“என்ன அங்கிள்?” அவன் முகத்தில் எதைக்கண்டாளோ, அன்று போலவே இன்றும் அவனருகில் வந்து கேட்டாள் அவள். ஒன்றுமில்லை என்று தலையசைத்தவனின் கைகள் அவளின் கரமொன்றைப் பற்றிக்கொண்டது. அப்படியே தன் கண்களில் ஒற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான். மனதார அவளிடம் மன்னிப்பை இறைஞ்சிக் கேட்டது அந்த அப்பனுக்குள் கிடந்த நான் என்கிற ஆண் அகங்காரம்!
இவளைத்தானே தொலைக்க அத்தனை உறுதியாய் நின்றான். அவளேதான் உன்னை ரட்சிக்கவும் வந்திருக்கிறாள். மனம் ஓலமிட்டு அழ, “என்ன உனக்குப் பிடிக்குமா?” என்றான் ஏக்கத்தோடு அவள் முகம் பார்த்து.
“பிடிக்குமே..!”
“உன்னையும் எனக்குப் பிடிக்கும்!” என்றான் கரகரத்த குரலில்.
“அப்ப நாங்க பிரெண்ட்ஸ்..!” என்று கைகொடுத்தாள் அவள்.
“பிரெண்ட்ஸ்!” என்றவன், தன் கரத்தினை அந்தப் பிஞ்சுக் கரத்திடம் ஒப்புக்கொடுத்தான்.
அதற்குள் மயூரி வீட்டைத் திறப்பது தெரிந்தது. “வாங்கோ அங்கிள்!” என்றபடி, ஆதிரா உள்ளே நுழைய மயூரி அழைப்பாளா என்று பார்த்தான் பிரதீபன். அவள் அழைக்கவே இல்லை. ஆனால், கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
மீண்டும் எதற்கு வந்திருக்கிறாய் என்று கேட்கிறாள்.
அதுதானே, அவளும் எத்தனை முறைகள் வராதே என்றுவிட்டாள். அவளின் பின்னே அலைவதே அவனின் இப்பிறப்பின் பயனாக இருக்கையில் அவனும்தான் என்ன செய்வான்?
“என்ன மயூரி இதெல்லாம்? வேணுமெண்டு தவிக்க விடுறியா?” என்றான் இருந்த இடத்திலிருந்து அசையாமல்.
அவளோ முறைத்தாள். “வராதீங்கோ எண்டு சொன்னேன் தானே. ஆதுக்கு டென்னிஸ் ட்ரெயினிங் இருந்தது. அதை சொல்லவந்தா நீங்க காது குடுத்துக் கேக்கவே இல்ல. அதுதான் வந்திருந்து வெய்ட் பண்ணட்டும் இல்ல திரும்பிப் போகட்டும் எண்டு விட்டுட்டன்.” என்றாள் இலகுவாக.
அவனோ வறட்சியாகச் சிரித்தான். “பத்து வருசமா காத்திருந்தவன், அவ்வளவு ஈஸியா போய்ட மாட்டன்!” என்றுவிட்டு ஒரு பெருமூச்சுடன் எழுந்துகொண்டான்.
“சரி நட! ஏன் வெளிலையே நிண்டு கதைப்பான்..” என்றபடி, வெகு இயல்பாக வீட்டுக்குள் நுழைந்தான். வாசல்படியில் அவன் காலைவைக்க, கதவுநிலையில் அவனை உள்ளே வரவிடாமல் தடுத்தபடி நின்றவள் இடித்துகொண்டா நிற்கமுடியும். தானாகவே பின்னகர்ந்து வழிவிட அவன் நுழைந்துகொண்டான்.
அன்றுபோலவே இன்றும் தாயும் மகளும் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்துகொண்டான் பிரதீபன். அன்றைக்கே அவனைப் பாதித்த புகைப்படம். இன்றைக்கு இன்னுமே ஆழமாய் கீறியது! இப்படி எத்தனை அழகான தருணங்களை பறிகொடுத்துவிட்டான்? மயூரி வீட்டுக்குள் சென்று பேக்குகளை வைப்பது தெரிந்தது. கூடவே, ஆதிராவைக் குளிக்கச் சொல்லி அனுப்புவதும் கேட்டது.
அவள் குளியலறைக்குள் போயிருக்கவேண்டும். வேகமாக முன் ஹாலுக்கு வந்து, “இப்ப என்ன கதைக்கவேணும் உங்களுக்கு?” என்றாள் மெல்லிய சினத்தோடு.
