12
“கார் நிப்பாட்டிற இடத்துக்கு இந்தப் பக்கமாப் போக வேணும் எண்டு நினைக்கிறன் ஜோரிக்!”
“தெரியும் தாத்தா; உங்கள மண்டப வாசலில இறக்கி விட்டுட்டு வந்து நிப்பாட்டுறன்.”
“அவ்வளவு கனக்கத் தூரமில்ல, சில நிமிட நடை தான். ஒரேயடியா காரை நிப்பாட்டிப்போட்டு வந்திருக்கலாம்!” என்றார் ஹெலன்.
“கலியாண அழைப்பிதழில ரெண்டு கார் நிறுத்தங்கள் போட்டிருக்கீனம் பாட்டி. அநேகமா அதில இடம் இருக்காது. பக்கத்தில இருக்கிறதில தானே எல்லாருமே நிப்பாட்ட நினைப்பீனம். மற்ற இடம் கொஞ்சத் தூரத்தில இருக்கு.” காரணம் சொன்னான், ஜோரிக்.
அவ்வீதியில், ஆங்காங்கே வந்துகொண்டிருந்த திருமண வரவேற்புக்கு வருவோரைக் கடந்து வந்த கார் மண்டப வாயிலில் நின்றது.
“நீங்க இரண்டு பேரும் இறங்கி உள்ளுக்குப் போங்கோ! நான் போய் காரை நிப்பாட்டிப்போட்டு வாறன்.”
பேரன் சொன்னதும் பீட்டர் இறங்கினாலும் ஹெலன் மட்டும் இறங்கவில்லை; அவர் பார்வை தம்மைக் கடந்து மண்டபத்தினுள் நுழையும் பெண்கள் மீது!
சரசரக்கும் பட்டு, டிசைனர் புடவை, பாவாடை சட்டை, காக்கிரா சோலி என, விதவிதமான வண்ண ஆடையணிகலன்களோடு, பேச்சும் சிரிப்புமாகக் கடந்து சென்றவர்களில் பார்வை பதிந்திருந்த பாட்டியை முறுவலோடு பார்த்தான், ஜோரிக்.
“பாட்டி! இறங்கி உள்ளுக்குப் போயிருந்து ஆறுதலா ரசியுங்கோவன்!” நக்கலாகச் சொன்ன பேரனிடம் பார்வையைத் திருப்பினார், ஹெலன்.
“இல்ல ஜோரிக், நம்மட மீராவும் இப்பிடி உடுப்பில தானே இருப்பாள்? அதைத்தான் நினைச்சுப் பார்த்தன். அவள இப்பிடிப் பார்க்க ஆவலாக இருக்கு!” என்றபடி, இறங்கிக்கொண்டார்.
அவனுள்ளும் அதே ஆர்வம் மெல்ல மெல்லத் தலைகாட்டியது. மீரா என்பவளை நினைக்கவே கூடாதென்று எண்ணினாலும் முடியாதுள்ளத்தை உணர்ந்தவனுக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை.
‘அப்படியெண்டால், இண்டைக்கு ஏன் இங்க வந்தனி?’ தன்னைத்தானே கேள்வி கேட்டவனுக்கு, பதில் சொல்ல விருப்பமே வரவில்லை.
காரைச் செலுத்த முயன்றவனிடம், “நாங்க இங்கயே நிற்கிறம், நீ கெதியாக வா!” என்றார் பீட்டர்.
“இல்ல தாத்தா, உள்ள போங்க…நான் வாறன்.”
“சேர்ந்தே போகலாம், நீ போயிட்டு வா!” என்றார் ஹெலன்.
அதன் பிறகும் வாதாடாது புறப்பட்டவன், நினைத்தவாறே, மண்டபத்தின் அருகிலிருந்த கார் நிறுத்தத்தில் இடமெதுவும் இருக்காததால், அடுத்த நிறுத்தம் நோக்கிச் சென்று காரை நிறுத்திவிட்டு மண்டபம் நோக்கி நடக்கத் தொடங்கினான்.
ஆறேழு நிமிட நடையில் மண்டப வாயிலை வந்தடைந்தவன் அங்கே பீட்டர் ஹெலன் இல்லை என்றதும், ‘உள்ளுக்குப் போய்ட்டீனம் போல!’ என எண்ணியவாறே உள்ளே செல்லக் கால் வைத்தவன், அப்படியே நின்று விட்டான், “ஹேய் …ஜோரிக்!” என்றபடி, விழிகள் விரிய அவனை நோக்கி வந்தவளைக் கண்டு!
அவர்களின் திருமண வரவேற்பு மண்டபம் முதல் மாடியில் இருந்தது.
