காதல் காயங்களே 20 – 2

முகம் சிவந்து போயிற்று அர்ஜுனுக்கு. அருகில் இருந்தவனை நிமிர்ந்தே பார்க்கமுடியவில்லை. அவன்தான் ஆதிராவின் அப்பா என்று தெரியாமல் தான் உளறியது போதாது என்று அதற்கு அவளும் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டாளே! அவமானக்கன்றலோடு, “மயூரி!” என்க, “உங்களை போகச் சொன்னனான்!” என்றாள் அனலைக் கக்கும் விழிகளோடு முடிவாக!

 

எழுந்துவிட்டான் அர்ஜுன். அதற்குமேல் பேசவும் கேட்கவும் என்ன இருக்கிறது? அதைவிட, ஆதிராவின் தந்தையே அருகிருக்கும்போது இதைப்பற்றி அவன் கதைப்பதே கேவலம். இனி அவனின் விருப்பத்துக்கு எதிர்காலமே இல்லை. எனவே, சொல்லாமலே அங்கிருந்து விடைபெற்றுச் சென்றான்.

 

தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் மயூரி! தன்னை நிதானப்படுத்திக்கொள்ள சற்று நேரம் தேவைப்பட்டது அவளுக்கு.

 

பிரதீபனோ, ஆதிராவின் அப்பா அவன்தான் என்று மயூரி அவனைக் காட்டிய அந்தக் கணத்திலேயே உறைந்துவிட்டிருந்தான். வார்த்தைகளில் வடித்துவிட முடியாத உணர்வுகள் உள்ளத்தில் பொங்கி வழிந்தன! அந்தப் பட்டாம்பூச்சி அவனுடைய மகளா? அவனைக் கனிவுடன் நோக்கிய அந்தக் கண்மணி அவனின் கண்ணின் மணியே தானா? கண்ணோரம் நீர் துளிர்த்தது!

 

அப்போ குழந்தையை அவள் கலைக்கவில்லை. ஓ.. மை கோட்! கைகால்கள் எல்லாம் சந்தோசத்தில் நடுங்கியது அவனுக்கு! மயூரி.. அவனுடைய மய்யு இன்னுமே அவனுடையவள் தான்! உணர்வுகளை அடக்க முடியாமல் திண்டாடினான். அருகில் இருக்கிறவளை அப்படியே அள்ளிக்கொண்டு துள்ளவேண்டும் போலிருந்தது. ஓடிப்போய் அவனுடைய பெண்ணை தூக்கிக் கொஞ்சிவிடத் துடித்தான்.

 

அவனுடைய பாவம் மன்னிக்கப்பட்டதா? அவளால் ரட்சிக்கப் பட்டுவிட்டானா? அவனுடைய மயூரி அவனைக் குற்றச் சிறையிலிருந்து மீட்டுவிட்டாளா? முகம் சிவந்து கண்கள் கலங்கி.. அர்ஜுன் போனதுமே அவளின் கரத்தை இரண்டு கைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டான் பிரதீபன். அப்படியே தன் முகத்தை அவளின் கையிலேயே புதைத்தான். இதயமோ கோடானு கோடி நன்றியை அவள் காலடியில் கொட்டிக் குவித்தது. கொல்லாமல் கொன்ற குற்ற உணர்ச்சியில் இருந்து விடுவித்துவிட்டாளே! பத்துவருடத் தண்டனைக்கு இன்று விடுதலை தந்துவிட்டாள். அவனைத் தைத்துக்கொண்டிருந்த முள்ளைப் பிடுங்கிவிட்டாள்.

 

“விடுங்க..” கையை விடுவித்துக்கொள்ள அவள் முயல, “பிளீஸ்…” என்கிற அவனின் தழுதழுத்த கெஞ்சல் அதை அடக்கியது. அவளின் கையை உதடுகளில் ஒற்றிக்கொண்டவனின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 

ஒரு அதிர்வோடு மயூரி அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் உடலின் நடுக்கத்தை அவளால் உணர முடிந்தது.

 

“ஆது என்…ர மகளா?” தொண்டை அடைக்கக் கேட்டான். அவள் தனிப்பட அவனிடம் அதைத் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். அவளும் ஆம் என்பதாகத் தலையசைத்தாள். அவளையே பார்த்தான். நிறையக் கேட்கவேண்டும் போலவும் இருந்தது. என்ன கேட்பது என்றும் தெரியவில்லை.

 

மயூரி மெல்ல அவளின் கையை விடுவித்துக்கொண்டாள். அவள் போகவேண்டும்.. எழுந்துகொள் என்று மனம் சொல்ல, அதையே செயலாக்க முனைந்தவேளையில், “கல்யாணம் பிரிவு எண்டு சொன்னதெல்லாம்..” கேள்வியாக நிறுத்தினான் அவன்.

