ரோசி கஜனின் மீரா 16 – 1

16

 

 

சதீஷ், நித்தி வீடு!

மாலை மெதுவாய் மங்கிக் கொண்டிருந்தது. கருமையோடு சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான், வருணன். அவன் எழுப்பிய மெல்லிய சரசர ஒலி அவ்வீட்டு அமைதியில் பேரொலியாகக் கேட்டது!

அவ்வீட்டினுள் கருமையை விரட்டிவிடும் வகையில் மின்விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தாலும், அங்கிருந்தவர்கள் உள்ளங்களில் கரும்புகை மண்டலமே!

அவ்வீட்டின் வரவேற்பறையை ஒட்டியதாகச் சற்றே அகலமான ஓடையொன்றுள்ளது. அதன் ஒருபக்கச் சுவரோடு ஒட்டியதாக மெத்தென்ற நீண்ட சோஃபாவொன்று போடப்பட்டுள்ளது. சற்றுமுன்தான் வந்துசேர்ந்த சதீஷின் பெற்றோர்களான யோகமும் அவர் கணவரும் அதில் அமர்ந்திருந்தார்கள்.

இங்கிருந்து அவர்கள் வீட்டுக்குச் சில மணிநேரப் பயணம் தான். இருபகுதியினருமே அடிக்கடி போய் வந்து கொள்வார்கள்.

அப்படியிருந்தாலும், ஒவ்வொருமுறையும் மகன் வீடு வருவதென்றால் போதும், அவ்வளவு மகிழ்வும் பூரிப்புமாகவே வந்து போவார்கள். இன்றோ, அதற்கு நேர்மாறாக, முதன்முறையாக மனம் நிறைந்த பதைபதைப்போடு வந்துள்ளார்கள்.

அதிலும் யோகம் நல்லாவே கலங்கிவிட்டார். தன் செல்லப்பேத்தி இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடுவாள் என்று கண்டாரா என்ன?

“எப்பிடியாவது என்ர குஞ்சின்ட மனசில இருந்து அந்தக் கழிசடை பெத்த மகன்ட நினைப்பை அழிக்க வேணும்!”

மகன் வீடு வந்து சேரும் வரை விதம் விதமாக இதே புலம்பல்தான்.

“நம்மட மதுராட கடந்த காலம் நாமே மறந்து போன விசயம்; அப்பிடியிருக்க, யாரோ சொல்லி, சின்னவர்களுக்குத் தெரியோணுமா? அதுவும் பிறத்தியான்(மற்றவர்) சொல்லேக்க அது கை கால் ஒட்டித்தான் அவேக்குப் போய்ச் சேரும்!”

இப்படி, வழிநெடுகிலும் புலம்பிய மனைவியை அமைதிப்படுத்தப் படாது பாடுபட்டுவிட்டார், யோகத்தின் கணவர்.

அவருள்ளும் பதைபதைப்புத்தான். கணேஷ் என்பவன் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமா? அதுவும், அவன் நடவடிக்கைகளை வருடக்கணக்கில் அருகிலிருந்து பார்த்தவர்களாசே! அவையெல்லாம் இலேசில் மறந்து போகுமா என்ன?

அப்படிபட்டவன் மகனைப் பேத்தி விரும்புகிறாள் என்றதுமே, அந்த அதிர்வை ஜீரணிக்க முடியவில்லை.

“நடந்தத ஒண்டு விடாம முழுசாப் பிள்ளைகளிட்ட சொல்லீர வேணும்; அரையும் குறையுமாத் தெரிஞ்சிட்டு வீண் கற்பனைக்கு இடம் கொடுப்பான் ஏன்?” என்றிருந்தார், மனைவியிடம்.

“அதைத்தான் நானும் நினைச்சன்!” கணவரின் கூற்றை ஆமோதித்த யோகம், வந்ததும் வராததுமாக, அப்பொறுப்பைத் தன் கையில் எடுத்துக் கொண்டார்.

மதுராவின் தாய் இலங்கையிலிருந்து எப்போதாவது வந்து போவதோடு சரி. நித்தி, கார்த்திகேயனுக்கோ பெற்றோர் இல்லை. அதனால், இளையவர்கள் ஐவருக்குமே ‘பாட்டி’ என்ற பாசத்துக்கும் சலுகைக்கும் யோகம் மட்டும் தான்.

