ஒன்றாக இரு மகள்கள் திருமணமாகிச் செல்வது மட்டுமா? இரு சம்பந்தி குடும்பங்களும் இங்கே நிற்கிறார்களே! அவர்களோடு அங்கே இங்கே என்று போக வர, சமையல் சாப்பாடு என்று நேரமோ சிட்டாகப் பறந்தது.
இதனிடையில், இளையவர்களுக்கோ பல்கலை; பயிற்சி வேலை. சிறுவர்கள் போல், மனச் சுணக்கத்தோடு தான் போய் வந்துகொண்டிருந்தார்கள்.
அப்படியிருந்தும், கல்யாணம் முடிந்த மூன்றாம்நாள் இரண்டு மணியோடு விரிவுரைகள் முடிந்ததும் நேராக ஜோரிக்கின் கடைக்குச் சென்றாள், மீரா.
இத்தனை நாட்களும் அவள் வாழ்க்கையில் சஞ்சலங்களுக்கோ மனக் கஷ்டத்திற்கோ இடமிருக்கவில்லை. மனத்தில் தோன்றுவதைச் சொல்லி, செய்து என்று சுதந்திரப்பறவையாகத் திரிந்தவளாச்சே!
அப்படியிருந்தும், நட்பு என்றதைத் தாண்டி அவள் மனம் எந்த ஆடவன் வசமும் சாய்ந்ததில்லை.
அதற்கும் ஒரு முடிவு வந்திருந்தது. அன்று, அந்தப் புயல் நாள் இவள் வாழ்விற்கு மேலும் வண்ணம் சேர்க்க ஒருவனை அறிமுகம் செய்திருந்தது என்றால், அவனோ, ‘இவன் இப்பிடித்தான்’ என்று வரையறை செய்ய முடியாதவனாக அல்லவா இருக்கிறான்.
‘வாழ்க்கை முழுதுக்கும் ஒண்டாகக் கைகோர்த்து நடந்திட அவன நம்ப ஏலுமா?’ அவளையும் அறியாது பெருத்த சந்தேகம் தோன்றியிருந்தது.
அவன் நடவடிக்கை அப்படியொரு எண்ணத்தை விதைத்து விட்டிருந்ததே!
அதேநேரம், ‘இவனெல்லாம் நமக்குச் சரிப்படமாட்டான்!’ என்று, இலகுவாக விலகிடவும் மனம் துணியேன் என்றது.
அவன்மீது விழுந்துவிட்ட நேசமும், விழிப்போடிருக்கும் ஆரோக்கியமான புத்தியும் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அவன் கடைக்கு ஏதிர்ப்புறமாகக் காரை நிறுத்திவிட்டு இறங்கினாள், மீரா.
விறுவிறுவென்று பாதையைக் கடந்தவள் கடையினுள் நுழைகையில் அவளை எதிர்கொண்டான், கடையின் மனேஜர்.
“ஜோரிக் இல்லையே! வேலையாக வெளிய போயிருக்கிறார், வர இரவாகும்.”
இவள் வாய்திறக்க முதல் அவன் சொன்ன விதத்தில் முகம் சுருங்கிப் போனாள், மீரா.
‘நான் வாறதக் கண்டுட்டு ஒளிஞ்சிட்டானோ!’ என்ற எண்ணமும் தோன்றிற்று!
சட்டென்று வெளியேறாது விழிகளைச் சுழற்றியவள் பார்வையில் ஜோரிக் படவில்லை.
இல்லை என்ற பின்னர் அங்கு நின்று என்ன செய்வது? அமைதியாகத் திரும்பியவளுக்கு, பக்கத்தில் சென்று பீட்டரோடு அளவளாவும் விருப்பமும் வரவில்லை.
விறுவிறுவென்று வந்து காரில் ஏறியவளைத் தற்செயலாகத்தான் கண்டார் பீட்டர். உடனே அவளுக்கு அழைத்தார்.
பார்வை ரெஸ்டாரண்ட் நோக்கிச் செல்ல அழைப்பை ஏற்றவள், “ஜோரிக்கைச் சந்திக்க வந்தயா மீரா? அதென்ன என்னட்ட வராமல் போற?” என்றதும் பதில் சொல்லவில்லை.
“உனக்கு நேரமிருந்தா…” எனத் தொடங்கியவரை முடிக்கவிடாது, “ஜோரிக் கடையில நிக்கிறானா பீட்டர்?” வினவினாள்.
சட்டென்று பொய்யுரைக்க வரவில்லை அவருக்கு! அதுவும், கேட்பது யார்? இவர்களின் பிரியத்துக்குரியவளாச்சே!
அவரின் அமைதியே இவளுக்கு விடையளித்திருந்தது.
மறுநிமிடம் விர்ரென்று புறப்பட்டுச் சென்றவளை, ரெஸ்டாரண்ட் வாயில் வரை வந்து பார்த்துவிட்டு, கார் கண்ணிலிருந்து மறைந்ததும் உள்ளே வந்தார் பீட்டர்.
