29 – 2

“அதுசரி உம்மட அத்தார் பிள்ளைகளோடவா வந்தவர்? அந்தப் பிள்ளையும் வந்திருக்கோ? ஒருக்கா கூப்பிடுமன் பாக்க.” இரகசியம் போல சத்தமாகச் சொல்ல, சுயோவுக்குப் பட்டென்று விளங்கவில்லை. 

‘என்னய்யா கேக்கிறா?’ சாப்பாடுகளை எடுக்க உதவுவோம் என்று வந்த கயல், கதவுக்குப் பின்னாலேயே நின்று விட்டாள்.

“ஓ வரேல்லையோ?” சுயோவின் அமைதிக்கு அவரே விடை சொல்ல, “ஆர் அக்கா?” நெற்றி சுருங்கக்  கேட்ட சுயோ, ‘இவா விடுப்பு எடுக்கத்  தான் இண்டைக்குப் பாஞ்சு கொண்டு வந்திருக்கிறா!’ மனதுள் எரிச்சலோடு முணுமுணுத்தாள்.

“அதான் உம்மட அக்கா வீட்டில ஒரு பிள்ள இருக்காமே! அவவையா அந்தப் பெடி அதான் உம்மட அத்தான் கட்டப்  போறார்? இல்ல…அப்பிடிக் கேள்விப்பட்டனான். அதான் பாப்பமே எண்டு நினைச்சன்.” 

சுயோவின் பார்வை பட்டென்று பூபாலன் காருக்குச் சென்றது. ‘நிச்சயம் அத்தாருக்குக் கேட்டிருக்கும்’ இலேசாகக்  கீழிறக்கியிருந்த யன்னல் அவள்  எண்ணத்தை நிச்சயம்  செய்திட்டு. வந்திருந்த பெண்மணியின் விடுப்பு எடுக்கும் எண்ணமும் பேச்சும் எரிச்சல் கொடுத்தாலும் பூபாலன் காது பட அவர் கதைத்ததில் அவளுக்கு உள்ளுரச் சந்தோசம்.

‘இப்பிடிச் சரி அவேட மனசில அப்பிடி ஒரு எண்ணம் வந்தால் சந்தோசம் தானே?’ எண்ணாதிருக்க முடியவில்லை. 

அதை வெளிக்காட்டாது தொடர்ந்தாள். “ஐயோ அக்கா என்ன நீங்க? அந்தப் பிள்ள தன்ர வேலை விசயமா வந்தவா. இன்னும் கொஞ்ச நாளில திரும்பப் போயிருவா. முதலே அக்கா வீட்ட தான் இருந்தவா. என்ன நீங்க இப்பிடிக் கேக்கிறீங்க? எங்கட சனத்தைத் திருத்தவே ஏலாது. தங்கட வீட்டுக் கதைகளைக் கதைக்கவும் பாக்கவும் நேரம் இராது, ஊர்த் துலாவாராம்!” சிடுசிடுத்தாள்.

“ஐயையோ நான் குறைக்குக்  கேக்கேல்ல சுயோ! முதல், ரெண்டாம் தரம் கட்டுறதில என்ன கிடக்கு? கைக்குழந்த வேற! பொம்பளப்  பிள்ளைக்கும் இன்னொரு பொம்பளத்துணை கட்டாயம் வேணும் எல்லா? அந்தப் பெடிக்கும் அவ்வளவு வயசில்ல என்ன? காலத்துக்கும் தனிய இருக்க முடியுமோ சொல்லும்? கட்டத்தான் வேணும்.” அவர் சொல்லி முடிக்கவில்லை, இறங்கிக் கதவை அறைந்து சாத்திவிட்டு, அப்படியொருவர் அதில் நிற்பதைக் காணாத பாவனையில்  விறுவிறுவென்று உள்ளிட்டான், பூபாலன். 