இவர் எப்படி இளையவர்களின் விருப்புக்களிற்காக வரிந்து கட்டிக்கொண்டு முன்னின்று நடத்துவாரோ, அப்படித்தான் இளையவர்களும். யோகத்தின் சின்ன சின்ன ஆசைகளையும் அழகாக நிறைவேற்றிப் பெருமை கொள்வார்கள்.

“அண்டைக்குச் சரவஸ்வதி பூசை நாள்! முதல் முதல் அண்டுதான், தான் சாமிக்குப் படைச்ச சாப்பாடுகளோட எங்கட வீட்டுக்கு வந்திருந்தாள் மது! அதுவரையும் கண்டாலே கதைக்கத் தயங்கிறவள், அதுக்குப்பிறகு என்ர பிள்ளைபோல பழகினாள். பிள்ளை போல இல்ல குஞ்சுகள், என்ர மகளாகத்தான் பார்த்தன்.; அவளும்…”

கலங்கிய கண்களைத் துடைத்தவாறே தொடர்ந்த யோகம், பல வருடம் கடந்து சென்று, முதல் முதல் மதுரா தன் வீட்டுக்கு வந்ததிலிருந்து ஆரம்பித்தார்.

அழுது அழுது வீங்கிவிட்ட முகத்தைத் தன் அப்பம்மாவின் மடியில் சாய்த்திருந்த மீராவின் பார்வை, பெரியவரின் முகத்தில் ஒட்டியிருந்தது.

ஆதவ், நிரூஜூம் அங்குதான் பெரியவருக்கருகில் அமர்ந்திருந்தனர். இருவர் முகங்களிலும், இத்தனை நாட்களும் இருந்த குறும்பும் விளையாட்டுத்தனமும் சுத்தமாகக் காணாமல் போயிருந்தன. பெரியவர் சொல்வதையே உன்னிப்பாகச் செவிமடுத்தபடி மௌனமாக அமர்ந்திருந்தனர்.

யோகம் சொல்லச் சொல்ல, எத்தனை வருடங்கள் கடந்துவிட்டாலும் அத்தனையும் சற்றுமுன் நடந்தது போல, இறுகிப் போனது இளையவர் உள்ளங்கள் என்றால், தாழ்ந்த குரலில் சொன்னாலும், சுவருக்கு அப்பாலிருந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்த மதுரா, கார்த்திகேயன் செவிகளிலும் இவை விழத்தான் செய்தது.

சற்றே தள்ளியமர்ந்து, தாழ்ந்த குரலில் தமக்கையோடு விவாதித்துக்கொண்டிருந்த நித்தியின் செவிகளும் தன் மாமியாரின் பேச்சை உள்வாங்கவே செய்தது.

தமையன், அண்ணியை நோக்கி மின்னலாய் நகர்ந்தது, அவர் பார்வை.

பலவருடங்களின் பின்னரான, அவர்களின் சோர்ந்த தோற்றம் இவர் மனத்தைத் தைத்தது.

தன் அன்புக்குப் பாத்திரமான அண்ணி, இன்றளவுக்குத் தந்தையாய்த் தமையனாய் இருக்கும் சகோதரன், ‘இவேட இண்டைய இந்த மனவேதனைக்கு என்ர மகளே காரணமாகிப் போனாளே!’ வருந்தியது அவருள்ளம்.

‘அது மட்டுமா? அவள் தன்ர வாழ்வையே கேள்விக்குறியாக்கப் பார்க்கிறாளே!’

தான் அடியோடு வெறுத்த, அருவருத்த ஒருவனின் மகனை, தன் செல்ல மகள் விரும்புகிறாள் என்றதை, என்னதான் சொன்னாலும் அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அதுவும், என்ன காரணத்தால் வந்த வெறுப்பு? அவன் ஒரு கயவன் என்பதால் அல்லவா? மனிதத்தன்மையே இல்லாத மிருகமாக நடந்து கொண்டதனால் அல்லவா?

‘அதுவும், அண்டைக்கு நான் வெளியூருக்குப் போயிருந்த நேரம் வீட்ட வந்து சண்டை போட்டதை, அண்ணியைத் தள்ளிவிட்டு, அதுவும், ரெண்டு குழந்தைகளைச் சுமந்து நிண்ட ஒரு கர்ப்பிணிப்பெண்ணை என்ன மாதிரி எல்லாம் துன்புறுத்தினான் அவன்? அப்படிப்பட்டவன் மகனை இந்த வீட்டுக்குள்ள விடுறதா?’ கொந்தளித்துப் போனார் நித்தி.

