“உன்ர ஊர் ஆட்கள் எல்லாம் இப்பிடியெல்லாம் யாருக்கும் பின்னால அலையமாட்டினம் எண்டு நினைச்சிருந்தன்; நீ அப்பிடி இல்ல எண்டு செய்து காட்டுற!”
உண்மையான அன்பைச் சுமந்து வந்தவள் மீது சேறிரைத்தான், அவன்.
“இங்க பார், கடைசித் தடவையாச் சொல்லுறன்; என்னோட எந்தவிதத்திலாவது தொடர்பு கொள்ளவோ இங்க வந்து போகவோ முயலாத! எனக்கு உன்னப் போன்றவர்களோட பழக்கம் வச்சுக்கொள்ள எல்லாம் நேரமில்ல.” சொல்லிக்கொண்டே, அதிர்ந்து நின்றவளைப் பிடித்து வெளியே நகர்த்திய வேகத்தில் கதவை அறைந்து சாத்திவிட்டான்.
மீராவோ, உணர்வு மரத்து அதிர்ந்து நின்றாள்.
அவன் பேச்சு, கோபம், அடிக்குரலில் துப்பிய வார்த்தைகள் என எதையுமே, சட்டென்று நம்ப முடியாது தத்தளித்துப் போனது அவளுள்ளம்.
‘ஆரம்பத்தில இருந்து அவன் அப்பிடித்தானே எனக்கு அறிமுகமானான்! நான் ஏன் அதையெல்லாம் மறந்து அவனுக்குப் பின்னால்…ச்சே! இந்தளவுக்குக் கேவலமா நினைச்சுக் கதைச்சிட்டானே!’
மனதுள் அழுதபடி விறுவிறுவென்று இறங்கியவளுக்கு, அவனில் தான் உணர்ந்த நேசம் பொய்யென்று மட்டும் நம்பவே முடியவில்லை.
விழிகள் கலங்க வேகமாக வந்தவளைத் தடுத்து நிறுத்தினார், பீட்டர்.
“அவன் ஏதாவது சொல்லிப்போட்டானா மீரா?” என்றவருக்கு, அவள் பதில் சொல்ல முனையவில்லை. அவருக்கும் பதில் தேவைப்படவும் இல்லை.
“அவன் ஏதேதோ மனக்கஷ்டத்தில இருக்கிறான் மீரா; நிச்சயம் உன்னில எந்தக் கோபமுமில்ல.” அவசரமாகச் சொன்னவர், காதே கேளாத பாவனையில் வெளியேறுபவளின் பின்னால் விரைந்தார்.
“அவன் ஏன் திடீரெண்டு கலியாண வீட்டில இருந்து வந்திட்டான் எண்டது உனக்குத் தெரியோனும் எண்டால் …” என்றதும், சரேலென்று திரும்பினாள் மீரா.
“ஏன்?” கேள்வியும் அதே வேகத்தில் வந்தது.
“அதை…அதை…ஹெலனிட்டக் கேள் மீரா. உனக்கு நேரமிருந்தா ஹெலனோட ஒருக்கா கதை. நேரில போய்க் கதைக்கிறது நல்லம்.” அவசரமாகச் சொன்னார்.
சட்டென்று இவளுக்கு எதுவும் விளங்கவில்லை.
‘அப்பிடி என்ன பெரிய காரணம் இருந்திரப் போகுது?’ யோசனையும் ஓடாதில்லைத்தான். ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு வெளியேறியவள், குமுறும் மனத்தோடு வீட்டுக்குத்தான் செல்ல இருந்தாள். பிறகு, முடிவை மாற்றிக் கொண்டாள்.
“ஜோரிக்குக்கு என்ன பிரச்சின ஹெலன்?” என்ற கேள்வியோடு, ஹெலன் வீட்டில் சென்று நின்றாள்.
இவளைக் கண்டதும் வரவேற்ற ஹெலன்…
இப்படி, கடகடவென்று, தொடர் சங்கிலியாக அவளுள் அலைந்து திரிந்த நினைவலைகள், அவளறைக் கதவு திறபட்டதில் படீரென்று அறுபட்டுப் போயின.
“மீரா! என்ன இது? நீ இன்னுமா எழும்பேல்ல?” என்றபடி பிரவேசித்தார், நித்தி.
தாயைக் கண்டதும் சட்டென்று எழுந்தமர்ந்தாள், மீரா.
“தலையிடி இப்ப எப்பிடி இருக்கம்மா?” என்றபடி, அருகில் வந்தமர்ந்த நித்தி, மகளின் நெற்றியில், கழுத்தில் என கை வைத்துப் பார்த்தார்.
மகளுக்கு என்னவோ என்ற பதற்றமும் அக்கறையுமாக அருகிலிருந்த தாயைப் பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன, மீராவிற்கு!
அதை அவதானித்து, “என்னடாம்மா செய்யிது? இன்னும் தலையிடி இருக்குதா? அதுக்காக இப்பிடியே படுத்துக்கிடப்பியா?” எனக் கடிந்து கொண்ட தாயின் மடியில் தலை சாய்த்தவள், “என்ன நேரத்துக்கே வந்திட்டீங்க?” சலுகையோடு கேட்டாள்.
