுதா?

“இல்ல ஆரணி!” எழுந்தமர்ந்தவள் விழிகள் இலேசாகக் கலங்கிக் கிடந்தன.

“ஏய்! என்னடி?” ஆரணிக்குக் குழப்பமாக இருந்தது.

‘ஒருவேள…நாங்க ரெண்டு பேரும் அவுஸ்திரேலியா போகப் போறம் எண்டு நினைச்சுக் கவலைப்படுறாளோ!’ இப்படி எண்ணியது அவளுள்ளம்.

வீடு கல்யாணக்களை கட்டியிருந்தாலும் அதன் பின்னர் பிரிவுத்துயரின் வலி முனகியபடிதானே நிற்குது!

“நான்…நான் ஒண்டு சொன்னால் இப்பவே அம்மா, அத்தையிட்ட சொல்ல மாட்ட தானே?”

மீரா இப்படிக் கேட்டதும், ஆரணியின் சிந்தனை அறுபட்டு மைத்துனியில் குவிந்தது. நெற்றி சுருங்க அவளையே பார்த்தாள், ஆரணி.

“என்ன எண்டு முதல் சொல்லு மீரா! என்ன நடந்தது?” என்று கேட்டவள், மீண்டும் கேட்கும் தேவையின்றி, “ஹெலனோட கதைச்சுக் கொண்டிருக்கேக்க…” என்று ஆரம்பிக்க, “யாரடி ஹெலன்?” குறுக்கிட்டாள் ஆரணி.

முறைத்தாள் மீரா.

‘அதெப்படி நீ மறக்கலாம்?’ என்ற வகையில் இருந்தது அவள் பார்வை.

“ஹெலன்…ம்ம்” சற்றே யோசித்த ஆரணி, “அட… அந்த ரெஸ்ட்டோரன்ட் பீட்டரிட வைஃப்?” என்றவள், மீராவின் தலை ‘ஓம் ’ என்பதாக அசைய, “டோவர் சிடுமூஞ்சியின்ட பாட்டியெண்டு சொல்லியிருக்க விளங்கி இருக்குமே!” விழிகளில் கேலியோடு சொன்ன மைத்துனியை, நன்றாகவே முறைத்தாள், மீரா.

“என்னடி முறைக்கிற? இங்க பார் மீரா, நீ அவனப் பற்றிக் கதைக்கேக்க எல்லாம் காட்டுற பாவனைகளில எனக்கு என்னவோ எல்லாம் நினைக்கத் தோன்றுது!” சீண்டலாகச் சொன்னாலும், “ஆரம்பத்திலயே சொல்லுறன் மீரா, நித்தி அத்தை என்ன சொன்னவர் எண்டதை நீ ஒண்டும் மறந்திர இல்லையே? அவனோட எல்லாம் பேச்சுவார்த்தையே வச்சுக்கொள்ள வேணாம் என்றிருக்கிறார்!” மனதில் தோன்றியதைப் படபடவென்று சொல்லிவிட்டாள்.

“அவன் ஒண்டும் அப்பிடியெல்லாம் கெட்டவன் இல்ல ஆரணி. எல்லாருமே சிரிச்ச முகமா நடமாட வேணுமா என்ன?

என்னை முதலே அவனுக்குத் தெரிஞ்சிருந்தபடியால் தான் அண்டைக்கு டோவரில அப்பிடியெல்லாம் கோவப்பட்டான். அதுவும், ஓடுற காரில தலையை வெளியில விட்டு செல்ஃபி எடுத்ததில தான் அவனுக்குச் சரியான கோபம்.

‘அந்தளவு சின்னப்பிள்ளைத்தனமாகவா நடந்து கொள்ளுவ? ஏதாவது விபத்து நடந்திருந்தா? உன்ர வீட்டுப் பெரியவர்களும் அமைதியாத்தானே இருந்தவே. வேணாம் எண்டு கண்டிக்க எல்லாம் மாட்டார்கள் போல!’ எண்டு இண்டைக்கும் திட்டினவன்.”

ஆரணியின் விழிகள் தன்னைத் தீவிரமாக உற்றுப் பார்ப்பதை அவதானித்தபடிதான் சொன்னாள், மீரா.

‘இண்டைக்கும் எண்டா…அவன எங்க சந்திச்சனி?’ நா நுனியில் வந்த வார்த்தைகளை விரட்டிவிட்டு, அவளே சொல்லி முடிக்கட்டும் என்று அமைதியாக இருந்தாள், ஆரணி.