“கொஞ்சம் அமைதியா இரு!” என்று சொல்லும் சமாதானத்துக்கெல்லாம் அமைதியடைய மறுத்தது அவருள்ளம். மதுரா அனுபவித்த ஒவ்வொன்றையும் நேரில் கண்டவராச்சே!

தகப்பன் போலவே மகன் நடந்து கொள்ள மாட்டான் என்று என்ன நிச்சயம்?

அவன் குணத்துக்கு எடுத்துக்காட்டாக டோவரில் நடந்துகொண்ட முறை போதாதா என்ன?

அப்படியானால், ‘அவன நம்பி, காதல், கலியாணம் எண்டு போற என்ர மகள்ட நிலை?’ தாயாய் நடுநடுங்கிப்போனது அவருள்ளம்.

‘இலங்கையில் பிறந்து வளர்ந்த இவன்ட அப்பனே அவ்வளவு துணிச்சலா அந்த வேலை செய்தவன்! ரெண்டு பொம்பளைகளிட வாழ்க்கையில எந்தவிதமான தயக்கமோ கூச்சமோ இல்லாமல் விளையாடினவன். இவனோ இங்க பிறந்து, இந்த நாட்டானா வளர்ந்தவன். ஏற்கனவே எத்தனை பேரோட எப்படி எப்படியெல்லாம் இருந்தானோ! இனியும் எப்படியெப்படி இருப்பானோ!’

இப்படியெல்லாம் நினைக்காமலும் இருக்க முடியவில்லை. ‘வெளிநாட்டான்’ என்ற பார்வையில் நோக்குகையில் மிக இயல்பாகவே நம்மவர் மனத்தில் இந்த எண்ணம் தோன்றுவதைத் தடுக்கவும் முடியாதே!

அது, முற்றும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மையாகவும் இருப்பதில்லை. நாமே பார்த்து வியக்கும் வகையில் கட்டுக்கோப்பான குடும்பங்கள் பலதையும் இங்கு காணலாம்!

கதைகளும் திரைப்படங்களும் பொத்தாம் பொதுவாக வெள்ளைக்காரன் என்பவனுக்குக் குத்திவிட்ட முத்திரை அது என்பது, நேரில் காண்கையில் புரிந்தாலும், இப்படியான சந்தர்ப்பங்களில் நினைவில் வருவதும் இல்லைத்தான்.

நித்தியின் மனவோட்டத்தைத் தன் புறம் இழுத்தது, யோகத்தின் குரல்.

அவரோ, சற்றும் சளைக்காது, அனைத்தையும் சொல்லிவிடும் முடிவோடு தொடர்ந்தவண்ணம் இருந்தார்.

“ஒருநாள், கார்த்தியும் நித்தியும் அவளத் தேடி வந்திச்சீனம். மதுராக்கு நடந்தது எல்லாத்தையும் சொல்லி அவளப் பாக்கக் கூட்டிக்கொண்டு போயிருந்தன்…” யோகத்தின் குரல் தொடர்ந்தது.

அதைச் செவியுற்ற கார்த்திகேயனின் விழிகள், தன் கைவளைக்குள் சுருண்டிருந்த மனைவியில் படிந்தது.

அவர் மனமோ, விண்ணென்று பல வருடங்கள் கடந்து போயிற்று!

மாடிப்படிகளில் கவனமிருக்க, மேடிட்ட வயிற்றோடு இறங்கிக் கொண்டிருந்தவள் முதல் முதல் தன் பார்வையைச் சந்தித்த அக்கணம், இன்னும் அவர் மனதில் உயிரோடுள்ளதை அப்போதுதான் அவரால் உணர முடிந்தது.

அன்று அக்கணம், அவர் மனதினுள் விழிப்பார்வையால் நுழைந்தவள் இருந்த நிலை தான் என்ன? அதிலிருந்து மீள அவள் பட்ட பாடுகள் தான் எத்தனையெத்தனை?

நடந்தவை ஒவ்வொன்றையும் தொட்டு வந்த அவருள்ளத்தின் வெளிப்பாட்டை, மனைவியின் தோளில் படிந்திருந்த கரங்கள் கொடுத்த அழுத்தத்தில் உணர்ந்துகொண்டார், மதுரா.

error: Alert: Content selection is disabled!!