காதல் காயங்களே 19 – 2

அதுவரை கெஞ்சல் குரலில் தன்மையாக உரையாடிக்கொண்டிருந்தவனின் போக்கு மாறியிருந்தது. ஒரு அழுத்தமும் உறுதியும் தென்பட்டதில் அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. நீ சொல்லி நான் கேட்பதா என்பதாக அவனைப் பார்த்துவிட்டு, “எனக்குச் சொய்ஸ் தர நீங்க யார்?” என்று, சினத்துடன் சீறினாள்.

 

நிதானமாக, “அடிக்கடி இதே கேள்வியைக் கேக்கிறாய் மயூரி!” என்றவன் அவளை நெருங்கினான்.

 

அவள் விழிகளையே பார்த்து, “உன்னை உயிரா நேசிச்சவன். இன்னுமே உன்னை மறந்திட்டு இன்னொருத்திக்குப் பின்னால போகமுடியாம திண்டாடுறவன். இது எல்லாத்தையும் விட உன்னோட வாழ்ந்தவன். இனியும் நான் யாரு எண்டு கேக்காத. பதில் என்னட்ட இருக்கு. அதை நீ தங்கமாட்டாய்!” என்றான் உறுதியான குரலில்.

 

மயூரிக்கோ அவமானத்தில் முகம் கன்றிச் சிவந்து போயிற்று! அவனைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். வாழ்க்கையில் சறுக்கியவள் அல்லவா! அதுதான் அதற்குக் காரணமானவனே குத்திக் காட்டுகிறான்! அவளோடு வாழ்ந்தானாமே! எப்படி? முறையற்று அல்லவா! வெட்கிப்போனவளுக்கு கண்கள் மெலிதாகக் கலங்கிற்று! மனம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. தன்னைச் சமன்படுத்திக்கொள்ள விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்துக்கொண்டாள்.

 

தன்னைக் கட்டுப்படுத்தப் போராடுகிறாள் என்று பிரதீபனுக்கும் விளங்கிற்று! இயலாமையோடு உதட்டைக் கடித்தான். அவனே அவளிடம் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது! நம்பியல்லவா தன்னை அவனிடம் தந்தாள். வருத்தம் தோய்ந்த குரலில், “சொரி..!” என்றான் மனதிலிருந்து!

 

சிவந்து கலங்கிக் கிடந்த விழிகளோடு அவனை வெறித்தாள் மயூரி. “நீங்க சொன்னதில என்ன பிழை? இடம் தந்தவள் தானே! இதெல்லாம் கேக்கத்தான் வேணும்!” என்றாள் தன்னையே வெறுத்தவளாக.

 

“மயூரி பிளீஸ்! உன்ன நோகடிக்கிற எண்ணமோ வாயடைக்க வைக்கிற எண்ணமோ எனக்கு இல்ல. குத்தியும் காட்டேல்ல. நீ என்னை முழுசா நம்பி வந்தவள். அந்த நம்பிக்கைக்கு உரியவனா நான் நடக்கேல்ல. அப்ப கேவலமானவன் நான்தான். நீயில்லை. இந்தப் பத்து வருசமும் அம்மா கெஞ்சாத கெஞ்சல் இல்ல. ஆனாலும் ஒரு கலியாணத்துக்கு என்னால சம்மதிக்கவே முடியேல்ல. இதையெல்லாம் நினைச்சு உள்ளுக்க துடிச்சுக்கொண்டு இருக்கிறன். எவ்வளவு பெரிய பிழையை செய்திட்டன், எவ்வளவு பெரிய பாவத்தை செய்திட்டன் எண்டு என்ர மனமே என்னப்போட்டு கொல்லுது மயூரி. அதுவும் ஆதிராவை பாக்கேக்க.. இப்படி ஒரு மகள் எனக்கும் இருந்திருப்பாள், நீ சொன்ன மாதிரியே அப்பா எண்டு கூப்பிட்டிருப்பாள், என்ர தோள்ல ஏறி இருந்து விளையாடி இருப்பாள். என்னை பள்ளிக்கூடம் கொண்டுபோய் விடு.. எனக்கு அதை வாங்கித்தா இதை செய்து தா எண்டு அடம் பிடிச்சிருப்பாள். எல்லாத்தையும் இழந்துபோட்டு தனிமரமா நிக்கிறன் மயூரி. உள்ளதை சொல்லப்போனா நான் கேக்கிறதெல்லாம் உனக்காக இல்ல. எனக்காக.. செல்லரிக்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா என்னை தின்னுதே இந்தக் குற்ற உணர்ச்சி.. அதுல இருந்து விடுதலை கிடைக்காதா எண்டுற அற்ப ஆசை.. என்ர பிள்ளையத்தான் துளைச்சிட்டன். உன்ர பிள்ளையையாவது என்ர பிள்ளைக்கும் மேலால வளத்து நான் செய்த பாவத்தை கழுவ பாக்கிறன் மயூரி. பிளீஸ்.. எனக்கு ஒரு சந்தர்ப்பம் தா..” என்றபோது அவன் குரல் முற்றிலுமாக உடைந்துபோயிருந்தது. தொண்டைக்குழி ஒருமுறை ஏறி இறங்க தன் வேதனையை அடக்குகிறான் என்று விளங்கிற்று!