இவளின் கோபம் தீரவே தீராதா என்பதாகப் பார்த்தான் அவன். அவளோ மிகுந்த இறுக்கத்தோடு தீராது என்பதுபோல் அமர்ந்திருந்தாள்.
“என்ன அறிமுகப் படுத்திவிடன்.” கெஞ்சலாகக் கேட்டான்.
“யார் எண்டு? உன்னை கருவிலேயே கலைக்கச் சொன்னவர் இவர் எண்டா? இல்ல உன்ர அம்மா முறையே இல்லாம உன்னைச் சுமக்கக் காரணமா இருந்தவர் இவர் எண்டா? என்ன எண்டு அறிமுகப்படுத்திவிட? சொல்லுங்கோ?” வார்த்தை எனும் கூர் வாளினை அவனை நோக்கி எந்த ஈவும் இரக்கமும் இல்லாமல் வீசினாள் மயூரி!
அவளை வெறித்தான் பிரதீபன். வலிக்கும் என்று தெரிந்தே அடிக்கிறவளிடம் வலிக்கிறது என்று சொல்வதில் என்ன பயன்? தனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டான்.
“உன்ர கோபம் எனக்கு விளங்குது. ஆனா இங்க நீயும் நானும் மட்டும் இல்லை மயூரி. நமக்கு ஒரு மகளும் இருக்கிறாள். என்னில் இருக்கிற கோபத்தில அவளை தண்டிச்சுப்போடாத! உன்ர கோபம் போறவரைக்கும் இன்னும் என்ன எண்டாலும் சொல்லு, திட்டு, குத்து, குதறு. ஆனா, கடைசில கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லு மயூரி. எனக்காக இல்ல எங்கட மகளுக்காக?” வெகுவாகவே கெஞ்சினான் அவன்.
அவளோ ஏளனமாய் சிரித்தாள். “இதையேதான் அண்டைக்கு நானும் சொன்னனான் பிரதீபன். நாம விட்ட பிழைக்கு அந்தக் குழந்தையை தண்டிச்சுப்போடாதீங்கோ எண்டு கெஞ்சினான். நினைவு இருக்கா? அண்டைக்கு அது விளங்காத மனுசனுக்கு இண்டைக்கு விளங்குதோ?”
அவனோ எழுந்துவந்து அவள் காலடியில் அமர்ந்தான்.
“என்ன செய்றீங்க?” பதட்டத்தோடு உள்ளுக்குப் பார்த்துவிட்டுக் கேட்டாள் அவள். அவன் அவளின் கையைப் பற்றினான். மின்னல் விரைவில் பறித்துக்கொண்டாள் அவள்.
அச் செய்கையிலேயே அவளின் கோபம் உணர அவளையே பார்த்தான்.
“இன்னும் எத்தனை தரம் என்னைப்போட்டுக் குதறப்போறாய் மயூரி. நெஞ்சு முழுக்க ரெத்தம் வடியுது. பிறந்த நிமிசம் என்ர மகள் எப்படி இருந்தவள்? முதல் முதல் எப்படி பொக்கை வாய் திறந்து சிரிச்சவள், அப்பா எண்டு எப்ப கூப்பிட்டவள், அவள் தவழ்ந்தது, நடந்தது, ஓடினது, விழுந்தது, முதல் நாள் பள்ளிக்கூடத்துக்கு அழுதுகொண்டு போனது எதுவுமே எனக்குத் தெரியாதே மயூரி. பத்து வருசம்.. அவளோட வாழ்ந்திருக்க வேண்டிய பத்து வருசத்த நான் இழந்திட்டன். இதே எனக்கு எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா? இங்க வலிக்குது மயூரி.” என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.
