14
மீராவில் தன் மனம் சாய்வதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்திருந்தான், ஜோரிக். அதேநேரம், அவளுடனான உறவுவென்பது தனக்குப் பொருந்தி வராது என்றும் அறிந்திருந்தான். அதுவே, ஆரம்பத்திலேயே அவளை விட்டு விலகுவதே மேல் என்று முடிவெடுக்கவும் வைத்தது. இருந்தும், அவளின் அழைப்புக்கு மதிப்பளித்து, கல்யாண வரவேற்புக்குச் சென்றிருந்தானே!
விதிதான் அழைத்துப் போனதோ!
வேண்டாம், சரிவராது என்று இவன் ஒதுங்க நினைத்தவளோ, மொத்தமாக அவனை ஆட்டிப் பார்த்திருந்தாள்; முழுதாய்த் தன் வசப்படுத்தியும் விட்டிருந்தாள்!
‘இது சரியாகுமா? இல்லையா?’ என்று சற்றும் வாதிடாது, அக்கணம், அந்த இரம்மியமான சூழலில் மனத்தில் எழுந்த மகிழ்வைப் பூரணமாக அனுபவித்தபடி அவளையே கண்களால் தொடர்ந்திருந்தவன் பார்வையில், அவர்கள் ஏன் விழுந்தார்கள்?
அதுவும், எத்தனையோ வருடங்களுக்கு முதல் சிறுவனாக இருக்கையில் சந்தித்தவர்களை, அத்தனைத் துல்லியமாக அடையாளம் கண்டு கொள்ள வேணுமா என்ன?
‘அவர்கள்.. என் மனதுள் வந்தமர்ந்தவளின்…’ இப்படி நினைத்ததும் தலையை குலுக்கிக் கொண்டான், ஜோரிக்.
இத்தனைக்கும் பிறகு, மீரா பற்றிய சிந்தனைக்கு இடம் கொடேன் என்றது அவன் மனவுணர்வு!
அது ஏதோ ஒருவகை உணர்வென்றே வைத்துக் கொள்ளலாம். அந்த உணர்வில் சொல்ல முடியாத வெறுப்பும் கோபமும் கூட கலந்து கிடந்தன. அதையெல்லாம் தட்டிக்கொட்டிக் கடை பரப்பி, அதன் தாக்கத்தில் தெப்பலாக நனைந்து, வருந்தி, தன்னுள் தானே உழன்று, நியாய அநியாயம் பேசி இப்படி நேரத்தைச் செலவிட அவன் நினைக்கவும் இல்லை, தயாராகவும் இல்லை.
அதேநேரம், மீரா என்பவளை விட்டுத் தூரமாக விலக வேண்டும் என்று மட்டும் முடிவெடுத்து விட்டான்.
அன்றிலிருந்து, தேவையில்லாத சிந்தனையை விரட்டும் பொருட்டுத் தன் கடை வேலைகளோடு, ரெஸ்ட்டோரன்ட் வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்பவன், இதோ இப்போ, மிகுந்த அயர்ச்சியில்தான் வீடு வந்தான்.
அதுவும், சற்றுமுன் மீராவைக் கண்டபின்னர் மனம் மிகுந்த சோர்வைத் தழுவியிருந்தது.
நிச்சயம் தேடிவருவாள் என்று அவன் மனம் சொல்லிக் கொண்டேதான் இருந்தது.
‘மனம்’ ஒரு விசித்திர ஜந்து தானே?
வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்க முடிவெடுத்தாலும், ‘அவள் என்னைத்தேடி வரமாட்டாளா?’ என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஒரு மூலையோரத்தில் இருந்து கொண்டே தான் இருந்தது.
இருந்தும், கடைக்கு எதிர்ப்புறச்சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கியவளைக் கண்ட மறுநொடி, “நான் இல்லை எண்டு சொல்லிவிடு!” சற்றும் யோசிக்காது சொல்லிவிட்டுப் பின்புறமாகச் சென்றுவிட்டான்.
அதன் பிறகோ, மனேஜர் சொன்னதைக் கேட்டு, கூம்பிப் போன வதனத்துடன் அவள் செல்வதைக் கண்டவன் மனத்தில் பலத்த வலி!
அதற்கு மேலும் அங்கு நின்று வேலை செய்யும் எண்ணம் அற்றிருக்க “ஒரு ரெண்டு மணித்தியாலத்தில வாறன்.” என்றுவிட்டு வந்தவன் அங்கிருந்த சோஃபாவில் விழுந்து கிடந்தான்.
வீட்டினுள் நுழைந்து சற்று நேரம் தான்;ஆனால், யுகம் கடந்துவிட்டது போன்றதொரு உணர்வு!
தன் மனத்தில் இத்தனை கசப்புக்குக் காரணம் என்ன? அன்று, அந்தத் திருமண வரவேற்பில் கண்டவர்களா? அதை முழுமையாக ஏற்கவும் முடியவில்லை.
‘அப்ப, மீராவை விட்டு ஒரேயடியாக ஒதுங்கிப் போக நினைக்கிறியே, அதுவா?’
மனம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவே விரும்பவில்லை, அவன்.
இப்படி, சிந்தனையும் குழப்பமுமாகக் கிடந்தவனை, வாயில் மணி, தன்னை நோக்கச் செய்தது.
“இந்தத் தாத்தா எதையாவது சாப்பிட அனுப்பியிருப்பார் போல!”