 

அவளோ எதற்கும் அசைந்தாள் இல்லை.

 

“ஒரு பதிலைச் சொல்லு மயூரி. உன்னால என்னை மன்னிக்க முடியாட்டிப் பரவாயில்ல. நீ அவரோட சந்தோசமா வாழ்ந்தா கூட எனக்கு மகிழ்ச்சி தான். தனியா நீ நிக்கிறதை பாத்திட்டு என்னால இப்படியே போக முடியாது. நான் பிழை செய்தவன் தான். ஆனா, மனமே இல்லாத ராட்சசன் இல்ல. மனிசத்தன்மை கொஞ்சமாவது எனக்கும் இருக்கு..” குரலடைக்கக் கெஞ்சியவனை அவள் ஏற்கவே இல்லை.

 

அன்று எப்படி அவன் கல்லைப்போல இறுகி நின்றானோ அப்படியே அவளும் இன்று கல்லாகிப்போயிருந்தாள்.

 

“ஆதிராவுக்காக எண்டு தயங்காத. நான் நிச்சயமா அவளுக்கு நல்ல அப்பாவா இருப்பன் மயூரி.”

 

அதைக்கேட்டு மயூரி சிரித்தாள். கேலிச் சிரிப்பு! “உங்கட பிள்ளைக்கே உங்களால நல்ல அப்பாவா இருக்க முடியேல்ல. ஆதிராக்கு நல்ல அப்பாவா இருப்பீங்களா?”

 

அடிபட்ட வலியோடு பார்த்தான் அவன். சாட்டையாகச் சுழன்றுகொண்டே இருந்தது அவள் நாக்கு!

 

பெரிய மூச்சு ஒன்றை இழுத்துவிட்டவனின் தலை குனிந்துகொண்டது! “நீ சொல்லுறது சரிதான். என்ர பிள்ளைக்கு..” அதைச் சொல்லும்போதே குரல் உடைய அப்படியே நிறுத்திவிட்டான் பிரதீபன். வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்திருக்க வேண்டும். எழுந்துபோய் அவளுக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றான்.

 

“நான் நல்ல அப்பாவா என்ன? மனுசனா கூட நடக்கேல்ல தான். அதனாலதான் கேக்கிறன். அந்தப் பாவத்தை கழுவத்தான் கேக்கிறன். ஆதிராக்கு காலத்துக்கும் கடமை செய்து தீர்க்கோணும் மயூரி. உனக்கு நான் செய்ததும் பெரிய பாவம் தானே?” என்றுவிட்டு எதிர்பார்ப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

 

ஏனோ உடனேயே பதிலிறுக்க முடியாமல் நின்றாள் மயூரி. தன்னைச் சமாளித்துப் பேசியபோது குரல் கனத்துப் போயிருந்தது.

 

“நீங்க எந்தக் கடனையும் எங்களிட்ட படேல்ல! அதால தீர்க்கிறதுக்கும் ஒண்டும் இல்லை.” என்று அவள் சொல்லும்போது, “இல்லை மயூரி…” என்று அவன் இடைமறிக்க, “பிளீஸ்! கடைசியும் முதலுமா இதை நான் சொல்லி முடிச்சிடுறன்!” என்றாள் அவள்.

 

“அந்த நாட்கள்ல உங்களை முழுமையா நம்பினான். இனி எனக்கு என்ன நடந்தாலும் என்ன எண்டு கேட்கவும் துணையா இருக்கவும் நீங்க இருக்கிறீங்க எண்டு நினைச்சனான். பேபி எண்டு தெரிஞ்சதுமே கோபப்படுவீங்க எண்டு நினைச்சேனே தவிர அழிக்க சொல்லுவீங்க எண்டு கனவிலையும் நினைக்கேல்ல.” என்றவள் மூச்சுக் காற்றுக்கே சிரமப்படுகிறவள் போன்று தலையைப் பிடித்துக்கொண்டாள்.