“கடைசி ரெண்டு பாடமும் ப்ரீ; அக்கா ஷாப்பிங் போக வேணும் எண்டு சொல்லியிருந்தாரே…அதுதான் வந்திட்டன்.” என்றவர், “அம்மா… உங்களிட்ட ஒண்டு சொன்னால் கோவிச்சுக்கொள்ள மாட்டீங்களே!” என்ற மகள் முகத்தை மெல்லத் திருப்பி, கூர்மையாகப் பார்த்தார்.
மனத்தில் கிடந்து அரிக்கும் விசயங்களை அதிக நேரம் பொத்தி வைத்திருக்கும் திராணி இருக்கவில்லை, மீராவிற்கு. முதல், அது அவள் சுபாவமும் அல்லவே! அதேநேரம், எல்லார் முன்னிலையிலும் பட்டென்று போட்டுடைக்கவும் துணிவு வரவில்லை.
வீட்டாரிடம், “நான் இவனை விரும்புறன்…” என்று சொல்வதில் அவளுக்குத் தயக்கமே இல்லை. ஆனால்…அத்தோடு இந்த விடயம் முடிந்து விடுமா என்ன?
இத்தனை வருடங்களாக, இளையவர்களான தம் கவனத்திற்கு வராத ஒரு விசயத்தை, ‘நான் தெரிஞ்சு கொண்டன்!’ என்று, எப்படி எல்லோர் முன்னிலையிலும் சொல்வது?
அறிந்த விடயம்உண்மையா என்று சந்தேகமும் வரவில்லை, அவளுக்கு.
இதிலெல்லாமா யாரும் பொய் சொல்வார்கள்? என்றதோடு, உண்மை தான் என்று எண்ண, சில விடயங்களும் நினைவில் வந்தன.
அதோடு, நேசம் கொண்ட உள்ளமோ உண்மையாக இருக்கட்டுமே என்றும் எண்ணியதோ என்னவோ!
எப்படி இருந்தாலும் கல்யாணம் முடிந்த மகிழ்வில் இருப்போர் மனங்களில் சின்னதாகவேனும் சுணக்கத்தை ஏற்படுத்த அவள் விரும்பவில்லை.
தான் அறிந்ததைச் சொன்னால், நிச்சயம், வீட்டில் உள்ளவர்களிடையே அசௌகர்யம் ஏற்படவே செய்யும் என்பதால், தனியாகக் கதைக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தாயிடம் சொல்ல நினைத்தாள்.
அப்போதும், எப்படித் தொடங்குவது என்று அவளுக்கு விளங்கவில்லை.
மகள் முகத்தில் மாறி மாறி வந்து போன உணர்வுகளைக் கவனித்துக் கொண்டிருந்த நித்தியின் முகத்தில் யோசனை!
“இதென்ன புதுசா அனுமதி கேட்டுக் கதைக்கிற பழக்கம் மீரா?!”
“இல்லம்மா…வந்து…” தடுமாறினாள், அவள்.
“உனக்கு ஏதாவது சொல்ல வேணுமெண்டா எங்களிட்ட சொல்லாம வேற ஆரிட்ட சொல்லுவ மீரா? அம்மா அப்பாட்ட அனுமதி கேட்டுக் கொண்டா இருப்ப? என்ன எண்டு சொல்லு?”
மகளின் தலையை அன்பாக வருடியபடி கேட்டார்.
“அது வந்தம்மா…நான்..” மீண்டும் தாயின் வயிற்றினுள் முகத்தைப் புதைத்துக் கொண்டவளுக்கு, அப்போதும், “நான் இப்பிடி ஒரு விசயத்தைத் தெரிஞ்சு கொண்டன்மா…அது..உண்மைதானே?” என்று கேட்க வரவில்லை. மாறாக, “நான்..ஒருத்தர விரும்புறன்மா!” என்றாள் மெதுவாக, ஆனால் அழுத்தம் திருத்தமாக.
மகளை வருடிக்கொண்டிருந்த நித்தியின் கரம் கணம் இயக்கமின்றி நின்றது.
“என்ன? என்ன சொன்ன?” இலேசான பதற்றத்தோடு வினவவும் செய்தார்.
மெல்ல எழுந்தமர்ந்தாள், மீரா. தாயின் ‘என்ன சொன்னாய்க்கு?’ பதில் சொல்லாது நேராகப் பார்த்தாள்.
மனதுள் இருந்ததை வெளியில் சொல்லும் வரைதான் தயக்கம் எல்லாம்…இனி என்ன?
“அவன்ட பெயர் காண்டீபன் மா. உங்கள் எல்லாருக்கும் அவனத் தெரியும்.” மகள் சொல்ல, யோசனையில் நித்தியின் நெற்றி சுருங்கியது.
‘காண்டீபனா? ஆர்? ஆரிட மகன்?’ என்ற சிந்தனையும் நித்தியுள் எழுந்தது.
இதே யோசனைதான், அவள் கதைக்கத் தொடங்கியதுமே அறை வாயிலில் வந்து நின்ற மதுரா, நிரூஜ் இருவருக்கும்.