முணுமுணுப்பும் முகச்சுளிப்புமாக வந்து திறந்தவனில், ஒரு கணம் துளியும் அசைவில்லை!
அங்கே நின்றிருந்தவள் அவன் தேவதையல்லவா? கேள்வியேன்? தேவதையேதான்!
இதுவரையும் அவனை இறுகப்பற்றியிருந்த சோர்வும் வெறுமையும் பட்டென்று மாயமானது போலுணர்ந்தவனுக்கு, தன் மனத்தையே சரிவரக் கணிக்க முடியவில்லை.
அதையுணர்ந்து தன்னைத்தானே மிகவும் எரிச்சலோடு கடிந்துகொண்டவன், அந்த எரிச்சலை எதிரே நிற்பவளில் காட்ட முனைந்தான்.
அவன் நின்ற தோற்றத்தையும் மீறி, தன்னைக் கண்டதும் அவன் விழிகளில் தெறித்த பளிச்சிடலைப் புரிந்து கொண்டாள் மீரா. மறுநொடி, அவள் இதழ்கள் அழகிய புன்னைகையில் விரிந்தன!
அவனோ, சற்றுமுன் அவள் உணர்ந்ததை கனவோ என்று எண்ணும் வகையில், கோபத்தையும் எரிச்சலையும் விழிகளில் படர விட்டிருந்தானே!
நெற்றி சுருங்க அவனை உற்றுப் பார்த்தாள், மீரா.
“எப்பிடி இருக்கிற ஜோரிக்?” கேட்டுக்கொண்டே உள்ளே நுழைய முயன்றவள், அவன் படீரென்று கதவைச் சாத்த, “ஏய்…” இடக்கரத்தால் தடுத்ததில் ‘சட்’ என்று கதவு அவள் கரத்தில் மோதியது.
நன்றாகவே அடிபட்டிருக்கும். அதற்கு முதல், அறைந்து சாத்த முயன்றவன் தானும் சேர்ந்து தடுத்துப் பிடித்திருந்தான்.
அவனை விசித்திரமாகப் பார்த்தாள், மீரா.
‘மனவியாதி உள்ளவனோ! ஓரோர் நேரத்துக்கு ஓரோர் மாதிரி நடக்கிறானே!’ என்ற சந்தேகத்தோடும் பார்த்து வைத்தாள்.
“உனக்கு அறிவில்லையா?” சீறினான், அவன்.
“அது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? அதைப் பற்றின கவலை எல்லாம் உனக்கு வேணாம் ஜோரிக். அதையெல்லாம் நான் பாத்துக்கொள்ளுவன்.” இவள் குரலில் நக்கல்.
அவனோ, ஒரு முடிவெடுத்த தோரணையில் வார்த்தைகளை விட்டான்.
“எனக்கு எத்தினையோ தடவைகள் ஃபோன் பண்ணியிருந்த தானே? ஒரு தடவையாவது எடுத்துக் கதைச்சனா? உன்ர ஒரு மெசேஜூக்குச் சரி பதில் போட்டிருந்தனா? இல்லை எல்லா? அப்பிடி எண்டா என்ன அர்த்தமாம்?
“அட! அதைத்தானே நானும் கேக்கிறன்? என்ன அர்த்தம்?”
“உண்மையாவே உனக்கு விளங்கேல்லயா?”
முறைத்தாள் அவள். “எனக்குப் பொய் கதைக்கிறது பிடிக்காது ஜோரிக். உண்மையாவே விளங்கேல்ல. நேரில காணேக்க எல்லாம் நெருக்கமானவனாக் கதைக்கிற…ஆனா…”
அவள் வார்த்தைகள் தடைபட்டன. அவன் பார்வையின் உக்கிரம் தடுத்திருந்தது.
“இங்க பார்…எனக்கு உன்னோட கதைக்கவோ, தொடர்பில இருக்கிறதிலயோ விருப்பம் இல்லை எண்டது தான் அந்தக் காரணம்.” அடிக்குரலில் சீறினான், அவன்.
இவள் விழிகள் விரிந்தன. அதோடு, இதழ்களில் அதே அழகிய முறுவல்!
“பகிடி விடுறியா ஜோரிக்? இதை நான் நம்ப வேணுமோ!?”
அத்தனை நம்பிக்கையாக, நேருக்கு நேராகக் கேட்டவள் பார்வையை எதிர்கொள்ளும் திராணியின்றி, தவித்துத் தத்தளித்து விலகியது அவன் விழிகள்.
மனமோ, சொல்ல நினைத்ததை நாவினால் தெறிக்க விட்டது; சிறுதயக்கமுமின்றி!
“நீ நம்பித்தான் ஆகோணும் மீரா. முதல், என்ன எல்லாம் சொல்லுற? நான் எங்க உன்னோட நெருக்கமானவன் போலக் கதைச்சன்? அண்டைக்கு ஏதோ கஷ்டத்தில இருந்த எண்டு உதவினன். பிறகோ, நீ தான் துரத்திக்கொண்டே இருக்கிற. உன்னால என்ர நிம்மதியே போச்சு!
படிக்கிறன் எண்டு சொல்லீட்டு, இப்பிடி, ஃபோன் பண்ணுறது, மெசேஜ் பண்ணுறது, ஊர் சுற்றுறது…ச்சே…!”
இடுங்கிய விழிகளோடு அடிக்குரலில் அவன் சொன்ன விதம் அவளைஅதிரத்தான் செய்வித்தது. அதோடு விட்டானா?