 

பிரதீபனோ கனத்த மனதோடு அவளையே பார்த்திருந்தான்.

 

இன்றோடு இதை முடித்துவிடுகிறவள் போன்று நிமிர்ந்து, “தேவையான நேரம் நீங்க தோள்குடுக்க இல்ல பிரதீபன். எனக்காக நிக்கேல்ல. எதிர்காலம், சொந்தபந்தம், மானம் மரியாதையைப்பற்றியெல்லாம் யோசிச்ச நீங்க, எங்கட குழந்தையைப் பற்றி யோசிக்கேல்ல. என்னைப்பற்றி யோசிக்கேல்ல. அப்ப அந்த இடத்தில நான் யார் உங்களுக்கு? தேவைக்கு மட்டுமே…” என்றபோது, “ஐயோ சொல்லாத..!” என்று பதறிவிட்டான் அவன்.

 

முகமெல்லாம் சிவந்துபோக பதட்டம் தொற்றிக்கொண்டிருந்தது அவனிடம். “கடவுள் சத்தியமா அப்படி உன்ன நான் நினைக்கேல! தயவுசெய்து அந்த உறவை கொச்சைப்படுத்திப்போடாத!” என்றான் வேதனையோடு.

 

“மயூரி இங்கப்பார்! குழந்தையை அழிக்கவச்சது நான் செய்த பெரும் பாவம். ஆனா அது மட்டுமே நான் இல்ல. அதுக்குமுதல் உன்னோட உயிரா வாழ்ந்த என்னையும் கொஞ்சம் நினைச்சுப்பார் மயூரி! பிளீஸ்!” குரல் கரகரக்கக் கெஞ்சினான் அவன்.

 

அவளோ நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். விழிகள் இலேசாகக் கலங்கி இருந்தது. அவ்வளவுதான் அவனுடைய கெஞ்சலுக்கான பதில்.

 

“நீங்க எப்படி நினைச்சிருந்தாலுமே அதெல்லாம் முடிஞ்சுபோச்சு! நானும் அதையெல்லாம் தாண்டிக்கொண்டு வெளில வந்திட்டன். என்ர வாழ்க்கையும் மாறிப்போச்சு! இப்ப திரும்ப திடீரெண்டு வந்து நிக்குறீங்க. இப்ப நான் மட்டுமில்ல எனக்கு ஒரு பொம்பிளைப் பிள்ளையும் இருக்கிறாள். எனக்காக இல்லாட்டியும் நான் அவளுக்காக நல்ல அம்மாவாவது இருக்கோணும். மானம் மரியாதையோட வாழவேணும். அப்பா இல்லாட்டியும் என்ர அம்மா என்ன நல்லா வளத்தவா எண்டு பிரகாலத்தில என்ர மகள் பெருமையா நினைக்கவேணும். அதையெல்லாம் கெடுத்துப்போடாதீங்கோ. காணுற இடத்தில எல்லாம் வந்து கதைக்காதீங்கோ. எனக்கு ஒரு கெட்டபெயரை திரும்பவும் வாங்கித் தராதீங்கோ! இனியும் எதையும் தாங்கிற சக்தி எனக்கில்லை.” எனும்போது மளுக்கென்று நிரம்பிய அவள் விழிகள் ஒரு துளிக் கண்ணீரை வெளியேயும் தள்ளிவிட்டிருந்தது.

 

தொண்டை அடைக்க அப்படியே நின்றுவிட்டான் பிரதீபன். கோபப்பட்டவளிடம் நிமிர்ந்து நின்றவளிடம் அவனால் போராட முடிந்தது. உடைந்து அழுகிறவளிடம் என்ன செய்ய இயலும்? தோற்றுப்போய் வார்த்தைகளற்று நின்றான்.

 

அவ்வளவுதான்! பேசவேண்டியவற்றைப் பேசி முடித்தாயிற்று என்பதுபோல அவனைப் பார்த்துவிட்டு எழுந்தவள், அங்கு வந்துகொண்டிருந்தவனைக் கண்டு அதிர்ச்சியோடு மீண்டும் தொய்ந்து அமர்ந்துகொண்டாள்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!