Skip to content
டாக்டர் அக்கா சொன்னது போல மங்கிலால் சேட்டின் மிட்டாய் கடையில் வேலைக்கு சேர்ந்ததுதான் உடல் எடை போடக் காரணமாக இருக்குமோ? அது காரணமில்லை… அதை சாக்காக வைத்துக்கொண்டு வழக்கமான உணவை விடுத்து காலை டிபன் இனிப்பு பூந்தி, மிச்சர் காப்பி, மதியம் உணவுடன் தொட்டுக்கொள்ள அப்போதுதான் சூடான எண்ணையில் பொறித்து எடுத்த முந்திரி பக்கோடா, சாயந்தரம் சாப்பிட சமோசா சர்க்கரை தூக்கலாகப் போட்ட டீ , இரவு வீட்டுக்கு கிளம்பும்போது மங்கிலால் பெரிய மனதுடன் இவர்கள் அனைவருக்கும் தரும் செக்கச் சிவந்த ஜிலேபி கொத்து மல்லி சட்னி இதெல்லாம்தான் காரணம்.
நெல்லையிலிருந்து ஒரு மணி நேர தொலைவில் இருந்தது ஆரைக்குளம். அதுதான் செம்பருத்தி வசிக்கும் கிராமம். பச்சை பசேல் என்று அழகாக கண்ணைப் பறிக்கும், எண்ணி இருபதே தெருக்களும் சந்துக்களும் இருக்கும் இந்த ஊருக்கா இப்படி ஒரு ஹோல்சேல் இனிப்புக் கடை? ஆரைக்குளம் வாசிகள் அத்தனை இனிப்புப் பிரியர்களா? இப்படியெல்லாம் நீங்களும் நானும்தான் யோசிப்போம். வியாபாரத்தையே சுவாசிப்பவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் எப்படி லாபம் பார்க்க வேண்டும் என்று தெரியாமலா இருக்கும்.
மங்கிலால் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளைத் தயாரிக்கத் தெரிந்த நபர்களை தனது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்திக் கொண்டு, அவர்கள் கைவண்ணத்தில் இனிப்புகளைத் தயாரித்து நெல்லையில் இருக்கும் முக்கியமான கடைகளுக்கு அனுப்புவார். அத்துடன் வெளிநாட்டுக்கும் அனுப்புகிறார்.
சூடாக சுகாதாரமாக தயாரித்து பேக் செய்து அரபு நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் அனுப்பி பணத்தில் கொழிக்கிறார் என்று சிலர் காதில் புகை வர சொல்வார்கள்.
இருக்கட்டும், அவர் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாரிக்கட்டும். பன்னெண்டாவது படித்ததும் வேலை போட்டுக் கொடுத்து, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்க சொல்லி ஊக்கம் கொடுத்து. பரீட்சை சமயங்களில் விடுமுறையும் கொடுத்தவர். இப்போது மாதம் இருபதாயிரம் சம்பாரிக்கிறாள் என்றால் அவரால்தானே. அதனாலேயே செம்பருத்தியைப் பொறுத்தவரை மற்றொரு தந்தையைப் போன்றவர்.
“அட அவருக்கு கல்லாப்பெட்டியைப் பாக்க, ஏமாத்தாம கணக்கு வழக்கு பாக்க உன்னைவிட்டா வேற நம்பிக்கையான ஆள் கிடைக்குமா? சும்மாவா பரீட்சைக்கு லீவு தந்து அனுப்புறாரு. நீயும் லீவு எடுத்த நாளுக்கு ஈடுகட்ட ஞாயிறு கூட வேலைக்கு வந்துடுறியே. வியாபாரிக்கு எல்லாமே வியாபாரம்தான். இப்படி பாக்குறவங்களை எல்லாம் நம்புறதை நிறுத்து. உன்னை சொல்லி என்ன பிரயோஜனம் உன்னையும் உங்கப்பாவையும் இளிச்ச வாயாவே படைச்ச அந்த சாஸ்தாவை சொல்லணும்” என்பாள் உடன் பணிபுரியும் ஜலப்பிரியா ஆயாசத்துடன்.
