ரோசி கஜனின் மீரா 15 – 2

இப்படி, கணத்தில எங்களத் தூக்கி எறியத்தானே உங்களப் பாராட்டிச் சீராட்டி வளர்க்கிறது?

அந்த மனிசன் என்னவோ தன்ர மகள் இன்னும் சின்னப்பிள்ளை எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறார்! அது பார்த்தால்..” தானும் கண்ணீர் விட்டார், நித்தி.

“ம்மா! இப்ப இந்த விசயத்தை இவ்வளவு பெரிசு படுத்துறது ஏன் எண்டு எனக்கு விளங்கேல்ல.

அவன், கொஞ்சம் கோபக்காரன், அவ்வளவும் தான். மற்றும்படி கெட்டு அலைஞ்சு திரியிறவன் இல்ல. நல்ல பொறுப்பானவன். நல்லவன். எல்லாத்துக்கும் மேல…அவன் நமக்குச் சொந்தமும்!”

அதெப்படி அவனை வேண்டாமென்று சொல்லலாம் என்ற ஆதங்கம், பட்டென்று இப்படிச் சொல்ல வைத்துவிட்டது.

அதைக்கேட்ட, மூவர் முகத்திலும் மிகையான குழப்பம்!

“என்ன சொந்தமா?” நித்தியின் விழிகள் இடுங்கின.

“ம்ம்…” மீரா தடுமாறினாள்தான். ஆனால், இனியும் ஏன் மறைப்பான்?

“அப்பாவையும் அப்பம்மாவையும் அவனுக்கு நல்லாவே தெரியுமாம். அப்பம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டில இருந்தவேயாம்.”

“யோகம் ஆன்ட்டி வீட்டுக்குப் பக்கத்திலா? அங்க நமக்குச் சொந்தம் எண்டு ஆர் இருந்தது?” வாய்விட்டுச் சொன்ன நித்தியின் முகம், சட்டென்று மதுரா புறம் திரும்பியது.

மதுராவின் முகமோ…புரியாது குழம்பிக் கடந்தது.

“நீ சொல்லுறது விளங்கேல்ல மீரா. அங்க பக்கத்தில நம்மட சொந்தம் எண்டு ஆரும் இல்லையேம்மா!” மதுராதான் சொன்னார்.

சட்டென்று நகர்ந்து மதுராவை இறுக்க அணைத்துக்கொண்ட மீரா, தேம்பி தேம்பி அழ, பதறிப் போனார்கள் மூவரும்.

“இங்க பார் மீரா, நீ சொல்லுறது எதுவும் விளக்கமா இல்லயேம்மா! விளங்கிற மாதிரிச் சொல்லு! இதென்ன அழுகை? முதல் அதை நிப்பாட்டு!” ஆதரவாக வருடியபடி சொன்ன மதுராவை, மேலும் இறுகக்கட்டிக் கொண்டவள், “சொறி அத்தை…சொறி…சொறி!” தேம்பலுக்கிடையில் முணுமுணுத்தவளைத் தேற்றும் வகையில் தட்டிக் கொடுத்தார், அவர்.

அதோடு, “பாவம்! சின்னவள் தானே? கொஞ்சம் பொறுமையா இரன்!” கோபத்தோடு நின்ற நித்திக்கு வாயசைவில் சொல்லிவிட்டு, “நீ திடீரெண்டு இப்பிடிச் சொன்னதில அதிர்ச்சிதானம்மா. மற்றும் படி, எங்கட பிள்ளையில எங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்ன?” அவள் சொன்ன ‘சொறி’க்கு, தானாகவே அர்த்தம் கற்பித்தபடி அவளைத் தேற்றினார்.

“யோகம் ஆன்ட்டி வீட்டுக்குப் பக்கத்தில இருந்தவேயா? காண்டீபன்ட அப்பா பெயர் என்னம்மா? அங்க இல்ல, கொஞ்சம் தள்ளி சில தமிழ் குடும்பங்கள் இருக்கிது தான்…” மதுரா யோசனையோடு எடுத்துக் கொடுக்க, பட்டென்று போட்டுடைத்தாள் மீரா.

சற்றும் எதிர்பாராத தருணத்தில், கொழுந்து விட்டெரியும் தீச்சுவாலைக்குள் தள்ளி விட்டால்? அப்படித்தான் துடிதுடித்துப் போனார், மதுரா.

ஆதரவாக அணைத்துப்பிடித்திருந்த மீராவை ஒரே கணத்தில் உதறிவிட்டுப் பின்னால் நகர்ந்தவர், சுவரில் முட்டி மோதி நின்றார் என்றால், நித்தியோ, அதற்குக் கொஞ்சமும் குறையாது அதிர்ந்து தான் போனார்.

சட்டென்று சூழ்ந்த பயங்கர அழுத்தம் இருவரையும் இறுகப் பற்றிக் கொண்டுவிட்டது; மூச்சு முட்டிப் போனார்கள் இருவரும்.

தன்னை விலக்கித் தள்ளிவிட்டு நகர்ந்த மதுராவின் அதிர்வைப் பார்த்த மீராவின் உள்ளம் நடுங்கியதுதான்.

‘இத்தின வருசங்களாக எங்களுக்கு மறைத்த விசயம் இண்டைக்குத் தெரிய வந்திட்டே எண்டு தானே இந்தளவுக்குக் கலங்கிறார் அத்தை?’ என எண்ணியவளுள், ‘இவ்வளவு கலக்கத்துக்கு இதில என்ன இருக்கு?’ என்ற கேள்வியே!