அந்நேரம், “கயல்,  சுயோ என்ன செய்யிறாள்? அந்த மனிசி பொல்லாத விடுப்பு. இவளிட வாயப் பிடுங்குது போல!” என்ற சரசு,  “அந்தச் சாப்பாட்டக்  கொண்டு வாம்மா, படைச்சிப்போட்டு நீங்களும் கிளம்ப வேணும் எல்லா?” என்றதும், வெளியில் வந்தாள் கயல்.

“நீர் எங்க போறீர்? உள்ள வாரும்.” அடிக்குரலில் சொல்லிக்கொண்டு அவளைக் கடந்து சென்றான் பூபாலன்.

“சாப்பாட்ட வாங்கிக்கொண்டு…” சுயோவின் கையிலிருந்த பைகளைத் தனதாக்கிக் கொண்டு திரும்ப, “இவா ஆர் சுயோ? கண்ட மாதிரித் தெரியேல்ல, நம்மட சொந்தமா?” என்றார் அவர்.

“சாப்பாடு கொண்டு வந்து தந்திட்டு அறுக்குது மனிசி!” கடித்த பற்களிடையே சொன்னவள், ‘ஹே…ஹே கயலும் கேட்டிருப்பா போல!’ மனதுள் மகிழ்ந்து போனாள். அதைத் துளியும் வெளிக்காட்டாது, “நீர் கொண்டு போம் வாறன்.” என்றவள், “இவாதான் நீங்க கேட்ட பிள்ள!” என்ற வேகத்தில், “சரிக்கா பிறகு கதைப்பம்.” உள்ளே செல்லத்  திரும்பினாள் .

“அடடா இவாவோ அது? நல்ல முகவெட்டும் அதுவுமா வடிவான பிள்ள தான். சின்ன வயசு போலவும் இருக்கு! பிறகேன் ரெண்டாம் தாரமா அதும் பிள்ளைகளோட  என்ன?  வெளிநாட்டுக்கு வேலைக்கு எண்டல்லாம் வந்திருக்கிறா எண்டா நான் நீ எண்டு பெடியல்  நிப்பாங்களே!” என்றார் அவர், அசையாது நின்று.

உள்ளே நகர்ந்திருந்த கயல் காதில் இது விழுந்தது என்றால், இவள் சாப்பாட்டுப் பைகளோடு உள்ளிட, “தாரும்” திரும்பி வந்து வாங்கிக் கொண்டிருந்த பூபாலன் காதுகளிலும் அப்படியே விழுந்திட்டு.

கயல்விழிக்கு உண்மையிலும் பக்கென்று சிரிப்புப் பீரிட்டுட்டு! இம்மியும் வெளியில் காட்டாது அந்தப் பெண்மணியின் குரல் தன் செவிகளை எட்டவே இல்லை என்ற கணக்கில், “இத நான் கொண்டு வாறன்.” என்றவளை நிதானமாகப் பார்த்தான் பூபாலன். 

“நான் நீ எண்டு …ம்ம்… கலியாணம் செய்தா உன்னத்தான்  எண்டு நிண்ட  ஒருத்தன நீர் போட்டுப் படுத்தின பாடு இவாக்குத் தெரிஞ்சா என்ன எல்லாம் சொல்லுவாவோ!” அடிக்குரலில் சொல்லிவிட்டு விருட்டென்று நகர்ந்தவனுக்கு,  புறணி  கதைக்கவே சாப்பாட்டை  எடுத்துக்கொண்டு வந்தவர் கொண்டுவந்த உணவில் ஒரு வாய் வைக்கவும் பிடிக்கவில்லை. 

“அந்த மனிசி எப்பவும் அப்பிடித்தான் விடுப்புக்கே அலையுற குணம்.” என்றதோட நிறுத்திவிட்டு அவர்களுக்கு உணவைக் கட்டிக்கொடுத்த சுயோ, விடைபெற்று காருக்குள் ஏற எத்தனித்த கயல்விழியை மீண்டும் கட்டிப் பிடித்து அழுது விட்டாள்.