அவள் அசைவற்றுப்போய் இருக்க, “ பிள்ளை பிறந்த பிறகாவது நீ கொண்டுவந்து என்ர கைல தந்திருக்கலாம் மயூ. முட்டாள்! பிடியடா உன்ர மகளை எண்டு சொல்லியிருக்கலாம். அண்டைக்கு எனக்கு எதுவுமே தெரியேல்ல மய்யு. கண்ணுக்கையும் நெஞ்சுக்கையும் நிண்டது அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, குடும்பமானம், நான் நாளைக்கு தலை நிமிந்து வெளில போறேல்லையா எண்டுறது மட்டும் தான். அண்டைக்கு கரு எண்டு நினைக்கேக்க ஒன்றுமே தோணேல்ல.. ஆனா இண்டைக்கு அவள் என்ர மகள் எண்டு நினைக்கேக்க எப்படி இருக்கு தெரியுமா.. நெஞ்சுக்க என்னென்னவோ செய்யுது மயூரி. பூ பூக்கிற மாதிரி என்னவோ நானே பாத்துப் பாத்து செய்த பட்டாம் பூச்சிக்கு உயிரை குடுத்து இந்த உலகத்தில பறந்து திரி எண்டு கையை விரிச்சி விட்டமாதிரி இருக்கு மய்யு. ஒரு கர்வம்.. அவள் என்ர மகள் எண்டு நினைக்கேக்க ஒரு பெருமை. இதுல அவளுக்கு நான் எதுவுமே செய்யேல்ல.. எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் எண்டுற நினைப்பு மட்டுமே இத்தனை உணர்வையும் தருது
எண்டா பார். நான் இழந்த பத்து வருசமும் என்னைப்போட்டு என்ன பாடு படுத்தும் எண்டு யோசி!” என்றவனைப் பார்க்க முடியாமல் விழிகளைத் திருப்பிக்கொண்டாள் மயூரி.
அவன் என்ன சொன்னாலும் மனம் ஒப்ப மறுத்தது. “இதெல்லாம் சரியே வராது! என்னை என்ர பாட்டுக்கு விடுங்க!” என்றாள் அவள் கரகரத்த குரலைச் செருமிக்கொண்டு.
“ஏன் மயூரி?” அவன் கேள்வியில் அவளுக்குள் அடங்கிக்கிடந்த கோபம் மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிற்று!
“ஏனா? ஏன் எண்டால் உங்களை அப்பா எண்டு அறிமுகப் படுத்துறதுக்காக என்ர மகள் நாலுபேருக்கு முன்னால அவமானப்படுறதை நான் விரும்ப இல்ல.” என்றாள் பட்டென்று. அவன் வேதனையோடு பார்க்க, “அவளின்ர அப்பா அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். அப்படித்தான் ஊர் நினைக்குது. அப்படியே இருக்கட்டும்!” என்றாள் முடிவாக.
“பிளீஸ் மயூரி. இப்படி அடம் பிடிக்காத!”
“அடம் பிடிக்கிறேனா? அண்டைக்கு நீங்க பிடிச்சதை விடவா? நான் உங்களுக்கே தெரியாம காப்பாத்தப்போய்த்தானே இண்டைக்கு உங்களுக்கு மகள் எண்டு ஒருத்தி வந்தவள். இல்லாட்டி? சொல்லுங்க இல்லாட்டி இன்றைக்கு அவள் எங்க இருந்திருப்பாள்?” எனும்போதே அவன் விழிகளும் அவள் விழிகளோடு சேர்ந்து கலங்கிப் போயிற்று!
“என்ன மன்னிக்கவே மாட்டியா?”
“மன்னிச்சு? நானும் அவளும் உங்கட வீட்டை வந்து நிக்க வேணுமா? அண்டைக்கு நீங்க சொன்ன அத்தனை காரணமும் இன்னும் அப்படியேதான் இருக்கு பிரதீபன்! எங்களைக் கூட்டிக்கொண்டுபோய் ‘என்ர குடும்பம்’ எண்டு உங்கட வீட்டுல காட்டினா காறித் துப்புவீனம்(துப்புவாங்க). அண்டைக்காவது கர்ப்பப்பைக்க இருந்தாள். இண்டைக்கு பத்து வயசுப் பிள்ளையா இருக்கிறாள். உங்கட அம்மா உங்களை கேவலமா பாப்பா. உங்கட அப்பா நீயெல்லாம் ஒரு மனுசனா எண்டு கேப்பார். உங்கட சகோதரங்கள் மதிக்காது. உங்கட மானம், மரியாதை, கௌரவம், எல்லாமே போய்டுமே பிரதீபன். உங்களுக்கு அதெல்லாம் தானே முக்கியமே! மறந்து போச்சா?” என்றாள் ஏளனமாய்.
அப்படியே திருப்பி அடித்தவளை உணர்வுகள் அற்ற விழிகளால் பார்த்துக்கொண்டே இருந்தான்.