“ஹெலனோட கதைக்கேக்க, பேச்சு வாக்கில, ‘ஜோரிக் கலியாண வரவேற்புக்கு வரமாட்டான்’ எண்டு சொன்னார். அண்டைக்கு அவனில்லாத நேரம்தானே அழைப்பிதழ் குடுத்திட்டு வந்தம்? ஒருவேளை, நேரடியாக அவனை அழைச்சிருந்தா கட்டாயம் வந்திருப்பானோ எண்டு நினைச்சு…”

“நினைச்சு..” நெற்றி சுருக்கினாள், ஆரணி.

“நான்…நான் இண்டைக்கு அவன்ட வீட்டுக்கே நேர போய் அழைப்பிதழ் குடுத்தனான்!” என்று சொல்லிவிட்டு, ஆரணி என்ன சொல்கிறாள் என்பதாகப் பார்த்தவள் விழிகளில் எப்போதும் இருக்கும் நிமிர்வு இல்லை.

“உனக்கு ஏன்டி இந்தத் தேவையில்லாத வேலை? அவே அண்டைக்கு உனக்கு உதவி செய்தவே. நன்றி சொல்லப் போன இடத்தில ஒரு மரியாதைக்காக அழைப்பிதழ் குடுத்தம். வாறதும் விடுறதும் அவேண்ட விருப்பம். நீயேன் இந்த வேலை பாத்தனி?

சரி, நீ அவன் வீட்டுக்கே போய் அழைப்பிதழ் குடுத்த விசயம் நித்தி அத்தைக்குத் தெரியுமா? சொல்லீட்டா போன? என்ன சொன்னவர்?”

நிதானமாகக் கேட்பது போலிருந்தாலும், ஏதோ, மீராவின் செய்கையில் வேறுபாடு தெரிந்தது ஆரணிக்கு. உள்ளம் படபடத்தது.

அதை ஊர்ஜிதம் செய்வது போலவே மைத்துனியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாது, ஜோரிக்கின் கடைக்குப் போனதிலிருந்து அனைத்தையும் சொல்லிவிட்டாள், மீரா.

“வீட்ட வந்ததும் அம்மா எங்க சாப்பிட்ட? எண்டு கேட்டவர். நான்…நான்…ஜோரிக்கிட்ட போனதச் சொல்லேல்ல ஆரணி. ஃப்ரெண்டஸ் எல்லாருமாச் சேர்ந்து மக்கில்(Mac) சாப்பிட்டம் எண்டு சொல்லீட்டன்.” என்றவளுக்கு, கண்ணோரம் நீர் முத்து.

சற்று நேரம் எதுவும் பேசாதிருந்த ஆரணியின் மனதில் பல கேள்விகள்.

‘இதுவரைக்கும் எந்த விசயமெண்டாலும் சொல்லத் தயங்கினது இல்ல இவள். பட்டுப்பட்டெண்டு சொல்லிருவாளே! அப்படியிருக்க, அண்டைக்கு, கார் விபத்தைச் சொல்லாமல் அடுத்தநாள் வந்து சொன்னாள். அதற்கு அவள் சொன்ன காரணங்களும் ஏற்புடையவையே!

அப்பவும், ஜோரிக்கைச் சந்திச்சதையும் அவனோட வீடு வரைக்கும் வந்ததயும் சொல்லாமல் இருந்திட்டு, அவன் திரும்பி வந்து, நாங்க சந்தித்த பிறகுதான் சொன்னாள். இப்ப இப்படி…’

ஆரணியின் மனம் பலத்த முணுமுணுப்பில் இறங்கியிருந்தது.

‘அன்றே இவள் அந்தாளில கொஞ்சம் கூடுதலாக அக்கறை காட்டினது போல இருந்ததே எண்டுதான் படிப்பை முடிச்சிட்டு வாற வழியைப் பார் எண்டன். இப்பப் பார்த்தால்…’

மைத்துனியின் விழிகளை உற்றுப் பார்த்தபடி இருந்தாள், ஆரணி.

“அப்ப…அவன் உன்ன அறிமுகம் செய்து வச்ச மாதிரியே நல்ல ஃப்ரண்டா நினைச்சுத்தான் அழைப்பிதழ் குடுத்தியா?”

கூர்மையாகக் கேட்ட ஆரணியின் பார்வையைத் தவிர்த்துத் தடுமாறினாள், மீரா.