மங்கிலாலுக்கு ஒரு மணிக்கு ஒருதரம் ஏதாவது கொறிக்க வேண்டும். அங்கு வேலை பார்க்கும் இவர்களையும் சாப்பிட சொல்லும் பெரிய மனது எத்தனை முதலாளிகளுக்கு வரும்? தெரியவில்லை. ஆனால் அவளை விட்டுவிட்டு அவர் சாப்பிட்டதே இல்லை. அதற்கு அவளது அப்பாவும் அவரும் நண்பர்கள் என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
“பேட்டி, சேது மசாலா கடலை போட்டிருக்கான் போலிருக்கு. சூடு ஆறுறதுக்குள்ள நம்ம ரெண்டு பேருக்கும் தட்டில் போட்டு எடுத்துட்டு வா. சாப்பிட்டுக்கிட்டே கணக்கு பாக்கலாம்”
“ஜலப்ரியாவுக்கு கொஞ்சம் சுவீட் கொடுங்கப்பா. நம்ம கடை இனிப்பை சாப்பிட்டாவது வெயிட் போடட்டும். என்ன பிரியா, உன் ஊட்டுக்காரன் சமச்சுப் போட்டாத்தான் உனக்கு வெயிட் போடுமா?” என்று செம்பருத்தியின் தோழியை வேறு வம்புக்கு இழுப்பார்.
ஜலாப்ரியாவும் சளைக்காமல் “என் கைல மட்டும் ஒரு ரெண்டு லட்சத்தை எண்ணி வச்சிங்கன்னா அடுத்தமாசமே என் வீட்டுக்காரன் கையால சாப்பிட்டு பாத்து ட்ரை பண்ணிடுறேன்” என்று பதில் பேசுவாள்.
“நீ இந்த வாய் அடிக்கிறியே. உன் சாமர்த்தியத்தை எல்லாம் உன் பிரெண்டு செம்பருத்திக்கு கத்துக் கொடுத்தா என்ன?”
“நான் என்னதான் நியாயத்தை எடுத்து சொன்னாலும். வேலை நேரம் முடிஞ்சதும் இவளோட அத்தை வந்து வேப்பிலை அடிச்சு மனசை மாத்திருதே!” என்று பெருமூச்சு விடுவாள் ஜலப்பிரியா.
இதெல்லாம் செம்பருத்தியின் வாழ்வின் ஆறுதலான பக்கங்கள். இன்னொரு பக்கம் இருக்கிறது. அது துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் நிரம்பியது.
“நடந்ததை மறந்துடு. இல்லைன்னா ஸ்ட்ரெஸ் கூடும். நீ ஓவரா சாப்பிடுறதுக்கு ஸ்ட்ரெஸ் ஒரு முக்கியமான காரணம்” மருத்துவர் மாரியம்மா.
“மறக்க முடியலக்கா” வருத்தப்பட்டவளிடம்.
“தெரியும்டி, ஆனால் மறந்தாத்தான் உனக்கு நல்லது. இங்கிருந்தால் உன் மனசு நினைச்சு நினைச்சு உருக்குலைஞ்சுடும். பேசாம இந்த இடத்தை விட்டு நகர்ந்துடு. கண்ணில் காணாதது கருத்திலும் நிலைக்காதுன்னு சொல்லிருக்காங்க”
“ யாரு?”
“ஒரு பெரிய மோட்டிவேஷனல் நாவல் எழுத்தாளர். ரமணிச்சந்திரன்னு பேரு”
“ஹே எனக்கும் அவங்களைத் தெரியுமே… கதைல சொல்லுவாங்களே. படிச்சிருக்கேன்”
“ஆமாம் உங்க சேட்டுகிட்டயே கேட்டு திருநெல்வேலில வேலை கிடைச்சா கொஞ்சநாள் போயிட்டு வா. ஆனால் இந்த சுவீட் கடையை விட்டு தள்ளி இருக்கிறது உனக்கு நல்லது. நீ திம்பண்டத்துக்கு அடிக்ட் ஆயிட்டே. அதை கண்ணில் பார்த்தா உன்னால சாப்பிடாம இருக்க முடியாது”
“எனக்காக இல்லை உங்களுக்காக இல்லை நம்ம ஆர்சி மேம் சொன்னதால சுவீட் கடையை விட்டுட்டு வேற வேலையைத் தேடுறேன். ஏன்னா, கண்ணில் பார்க்காதது கருத்தில் நிலைக்காது”
இருவரும் கலகலவென சிரித்தார்கள்.
error: Alert: Content selection is disabled!!