காதல் காயங்களே 19 – 1

அத்தியாயம் 19

 

 

இறந்தகால நினைவுகள் அத்தனையும் ஆக்ரோசம் கொண்டு பிரதீபனைத் தாக்கின! அன்றைக்குத் துணிந்து தன் குழந்தையைத் தானே அழித்தவன் இன்றைக்கு அதையெண்ணித் துடித்தான். அதைச் செய்ய எத்தனை தைரியம் இருந்திருக்க வேண்டும் அவனுக்கு? தைரியம் அல்ல கோழைத்தனம்! இக்கட்டான ஒரு சூழ்நிலையைத் துணிந்து எதிர்கொள்ள முடியாத கோழையாகிப்போனதில் தானே அழித்தான். பெண்ணான அவளே சொன்னாளே, வருவதை எதிர்கொள்வோம் தீபன் என்று. ‘குடும்பத்தை நான் பாக்கிறேன் நீ உன்ர கடமையை முடி’ என்று. அவளுக்கு இருந்த துணிவும், பிரச்னையை எதிர்கொள்ளும் தைரியமும் அன்று அவனுக்கு இல்லாமல் போயிற்றுத்தானே.

 

‘என்னை எப்படி அப்பா உன்னால் அழிக்க முடிந்தது?’ உதடு பிதுக்கியபடி அழுதாள் ஆதிரா. அடிக்கடி அவனைக் கொல்லும் காட்சி அது! உடலெங்கும் வியர்க்க எழுந்து அமர்ந்துவிட்டான் பிரதீபன். மயூரி கூடக் கடைசியாகச் சொன்னாளே, ‘உன் கடமைகளையும் பொறுப்பையும் முடி’ என்று. அப்போ அவளும் குழந்தையும் அவனுடைய பொறுப்பும் கடமையும் இல்லையா? அன்றே குத்திக்காட்டியிருக்கிறாள். அவன்தான் உணர்ந்துகொள்ள முடியாத முழு மூடனாய் இருந்தானே!

 

‘ஐயோ மய்யு! எவ்வளவு பெரிய பாவத்தை செய்திட்டன்..’ அவன் மனம் ஆறாமல் கிடந்து அரற்றியது! அவள் தலைகீழாக நின்றேனும் தடுத்து அவனை இரட்சித்திருக்கக் கூடாதா? இந்தப் பாவத்தை எங்குபோய்த் தீர்ப்பான்? பரிகாரம் செய்தே ஆகவேண்டும். இல்லை.. இது பரிகாரமில்லை. அவனுடைய சாபங்களுக்கான விமோட்சனங்கள். அது அந்த இரு பெண்களிடம் மட்டுமே உண்டு!

 

அதுவும் ஆதிரா.. அவள் அவனுடைய குழந்தை அல்லாமல் இருக்கலாம். ஆனால், மயூரியின் குழந்தை தானே. அவளைத் தனக்கும் சொந்தமாக்கிக்கொள்ள முடிந்தால்? நினைத்த மாத்திரத்திலேயே உடலெங்கும் சிலிர்த்தது அவனுக்கு.

 

அவனை அப்பா என்று கூப்பிடுவாளா? அன்று மயூரி சொன்னாளே வளர்ந்து வந்து அப்பா என்று கூப்பிட்டால் எப்படி இருக்கும் என்று. தேகமெங்கும் சிலிர்க்கக் கண்கள் கசிந்தன.

 

எப்போதடா விடியும் என்று காத்திருந்து, விடிந்ததும் புறப்பட்டு ஆபீஸ் சென்று முக்கியமானவற்றை முடித்துக்கொண்டு, அரைநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு மயூரியின் ஆபீசுக்குப் புறப்பட்டான்.

 

அவளைப் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டுக் காத்திருக்க சற்று நேரத்தில் அவள் வருவது தெரிந்தது.

 

அடர்ந்த கறுப்பிலான ஃபிட் ஜீன்ஸ்க்கு, மெல்லிய நீலத்தில் காலர் வைத்த ஷர்ட் வகையிலான பிளவுஸ் அணிந்திருந்தாள். மெல்லிய ஹீல் சத்தமெழுப்ப, நேம் பேட்ச் கழுத்தில் தொங்க, உயரத் தூக்கிப்போட்ட பொனிடெயிலுடன் கண்ணாடித் தடுப்புக்கு அந்தப் பக்கத்திலிருந்து அவனை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள். தயக்கமற்ற நிமிர்ந்த நடை. எதிர்ப்பட்ட பெண் ஒருத்திக்கு அழகான புன்னகையைப் பரிசளித்துவிட்டு, ஒருமுறை மணிக்கட்டைத் தூக்கி நேரத்தைப் பார்த்துவிட்டு நடந்துவந்த காட்சி வெகு நளினமாய் தோன்றிற்று! கண்களை அகற்றமுடியவில்லை அவனால். ஆனாலும், அகற்றிக்கொண்டான்.

