“எண்டைக்கோ ஒருநாள் நடக்கத்தானே போகுது தீபன். அது இப்பவே நடக்கட்டுமே. அப்ப நானும் தனியா இருக்கத் தேவையில்லை. உங்களோட இங்க இருந்திடுவன். உங்கட வீட்டுக்கு வேணுமெண்டால் பிறகு சொல்லுங்கோவன்.”
அவனோ மறுத்துத் தலையசைத்தான். “கல்யாணம் இன்னும் சிக்கல்லதான் கொண்டுபோய் விடும் மயூ. பிறகு குழந்தை குட்டி எண்டு நிறைய விசயம் இருக்கு. சந்தோசமா இருக்கேலாது. வீட்டுக்கு மறைச்சு வாழுறோமே எண்டு மனம் குத்தும். இந்தக் கலியாணத்தால நானும் நீயும் சேருவோமே தவிர மாமாவின்ர முடிவில மாற்றம் வராது. பிறகு எதுக்கு அந்தக் கல்யாணம்? எதுக்கு வீணா எங்கட வீடுகளுக்கு பொய் சொல்லுவான்?” என்று கேட்டான் அவன்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். “பசிக்கேல்லையா?” அவனுக்கு அந்தப் பேச்சைத் தொடர்வதில் விருப்பமில்லை. அவள் வற்புறுத்த அவன் மறுக்க என்று அவளைக் காயப்படுத்திவிடுவோமோ என்று பயந்தான்.
இருவர் வீட்டிலும் மறுப்பு வராது. அப்படியிருக்க எதற்கு ஒழித்து மறைத்து ஒரு அவசரக் கல்யாணம்?
“பசிக்குதுதான்..” என்று அவள் சொல்ல, உணவு ‘டோர் டெலிவரிக்கு’ ஆர்டர் கொடுத்தான். வந்த உணவை இருவருமாக உண்டனர். மேலதிக பேச்சுக்கள் எதுவுமே இல்லை. தேவையானதை மட்டுமே பேசிக்கொண்டனர்.
“கொஞ்சம் படுத்து எழும்புறியா?” என்று கேட்டு அவளை அறைக்கு அழைத்துப்போனான்.
படுத்தவள், “எனக்குப் பக்கத்திலேயே இருங்க தீபன்.” என்றாள். அவன் அமர்ந்துகொள்ள தலையணையைத் தூக்கி அவன் மடியில் போட்டுவிட்டு தலைசாய்த்து உறங்கினாள்.
மாலை வரை எழுந்துகொள்ளவே இல்லை. அவனுக்கு ஒரே பயம். அவளை எட்டி எட்டிப் பார்த்தான். அவளின் கேள்வி வேறு அவனைப் புரட்டி விட்டிருந்தது. என்றுமில்லாமல் காட்டிய நெருக்கம் வேறு! தனிமை அவளைப் பாடாய் படுத்துவதை உணர்ந்தவன் அவள் விழித்துக்கொள்ளும்வரை காத்திருந்தான்.
எழுந்தவள் தெளிந்திருந்தாள்.
முகம் கழுவிப் புறப்பட அவள் தயாராக, கேட்ட கேள்விகள் எதுவுமே அவள் நினைவில் இல்லையா என்று யோசனையோடு பார்த்தான் பிரதீபன்.
“என்ன என்னையே பாக்கிறீங்க? நான் வாறன் போயிற்று.” என்று புறப்பட்டவளை அவனால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்னவோ எதுவுமே நடவாததுபோல் காட்டிக்கொண்டாள். அவனும் அதற்குமேல் ஒன்றும் கதைக்காமல் அவளைத் தானே கூட்டிக்கொண்டுபோனான்.
அங்கு அவளின் அறைக்குள் போனதுமே மீண்டும் அவள் முகத்தில் கலக்கம். கண்களில் ஒரு பயம். மனதுக்குள் அலைபாய்கிறாள் என்று அப்பட்டமாக விளங்கினாலும் கையாலாகாதவனாக நின்றான் பிரதீபன். விட்டுவிட்டு வரவே மனமில்லை. அவளுடன் கூடவே இருந்துவிடுவோமோ என்றுகூட யோசித்தான்.
