13
“இன்னும் நேரமிருக்குக் கார்த்தி, கொஞ்சம் ஆறுதலாச் சாப்பிடுங்கோவன். ஒருநாளைக்கெண்டாலும் ஆற அமர இருந்து சாப்பிட மாட்டீங்களே! எப்பவுமே அவசரம்.”
அக்கறையான கண்டிப்போடு, கணவருக்கு மதிய உணவைப் பரிமாறிக்கொண்டிருந்தார், மதுரா.
“போதும்…போதும். கீரைக்கறியில இன்னும் கொஞ்சம் போடும்!” என்ற கார்த்திகேயன், “ஆரணி, ஆரபி கோல் பண்ணினவயா ராது?” என்றதும், முறுவலோடு பார்த்தார், மதுரா.
“என்ன சிரிப்பு?” மனைவியை முறைத்தாலும், “பிள்ளைகள் இல்லாத வீடு வெறிச்செண்டு போயிட்டுது என்ன?” என்றவருக்குத் தொண்டை கமறியது.
எதையோ எடுக்கப் போகும் பாவனையில் சமையலறைக்குள் நுழைந்துகொண்ட மதுரா, கலங்கிவிட்ட தன் விழிகளை அவசரமாகத் துடைத்துக் கொண்டார்.
ஒரேநேரத்தில் மகள்கள் இருவருமே வீட்டை விட்டுப் பிரிவதில் அவருக்கும் கவலைதான். ஆனால் கார்த்திக்கு?
ஒரே மகன், கடைக்குட்டி வேறு! அப்படியிருந்தும் மகள்களுக்கும் அவருக்கும் இடையிலான உறவில் யாராலும் புகமுடியாது போயிற்று!
“அப்பாவுக்கு அக்காக்களுக்குப் பிறகுதான் நான்!” அப்படியே கார்த்திகேயனின் பிரதிபிம்பமான ஆதவ், இலகுவாகச் சொல்லிச் செல்லும் வகையில் அமைந்திருந்தது, தந்தைக்கும் மகள்களிற்குமிடையேயான உறவு!
மெல்லத் தன்னைச் சுதாகரித்துக்கொண்டார், மதுரா.
“அப்பிடிப் பார்த்தா நாம குடுத்து வச்சனாங்க கார்த்தி. இதுவரைக்கும் ஆரணி ஆரபி நம்மள விட்டுப் பிரிஞ்சு எண்டு எங்கயும் போனதில்லத் தானே? கலியாணம் குடும்பம் எண்டு வந்தால், அவரவர், அவரவர் பாட்டைப் பார்க்காம இருக்க ஏலுமா சொல்லுங்க?” அங்கிருந்தே சொன்னார்.
கணவருக்குச் சொல்வதுபோலத் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார் போலும்!
“இவ்வளவு காலமா நம்மளோட இருந்திட்டு இப்ப இல்லை எண்டதும் தான் ஒரு மாதிரி இருக்குது ராது!” என்றபடி, உணவில் கவனம் செலுத்த முயன்றார், கார்த்திகேயன்.
“இந்தக்காலத்தில, பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்தோன்ன படிப்பு, வேலை எண்டு பிரிஞ்சு போயினமேப்பா! நிறையப் பெற்றோர்களுமே அப்படியொரு எதிர்பார்ப்போடதான் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளினம்.
இன்னும் சொல்லப் போனால், சில பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்னாலயே அதைச் சொல்லி சொல்லியே அவையளையும் இந்தப் பிரிவுக்குத் தயார்ப்படுத்தி விடுகினம்!” என்றவாறு வந்து, கணவர் அருகிலிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டார், அவர்.
“மற்றவேண்ட கதை நமக்கெதுக்கு ராது? நான்…நான் அப்பிடியெல்லாம் நினைச்சதில்லத் தெரியுமா? இந்த வீட்டப் பெரிசாக் கட்டியதே மூண்டு பிள்ளைகளும் நாமளும் ஒண்டா இருக்கவேணும் எண்ட ஆசையில தானே?”
“ம்ம்…அதைப்பற்றியெல்லாம் இப்ப யோசிக்கவே கூடாது கார்த்தி! தூரமாக இருந்தாலும் நம்மட பிள்ளைகள் நல்லா சந்தோசமா இருந்தால் சரிதான்பா! நாம கவலைப்பட்டா அவையளும் தாங்காயினம்.”
தன்னையும் மீறித் ததும்பிவிட்ட விழிகளை சட்டென்று துடைத்த மனைவியின் கரத்தை, இடக்கரத்தால் ஆதரவாகப் பற்றிக்கொண்டார், கார்த்திகேயன்.
“அது எண்டால் சரிதான். என்ர செல்வங்கள் ரெண்டு பேருமே சந்தோசமா வாழ்வீனம் எண்ட நம்பிக்கை மலையளவு இருக்கு! மனசுக்குப் பிடிச்சவேயோட வாழுற வாழ்க்கை நிச்சயம் நல்லாத்தானே இருக்கும்.” என்றவர் பார்வை, மனைவியின் முகத்தில் நேசத்தோடு படிந்தது.