 

அவள் இன்று அவனுக்கு யாரோவாயிற்றே! வலியோடு அந்த உண்மையை உள்வாங்கிக்கொண்டான். அவன் கேட்கப்போவதற்கு அவள் சம்மதித்தால்? மனம் எதிர்பார்ப்பில் பரபரப்புற்றது! ஆனால் அவளின் கணவன்.. அவன் முன்னாள் கணவனாகக்கூட இருக்கலாம். இன்னுமே கணவனாகக்கூட இருந்தாலுமே அவனோடு சேரமாட்டேன் என்று அவ்வளவு உறுதியாகச் சொன்னாளே! அவன் மனது தனக்குச் சாதகமானவற்றை ஒவ்வொன்றாக அடுக்க, வந்தவளோ புருவங்களைச் சுருக்கிக் கேள்வியாக அவனை ஏறிட்டாள்.

 

அவள்தான் அவனிடம் தேவையற்று ஒரு வார்த்தையையேனும் விரயமாக்குவதில்லையே!

 

“கொஞ்சம் கதைக்கவேணும்.” சொல்லிவிட்டு என்ன சொல்வாளோ என்று பார்த்தான். வராதே என்று அன்று முகத்தில் அடித்தாற்போல் சொன்னபிறகு, வரமாட்டேன் என்று அவனும் மறைமுகமாகச் சொல்லிவிட்டு, மீண்டும் வந்து நிற்கிறானே!

 

குத்தலாக மொழிவாளோ என்று நினைக்க, அவளோ வெகு சாதாரணமாக, “வாங்கோ!” என்று அழைத்துக்கொண்டு நடந்தாள். எதையும் எதிர்கொள்ளும் திடம் தெரிந்தது கண்களில். தனக்குள் மெச்சிக்கொண்டான்.

 

காண்டீன் அருகில் சென்றதும், “கணேசண்ணா, ரெண்டு டீ பிளீஸ்!” என்று குரல்கொடுத்தாள்.

 

“கேக்கும் கிடக்கு மயூரிம்மா. ஆளுக்கொரு துண்டு கொண்டு வரவா?” என்று கேட்டார் அவர்.

 

“ஓம், தாங்கோ!” என்றவள், காண்டீனுக்கு வெளியே மரமொன்றின் அருகே போடப்பட்டிருந்த வட்ட மேசையில் அவனுக்கு ஒரு இருக்கையைக் காட்டிவிட்டுத் தானும் அமர்ந்துகொண்டாள்.

 

சின்னச் செயலில் கூட தெளிவும் நிமிர்வும். தடுமாற்றமே இல்லை.

 

மீண்டும் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

 

எதற்கு வந்தாய் என்று கேட்கிறது அவளின் கண்கள். அந்தக் கண்களையே ஒருகணம் அளவிட்டான். ஒருகாலத்தில் தன் உணர்வுகளை அப்படியே அவனிடம் கொட்டிய விழிகள் இன்றைக்கு எந்த உணர்வையும் காட்ட மறுத்தன!

 

ஒரு பெருமூச்சுடன், “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப்போறாய்?” என்றான்.

 

‘எப்படி இருக்கிறன்?’ என்பதாகப் புருவங்களைச் சுருக்கினாள் அவள்.

 

“துணைக்கு யாரும் இல்லாமத் தனியா..” என்று அவன் சொல்லிமுடிக்க முதலே, அவளின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன!

 

“துணை தேடி நான் பட்டபாடு காணும். துணையோடு வாழுற வாழ்க்கையைவிட இந்த வாழ்க்கை நிம்மதியா இருக்கு!” என்றாள் பட்டென்று.

 

நிம்மதி சரி சந்தோசமா இருக்கிறியா? கேட்கமுடியாமல் வேதனையோடு அவளைப் பார்த்தான் பிரதீபன். அவனைக் குத்துகிறாள். அதனால் என்ன? நம்பி ஏமாந்தவளின் குத்தலை ஏமாற்றியவன் பெற்றுக்கொள்ளத்தானே வேண்டும்! எனவே, “இந்த முடிவில மாற்றமே இல்லையா?” என்று, தன்மையாகவே வினவினான்.

 

“மாற்றம் இருக்கோ இல்லையோ. அதை அறிஞ்சு நீங்க என்ன செய்யப்போறீங்க?” அவளுக்குச் சினமேறியது! துணையாகத் தோள் கொடுத்திருக்க வேண்டிய காலத்தில் தட்டிவிட்டுவிட்டு இப்ப வந்து அக்கறை உள்ளவன் போல் பேசுகிறானே!

 

அவனோ அவளையே பார்த்தபடி நிதானமாக வார்த்தைகளை உதிர்த்தான். “நிறையச் செய்யலாம்! உனக்கு கணவனா வரலாம். ஆதுக்கு அப்பாவா மாறலாம். ஒரு குடும்பத்தை நானும் நீயுமா சேர்ந்து கட்டமைக்கலாம். இப்படி நிறைய..” என்றான் அவன்.