அது தப்பில்லையா.. மனதை அடக்கிக்கொண்டு புறப்பட்டான். அவளும் கண்களில் ஏக்கத்தைத் தேக்கி ‘என்ன விட்டுட்டு போறியா’ என்பதுபோல் பாத்துக்கொண்டிருந்தாள்.
“என்ன மயூ?” அவனின் இயலாமை ஒரு கோபமாக அவனுக்குள் புகைவிட்டது.
ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள். வாயைத் திறந்தாள் அழுதுவிடுவோமோ என்று பயம்.
“போயிட்டு வரட்டா..”
காய்ந்த உதடுகள் ஒட்டிக்கொண்டிருக்க அப்போதும் தலையை மட்டும் அசைத்தாள்.
இருவருக்குமே இருவரின் நிலையும் நன்கு புரிந்தது. ஆனாலும் வாய்விட்டுப் பரிமாறிக்கொள்ளவில்லை. நில்லு என்று சொல்லிவிட முடியாமல் அவளும் நிக்கிறேன் என்று சொல்லமுடியாமல் அவனும் என்று தடுமாறிவிட்டு, “நாளைக்கு வாறன்.” என்றவன் வேகமாகப் படியிறங்கி ஓடியே போனான்.
மளுக் என்று இறங்கிவிட்ட கண்ணீருடன் ஓடிப்போய் ஜன்னலில் பார்த்திருந்தாள் மயூரி. பைக்கில் ஏறி அமர்ந்தவனுக்குத் தெரியும், அவள் பார்ப்பாள் என்று. அதை இயக்க முடியாமல் ஹாண்டிலை இறுக்கிப் பற்றியவன் ஒரு மூச்சோடு அடுத்த கணமே பறந்துபோயிருந்தான்.
வீட்டுக்குள் வந்ததுமே ‘ஊப்ஸ்!’ என்று காற்றை ஊதியபடி தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் பிரதீபன். அவள் காட்டிய நெருக்கமும் உரிமையும் அவனை நிலைதடுமாற வைத்துவிடும் போலிருந்தது!
நாளை வருகிறேன் என்றவன் அடுத்தநாள் அவளிடம் போகவே இல்லை. மயூரியோ அவனுக்கு அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் ஏற்கவே இல்லை. மாலை வரைக்கும்.
அவன் வீட்டுக்கே போவோமா என்று நினைத்தாலும் ஏனோ முடியவில்லை. நேற்று அவளாகப் போனதும், அங்கேயே இருக்கவா என்று கேட்டதும் திருமணத்துக்குத் தானாகக் கேட்டும் அவன் மறுத்ததும் என்று எல்லாமாகச் சேர்ந்து அவளைக் கண்ணீர் உகுக்க வைத்தது.
எல்லோருமே அவளைவிட்டுத் தள்ளிப்போவதைப்போல மாயை!
ஒருவழியாக இரவுதான் அவளின் மெசேஜுக்குப் பதில் அனுப்பினான் பிரதீபன். அப்போதும் பேசவில்லை.
“சொல்லு மயூ.”
“எங்க நிக்கிறீங்க? ஏன் வரேல்ல. ஃபோனும் எடுக்கேல்ல”
அடுத்த கணமே கேள்விகளாக அடுக்கினாள்.
“வீட்டுக்கு வந்திட்டன். கொஞ்சம் பிசி. சாரி மயூ. கதைக்க முடியாத சூழ்நிலை.” என்று அனுப்பினான் அவன்.
“வீட்டுக்கா?” பறந்துவந்த கேள்வியிலேயே அவள் மலைப்பது தெரிந்தது.
“சாரிடா. அக்காக்கு கல்யாணம் சரிவந்திருக்கு. அவசரமா அம்மா வரச்சொன்னவா அதுதான்.”
