ரோசி கஜனின் மீரா 15 – 1

15

 

 

“மீராவ என்ன இன்னும் காணேல்ல? எதுக்கும் போய்ப் பார்த்திட்டு வாறன்.” என்று வந்த மதுரா, ‘இதென்ன வெளிவாயில் கதவு திறந்து கிடக்குது?!’ யோசனையோடு ஊள்ளே செல்ல முயல்கையில் தான், கல்லூரி சென்றிருந்த நிரூஜும் வந்து சேர்ந்தான்.

ஆதவ்வை அவன் வீட்டடியில் இறக்கி விட்டுவிட்டு, “என்ன அத்த யோசனையா நிக்கிறீங்க?” என்றபடி வந்தவனை, அன்பான முறுவலோடு எதிர்கொண்டார், மதுரா.

“இல்லய்யா, மீரா இன்னும் சாப்பிட வரேல்ல எண்டு பார்க்க வந்தன். கதவும் திறந்திருக்கு, ஆளைக் காணேல்ல.” என, கதைத்தவாறே உள்ளே நடந்தவர்கள், மீராவின் அறையில் கேட்ட பேச்சுக்குரலில் நிதானித்து நின்றார்கள்.

“அட! நித்தி நேரத்துக்கே வந்திட்டா போல!”

“ம்ம்…பெரியம்மாவோட கடைக்குப் போகோணும் எண்டு சொன்னமாதிரிக் கிடக்கு அத்த. அதனால வந்திருப்பார்.”

கதைத்தபடி அறை வாயிலை நெருங்கியவர்கள், மீரா சொன்ன செய்தியில் அப்படியே நின்று விட்டார்கள். சட்டென்று அவள் அப்படிச் சொன்னதில் மதுராவுக்கோ, நிச்சயம் அதிர்ச்சியே தான்!

ஒருவகையில் சொல்லப்போனால் ஆரணி, ஆரபியும் விரும்பித்தான் மணம் புரிந்தார்கள். அதுவும் சொந்தம், நட்பில் என்றதில் இவர்களுள் உச்சபட்ச திருப்தியே!

உறவு, நட்புக்குள் தான் வாழ்க்கைத்துணை அமைய வேண்டும் என்றும் எதிர்பார்க்க முடியாதே!

இவன் அல்லது இவள் நம் வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருப்பான்/ள் என்ற முடிவை, மணபந்தத்தில் நுழைய இருப்பவர்கள் தாராளமாகவே எடுக்கலாம்; வாழப்போகிறவர்களிற்கு இல்லாத உரிமையா என்ன?

தம் பிள்ளைகள், என்னதான் வாழ்க்கையைக் கெட்டித்தனமாக அணுகும் பலமானவர்கள் என்பது புரிந்தாலும், வாழ்க்கைத்துணையின் தேர்வு பிழையாகிப் போய்விடக் கூடாதே என்ற அக்கறை கலந்த பயம், பெற்றோர் ஒவ்வொருவருக்குமே இருப்பதும் இயல்பு தானே?

மீரா அப்படிச் சொன்னதும் மதுராவைத் தடுமாற வைத்ததும் இதுவே!

‘ஆர் அந்தக் காண்டீபன்?’ மனதுள் கேள்வியெழ, “உனக்குத் தெரியுமா?” என்றபடி அருகில் நின்ற நிரூஜைப் பார்க்க, அவனோ, “தெரியாது அத்த!” உதட்டைப் பிதுக்கினான்.

அதற்கு மேலும் அங்கு நிற்காது, “காண்டீபன் எண்டு ஆரையும் நினைவில்லயே!” உள்ளே நகர்ந்தார், மதுரா.

மதுராவைக் கண்டதும் தான் தாமதம் மீராவின் முகத்தில் மிகுந்த தடுமாற்றம். அவர் முகத்தை நேராகப் பார்க்கவே தத்தளித்தாள், அவள்.

குழந்தையிலேயே மதுராவின் பொறுப்பில் வளர்ந்தவள் இவள். நிரூஜும்தான்.

நித்தி, அருகிலிருக்கும் பாடசாலையில் ஆசிரியையாகப் பணிபுரிந்ததால், வேலைக்குச் செல்கையில் மதுராவின் பொறுப்பில் தான் இவர்களை விட்டுச் சென்றார்.

அதுவே, மதுரா வீட்டில் இவர்களின் கொடி பலமாகப் பறக்கக் காரணமும். அப்படியிருந்தவள், இன்றோ, அவளின் பிரியத்துக்குரிய அத்தையை நேராகப் பார்க்க முடியாது தடுமாறினாள்.