 

அவள் விழிகளில் அனல் பறந்தது! கோபத்தில் முகம் சிவந்து போயிற்று! ஆத்திரத்தை அடக்கமுயன்றபடி, “இது பொது இடம். அதைவிட நான் வேலை செய்ற இடம். இங்க வந்து தேவையில்லாம கதைச்சு எனக்கு எரிச்சலை கிளப்பாம நடையைக் கட்டுங்க!” என்று, வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள். இதுவே தனி இடமாக இருந்திருக்க அவனைக் கடித்துக் குதறியிருப்பாள்.

 

கணேசன் டீயும் கேக்கும் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனார். அதை அருந்தும் மனநிலை இருவருக்குமே இல்லை.

 

“உன்ர கோபத்தில இருக்கிற நியாயம் விளங்குது மயூரி..” எனும்போதே, “விளங்குதெல்லா(விளங்குது தானே)? எழும்பி நடவுங்க!” என்று அவனைத் துரத்தினாள்.

 

முகம் கன்றிப்போயிற்று அவனுக்கு. துச்சமாய் நோக்கித் துரத்துகிறாளே! ஆனாலும், நிதானத்தைக் கைவிடவேயில்லை. அன்றொருநாள் கோபத்தில் அவன் இழந்தவைகள் போதாதா?

 

“உன்னப்போல ஒருத்தியோட எந்த நல்ல ஆம்பிளை வாழுவான் எண்டு நீதானே கேட்டனீ? உன்ன அப்படியான ஒருத்தியா மாத்தினவன் நான்தானே. நான் வாழலாம் தானே உன்னோட. நீ வாழலாம் தானே என்னோட?” என்றான் அவன்.

 

அவனது நியாயத்தில் ஒருகணம் மயூரியே மலைத்துத்தான் போனாள். அவனை நோகடிப்பதற்காகவே அவள் வீசிய வார்த்தைகளை இன்று அவளை மடக்குவதற்குப் பயன்படுத்திவிட்டானே! ஆனால், எதுவும் இந்த மயூரியிடம் செல்லாதே!

 

பார்வையால் அவனை வெட்டிவிட்டு, “அதுக்கு எனக்கு விருப்பம் இருக்க வேணுமே!” என்றாள் ஏளனத்தோடு.

 

“ஏன் இல்ல.. ஒரு காலத்தில என்ன உயிரா விரும்பினவள் தானே நீ.”

 

‘ஓ.. அந்தத் தைரியமா?’ சீறியது அவள் உள்ளம்.

 

“அதுதான் நீங்களே ஒரு காலத்தில எண்டு சொல்லிட்டீங்களே.. பிறகு என்ன? என்ர ரசனையும் விருப்பமும் பத்து வருசம் கழிச்சும் மட்டமாவே இருக்குமா?” அவளின் கேள்வியில் அவன் வாயடைத்துப்போனான்.

 

குழந்தையை அழித்தது பெரும் பிழை தான். ஆனால், மட்டமாகவா நடந்துகொண்டான். அவனுக்குத் தெரிந்து அன்று அவளுக்கும் சேர்த்துத்தான் யோசித்தான். சரி அது பிழை என்று அவனே ஏற்றுக்கொள்கிறான் தானே. இருந்தாலும் அந்த ஒரு நிகழ்வு மட்டுமே போதுமா அவனை எடைபோட! அதற்கு முன்வரை அவன் காட்டிய பிரியம்? கொண்ட நேசம்? அவளைத் தாங்கிய அன்பு? எல்லாமே மறந்து மரித்துப் போயிற்றோ? நெஞ்சில் பாரத்தோடு அவளைப் பார்த்தான். அவளோ அவனை விடுவதாகவே இல்லை.

 

“அப்படி விரும்பின காலத்திலேயே நீங்க எனக்கு வேண்டாம் எண்டு தூக்கி எறிஞ்சிபோட்டு வந்தவள் நான். வந்தது மட்டுமில்ல. இப்ப எனக்கு ஒரு மகளும் இருக்கிறாள். இதெல்லாம் தெரிஞ்சும் இப்படிக் கேக்கிறீங்களே.. உங்களை எல்லாம் என்ன சொல்லுறது?” என்றவளின் விழிகள் அவனை மிகவுமே கேவலமாக நோக்கிற்று!

 

விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித்திறந்தான். பின், “அப்ப நீ உன்ர மனுசனோட சேர்ந்து வாழவேணும்.” என்றான்.

 

“அதைச்சொல்ல நீங்க யாரு?” பறந்து வந்தது கேள்வி.

 

“உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன்!” என்றான் அவனும் அழுத்தி. உதாசீனப்படுத்தியே அவனை அங்கிருந்து அகற்ற நினைக்கிறாள் என்று புரிந்து போனதில் நிதானத்துக்கு வந்திருந்தான் அவன்.

 

“அதுக்காக நீங்க சொல்லுறதை நான் கேப்பன்(கேட்பேன்) எண்டு நினைக்கிறீங்களா?”

 

“அதைப்பற்றி எனக்குத் தெரியாது. உனக்கு ரெண்டே ரெண்டு தெரிவு தான். ஒன்றில் உன்ர மனுசனோட வாழப்போ. இல்லையோ என்னைக் கட்டு!” என்றான் முடிவாக.

error: Alert: Content selection is disabled!!