“ஸ்ஸ்ஸ் சுயோ…” காயுவின் சகோதரன் கடிந்து கொண்டாலும் அவன் கண்களுமே கலங்கிச் சிவந்திட்டு. மறுபக்கமாகச் சென்று லாதியின் தலையை வருடிவிட்டு சின்னவன் கன்னத்தைத் தடவினான்.

சாரதியாசனத்தில் அமர்ந்திருந்த பூபாலனோ இறுகிப் போய் அமர்ந்திருந்தான். இங்கு இதுவரை எத்தனையோ தடவைகள் வந்து போயிருக்கிறான், அவன்  மனைவியோடு. அந்நினைவுகள் பேரலையாய்ப் புரண்டோடிச் சலசலத்தன. அது போதாதென்று ‘என்ர பிள்ளைகள முறையா வளத்தெடுக்க என்னால்…என்னால் மட்டும்  முடியும்!’ திடமாக இருந்தவன் நம்பிக்கையில் அடிமேல் அடி போட்டு ஆட்டம் காண வைத்து விட்டார்கள், எல்லோருமே!

துக்கத்திலும் துயரிலும் அடிவாங்கி நிமிர நினைத்த அவன் உள்ளம் மிகையாகவே தடுமாற்றத்தை உணர்ந்திட்டு! தலைவலிக்கும் போலிருந்தது. எரிந்த விழிகளை மூடித் திறந்தான். 

இப்படியிருக்கையில், “பிள்ளைகள் பத்திரம் கயல்!” சுயோவின் குரல் பூபாலனின் தலையை விசுக்கென்று அவர்கள் பக்கம் திருப்பிற்று.

தன்னையும் அறியாது அவனைத்தான் பார்த்திருந்தாள், சுயோ. அவன் இறுகிய முகமும் விழிகளில் தெறித்த முறைப்பும் அவள் முகத்தில் குட்டியாய் ஒரு மலர்வைக் கொடுத்து மறைந்திட்டு. ஈரமாகியிருந்த கண்களைத் துடைக்கும் பாவனையில் அதை மறைத்து விட்டாள்.

“அத்தார், நீங்க உங்கட பிள்ளைகளக் கவனமாப் பாப்பீங்க எண்டு எங்க எல்லாருக்குமே நல்லாவே தெரியும். ஆனா…” இழுத்தாள். 

காதே கேளாத பாவனையில் முகத்தை நேராக்கி விட்டு காரை உயிர்ப்பித்தான், பூபாலன்.

“அப்ப வாறம்.” மறுபுறமிருந்த காயுவின் சகோதரனிடம் தலையாட்டலோடு சொன்னான். 

“அத்தார் பாருங்க, கோவிச்சிட்டுப் போறீங்க?” சுயோதான். அவன் பக்க யன்னலில் கை வைத்து அவனைப் பார்த்தவள், “நீங்க பாக்கிறது வேற, கயல் பாக்கிறது வேற, சரியோ!” நிதானமாகச் சொன்னவளில் எக்கச் சக்கமாக வந்த கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது, “ஏறப் போறீரா இல்லையா?” கயல்விழியில் எரிந்து விழுந்தான்.

“இல்லாட்டி விட்டிட்டுப் போவீங்களோ? நீங்க போனாலும் உங்கட பிள்ளைகள் விடாயினம் அத்தார், இருந்து பாருங்க.” குரலில் தீர்க்கத்தோடு சொன்ன சுயோ, முகம் இறுக நின்ற கயல்விழியை மீண்டும் அணைத்துக் கொண்டாள். சுயோ இருபொருள்படக் கதைக்கிறாளோ என்ற எண்ணமே கயல்விழிக்கு அப்போதுதான் வந்திட்டு! 

“நேரம் கிடைக்கேக்க  எல்லாம் நாங்க வந்து போவம். என்ன எண்டாலும் கொஞ்சமும் யோசியாமல் நீர் எங்களுக்கு எடுக்கலாம். அம்மா உம்ம தன்ர மகள் எண்டது வார்த்தைக்காக இல்ல.” மீண்டும் இறுக அணைத்துவிட்டே காரில் ஏற விட்டாள்.

 

error: Alert: Content selection is disabled!!