“ஓ..” அவள் தன்னைச் சமாளிக்க முனைந்துகொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தும் அமைதியாக இருந்தான்.
“இப்ப கதைக்கலாமா?” மெல்லக் கேட்டாள்.
அவன் குரலையாவது கேட்கவேண்டும் போலிருந்தது. அந்த ஒருநாள் காணாதது என்னவோ நீண்ட நாட்கள் போல் தவித்துப்போனாள்.
“சாரிம்மா. பக்கத்தில அக்காவும் அம்மாவும் இருக்கினம்.”
“ஓ…..” அந்த ஓ நீண்டுகொண்டே போயிற்று!
“எப்படியாவது சமாளி. புதன் வரப்பாக்கிறன்.”
“புதனா?” என்று அதற்கும் அதிர்ந்தாள். இந்த ஒரு நாளுக்கே இந்தப்பாடு. இன்னும் மூ…ன்று நாட்கள். நினைக்கவே மலைப்பாக இருந்தது. “ஒரு நிமிசமாவது கதைச்சிப்போட்டு வையுங்கோவன் தீபன்!” தன்னை மீறியே கெஞ்சினாள் மயூரி. ஏன் இப்படிப் பலகீனப்பட்டுப் போயிருக்கிறோம் என்று அதற்கும் கண்ணீர் வந்தது.
“இல்லடி. சிட்டுவேஷன் சரியில்ல. தனியா இருக்கேக்க கோல் செய்றன். சரியா? கவனமா இரு. எங்கயும் தனியா போகாத. நான் வந்திடுவன். அம்மா கூப்பிடுறா பாய்!” என்றவன் எழுந்து தன்னுடைய அறையில் குளிக்கப்போனான்.
பொய்.. முழுப்பொய். அவனுடைய அறைக்குள் முடங்கிக் கிடந்தான். அவன் மனம் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது. தன்னைக் கட்டுப்படுத்தும் வழி தேடிக்கொண்டிருந்தான். அவளைப் பாராமல், அவள் குரலைக் கேளாமல், அவளின் தன் மீதான தேடலை உணராமல் இருந்தால், அவனுடைய இந்த மனநிலை மட்டுப்படும் என்று நினைத்தான். அம்மாவை இழந்தவள் அவனிடம் ஆறுதல் தேட, அவனுடைய மனமோ அவளிடம் வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கிறது. காரணம் அவள் காட்டிய நெருக்கம். அந்த நெருக்கத்தில் அவன் மனம் குரங்காக மாறிப்போயிருந்தது.
அடுத்த இரண்டு நாட்களுமே அவன் அவளோடு கதைக்கவே இல்லை. அவளின் பஸ் புறப்பட்டதும் வேலைக்குப் போய்விட்டு வந்தான். புதன் வருவேன் என்றவனைக் காணாமல் கண்கள் கலங்க வேலைக்குப் போனாள் மயூரி. நந்தினியின் தோளில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
பிரதீபனாலும் அன்று வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. அவளைப் பார்த்தே ஆகவேண்டும். இதற்குமேல் முடியாது என்றாகிப்போக, அன்று மாலை அவள் வீட்டுக்கே வந்தான்.
அவனைக் கண்டதும் ஓடிவந்து மார்பில் முகம் புதைத்தவளை அவனும் அதே வேகத்தில் அணைத்துக்கொண்டான். அணைப்பு இறுகியது. உதடுகள் எல்லை மீறியது. விளங்கியும் விலகவில்லை அவள். முகம் பற்றி ஆவலும் கேள்வியாக அவன் பார்த்தான். அலைப்புற்றிருந்தவளும் தன்னை அவனிடம் ஒப்படைத்தாள். கட்டுப்பாடுகள்தளர்ந்தன. காதல் கரைபுரண்டது. அவனும் அவளுமாய் இருந்தவர்கள் அவர்களாகிப் போயினர்.