கணவரை ஒரு கணம் நிதானமாகப் பார்த்து நின்ற மதுராவின் விழிகள் மீண்டும் கலங்கிவிட்டன.
‘இந்த மனிதன் மட்டும் என்ர வாழ்க்கையில் வந்திராவிட்டால்?’ கணத்திலும் குறைவாக எட்டிப்பார்க்க விளைந்த, நைந்து சாயம் போன பழங்கணக்கு, முழுமையாக அவர் நினைவுகளை ஆக்கிரமிக்க முடியாது வலுவிழந்து, அதே வேகத்தில் பின்வாங்கியது.
மனைவியின் விழிகளையே உற்றுப் பார்த்தவர், தன் கரத்தினுள் அடங்கியிருந்த மனைவியின் கரத்தில் உணர்த்திய சிறு அழுத்தம், மதுராவின் மனதில் வேறெந்த நினைவையும் வரவிடவில்லை.
“முதல் சாப்பிடுங்க!” கனிந்த முகத்தோடு சொன்னவர், “ஆரணி, ஆரபி கோல் பண்ணினவயா?” மீண்டும் கேட்ட கணவரை முறுவலோடுதான் பார்த்தார்.
“நேற்றிரவு தானேப்பா கதைச்சவே?”
“இல்ல… காலையில எடுக்கிறன் பா என்றாள், ஆரணி.”
“ம்ம்… நல்ல சந்தோசமாக் கதைச்சவே. காலம நேரம் செல்லத்தான் எழும்பினவையாம். வெளியில போக வெளிக்கிட்டு நிண்டபடிதான் கதைச்சவே. ‘அப்பாவுக்குக் கிளினிக் நம்பருக்கு எடுத்து ஒரு ஹாய் சொல்லீட்டு வைக்கிறம்’ எண்டுதான் ஆரபி சொன்னவள்.
‘அப்பா பிஸியா நிற்பார், இரவுக்கு எடுங்கோ’ எண்டனான்.” என்றவர், “எப்படியெண்டாலும் நம்மட சொந்தத்துக்குள்ள கலியாணம் சரி வந்ததில எனக்கும் நல்ல சந்தோசம் கார்த்தி. பெரிய நிம்மதி எண்டே சொல்லலாம்.” என்றதும், ஆமோதிப்பாகத் தலையாட்டினார், கார்த்திகேயன்.
“உண்மைதான்…என்னதான் தூரமாகிப் போச்சே எண்ட வருத்தம் இருந்தாலும் அது பெரிய நிம்மதிதான்.” என்றவர், “என்ன இன்னும் அக்கா ஆட்களைக் காணேல்ல?” கேட்டபடி, சாப்பாட்டில் கவனமானார்.
“அக்கா சமையலுக்கு உதவிட்டுத்தானே போனவர். இனித்தான் வருவினம்.” மதுரா சொல்லி முடிக்கவில்லை, அழைப்புமணி கிணுகிணுத்தது.
“இந்தா வந்திட்டினம்.” சென்று கதவைத் திறந்து, “வாங்கோக்கா!” வரவேற்றார்.
உள்ளே வந்த கார்த்திகேயனின் தமக்கை, அவர் கணவர், அவர்களின் இளைய மகனோடு மீரா வரவில்லை என்றதும், எங்கே என்று கேட்க முதல், “மீரா, தான் கொஞ்ச நேரத்தால வாறன் எண்டு சொல்லச் சொன்னவள்.” என்ற கார்த்திகேயனின் தமக்கை, “தம்பி வந்திட்டான் போல!” சமையலறை நோக்கிச் செல்ல, மற்றவர்களும் பின்தொடர்ந்தார்கள்.
“அவர் ஒருமணிக்கு அப்பாயின்ட்மென்ட் ஒண்டு இருக்குது எண்டு அவசரம் அவசரமாகச் சாப்பிடுறார். நீங்களும் வாங்கோ சாப்பிடலாம்.” அவர்களைப் பின்தொடர்ந்த மதுரா, உணவுத்தட்டுகளை எடுத்து மேசையில் வைக்க, “நீரும் வாரும், சேர்ந்தே சாப்பிடலாம்.” என்றபடி, கணவருக்கும் சின்ன மகனுக்கும் பரிமாறினார், காத்திகேயனின் தமக்கை.
“மீராவும் வரவிட்டு சாப்பிடுறன்கா, நீங்க சாப்பிடுங்கோ!” என்ற மதுரா, “அவ்வளவு லேசில் வருத்தம் எண்டெல்லாம் சொல்லி விரிவுரைக்குப் போகாம நிக்க மாட்டாள். என்ன இண்டைக்கு?” யோசனையாக இழுத்தார்.