 

“நானா எதுவும் சொல்ல இல்ல. ஆதிராவின்ர அப்பா எங்க எண்டு கேட்ட ஆட்களுக்கு பிரிஞ்சிட்டோம் எண்டு சொன்னனான். மிச்சம் அவேயே(அவர்களே) கற்பனை செய்தது. நான் தடுக்கேல்ல.”

 

அவன் விழிகள் அவளிடமே இருந்தது. என்னவோ கேட்கப்போகிறான். அவளின் உள்மனது உணர்த்தியது. அது பொய்யில்லை என்று அவனும் உணர்த்தினான்.

 

“ஆதிராட அப்பாவை மட்டும்தான் சனம் விசாரிச்சதோ?” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

அவள் அவனைப்பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவனுடைய விழிகள் இப்போது அவளின் முகத்தில் உரிமையோடு படிந்தது.

 

“சொல்லு மயூரி? உன்ர மனுசனைப்பற்றி யாருமே விசாரிக்க இல்லையா?”

 

மனுசனா? ஆதிராவுக்காக அவன் துடிப்பதைக்கண்டு இளகியிருந்த அவள் உள்ளம் மீண்டும் இறுகியது! என்ன உரிமையில் கேட்கிறான்? முதலில் அவளுக்குக் கணவன் என்று ஒருவன் உண்டா என்ன? காதலன் கணவனாகும் முன்னேயே கர்பவதியானவள் தானே அவள். அதில் பாதிப்பங்கு அவனுடையது. ஆனால், அவமானங்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தவள் அவள். இன்றைக்கும் அவளைப்பற்றித் தெரிந்த சமுதாயத்தில் அவள் அவமதிப்புக்கு உரியவள் தானே!

 

அவனுடைய மகளை இத்தனை வயதுவரை வளர்ப்பதற்கு அவள் பட்ட பாடுகள்? இதோ சற்றுமுன் வந்துவிட்டுப்போன அர்ஜுன் கூட அவளுக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்தவன். அதனால்தானே திருமணம் வரை அவனும் வந்தான். உண்மையைச் சொல்லப்போனால் ஊருக்குப் பயந்துதான் அவுஸ்திரேலியாவில் ஒளிந்து வாழ்ந்தாள். அவளுடைய அப்பா.. அவர் தனிமையில் மட்டும்தானே வாழ்க்கையைக் கழித்தார். இத்தனைக்கும் காரணமானவன், இன்று மகள் இருக்கிறாள் என்றதும் தன்னைப் புருசனாக நிலைநாட்ட நிற்கிறானோ?

 

“கேட்க இல்ல. கேட்டிருந்தா அவர் இல்லை எண்டு சொல்லியிருப்பன்!” என்றவள் எழுந்துநடக்க, அவளின் பதிலில் பலமாய் அறைவாங்கினான் அவன். போகிறவளையே வேதனையோடு பார்த்திருந்தான். சற்றுநேரம் அவனால் எதையுமே செய்யமுடியவில்லை.

 

தன் துயரை வேகமாக விழுங்கிக்கொண்டு, “பின்னேரம் வீட்டை வருவன்! ஆதிராவைப் பார்க்க!” என்று குரல் கொடுத்துவிட்டு அவனும் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

 

அவளின் பதிலைக் கேட்கக் கூடாது என்கிற வேகம் இருந்தது அவன் நடையில்.

“இல்ல வரவேண்டாம்..” என்றவளிடம், “கட்டாயம் வருவன் மயூரி! நீ என்ன சொன்னாலும்..” என்றவன், அவள் இனி என்ன சொன்னாலும் கேட்காத தூரத்துக்கு நடந்து போய்விட்டிருந்தான்.

 

அவளோ தோள்களைக் குலுக்கிவிட்டுத் தன் வேலைகளைப் பார்க்கப்போனாள்.

 

காரில் ஏறியதும் அப்படியே அமர்ந்திருந்தான். மயூரியின் வார்த்தைகள் அவனை மிகவுமே காயப்படுத்தியிருந்தது. அதையும் தாண்டிக்கொண்டு ஆதிரா அவன் மகள் என்கிற சந்தோசத்தில் மனம் துள்ளிக்கொண்டிருந்தது. நினைக்க நினைக்க ஒரு சந்தோசம்.. தேகமெங்கும் புல்லரித்தது. அவனுக்கொரு மகள் இருக்கிறாள். அவன் அப்பா என்கிற பதவிக்கு உரியவன். இதற்கெல்லாம் காரணம் மயூரி. அவனுடைய குழந்தையைக் காப்பற்றித் தந்திருக்கிறாள். பெரும் பாவத்திலிருந்து அவனைக் காத்திருக்கிறாள். அதற்குமுன்னால் அவளின் வார்த்தைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. காதலும் நேசமும் கணக்கற்றுப் பொங்கியது அவளின்மேல்.