அதையெல்லாம் கவனிக்கவில்லை மதுரா. காண்டீபன் யார் என்ற கேள்வி, வேறு எதையும் கவனிக்கவிடவில்லை.

“அதுதானே மீரா…ஆர் காண்டீபன்? எந்த இடம்? விபரமாச் சொல்லாமல் சும்மா சொன்னால்?”

நித்திதான் வினவினார். குரலிலும் பார்வையிலும் கண்டிப்பு!

எப்போதுமே படபடத்து வம்பிழுக்கும் நிரூஜ் கூட, தமக்கையின் காதலன் யாரென அறியும் ஆவலில் அமைதியாக நின்றான்.

“காண்டீபன் தான்…ஜோரிக்கிட உண்மையான பெயர் மா. அவன்ட அம்மா செல்லமா ஜோரிக் எண்டு கூப்பிட்டுக் கூப்பிட்டு அதுவே பெயராகீட்டு!” பட்டென்று மீரா சொல்ல, நிச்சயம் அவர்கள் அடைந்தது அதிர்ச்சி தான்; சாதாரணமாகவும் இல்லை; பேரதிர்ச்சி!

ஜோரிக், சிறுவயதிலிருந்து தம்மோடு வளர்ந்தவன் என்றும், அவனுக்குத் தந்தை இல்லை, தாயோ, வேறு கல்யாணம் குடும்பம் என்று வெளிநாட்டில் வசிப்பதாகவும், அன்று, அவர்களின் வீட்டுக்குச் சென்றிருந்த போது ஹெலன் சொல்லியிருந்தார்.

அதற்குமேல் இவர்களும் கேட்கவில்லை. அவனைப் பார்க்கையில் இலங்கை, இந்தியா பக்கச்சாயல் இருந்ததை உணர்ந்திருந்தாலும் இவர்கள் துருவிக் கேட்கவில்லை.

“முதன்முதலா அவன டோவரில வச்சுத்தான் சந்திச்சன் எண்டு சொன்னியே! அப்ப, அதுக்கு முதலே அவனத் தெரியுமா?”

விழிகள் இடுங்க, தாய் கேட்ட விதத்தில் ஒரு மாதிரியானது மீராவின் முகம்.

“ம்மா! நான் ஏன் பொய் சொல்லப் போறன்? அவன அண்டைக்குத்தான் முதல் முதல் சந்திச்சன்.”

தன்னைச் சந்தேகக் கண்ணோடு எப்படிப் பார்க்கலாம் என்ற எரிச்சலோடு பதிலளித்த மகளை, குற்றவாளி போல் தான் பார்த்தார், நித்தி.

“அப்ப இந்தக் கொஞ்ச நாட்களில…” மீண்டும் நம்பிக்கையில்லாது ஆரம்பித்தத் தாயை இடைமறித்தாள், மீரா.

“கொஞ்சநாட்கள் தான்மா! இதில பொய் சொல்ல என்ன இருக்கு? எனக்கு அவனப் பிடிச்சிருக்கு. அவனுக்கும் என்னில நல்ல விருப்பம்.” என்று சொன்னவள் முகத்தில் அப்படியொரு பிடிவாதம். அவனை இங்கு எவருக்கும் பிடிக்காதென்பது நினைவில் வந்ததில் வந்த பிடிவாதம் அது.

மகளின் பேச்சின் தொணியும் முகபாவனையும் நித்தியின் எரிச்சலை அதிகரித்தது. அப்போதும், பொறுமையாகவே எடுத்துச் சொல்லிட முனைந்தார், அவர்.

“இங்க பார் மீரா, விரும்பிறது பிழ எண்டு சொல்ல மாட்டன். ஆனா, அந்த ஜோரிக்…அதெல்லாம் நமக்குச் சரிப்படாதம்மா. வாழ்க்கை எண்டா சும்மா எடுத்தன் கவிழ்த்தன் எண்டில்லை விளங்குதா?”

“ம்மா! ஏன் சரி வராது? அவனுக்கு என்னம்மா குறை? அவன் பீட்டர், ஹெலன் வீட்டில வளர்ந்தாலும் அவனும் இலங்கைதான். அதுவும் யாழ்ப்பாணம். அவன்ட அம்மாதான் பீட்டர் ஹெலனிட பேத்தி!”

தன்னையும் மீறித்தான் சொல்லிவிட்டாள். பின்னர் தான் மதுராவைப் பார்த்துத் தடுமாறினாள்.

“யாழ்ப்பாணமா? எந்த இடம்?” மதுரா கேட்க, குறுக்கிட்டது நித்தியின் குரல்.