ஏற்கனவே திருமணம் செய்திருந்தவன் அவன்; அவ்விசயம் தெரியாது மணந்துவிடுகிறாள் இன்னொருபெண்; கணவன் என்பவன் வாழ்வில் ஏற்கனவே பெண்ணொருத்தி ஸ்திரமாக இருக்கிறாள்; அதுவும் குழந்தைகளோடு என்றறிகையில், அவளும் அதே வாழ்வைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டுமா என்ன? பிய்த்து ஊதறிவிட்டு வெளியேறிடத்தான் வேண்டும். அதேபோல், இன்னொரு அழகிய வாழ்வு அமைகையில், அதை ஆத்மார்த்தமாக நேசித்து வாழ்வதிலும் தான் என்ன பிழையிருக்கு?

இதை எடுத்துச் சொல்லி, மதுராவைத் தேற்ற எண்ணி அவரை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவள், தாயின் கொதிப்பார்வையில், நாக்கு மேலன்னத்தில் ஓட்டிக் கொள்ள ஸ்தம்பித்து நின்றாள்.

மகளையே வெறித்து நின்ற நித்தி, அவள் அசையவும் சுயவுணர்விற்கு வந்துவிட்டார்.

“என்ன சொன்னனி ? அவன்ட அப்பா பெயர் கணேஷா?” என்றவர், குரல் கணிசமாகவே உயர்ந்திருந்தது.

“ஓம் மா! நீங்க நினைக்கிற அதே ஆள் தான்!” உள்ளத்தின் பதைபதைப்பை மறைத்து நிதானமாகவே சொன்னவள், நடக்கும் பழக்கமில்லாக் குழப்பத்தில் கலங்கி நிற்கும் சகோதரனைப் பார்த்துவிட்டுத் தாயிடம் திரும்பினாள்.

“அவன்ட அப்பா ஒரு கார் ஆக்சிடெண்டில இறந்த பிறகு எட்டு வயசு வரை அங்க, நம்மட அப்பம்மா வீட்டுக்குப் பக்கத்தில தான் இருந்தவேயாம். இவன்ட அம்மா, இவனுக்கு எட்டு வயசாக இருக்கேக்க வேற கலியாணம் செய்து கொண்டு போனபிறகு, இவனும் தங்கச்சியும்…” கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, படபடவென்று சொல்லிக்கொண்டு போனவள், “போதும் நிப்பாட்டு!” என்ற நித்தியின் குரலில், அடுத்து சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கி நிமிர்வதற்குள், பளீரென்று விழுந்த அறையில், அந்த அறையே தட்டமாலை சுற்றியது அவளிற்கு!

அங்கிருந்த மற்றவர்களும் அதிர்ந்துதான் போனார்கள். அதிலிருந்து அவர்கள் சுதாகரிக்க முன், மீண்டும், மகளின் கன்னம் நோக்கிச் சீறிச் சென்ற நித்தியின் கரத்தைப் பாய்ந்து பிடித்துக் கொண்டான், நிரூஜ்.

“அம்மா! இதென்ன நீங்க? அதெப்பிடி அக்காவை அடிப்பீங்க? என்ன எண்டாலும் கதையுங்கோ! அதைவிட்டுட்டு…”

எப்போதும் தமக்கையோடு மல்லுக்கு நிற்பவன், இன்றோ, தாயின் கரத்தை விலத்தி உதறிவிட்டு கண்ணீரும் கலக்கமும் அதிர்வுமாக நிற்கும் தமக்கையை அணைத்துக் கொண்டான்.

‘இவ்வளவு வளர்ந்த அக்காவை அடிக்கிறதா? அதுவும் எனக்கு முன்னுக்கே?’ அவனுக்கு அவ்வளவு கோபம். விழிகளிடுங்கத் தாயை முறைத்தான், அவர் செல்ல மகன்.

“டேய்! என்ன முறைக்கிற? ஓஹோ! நீங்க எல்லாம் பெரிய ஆட்கள் இல்லையா? எப்படியெப்படி? இவள அடிக்கக் கூடாதா? சரியாகத்தான் சொல்லுற!

நீ அவள விட்டு விலகி இங்கால வா! இவள எல்லாம் அடிக்கிறது இல்லடா, கொன்றே போடுவன். அந்தக் கேடுகெட்ட கணேஷிட மகன நீ கலியாணம் கட்டுறதைப் பாத்துக் கொண்டிருப்பன் எண்டு நினைச்சியா? அதுகுத்தானே கஷ்டப்பட்டு உன்னப் பெத்து வளர்த்தன்!” என்றபடி, நெருங்கிய தாயை, அறையை விட்டு வெளியில் நடத்தி வருவதற்குள் போதும் போதுமென்றிருந்தது அவனுக்கு!

ஜோரிக் என்பவனைத் தாய்க்கும் வீட்டவருக்கும் அவ்வளவாகப் பிடிக்காது என்று அறிந்திருந்தாலும், தாயிடமிருந்து இத்தனை உக்கிர எதிர்ப்பைச் சற்றும் எதிர்பார்த்திராத மீரா, அப்படியே வேரோடி நின்றாள்.

அங்கு நடப்பவை எதுவுமே கருத்தில் பதியாது கண்ணீரோடு தளர்ந்து போயிருந்தார், மதுரா!

 

error: Alert: Content selection is disabled!!