‘ஓம் ஆரணி; அவன என்ர நல்ல நண்பனா நினைச்சே குடுத்தன்; அவ்வளவும் தான்.’ என்று, பதில் சொல்ல வரவில்லை.

மனம் மிகையாகவே தடுமாறித் தொலைத்தது.

“சொல்லு மீரா? எனக்கு என்னவோ, நீ அந்தாளோட கதை வச்சுக்கொள்ளுறதே கொஞ்சமும் பிடிக்கேல்ல.” என்றாள், ஆரணி.

திடுக்கிட்டுப் பார்த்தாள், மீரா.

“ஒருத்தரில முதல் முதல் ஏற்படுற அபிப்பிராயம் நல்லதா இல்லையெண்டால் பிறகு நல்லதாக நினைக்கக் கடினம் மீரா. அவனில இங்க யாருக்குமே நல்லெண்ணம் இல்ல. இது உனக்கும் தெரியும்.”

மீராவின் முகம் இறுகுவதைப் பார்த்தபடியே தான் சொன்னாள்.

மறுநொடி பட்டென்று வாய் திறந்தாள், மீரா.

“அப்படி நல்லெண்ணம் இல்லாமல் போக அவன் என்ன செய்தவன் ஆரணி? எனக்கு எப்பிடிச் சொல்லுறது எண்டு தெரியேல்ல…ஆனால்…” என்றவளை, முழுவதையும் சொல்லவிடாது அவசரமாகக் குறுக்கிட்டாள், ஆரணி.

“மீரா!” என்றபடி, மைத்துனியின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டவள், “நம்மட வீடுகளில நம்மள எதுக்குமே கட்டுப்படுத்தினது இல்ல. ஆனால், இதுதான் நாம எண்டு சொல்லி சொல்லி வளர்த்திருக்கினம்.

தங்கட விருப்பு வெறுப்பை நாசுக்காக நமக்குப் தெரிய வச்சிருக்கினம்.

அதுபோல, நம்மட விருப்பு வெறுப்பை மதிச்சு நடக்கிறவே. அப்படியிருக்க, நாம எது செய்யிறது எண்டாலும் நம்மள மட்டும் பார்க்காம, நம்மட குடும்பத்துக்கு அது சரிவருமா எண்டு பார்த்துச் செய்யோணும்!”

சிறுபிள்ளைக்குச் சொல்வது போல் எடுத்துச் சொன்னவள், இடையிட்டு எதையோ சொல்ல முனைந்த மீராவைத் தடுத்தாள்.

“நீ அப்பிடியெல்லாம் நடந்த, நடக்கிற, நடப்ப எண்டு சொல்லேல்ல மீரா! உன்னப்பற்றி எங்களுக்குத் தெரியாதா? எண்டாலும் ஜோரிக் விசயத்தில நீ தள்ளியே நில்லு. மனம் சொல்லுற படி நாம நடக்க வேணாமே! நாம நினைக்கிற படி மனத்தைக் கொண்டு நடத்துவமே!”

தன் சுபாவப்படி, நிறுத்தி நிதானமாகச் சொன்னாள், ஆரணி.

அவள் முடிக்கும் வரை பொறுமையாகப் பார்த்திருந்த மீராவின் முகத்தில் மெல்ல மெல்லத் தெளிவு!

“நீ…இவ்வளவு சொல்ல, பேசாமல் அந்த ஜோரிக்கைக் காதலிச்சால் என்ன எண்டு இருக்கு ஆரணி!”

தலையைச் சரித்துச் சொன்னவள் விழிகளில் எப்போதும் இருக்கும் தீர்க்கம்!

“என்ன மீரா நீ? நான் என்ன சொல்லுறன்…நீ”

“அதுதான். அது ஏன் அவனை உங்கள் எல்லாருக்கும் பிடிக்கேல்ல? எனக்கு அவனப் பிடிச்சிருக்கு ஆரணி! ஆனால், காதல் எண்டு எல்லாம் இப்போதைக்குச் சொல்ல மாட்டன்.” என்றவள், முகத்தில் கலவரத்திரையோடு இருந்த மைத்துனியைப் பார்த்தவாறே நிதானித்தாள்.

“அதேநேரம், அவனை விரும்புறன் எண்டால், இனித் தயங்க மாட்டன். அம்மாட்டயே சொல்லுவன்.”

தீர்மானமாகச் சொல்லிவிட்டு எழுத்தவளை, யோசைனையோடு பார்த்திருந்தாள், ஆரணி.

 

error: Alert: Content selection is disabled!!