“காலம எப்பவுமே நேரத்துக்கு எழும்பிறவள் தானே? இண்டைக்கு இன்னும் அறைய விட்டு வெளில வரேல்ல.” என்றார், கார்த்திகேயனின் தமக்கை.
“ காய்சல் ஏதுமா? பிள்ளைக்கும் ஒரே அலைச்சல் தானே! நான் ஒருக்காப் போய்ப் பார்த்திட்டு வரட்டா?” மதுரா சொல்ல, “காய்ச்சல் எல்லாம் இல்ல மாமி. அவள் கள்ளி, சும்மா நடிக்கிறாள்!” கார்த்திகேயனின் தமகையின் இளையமகன் குறுக்கிட்டான்.
“நிரூஜோடு சேர்ந்து இவனுக்கும் அவளோடு இழுபறிப்படேல்ல எண்டால் விடியாது.” என்ற கார்த்திகேயனின் தமக்கை, “லேசில வருத்தம் எண்டு சொல்லமாட்டாளே எண்டுதான் நித்தியும் சொன்னவள். அவள் வேலைக்குப் போக முதல் எழுப்பிப் பார்த்திருக்கிறாள். ‘ஒரே தலையிடிம்மா …இண்டைக்குப் போகேல்ல’ எண்டு சொன்னவளாம், கண்ணையே திறக்கேல்லையாம்.”
“ஓ! அப்ப நான் போய்ப் பார்த்திட்டுக் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றார் மதுரா.
“தேவையில்ல மது, அவளே வருவாள். நேற்றிரவு ஒன்பது மணிக்குப் பிறகு தானே வந்தவள்.” என்ற மைத்துனியிடம், “அதுதான்…ஃப்ரெண்ட்ஸோட இருந்து ப்ராஜெக்ட் செய்ததாகச் சொன்னாளே!” என்றார் மதுரா.
“அவ்வளவு நேரம் போயிட்டு எண்டால் அப்பிடியே அறையில தங்கியிருக்கலாம் தானே? அதைச்சொல்லி, இரவு நித்தி நல்லாப் பேசிப்போட்டாள். பிள்ளைக்கு முகமே சரியில்லை.” என்றார், கார்த்திகேயனின் தமக்கை.
“அவள் என்ன சின்னக்குழந்தையாக்கா? சிலநேரம் நித்திக்குச் சொன்னால் விளங்கிறதில்ல!” என்றபடி எழுந்த கார்த்திகேயன் விடைபெற, அவர்களோடு அளவளாவியபடி உணவுகளைப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினார், மதுரா.
மீரா வீட்டில்…
“இதென்ன மீரா நீ? முதல் எழும்பு பார்ப்பம். காலமயும் சாப்பிடேல்ல, மத்தியானமாப் போச்சு!” என்று கடிந்து கொண்ட பெரியதாயாரைத் திரும்பிப் பார்க்காது, தலையணைக்குள் புதைந்திருந்த தலையைத் திருப்பாது பதில் சொல்லியிருந்தாள், மீரா.
“நீங்க முதல் போங்க பெரியம்மா, அரைமணித்தியாலத்தில வாறன்.” என்றவள், துளிகூட எழுந்துகொள்ளும் எண்ணமின்றிக் கிடந்தாள்.
இரவு முழுதும் சீரான உறக்கமின்றிப் புரண்டு கொண்டே இருந்தவளைப் பார்த்தால், பலநாட்கள் காய்ச்சலில் கிடப்பவள் போல் தான் இருந்தாள்.
உண்மையில், அவள் உடலில் எவ்வித வருத்தமும் இல்லை; நல்ல ஆரோக்கியமாகவே இருக்கிறாள்.
உள்ளம்? குழப்பமும் கலக்கமும் ஒன்றாகக் கலந்து அல்லாடிக் கிடக்கே! அதையெல்லாம் யாரிடம் சொல்வதாம்?
சற்றே வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லத் தயங்கும் விசயங்களைக் கூட ஆரணி, ஆரபியிடமோ, ஆதவிடமோ பகிர்ந்து கொள்பவளால், இக்கணம், மனதை அரிக்கும் விடயத்தை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை.
அத்தனை சுலபத்தில் சொல்லிவிட முடியாதென்றே தோன்றியது.
கடந்து சென்ற நாள், அவள் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நாட்களில் ஒன்றானதையே மீண்டும் மீண்டும் எண்ணியது அவளுள்ளம்.
இரு ஜோடி மணமக்களும், ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி திருமணம் முடிந்த மறுநாளே இத்தாலிக்குப் பறந்துவிட்டார்கள்; தேனிலவு, பத்து நாட்களுக்கு!
அவர்கள் திரும்பி வந்ததும் அவுஸ்திரேலியா செல்லும் திட்டத்தில் இருந்ததால் வீட்டில் எவருக்குமே ஓய்விருக்கவில்லை.