‘இத்தாலியானா’வில் மாலை நேரமென்றால் சுறுசுறுப்புக்குக் குறைவிருக்காது. அதுவும், தரமான பலவகைப்பட்ட உணவுகள் கிடைக்கும் இடமென்றால் கேட்கவும் வேண்டுமா? மாணவர்கள், சிறுவர், பெரியோர், குடும்பங்கள் என்று எப்போதுமே கூட்டமாக இருக்கும்.
மத்தியானப் பொழுதிற்குப் பிறகு அங்கு வரும் பீட்டருக்கும் போதுமான வேலைகள் இருக்கும். அன்றும் அப்படித்தான், மேற்பார்வையோடு கவுண்டரிலும் நின்றவர் மனம் தான் ஒரு நிலையிலில்லை.
எவ்வளவு மகிழ்வாக மீராவின் மைத்துனிமாரின் கல்யாண வரவேற்பில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்களோ, அதற்கு மாறான, குழப்பமான மனநிலையில் தான் வீடு திரும்பியிருந்தார்கள்.
இருண்டுபோன முகத்துடன், என்ன ஏதென்ற காரணம் சொல்லாது இடையில் எழுந்து சென்ற பேரன், அப்படியே, தன் வீட்டில் தங்கிவிட்டதால் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் இருக்கவில்லை.
“திடீரென்று ஏன் போனான்? என்ன சொல்லீட்டுப் போனான்?” மீரா, மீண்டும் மீண்டும் கேட்கையில் பதில் சொல்லத் தடுமாறியவர்கள், அவளைப்போலவே, காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளவே பிரியப்பட்டார்கள்.
மறுநாள், “வீடுவரை வந்திட்டு போ!” என்றதற்கு, “வேலையிருக்கு!” ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டான், ஜோரிக்.
அவன் அதைச் சொன்ன தொனியிலிருந்தே அவன் மனநிலை சரியில்லை என ஊகித்துக் கொண்டார் ஹெலன். அதன் பின்னரும் எப்படி அமைதியாக இருப்பது?
அன்று ரெஸ்டாரண்ட் புறப்பட்ட கணவரோடு தானும் வந்தவர் ஜோரிக்கைப் பார்த்துத் திகைத்துப் போனார்.
எப்போதுமே, நேர்த்தியாக பளிச்சென்று கம்பீரம் சற்றும் குறையாதிருப்பவன், அன்றோ, சுளித்த நெற்றியும் கலைந்த சிகையும் சிவந்த விழிகளுமாக அலுவலக அறையில் அமர்ந்திருந்தான்.
கணணியை வெறித்துக் கொண்டிருந்தவன் வேலை செய்கிறானா என்றே ஐயமாகவே இருந்தது.
“ஜோரிக், நீ நல்லா இருக்கிற தானே?” அன்பாகக் கேட்டபடி உள்ளே வந்த ஹெலனைப் பார்த்தவன், “ம்ம்…” என்றதற்கு மேல் கதைக்கவில்லை.
அதற்காக அப்படியே விடுவதா? சிறுவயதிலிருந்து இவர்களோடு வளர்ந்தவன் மனநிலை புரியாதா என்ன?
“உனக்கு என்னதான் பிரச்சனை?” உள்ளே வந்த பீட்டர் வினவினார்.
“மீராவோட ஏதாவது பிரச்சினையா? சந்தோசமாகத்தானே கலியாண வரவேற்புக்கு வந்திருந்த? திடீரென்று ஏன் எழும்பி வந்திட்ட?” அழுத்திக் கேட்டார், ஹெலன்.
அப்போதும் அசைந்து கொடுக்காதவன், “பாட்டி, எனக்கு முக்கியமாகச் செய்து முடிக்க வேண்டிய டக்ஸ்(Tax) வேலைகள் குவிஞ்சு கிடக்கு! ப்ளீஸ்.” என்றான், ‘போய் விடுங்கள்.’ என்ற தொனியில்.
“இந்த வேலைகள் எல்லாம் இண்டைக்கு நேற்று வந்ததா? எப்பவும் செய்யிறதுதானே?” அவ்வளவு இலேசில் நகராது நின்று அவனைக் கதைக்க வைத்திருந்தார்கள், பெரியவர்கள்.
அப்போதும், கல்லுப் போன்று இறுகிவிட்ட முகமும் வறண்ட குரலுமாக அவன் சொன்னவைகளை மட்டும் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை தான்.
இருவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள்.
“சரி ஜோரிக், இதில நீ கோபப்பட என்ன இருக்கு?”
“நான் கோபப்பட்டன் எண்டு உங்களுக்கு ஆர் சொன்னது ஓமா(பாட்டி)?”