 

“மய்யு.. நீ அடிச்சு துரத்தினா கூட இனி உன்னைவிட்டு போகமாட்டன். உன்னைத்தவிர வேற யாரடி என்ன இவ்வளவு சந்தோசமா வச்சிருப்பாள்..” நேசத்தோடு முணுமுணுத்தான்.

 

‘அவன் அவள் ஆதிரா ஒரு குடும்பம்’ நினைக்கையிலேயே நெஞ்சில் சொல்லமுடியாத உணர்வுகள் பொங்கிற்று! அதுவும் ஆதிரா.. அவனுடைய வண்ணத்துப்பூச்சி!

 

“ஆதிரா…” கண்களை மூடி அவளின் பெயரைப் பட்டிலும் மென்மையாக உச்சரித்தான். தேகமெங்கும் சிலிர்த்தது.

 

முதன் முதலில் தியேட்டரில் பார்த்த ஆதிரா. சப் வேயில் பார்த்த ஆதிரா. அம்மா வெளுப்பா என்று சைகையில் சொன்ன ஆதிரா. கனிவுடன் அவனை நோக்கிய ஆதிரா. கடைசியில் வண்ணத்துப்பூச்சியினைக் கைகளில் பொத்திய ஆதிரா. மனமெங்கும் அவன் பெற்ற மகளே ஆட்சிசெய்ய உதடுகள் அழகான புன்னகையில் விரிந்தது. பாக்கெட்டுக்குள் பத்திரமாகவே இருந்த அந்த வண்ணத்துப்பூச்சியைக் கையில் எடுத்தான். ஆசையும் அன்புமாக அதை வருடிக்கொடுத்துவிட்டு, பாசத்தோடு உதடுகளைப் பதித்தான். என்னவோ பெற்றவளை உச்சி முகர்ந்த சுகம் அவனைத் தாலாட்டிற்று!

 

‘ஆதுக்குட்டி… கண்ணம்மா.. செல்லம்..’ அவன் உதடுகள் முணுமுணுத்துக்கொண்டே இருந்தன. கண்கள் கசிந்துபோயிற்று! வார்த்தைக்கு வார்த்தை அங்கிள் என்பாள். “கண்ணம்மா… நான் உன்ர அப்பாடா..” உதடுகள் வேதனையோடு முணுமுணுத்தது. வடிந்த விழிநீரைச் சுண்டிவிட்டான். அவளை இந்தக்கணமே இந்த நொடியே பார்க்கத் துடித்தான்.

 

எவ்வளவு சுட்டி அவள்.. வாலிப வயதில் இருந்த அவனுடைய அத்தனை விளையாட்டுக்குணமும் அப்படியே அவளிடம் குவிந்து கிடப்பதை இப்போது அவனால் இனங்காண முடிந்தது.

 

ஆனால், அவளுக்கு எட்டு வயதாயிற்றே என்று நினைக்கும்போதே.. இல்லையே ஜெய் இரண்டாம் வகுப்பு என்றுதானே சொன்னான். அதைவைத்து அவனே கணக்குப் போட்டதுதானே எட்டு என்பது. அதைவிட இப்போது மூன்றாம் வகுப்புக்குப் போயிருப்பாள். ஆக, ஆள் படிப்பில் கள்ளமாக இருக்கவேண்டும் அல்லது ஒரு வயது பிந்தி பள்ளிக்கூடம் சேர்ந்திருக்க வேண்டும். எப்படியானாலும் அவளை அவனுடைய மகளாகக் காணும் ஆவலில் வீட்டுக்குச் சென்றவன் குளித்துத் தயாரானான்.

 

அவளுக்கு அவளின் அப்பாவைப் பிடிக்க வேண்டும்! பிள்ளைகளுக்கு அப்பாக்கள் தானே ஹீரோக்கள். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு கணவனே வந்துவிட்டாலும், ‘என் அப்பா அப்படி இப்படி’ என்று என்றைக்குமே அவர்களின் முதல் ஹிரோ அப்பாதானே! இந்த அப்பா ஹீரோவும் தன்னைப் பார்த்துப் பார்த்துத் தயாராக்கிக்கொண்டான். மீண்டும் மயூரியின் வீட்டுக்கு பெரும் ஆவலோடு புறப்பட்டான்.