அங்கு போய் வர என, வெவ்வேறாக, நகரும் படிக்கட்டுகள் (எக்சிலேடேர்ஸ்) அமைத்திருந்தார்கள்.
அதில், இவனை நோக்கிக் கீழே வந்து கொண்டிருந்த மீரா தான் அப்படிக் கூவினாள்.
சற்றுமுன், தற்செயலாக இந்தப் பக்கம் வந்த போது பீட்டர் ஹெலனைக் கண்டுவிட்டு ஓடி வந்திருந்தாள்.
“வாங்கோ! வாங்கோ!” வரவேற்பாக அணைத்துக் கதைத்தபடி, “இங்க ஏன் நிற்கிறீங்க? ஜோரிக் வரேல்லையா?” என்றவள் முகத்தில் வெளிப்படையான ஏமாற்றம்.
“அவனோடதான்மா வந்தம்.” என்று ஆரம்பித்தார் ஹெலன்.
“நீ தனிப்பட்ட அழைப்பு எல்லாம் வச்ச பிறகும் வராமல் நிற்பானா?” கண்சிமிட்டிய இடையிட்டார், பீட்டர்.
“கார நிப்பாட்டப் போயிருக்கிறான், வாற வரைக்கும் நிற்கிறம்.” முடித்தார் ஹெலன்.
“ஓ!” என்றவள் விழிகளில் ஒருவித தடுமாற்றம் கலந்த வெட்கம் மின்னி, அவள் அழகுக்கு மேலும் வர்ணம் சேர்த்தது.
“அவன் வரட்டும், நீங்க வாங்கோ!” இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று மாப்பிள்ளை பெண் இருக்கும் மேடை நன்றாகத் தெரியும்படி ஒரு மேசையில் அமர்த்த, அவர்களைக் கண்டுவிட்டு வந்து வரவேற்றார்கள் சதீஷ், கார்த்திகேயன் தம்பதிகள்.
அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் வாயிலை நோக்கித் திரும்பிவிட்டாள், இவள்.
அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்த பின்னர் எத்தனை தடவைகள் தொலைபேசி அழைப்பு விடுத்தாள். வழமைபோலவே தவிர்த்து விட்டானே! குறுந்தகவல்களுக்கும் பதில் இல்லை. கடைசியில் ஒருவிதக் கோபத்தில் தான் அமைதியாகியிருந்தாள்.
ஆரணி வேறு நிறையவே சொல்லிவிட்டாள்.
‘அதென்ன எல்லாருமே அவனைப் பற்றி அப்பிடிச் சொல்லுறது? முதல் ஏன்?’ என்ற ஒருவித எரிச்சலில் தான், “எனக்கு அவனப் பிடிச்சிருந்தா அம்மாட்டயே சொல்லுவன்!” என்றிருந்தாள். அவள் சொன்னதைப் பார்த்தால், அப்போது அவன் மீது அப்படியான தனிப்பட்ட உணர்வுகள் எதுவுமில்லை என்றே பொருள்படும்.
ஆரணிக்கும் அதே ஆறுதல் தான். ‘அவனப் பற்றிக் கதைச்சு கதைச்சு நாமே ஏன் இவளத் தூண்டி விடுவான்!’ என்றுதான் அந்தப் பேச்சை அத்தோடு விட்டிருந்தாள்.
ஆனால், வாய்மொழியில் அப்படி உரைத்த மீராவின் மனமோ வேறல்லவா உணர்ந்தது! அவன் அவளைத் துளியும் பாதிக்கவில்லையா என்ன?
இவள் அழைப்பையும் குறுஞ்செய்திகளையும் அவன் கண்டுகொள்ளாததில், மனத்தைத் தீண்டிக்கொண்டிருக்கும் வெறுமையே இதற்குப் பதில் சொன்னதே!
அவனை நோக்கித் தன் மனம் சாய்வதை உணர்ந்தவளுக்கு, அவன் பாராமுகம் பெருத்த அவமானமாகவும் இருந்தது; அதில் கோபமும் கொண்டாள்.
‘எப்பிடியெல்லாம் கதைச்சான். எனக்கு விருப்பமான பீட்ஸா ஓடர் பண்ணி, சாப்பாடு தந்து…பச்! ஃப்ரெண்டாம் ஃப்ரெண்ட். கேட்டனா என்ன? அவன் கடையில வாங்கின சாமான்களுக்கு எவ்வளவோ அதைக் குடுத்து விடவேணும். கலியாணத்துக்கு மட்டும் வரேல்லையோ அண்டைக்கு அவனிட்ட சாப்பிட்ட சாப்பாட்டுக்கும் சேர்த்துக் குடுப்பன்.’ இப்படியெல்லாம் கறுவியிருந்தாளே!