“இப்ப அபார்ட் செய்ற கட்டத்தையெல்லாம் தாண்டியாச்சு. என்ன செய்வம்? உங்களுக்கு மானம் மரியாதை முக்கியம். அவளை கொன்றுபோடுவமா? கொன்றுபோட்டு நானும் நீங்களுமா லவ் பண்ணுறோம் எண்டு உங்கட வீட்டை போய் நிப்பமா? எப்படி கொல்லுவம் நித்திரைல இருக்கேக்க தலையணையை வச்சு மூடுவமா இல்ல பாலுக்க நஞ்சை கலந்து..” எனும்போதே, ஆத்திரத்தில் அருகில் இருந்த சோபாவில் ஓங்கிக் குத்தியிருந்தான் அவன்.
வெலவெலத்துப்போனாள் மயூரி! அவளுக்கு விழவேண்டிய அறை! அச்சத்துடன் அவனைப் பார்த்தாள்.
“நீ எல்லாம் என்ன பொம்பிளையடி. நான் அண்டைக்கு செய்யத் துணிஞ்ச காரியத்துக்கும் நீ இப்ப கதைச்சதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல!” வெறிகொண்டவனைப்போல் உறுமியவனைக் கண்டு சோபாவிலேயே புதைந்தாள்.
“அம்மா.. என்ன சத்தம்?” உடை மாற்றிய கையோடு ஓடிவந்தாள் ஆதிரா. வேகமாகத் தன் ஃபோனைக் கீழே போட்டுவிட்டிருந்தான் பிரதீபன்.
“ஃபோன்.. கீழ விழுந்திட்டுது கண்ணம்மா.” என்றான் மயூரியை மறைத்துக்கொண்டு நின்றபடி.
“அச்சோ அங்கிள். உடைஞ்சு போச்சா!” என்றபடி அவள் வர, “இல்லடா. சுக்குநூறா உடைஞ்சே போச்சுது எண்டு நினைச்சன். ஆனா இன்னும் உயிர்ப்போடதான் இருக்கு.” என்றான், தனக்குப் பின்னால் நின்றவளுக்கும் புரியும் விதமாக.
அவளும் கிட்ட வந்து ஃபோனைப் பார்க்க, “பார், வேலை செய்யுது. நீபோ.. போய் தலையைத் துடை. இல்லாட்டி இரவில குளிச்சது வருத்தம் வந்திடும்!” கனிவோடு சொல்லி அவளை அனுப்பிவைத்தான்.
அவளும் திரும்பி நடக்க, “தலையை துடைச்சுக்கொண்டு வாறியா சும்மா வெளில போயிட்டு வருவோம்?” என்று, ஆசையும் ஆவலுமாய் வினவினான் அவளின் தகப்பன்.
“இல்லை அங்கிள். சொரி. எனக்கு நிறைய ஹோம்வேர்க் இருக்கு. இனித்தான் செய்யவேணும். அதெல்லாம் முடிச்சு சாப்பிட்டு படுக்கத்தான் நேரம் காணும்.” என்றாள் பொறுப்பான பெண்ணாக.
மயூரி மறுப்பாள் என்றுதான் அவளிடமே கேட்டான். அவளின் தெளிவான பதிலில் அவன் உதடுகளில் பெருமிதமான முறுவல் அரும்பிற்று!
“சரிடா. அப்ப வீக்கெண்ட் என்னோட நீ வரவேணும்!” ஆசையோடு உரிமையாகக் கேட்டான். அதற்குள் தன்னைச் சமாளித்துக்கொண்டு முகம் காட்டிய தாயை ஒருமுறை பார்த்துவிட்டு, “ஓகே அங்கிள்!” என்றுவிட்டுப் போனாள் அவள்.
மயூரியிடம் திரும்பினான் பிரதீபன். அவன் காட்டிய ஆக்ரோஷத்தில் இன்னும் அச்சம் விலகாமல் நின்றிருந்தாள் அவள். ‘கொஞ்சம் பொறுமையா சொல்லியிருக்கலாம். அவள் கோபத்தில கதைச்சதுக்கு அப்படி நடந்திருக்கக் கூடாது.’ மனம் வருந்த, “சொரி!” என்று அவளின் கரம் பற்றப்போக வேகமாக விலகிக்கொண்டாள் மயூரி.
அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, “நான் வாறன்! பிள்ளையும் நீயும் கவனம்!” என்றுவிட்டு விடைபெற்றிருந்தான் அவன்.