 

அங்கோ வீடு பூட்டியிருந்தது. அவளின் காரையும் காணோம். அப்படியே அவன் முகம் வாடிப்போயிற்று! மகளைப் பார்த்துவிட எவ்வளவு ஆர்வத்தோடும் ஆசையோடும் ஓடிவந்தான்! வேண்டும் என்று செய்கிறாளோ! மனம் வேதனையில் சுருண்டுவிட, அங்கிருந்த கைப்பிடிச் சுவரில் அமர்ந்துகொண்டான்.

 

அவன் செய்தது எல்லாமே மன்னிக்கவே முடியாத பிழைதான். என்றாலும், எதையும் தாண்டியதுதானே பிள்ளைப்பாசம். அதை அவள் உணர்ந்துகொள்ளவில்லையா? பத்து வருடங்களாக மகளோடே இருந்து, அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் குறும்புகளையும் வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்து ரசித்தவளுக்கு அவன் இழந்துவிட்ட இழப்பின் அளவு தெரியாமலா இருக்கும்?

 

நரகமாய் கழிந்த இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகுதான் வந்துசேர்ந்தாள் மயூரி. காரிலிருந்து இறங்கிய அவளை அவன் பார்க்கவே இல்லை. மற்றப்பக்கக் கதவு திறந்துகொள்ள, அந்த இறைவனே அவனுக்கென்று அனுப்பிவைத்த அன்பின் உருவம் நிலத்தில் கால் பதித்து காட்சி தரப்போகும் அந்த நொடிக்காக, ஆவலும் ஆசையும் அழுகையுமாகப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

 

அவனுடைய கன்றுக்குட்டியை அணைத்து அரவணைத்து ‘அப்பா உனக்கு நான் இருக்கிறேன் கண்ணம்மா’ என்று சொல்லிவிட அவன் உயிரும் உடலும் துடியாய் துடிக்க இருந்த இடத்திலிருந்து அசையாமல் கண்களைச் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.

 

அவளும் இறங்கினாள்.

 

முயல்குட்டியேதான்! கால்கள் நிலத்தில் பாவாமல் தாயிடம் திறப்பை வாங்கிக்கொண்டு ஓடிவந்துகொண்டிருந்தாள் ஆதிரா. அவனைக் கண்டதும் பிரேக்கிட்டவள் போல் நின்று, “அங்கிள்!” என்று ஆச்சரியமாய் விழிகளை மலர்த்தினாள்.

 

விழிகள் பனிக்க அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் பிரதீபன். உலகின் மொத்த அழகையும் தனக்குள் குவித்துக்கொண்டு கண்முன்னே நின்றிருந்தாள் அவனுடைய சின்னச் சிட்டு! அவனைக் கண்டதும் மலர்ந்த அழகிய விழிகளை, சிரிப்பில் விரிந்த சின்னச் செப்பு இதழ்களை, மலர்ந்து விகசித்த அந்தப் பூமுகத்தை, கலைந்துகிடந்த தலைமுடியை, அழுக்குப் படிந்திருந்த ஸ்போர்ட்ஸ் உடையை, கட்டப்படாமல் நூல் கழன்று இழுபட அணிந்திருந்த ஷூவை என்று அவன் கண்கள் அவளை அப்படியே தன் நெஞ்சுக்குள் பொதித்துக்கொண்டது!

 

“எங்கட வீடு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று உற்சாகமாய் கேட்டுக்கொண்டிருந்தாள் அவள். அவளுக்கும் ஏனோ அவனைப் பிடிக்கிறது. இல்லாமல் இத்தனை சந்தோசத்தைக் காட்டுவாளா? உண்மை தெரியாதபோதும் உணர்வுகள் பாசத்தைப் பரப்பியிருக்குமோ? அள்ளி அணைத்து உச்சி முகரத் துடித்தவனுக்கு அவளுக்கு ஒன்றும் தெரியாதே என்கிற எண்ணம் கட்டிப்போட்டது! இதைவிட கொடுமையான துயரம் ஏதும் உண்டா என்ன? பெற்ற தகப்பனை அங்கிள் என்று அழைக்கும் நிலையில் இருக்கிறாளே அவனின் பெண்.

 

இந்த உலகிலேயே மிகவும் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டவனாகத் தன்னை உணர்ந்தான் பிரதீபன். அவன் பெற்றெடுத்த மகள் கண்முன்னே! கண்ணம்மா.. என்றழைத்து கொஞ்சிவிட முடியாத பாவியாக அவன். இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கப் போகிறான்? அவன் செய்த பாவம் என்றைக்குத் தீரும்?

error: Alert: Content selection is disabled!!