இதோ இப்போதோ, உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் சட்டென்று தாக்கிய மகிழ்வில் திக்கு முக்காடிப்போனாள்.
“வருவன் எண்டு சொன்னால் வருவன்!” கடைசியாக இவளிடம் சொன்ன அவன் குரல் அவளைக் கிண்டல் செய்வது போலிருந்தது.
‘அப்பிடி என்ன உனக்கு அவசரம்? அதுக்குள்ள எவ்வளவு மனம் வருந்தி…பச்!’
தன் தலையில் தானே தட்டிக்கொண்டே நகரும் படிகளில் கால் வைத்தவள், போட்டிருந்த காக்கிரா சோலியை இரு கரத்தாலும் இலேசாகத் தூக்கிப் பிடித்தபடி, நகரும் படிக்கட்டுகளின் வேகத்தில் திருப்தியில்லாது பாய்ந்து இறங்கினாள்.
“ஏய் மீரா, பார்த்து!” வரும் வேகத்தில் ஆடை தடுக்கி விழுந்தாலும் என்ற பதற்றத்தோடு முன்னேறினான், இவன்.
அதைப் பற்றிச் சிறிதும் யோசிக்காது, வந்த வேகத்தில் அவன் கரங்களைப் பற்றிக் கொண்டவள் சட்டென்று பேச்சு வராது தடுமாறினாள்.
இளம் தேவதையென வந்து நின்றவளில் அவனும் தடுமாறித்தான் போனான்.
இன்றுதான் இப்படி ஆடையில் கண்டிருக்கிறான். கண்ட நாளில் இருந்து, ஜீன்ஸ், ஹாஃப் பான்ட்ஸ், ஷோர்ட்ஸ், ஸ்கேர்ட், ஃபிரொக் என்று, எல்லா ஆடைகளுமே அவளுக்குக் கனகச்சிதமாகப் பொருந்திப் போவதை இரசித்திருக்கிறான்; மனத்தின் எரிச்சலையும் மீறி.
இன்றோ, இவ்வுடையிலும் யௌவன சுந்தரியாக மிளிர்ந்தவளை, ஆசை ஆசையாக வருடின, அவன் விழிகள்.
அவன் வரவில் பொங்கிய மகிழ்வில் பேச்சிழந்து நின்ற மீரா, அருகில் போவோர் இவர்களைப் பார்த்துச் செல்வதை உணர்ந்து சுதாகரித்துக் கொண்டாள்.
“வா ஜோரிக்!” மெல்ல நடந்தபடி, “வர மாட்டீயோ எண்டு நினச்சன்!” எனச் சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்தவள் விழிகள் ஆனந்தத்தில் கலங்கின.
அவளே எதிர்பாராதளவுக்கு, அவன் வரவில் துள்ளிய உள்ளம், அவனுக்காக எவ்வளவு ஏங்கியிருந்தாள் என்பதை உணர்த்தி நின்றது.
“நான் தான் வருவன் என்றனே!” அவள் பார்வையைத் தவிர்த்தான் அவன்.
“அப்ப, ஃபோன் பண்ணினா ஏன் எடுக்கேல்ல?”
“சொல்லியிருக்கிறனே மீரா, வேலையில இருக்கேக்க அத்தியாவசியம் தவிர நான் ஃபோன் பாவிக்கிறதில்ல!” என்றவன் முகத்தில், சற்று முன்னிருந்த இரசனை, ஆர்வம் எல்லாம் அகன்று வெகு இயல்பாகவிருந்தது.
“அப்ப நான் எடுக்கிறது அனாவசியமான வேலை எண்டு சொல்ல வாறியா?” கேட்டபடி மேலே செல்ல நகரும் படியில் ஏறிக்கொள்ள, “கவனம் மீரா..உன்ர உடுப்பு சிக்கிக் கொள்ளப் போகுது!”
அருகில் நிற்பவனை ஒரு பார்வை பார்த்தபடி இரு கரங்களாலும் ஆடையை இலேசாக உயர்த்திப் பிடித்துக்கொண்டவள், “சொல்லு. நான் ஃபோன் எடுத்தால் நீ எடுத்துக் கதைக்க மாட்ட… அப்பிடித்தானே? ஃப்ரெண்ட் அப்பிடி இப்பிடி எண்டாயே, ஒரு அந்தரம் அவசரத்துக்கு எடுத்தாலும் ஏன் எதுக்கு எண்டு கேட்க மாட்ட… அப்பிடித்தானே?”
“நீ அப்பிடி ஒரு அவசரத்துக்கும் எடுக்கேல்ல எண்டு எனக்குத் தெரியும்.”