“அப்ப ஏனிப்படி இருக்கிற?”
“எப்படி இருக்கிறன்? நான் எப்பவும் போலத்தான் இருக்கிறன். அதுதான் சொன்னனே, வேலை கூட. அந்த யோசனை.” என்றவன், அவர்கள் இருவரையும் தீர்க்கமாகப் பார்த்தான்.
“மற்றும்படி, மீராவோட இனி எந்தத் தொடர்பும் வேணாம் எண்டு முடிவெடுத்திருக்கிறன். நீங்களுமே அவளோட கதையைக் குறையுங்கோ!” அழுத்தம் திருத்தமாகவே சொன்னான்.
“உனக்கு மீராவைப் பிடிச்சிருக்கெண்டு எங்களுக்குத் தெரியும். இனி…” என்று ஹெலன் ஆரம்பிக்க, அவனோ, என்றுமில்லாதவாறு சீறிவிட்டான்.
“அவளை எனக்குப் பிடிச்சிருக்கு எண்டு உங்களிட்ட எப்போவாவது சொன்னனா என்ன? இதென்ன புது உளறல்? இனிமேல்பட்டு அவளப் பற்றின கதையே என்னட்ட வேணாம்!” உறுமிய வேகத்தில் வெளியேறியும் விட்டான்.
அவன் மனம், அதில் உள்ள ஏக்கங்கள், தாக்கங்கள் அவர்களுக்குத் தெரியாதா?
‘பெற்ற தாயிட நிழலையே ஸ்பரிசிக்க மாட்டன் என்பவன் அல்லவா?
சிறுவயது முதல் ரோஷமும் கோபமும் அவனுடன் கூடவே ஒட்டிக்கொண்டு வருவதுதான். ஆனாலும், பாசத்துக்கும் குறைவில்லாதவன். என்ன…அதை வெளிப்படையாகக் காட்டத் தெரியாதவன்.’
இப்படித்தான் எண்ணினார்கள்; அதுதான் உண்மையும் கூட!
“கொஞ்சநாள் போகட்டும் ஹெலன். அமைதியான மனத்தோட யோசிச்சான் எண்டா அவனுக்கே எல்லாம் விளங்கும். திடீரென்று அறிந்த விசயம் தந்த அதிர்வில இப்பிடிக் கதைக்கிறான்.” என்று, மனைவியைச் சமாதானம் செய்திருந்தார், பீட்டர்.
“மீரா பாவம் பீட்டர். ‘ஃபோன் பண்ணினாலும் எடுக்கிறான் இல்ல; இவனுக்குத் திடீர் திடீரென்று என்ன நடக்கிறது?!’ என்று கலியாண வீட்டில வச்சே கேட்டாள். என்ன ஏதென்று இங்க கேட்டு வரமாட்டாளா?” என்று அவர்கள் கதைத்துக் கொண்டது போலவே, அவளும் வந்து விட்டாளே!
பெருமூச்சுடன் மனத்தை வேலையில் செலுத்த முயன்றவர், தம் கடைக்குள் நுழைபவளைக் கண்டுவிட்டு, அவளை எதிர்கொள்ள விரைந்தார்.
“வா மீரா; நீ போய்ட்ட எண்டெல்லோ நினைச்சன்!”
“ம்ம்…அதில் நிண்டு இறங்கி வந்தால் உங்கட பேரன் பின்பக்கத்தால வெளிய போனாலும் போயிருவான். அதுதான் போற மாதிரி போக்குக் காட்டிட்டு வந்திருக்கிறன்.” என்ற மீராவின் முகத்தில் வழமையாகத் துள்ளித் திரியும் குறும்பு மருந்துக்கும் இல்லை.
குரலில் கூடச் சோர்வுதான். அதைப் புரிந்துகொண்ட பின்னரும் பதிலேதும் சொல்லவில்லை பீட்டர்.
“சொல்லுங்க பீட்டர், ஜோரிக் எங்க?”
“இங்கக் கடையில தான்மா நிற்பான். நீ இப்படி இரு. ஏதாவது குடிக்கிறியா? சாப்பிட்டியா?” அவர் எப்போதும் போல உபசரித்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை, அவள்.
“நன்றி பீட்டர். எனக்கு எதுவும் வேணாம். ஜோரிக்கைச் சந்திச்சா நல்லது.”
“கொஞ்சம் இரு வாறன்.” என்றுவிட்டுச் சென்றவர், போன வேகத்தில் திரும்பி வந்தார்.
“அவன் இப்பத் தான் மேல போனானாம்…வீட்டுக்கு….” அவர் சொல்லி முடிக்க முதலே, “நான் போய் அவனப் பார்த்திட்டு வாறன்.” விறுவிறுவென்று சென்று மறைந்துவிட்டாள், மீரா.
தடுக்க நினைத்தாலும் முயலாது அப்படியே நின்றார், பீட்டர்.