“அவன் எந்த இடம் எண்டது இல்ல இப்பப் பிரச்சனை. சந்திச்ச முதல் நாளே அவன் உன்ர அப்பாவையோ மாமாவையோ மதிக்கேல்ல மீரா. அதையெல்லாம் நீ மறந்திட்டியா ?

ஒரு அற்பமான விசயத்துக்கே என்னமாதிரி கோவப்பட்டான். ரெண்டு ஆம்பளைகளும் அவனை விட எவ்வளவு பெரியவே? மன்னிப்பு எண்டு கேட்ட பிறகும் அவன் நம்மப் பார்த்த பார்வைய என்னால் அவ்வளவு லேசில மறக்கேலாது!”

படபடத்த நித்தியின் முகத்தில் கோபம் பளிச்சென்று தெரிந்தது.

“கொஞ்சமும் மரியாதை தெரியாதவன். அதனாலதான் அவனோட கதை வேணாம் எண்டு உனக்கு அண்டைக்கே சொன்னன் மீரா. சரி, உனக்கு அந்தரத்தில(அவசர உதவி தேவைப்படும் பொழுது) உதவினான் தான். அதோட விட்டிர வேணும்.

நான் அப்பிடிச் சொன்ன பிறகும் அவன விரும்புறன் எண்டா என்ன அர்த்தம்? இவ்வளவும் தான் நீ எங்களுக்குத் தாற மரியாதையா? இதை, உன்னட்ட இருந்து கொஞ்சமும் எதிர்பார்க்கேல்லை மீரா!” கண்டிப்பும் கோபமுமாகப் படபடத்தார்.

“அம்மா!”

மீரா, விழிகள் தளும்ப நின்ற நிலைபார்க்க மதுராவின் மனம் பிசைந்தது.

“கொஞ்ச நேரம் பேசாம இரு நித்தி!” இடையில் புகுந்தார்.

“இல்ல அண்ணி. இவள்…என்ர மகளிட்ட இருந்து இப்பிடி ஒரு செய்கையைக் கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல.” தானும் கண்கலங்கிவிட்டார், நித்தி.

“இங்க பார் மீரா, ஒண்டைச் செய்ய வேணாமெண்டு சொல்லுறம் எண்டால், அது உங்கட நல்லதுக்குத்தான் எண்டு நினைவில வச்சிரு! கடைசிவரை அவனோட நமக்குச் சரிவராது! இனி இந்த வீட்டில அந்தப்பேச்சே எடுக்க வேணாம்!” நித்தியின் வார்த்தைகள், இதுதான் இறுதி முடிவென்றன!

சட்டென்று, தாயிடமிருந்து விலகி எழுந்துவிட்டாள், மீரா.

“அதெப்படிம்மா? எனக்கு அவனத்தான் பிடிச்சிருக்கு! கலியாணம் எண்டு செய்தா அவனத்தான் செய்வன்! இதிலயும் எந்த மாற்றமும் இல்ல!”

மகள் குரலும் உறுதியோடுதான் வெளிவந்தது.

தன் முகத்துக்கு நேரே அவள் சொன்ன உறுதியில் நித்தியின் முகம் கன்றிச் சிவந்துபோனது; அவ்வளவு கோபம்!

‘நேற்று வந்தவனுக்காக என்னயே எதிர்க்கிறாளே, என்ர மகள்!’ உள்ளத்தில் கொதித்துப் போனார்.

தாயையும் மகளையும் மாறி மாறிப் பார்த்த மதுரா, நித்தியின் கரத்தைப் பற்றி அழுத்தினார்.

“கோபத்தில வார்த்தைகளை விட்டுப் பெரிசுபடுத்தி இதெல்லாம் என்ன வேல? தயவு செய்து கொஞ்சம் அமைதியா இரு!” கண்டிப்போடு சொன்னவர், மீராவிடம் திரும்பினார்.

“நீயும் தான். இப்ப இந்தக் கதை வேணாம் குஞ்சு! முதல், சாப்பிடலாம் வா. என்ன எண்டாலும் அமைதியா இருந்து கதைப்பம்.” என்றதும், அவரைப் பார்த்தவள் விழிகளால் நீர் மணிகள் சரசரவென்று உருண்டன.

“எப்பக் கதைச்சாலும் என்ர முடிவில இருந்து மாற மாட்டன் அத்தை!”

“அதையேதான் நானும் சொல்லுறன். இண்டைக்கு உன்ர அப்பா வரட்டும், ஒரு முடிவு எடுப்பம்!

error: Alert: Content selection is disabled!!